Friday, 7 September 2018

பெற்ற பிள்ளைகளைப் போல நூல்களை நேசிப்பவர்!

பெற்ற பிள்ளைகளைப் போல நூல்களை நேசிப்பவர்!

பெற்ற பிள்ளைகளைப் போல நூல்களை நேசிக்கும் சால்புடையவர் பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முக ஆற்றலாளர் முனைவர் பழநி ராகுதாசன் ஐயா.

           அவர், பழைய புத்தகக் கடையில் புதிய புத்தகங்கள் அனைய புத்தகங்களையும்  (பாதி விலைக்குக் கிடைக்குமல்லவா?) புதிய புத்தகக் கடைகளில் பழைய பதிப்புகளையும் (தாள் பழுப்பேறியிருந்தாலும் விலை பல ஆண்டுகளுக்கு முந்தைய விலை அல்லவா?) தேடித் தேடி வாங்கும் புத்தகத் தேனீ.


             மதுரை புத்தகத் திருவிழாவில் பிரேம் சந்த வாழ்க்கை வரலாறு மூன்று ரூபாய்க்கு விற்கப்பட்டியிருக்கிறது.  அந்த புத்தகத் திருவிழாவிற்கு ஆயிரமாயிரம் வாசகர்கள் தினந்தோறும்  வருகிறார்கள்.   விலை நெறுக்கப்பட்ட அந்த அருமையான புத்தகம் எல்லோர் கண்ணிலுமா பட்டது? கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் நெஞ்சில் பட்டது?  பழநி ஐயாவிற்கு நெஞ்சில் மட்டும் பட்டிருக்காது நெஞ்சில் சுருக்கென்றே தைத்திருக்கும்.  அவர் 12 பிரதிகள் வாங்கிவிட்டாராம்  (அவர் அந்தக் கடைக்குச் சென்ற போது 12 பிரதிகள் தான் இருந்திருக்கும், இருந்ததையெல்லாம் வாங்கியிருப்பார்)

                இந்த மதுரை க்கு ( "மதுரையில் புத்தகங்களுக்கு"  என்று வாசிக்க வேண்டுகிறேன் ) வந்த சோதனை பற்றி பழநி ஐயாவின் மகளும் திருவாடானைக் கல்லூரி பேராசிரியமான மணிமேகலை முகநூலில்  கீழக்கண்டவாறு பதிவு செய்துள்ளார்  \\\\\\\\\

                        
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஒரு கேள்வி. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவுனர் பிரேம்சந்தின் வாழ்கை வரலாறு மதுரை புத்தகக் கண்காட்சியில் வெறும் மூன்று ரூபாய்க்குக் கிடைக்கிறது. இது அடுக்குமா????
அப்பா பன்னிரண்டு பிரதிகளை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்கள்.....
சரஸ்வதி ராம்நாத் மொழியாக்கம் செய்திருந்த பிரேம்சந்தின் "கோதான்" நாவலுக்கு ஒரு அற்புதமான முன்னுரை எழுதிய அப்பாவால் இந்த அவலத்தைப் பொறுக்கவே முடியவில்லை... \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

அதற்கு நான் கீழ்க்கண்டவாறு 
சுருக்கமாகப் பதிலிட்டேன்

                   இன்னும் பல அவலங்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


                         என்னென்ன அவலங்களுடன் வாழ்கிறோம் எனப் பட்டியிலிட ஆரம்பித்தால் பொன்னின் செல்வன் சிறிய நூலாகிவிடும்.  இரண்டே இரண்டு அவலங்களை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.  அதில் ஒன்று தன்னலம் சார்ந்ததே!  மற்றொன்று நூற்றிற்கு நூறு பொது நலம் சார்ந்தது.
                    
                   தமிழகத்தில் தமிழ் நூல்கள் விற்பைன குறித்து ஒரு ஊகக் கணிப்பு செய்துள்ளேன்.
                   
                   பள்ளி, கல்லூரி ஆண்டு விழாவிற்கான பரிசுப் பொருள்களுக்கென ஒரு கணிசமான விற்பைன வாய்ப்பு உள்ளது.  ஆனால் புத்தகங்களால் பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பொருட்க ளோடு போட்டி போட முடியவில்லை. ஒரு வேளை  பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பொருட்களை வெற்றி கொண்டாலும் அந்தப் பள்ளியிலோ கல்லூரியிலோ உள்ளுக்குள்ளேயே ஒரு பகுதி நேர பதிப்பாளரோ புத்தக விற்பனையாளரோ இருப்பார், அவரிடம் அந்தப் பள்ளியோ கல்லூரியோ ஒற்றை பைசா DISCOUNT  (நாங்க இதை மட்டும் இங்லீஷில் தான் சொல்லுவோம்) கேட்காமல் புத்தகங்களை வாங்கிவிடும்.

           நமது அறிவுத் தேடல், பொருளாதாரச் சூழல் போன்றவற்றின் அடிப்படையில் ஒரு ஊரில் ஒரு நாளில் 100 நூல்கள் விற்பனை ஆகவேண்டும் என ஒரு அளவு கோல் வைத்துக்கொண்டால். கோயமுத்தூரில் ஒரு நாளில் 51 நூல்கள் விற்பனையாகும் .  தமிழகத்தின் சராசரி 20 நூல்களாக இருக்கலாம்.  பல ஊர்களின் சராசரி 20 நூல்களைவிடவும் குறைவாக இருக்கலாம்.
   
நலந்தா செம்புலிங்கம்
07.09.2018




Wednesday, 5 September 2018

மனதில் பதியும் .........

மனதில் பதியும் .......


கணினிகள் வகுப்பறைக்குள்
வகுப்பறைகளும் கணினிக்குள்
மாணவன் விரலிற்கு
ஆசிரியரின் கரம்
அடைக்கலம் நல்கி
மணலில் அகரம் எழுதிய
காலம் பழங்கதை தான்
மணலில் எழுதினால்
மனதில் பதியும்
ஓரிசா மணல் ஓவியர்
பத்ம ஸ்ரீ பட்நாயக்
நாளும் நாளும் பதிக்கிறார்
மணலில் எழுதினால்**
மனதில் பதியும்
எழுத்தும் பதியும்
ஏற்றமிகு பண்பாடும் பதியும்
(**மாண்டிசாரி கல்வி முறையில் மாணவர்களின் விரலைப் பிடித்து ஆசரியர் உப்புத் தாளால் உருவாக்கப்பட்ட எழுத்துக்களின் மேல் விளம்பும் பழக்கம் இன்றும் உள்ளது)
நலந்தா செம்புலிங்கம்
05.09.2018




Tuesday, 4 September 2018

தென்னவன்:விருதுகளை விஞ்சிய வேந்தன்!

தென்னவன்:விருதுகளை விஞ்சிய வேந்தன்!

சிவபெருமான் இலக்கணத்தை மீறுவதும் புலவர் நக்கீரன் குற்றம் கண்டுபிடித்த அதிசயமும்  நடந்த மதுரையில் தான் ஒரு கல்வித் துறை அதிகாரி உண்மையை உள்ளபடியே சொல்ல பத்திரிக்கையாளர்கள் சின்ன வெற்றிக்காக பெரிய பின்னடைவுகளை ஒதுக்கித் தள்ளிய சம்பவமும் மதுரையில்  ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடந்தது.

                  அது சரி, பத்திரிக்கையாளர் சந்திப்பு என்றால் என்ன?

                 ஒரு பிரமுகர்/அதிகாரி எல்லாப் பத்திரிக்கைகளுக்கு ஒரு செய்தியை வாய்மொழியாகவோ எழுத்து மூலமாகவோ தெரிவிக்க எல்லாப் பத்திரிக்கைப் பிரதிகளை அழைத்து செய்தியை வெளியிடுவது.

                   அது பத்திரிக்கையாளர் சந்திப்புக் கூட்டும் பிரமுகர்/அதிகாரியின் தன்னிலை விளக்கம்.  எந்தத் தன்னிலை விளக்கத்திலாவது எதிர் தரப்பினரின்  நியாயம் சொல்லப்பட்டிருக்குமா?  

                     எதிர்தரப்பினரின் நியாயம் வெளிப்பட வேண்டாமா? அதற்குத் தானே பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள்? அவர்கள் அந்தப் பிரமுகரை/அதிகாரியை துருவித் துருவி கேள்வி  கேட்பார்கள்.

                   ஆகவே பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டியவர் பூசி மெழுகுவார், பத்திரிக்கையாளர்கள்  அவர் பூசி மெழுகியதைப் போட்டு உடைப்பார்கள்.  இது தான் பத்திரிக்கையாளர் சந்திப்பின் இலக்கணம்.



                  இந்த இலக்கணம் மீறப்படுவதற்கு மதுரை ஒத்தக்கடையில் பீடுநடை போட்டுவரும்  ஒன்றிய தொடக்கப் பள்ளியும்  ஒரு காரணமாகும்.  மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க பல முயற்சிகள் செய்தும் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது என உண்மையை அந்த அதிகாரி தெரிவித்தார்.  பத்திரிக்கையாளர்கள் ஒத்தக்கடை தொடக்கப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை கூடியுள்ளதை சுட்டிக் காட்டினர்.  அந்த அதிகாரி விதிவிலக்காக ஒத்தக்கடை பள்ளி போன்ற சில பள்ளிகளில் தான் மாணவர் எண்ணிக்கை கூடியுள்ளது என அந்த அதிகாரி மறுவிளக்கம் கொடுக்க வேண்டியிருந்தது.

                 இத்தகைய புதுமைகளுக்கு காரணமாகிய ஒத்தக்கடை ஊராட்சி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசரியருக்கு என்ன விருது கொடுக்கலாம்?

                        
                        1. கிராம சேவைகள்.                   
                        2. பழங்குடி மேம்பாடு
                        3. பெண்கல்வி 
                        4. செயல் ஊக்கம்
                        5. மொழித் திறன்
                        6. அறிவியல் விழிப்புணர்வு
                        7.  படைப்பாற்றல் 
                        8.  சிறப்புக் குழந்தைகள்
                        9.   புதுமை

என ஒன்பது பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சி என்ன பிரிவிற்காக தலைமை ஆசிரியர் தென்னவனுக்கு விருது கொடுத்திருக்கும்? வேறு எதற்கு புதுமைக்குத் தான்.

                        இந்தப் பள்ளி தொடக்கப் பள்ளி, இதனைத் தேடி 5 வயது பிள்ளைகள் தான் வருவார்கள் என்றும் மட்டும் நினைக்காதீர்கள்.  ஒரு எழுபது ஆண்டு பழைமையான ஒரு கல்லூரியும் இந்தப் பள்ளிக்கு வந்துள்ளது.

                          மதுரையின் முதல் பெண்கள் கல்லூரியான லேடி டோக்கு கல்லூரியில்   INTERNATIONAL SERVICE LEARNING PROGRAMME 2018   பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது  அக்கருத்தரங்கில் பங்கேற்ற ஜப்பான், கொரியா மற்றும் சீனாவைச் சேர்ந்த 11 பயிற்சியாளர்கள் மூன்று நாட்கள் இப்பள்ளிக்கே வந்து தலைமையாசரியர் தென்னவன் கலந்துரையாடினர்.

                           தலைமை ஆசிரியர் தென்னவன், விருதுகளை விஞ்சிய வேந்தன் தான்.  புதிய தலைமுறைத் தொலைக்காட்சி விருது வழங்கும் விழா 05.09.2018 புதன் கிழமை ஒளிப்பரக்கிறது. 

நலந்தா செம்புலிங்கம்   .
03.09.2018





                       

Thursday, 30 August 2018

என் செல்லக் கண்ணனே!!


கண்ணனைக் கொஞ்சும் இந்த வண்ணத் தமிழைக் கேட்க ....



அந்த அற்புதமான பாடல் வரிகள்:::


கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக் கண்ணனே வா
திதித தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி  நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷம கண்ணனே வாடா வா

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் ....

சிறு சிட்டிகை பாசம்
பெரும் கடலாய் மாற
மணித்துளி எல்லாமே
அரை நொடிக்குள் தீர
மழை தரையா உள்ளம்
பிசுப்பிசுப்பைப் பேண
எதற்கடி திண்டாட்டம்
கதகதப்பைக் காண

நீ ராதை இடம்
சொல்லாமல் சொன்னாயே
செங்கோதை மனம்
உன் பேச்சில் தந்தாயே

உன்னாலே யோசிக்கிறேன்
உன் விரலைப் பிடித்து
நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்

கண்ணுக்குள் பொத்திவைப்பேன் ....

உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்
தனித் தனியே ரெண்டும்
ஒரு வழியில் ஓடும்

எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்

கண்ணாடி முனை போல்
எண்ணங்கள் கூராய்
முன் இல்லாததைப் போல்
எல்லாமே வேறாய் உன்னாலே பூரிக்கிறேன்
உன் சிரிப்பு சரத்தில்
மகிழ மரத்தில்
பூ தைக்கிறேன்

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் ...


நலந்தா செம்புலிங்கம்
31.08.2018







Wednesday, 29 August 2018

REDME உலகப் புகழ் பெற்ற ஐஸ் க்ரீம்

REDME உலகப் புகழ் பெற்ற ஐஸ் க்ரீம் ********************************************************     
       
             REDME அது ஜப்பானிய மொழிச் சொல்லா கொரிய மொழி என்பதிலேயே பலருக்கு ஐயம், அதன் பொருளும் தெரியாது, அந்தப் பெயரில் விற்கும் ஐஸ் க்ரீமை யாருக்குத் தெரியாது? 

             REDME  ஐஸ் க்ரீமிற்கு பல ஊர்களில் கிளையில் உள்ளது.  ஐஸ் க்ரீமின் சுவை  அருமையாகயிருக்கும் விலை அதைவிட அதிகமாயிருக்கும். அதன்  தொலைக்காட்சி விளம்பரம் படு அசத்தலாகயிருக்கும். 
 
            ராமுவின் வீட்டிற்கு அருகிலேயே அந்த ஐஸ் க்ரீம் கடை ஒன்று இருந்தது.  ஆனால அவனுடைய அப்பாவிடம் ஐஸ் க்ரீம் என்று பேச்சே எடுக்க முடியாது.  அதற்கும் அப்பா தான் காரணம் அவர் இதே ஐஸ் க்ரீம் கம்பெனிக்கு முகவராகத் தொழில் செய்து நஷ்டப்பட்டதும், அதிலிருந்து மீள நானோ என் குடும்பத்தினரோ  REDME  ஐஸ் க்ரீம் என்றில்லை எந்த ஐஸ் க்ரீமையும் தொடமாட்டோம் என்று குலதெய்வச் சன்னதியில் சத்தியம் செய்ததும் தான் காரணம்.
         ராமுவால் முடிந்ததெல்லாம், அந்த REDME  ஐஸ் க்ரீம் கடையைக் கடக்கும் போதெல்லாம் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொள்வது தான்.   முகத்தைத் திருப்பத் திருப்ப மனம் அதன் மீதே லயத்தது.  

          அம்மாவிடம் ஒரே ஒரு நாள் ஒரு ஐஸ் க்ரீமிற்கு ராமு மன்றாடினான்.  அப்பாவின் சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை என்று  சொல்லி அம்மாவும் மறுத்துவிட்டார்
           அம்மாவிடம் ஒரே ஒரு ஐஸ் க்ரீமிற்கு மன்றாடியும் அம்மாவும் மறுத்ததால் ராமு சோர்ந்து போனான். பாடத்தில் கவனம் கொள்ளமுடியவில்லை.  வேறு எதிலும் கவனம் கொள்ள முடியவில்லை.  முகமே வாடியது.
             
            நினைந்தூட்டுபவள் தானே தாய்.  ராமுவின் மனவாட்டம் உணர்ந்து ஒரு நாள் அவன் கேட்காத போது, ஜஸ் க்ரீம் வாங்கிக் கொடுத்தாள்.

       அம்மா,  மறுநாள் ராமு பள்ளிக்குச் சென்ற பின் அப்பாவிடம் ஜஸ் க்ரீம் வாங்கிக் கொடுத்ததைச் சொன்னாள். அப்பா கோபப்படவில்லை. 
   
          ராமு ரொம்ப ஏங்கிப் போயிட்டான். நானே ஜஸ் க்ரீம் வாங்கிக் கொடுக்கலாம் சில நேரம் நினைச்சியிருக்கேன். நான் பண்ண சபதத்தை நானே மீறுறதா? என்கிறதா எண்ணம் தான் என்னை தடுத்துருச்சு எல்லா விதிகளுக்கும் விதி விலக்கு    உண்டு என அப்பா,  அம்மாவைப் பாராட்டி னார்.

நலந்தா செம்புலிங்கம்
29.08.2018   .

Saturday, 18 August 2018

66 காசு பெட்ரோலும் ஐந்து இலக்க பண வீக்கமும்


66 காசு பெட்ரோலும் 

ஐந்து இலக்க பண வீக்கமும்




        66 காசுக்கு ஆமாம் வெறும் 66 காசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு நாட்டில் விற்கப்படுகிறது என்றால் அதுவும் ஒரு உண்மையான தகவல் என்றால் அச்செய்தியை என்னவென்று சொல்வது?

          வயிற்றெரிச்சலில் பெட்ரோலை வார்க்கும் செய்தி என்று தானே சொல்ல வேண்டும்?

           அண்மையில் மிகக் குறைந்த விலையில் பெட்ரோல் விற்கும் நாடுகளையும்  அந்தந்த நாட்டில் நிலவும் பெட்ரோலின் விலையை ரூபாய் மதிப்பிலும் தந்தி தொலைக்காட்சி பட்டியலிட்டுள்ளது.

5     நைஜீரியா                ரூ 23.97
4    குவைத்                      ரூ 23.38
3     சூடான்                       ரூ 22.66
2     ஈரான்                         ரூ 19.33
1    வெனிசுலா               ரூ  0.66  (ஆம் 66 காசு தான்)

கச்சா எண்ணெய் விலை உலகச் சந்தை குறைந்தாலும் நமக்கு என்னவோ பெட்ரேரல் விலை உயர்ந்து கொண்டேயிருக்கிறது.  ஆகவே நாம் வயிற்றெரிச்சல் படாமல் இருக்க முடியாது.

           இந்த ஐந்து நாடுகளும் கச்சா எண்ணெய் வளம் மிகுந்த நாடுகள் தான்.
அதனால் அவர்கள் குறைவான விலையில் விற்க முடியும் .  19 ரூபாயிலிருந்து 24 ரூபாய் வரையிலான விலை என்பது அந்தந்த நாடுகளின் கச்சா எண்ணெய் உற்பத்தியைப் பொருத்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.  

          மற்ற நான்கு எண்ணெய் வள நாடுகள் சாராசரியாக 22 ரூபாய் 34 காசுக்கு விற்கும் போது வெனிசுலா மட்டும் வெறும் 66 காசுக்கு விற்கிறது? அதாவது மற்ற எண்ணெய் வளநாட்டு விலையில் 33 இல் ஒரு பங்கு விலைக்கு வெனிசுலா பெட்ரோலை எப்படி விற்க முடியும்?          

          வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் இந்திய ரூபாய் கணக்குப் படி 66 விற்கப்படுவது உண்மை தான்.  நம் நாட்டில் 81 ரூபாய் மதிப்பிலுள்ள பெட்ரோல் வெனிசுலா நாட்டில் நமது ரூபாய் 66 காசுக்கு விற்கப்படுகிறது ஆகவே அங்கு 122 பங்கில் ஒரு பங்கு விலையில் பெட்ரோல் கிடைக்கிறது என நாம் நம்பினால் அது மாயை. 


Flag of Venezuela
          உலகெலாம் நிலவும் பெட்ரோல் விலை நிலவரத்தை ஆய்வு செய்யும் தந்தி தொலைக் காட்சிக்கு அந்த வெனிசுலா நாடு உலக ஊடகங்களில் எந்தக் காரணத்திற்காக தலைப்புச் செய்தி ஆகிறது என்பது தெரியாதா? எனக்கே வெனிசுலா ஐந்து இலக்க பணவீக்கத்திற்காகத் தான் தலைப்பு செய்தி ஆகிறது என்பது தெரியும் போது தந்தி தொலைக்காட்சிக்குத் தெரியாதா?
20000 Bolivar Currreny

         வெனிசுலா 34714 % பணவீக்கத்தில் வதைபடும் நாடு

.           
              17.08.2018 தேதியன்று, எகனாமிக் டைம்ஸ் இணைய தளத்தின் விவரப்படி ஒரு அமெரிக்க டாலரை வெனிசுலா நாட்டு பணமான Venezuelan Bolivar (VEB) கொடுத்து வாங்க வேண்டுமானால் எவ்வளவு அந்த வெனிசுலேவியன் போலிவர் கொடுக்க வேண்டும் தெரியுமா? 24,88,32,029  வெனிசுலேவியன் போலிவர் கொடுக்க வேண்டும்.  ஆம் 24 கோடி 88 லட்சம் 32 ஆயிரத்து 29 வெனிசுலேவியன் போலிவர் கொடுக்க வேண்டும்.
       
                 இந்திய ரூபாய் கொடுத்தது ஒரு டாலர் வாங்க வேண்டுமென்றால் 70 இந்திய ரூபாய் கொடுக்க வேண்டும்.

                                     
USD 1.0   =  VEB   24,88,32,029.6600 

    Rs 70/-   =  VEB   24,88,32,029.6600

    Rs 0.66 =  VEB  23,46,130.56



ஆக ஒரு வெனிசுலேவியக் குடிமகன் இந்தியக் காசு 66 காசுகளை  அவன் நாட்டு போலிவர் கொடுத்து வாங்க வேண்டுமென்றால் அவன் 23 லட்சம் 46 ஆயிரம் 130 போலிவர் கொடுத்து வாங்க வேண்டும்.



                     மேற்சொன்ன கணக்குப்படி ---
                               "காசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு நாட்டில் விற்கப்படுகிறது " --

என்ற செய்தியை வேறு மாதரியாகவும் சொல்லலாம்

                   "கச்சா எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலாவில்                
                  அந்நாட்டு நாணய மதிப்பின் படி ஒரு லிட்டர் பெட்ரோலின் 
                   விலை 23 லட்சும் போலிவர்"  ---- 

                         தந்தி தொலைக்காட்சி சொல்லுமா? ஒரு போதும் சொல்லாது.  அப்படிச் சொன்னால் வெனிசுலா நாட்டில் வேண்டுமானால் மக்கள் அரசின் மீது கோபப்படுவார்கள், இந்தியாவில் எந்தச் சலனமும் ஏற்படாதே?
                               

                    அந்த நாட்டின் மிக மிக மோசமான பண வீக்கத்தை வைத்து கொண்டு போட்ட மாயக் கணக்கு தான் இந்த மாயத் தோற்றை ஏற்படுத்துகிறது.
                        
                         இது போன்ற மாயையைகளை அறுக்க வேண்டிய ஊடகங்கள்,  அவற்றை வளரக்கின்றன.

                         சமூக ஊடகங்கள் தான் பொய்யான செய்திகள் திரிப்பு செய்திகளை எல்லாம் வெளியிடுகின்றன என்று கருப்படுகிறது.  ஆனால் உண்மையின் அடிப்படையிலேயே மாயச் செய்திகளை உருக்குவதில் நாங்கள் தான் வல்லவர்கள் என்று தந்தி தொலைக்காட்சி நிலைநாட்டிவிட்டது.

நலந்தா செம்புலிங்கம்
17.08.2018


Wednesday, 15 August 2018


சுதந்திரத்திற்கான போராட்டங்கள்: 

  

Many Jobs will be lost due to Artificial Intelligence 
Corruption dominates in politics & economy




















 நேற்று 
ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற! 


இன்று

 ஊழலில் இருந்து விடுதலை பெற! 

                                        நாளை 
 இயந்திரங்களிடமிருந்து விடுதலை பெற!


                                                                                                          நலந்தா செம்புலிங்கம்
                                                                                                                                       15.08.2018












Sunday, 12 August 2018

பெரியார் கண்ணில் படாத சீர்திருத்தங்கள் !

 பெரியார் கண்ணில் படாத சீர்திருத்தங்கள் !


                    உண்மையை நிலைநாட்டுவது எளிதல்ல.  உண்மை உண்மையாக மட்டுமே இருப்பதால்  அது எவருடைய நோக்கத்தையோ கோட்பாட்டையையோ வேட்டகையையோ நிறையேற்றும்  கருவியாக இருப்பதில்லை.  

                    ஆகவே உண்மையில்  நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் தான் நாம் நிலைநாட்டிக் கொள்கிறோம்.

                   ஆரியர்கள் பார்ப்பனர்கள் ஆகியோர் தம்மைக்  கடவுளின் பிரதிநிதிகளாக முன்னிலைபடுத்திக் கொண்டு திராவிடர்கள் தமிழர்கள் எனும் பெரும்பான்மையினர் மீது ஆதிக்கம் செய்கிறார்கள் என்று கருத்து வலுவாக நிலைநாட்டுப்பட்டுவிட்டது. 




https://www.youtube.com/watch?v=akjWdelWzM8


                    எங்களூரில்  கோட்டையம்மன் கோவில் திருவிழா 23.07.2018 முதல் 06.08.2018 (ஆடி மாதம் 7ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை) கோலாகமாக நடந்தது.  இது எங்களூரின் மிக முக்கியமான திருவிழா. எங்களூரின் அருணகிரிப் பட்டிணம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவிலும்  ஆயிரக் கணக்கானோர் பூத்தட்டு, பால்க் குடம் எடுப்பார்கள். இதைப் போல நகரின் வெவ்வேறு பகுதிகளில் பல திருவிழாக்கள் மக்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.  எங்களூர் என்றில்லை  தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் முத்துமாரியம்மன் திருவிழாக்களும் முனீஸ்வரர் திருவிழாக்களும் நடந்த வண்ணம் உள்ளன.

                     இது போன்ற திருவிழாக்களில் பொங்கலிடுவது, மாவிளக்கு வைப்பது போன்றவற்றோடு அருச்சனை செய்யவும் பக்தர்கள் அலை மோதுவார்கள்.  அருச்சனைக் கூடையை பூசாரியிடம் கொடுப்பதற்கே தள்ளுமுள்ளாக இருக்கும்.  அருச்சசனை செய்த பிறகு வாங்குவதற்கு அதை விடக் கூடுதலாக        சிரமப்படவேண்டியிருக்கும்.  

கோட்டையம்மன்
              அருச்சனையை எப்படிச் செய்வார்கள்? சமஸ்கிரதத்தில் மந்திரம் சொல்வார்களா? ஒரு போதும் இல்லை, தமிழிலும் மந்திரம் சொல்ல மாட்டார்கள்.  பிறகு பிரஞ்சு மொழியில் தான் அருச்சனை செய்வார்களோ என கேட்காதீர்கள்.  பூசாரி ஒரு மொழியிலும் அருச்சனை செய்யமாட்டார்.    அருச்சனை மொழி மனமொழி தான், அதுவும் பக்தரின் மனமொழி தான்.  பூசாரி அரச்சனைக் கூடையில் உள்ள தேங்காயை உடைத்து சன்னதியில் படைத்து தீபம் காட்டிவிட்டு தருவார் அவ்வளவு தான்.  அந்தப் பூசாரி விபூதியை நீட்டினால், அதனை பவ்யமாக வலக்கையில் வாங்கிக் கொள்வதோடு பெரும்பாலான பக்தர்கள் அமைதி கொள்வதில்லை, நெற்றியையும் காட்டுவார்கள்.  பூசாரியும் பக்தர்கள் நெற்றியில் விபூதியைப் பூசிவிடுவார்.

                         அந்தப்  பூசாரியும் -- இறை நம்பிக்கை இல்லாமல் வழிபாட்டு முறையிட்டீல் தலையிடுவோரின் அங்கீகரம் பெற்ற -- தமிழர் தான்.  இதன் மூலம் தமிழன் கருவறைக்குள் போய்விட்டான்.  சமஸ்கிரதம் வழிபாட்டு மொழியாக இல்லை.  

                         இவையெல்லாம் காமராசர் காலத்திலோ கலைஞர் காலத்திலோ அம்மா காலத்திலோ ஏற்றபட்ட சீர் திருத்தங்கள் அல்ல.  பெரியாரினால் ஏற்பட்ட சீர்திருத்தங்களும் அல்ல.  பெரியார் பிறப்பதற்கு முந்திய காலத்திலிருந்து வழக்கில் இருக்கும் நடைமுறை தான்.  ஏனோ இந்த சீர்திருத்தங்கள்  பெரியார் கண்ணில் படவில்லை.

சுத்தானந்த பாரதியார்

                              இந்த சீர்திருத்தங்களுக்கு மேலே ஒரு மிகப்பெரிய சீர்திருத்தம், தேவகோட்டை கோட்டையம்மன் கோவிலில் 60, 70 ஆண்டுகளுக்கு முன்னரே அரங்கேறியிருக்கிறது.  அப்போது கோட்டையம்மனுக்கு ஆடு பலியிடும் பழக்கம் இருந்திருக்கிறது.  அதை நிறுத்தியவர் ஒரு பார்ப்பனர் தான். தமிழிற்கும்  சுதந்திரப் போராட்டத்திற்கும் பெரும்பணியாற்றிய சுத்தானந்த பாரதியார் தான் அந்தப் பார்ப்பனர்.  பல்லாண்டுகளாக வழக்கில் இருந்த பலிகடா வழக்கத்தை எப்படி அந்த ஒற்றை மனிதர் நிறுத்தினார்?  மிகவும் எளிதாகச் செய்துவிட்டார்.  பலி பீடத்தில் ஆட்டைக் கொண்டு வந்து நிறுத்துவதற்கு முன் இவர் கழுத்தை நீட்டிவிட்டார்.  என் கழுத்தை வெட்டிவிட்டு ஆட்டை வெட்டுங்கள் என்றார். அத்துடன் ஆடு பலியிடம் பழக்கம் நின்றுவிட்டது.
சுத்தானந்த பாரதியார்

                           இந்தப் பதிவை 09.08.2018 அன்றே எழுதிவிட்டேன். சுத்தானந்த பாரதியாரின் படத்துடன் தான் இப்பதிவை வெளியிட வெளியிட வேண்டுமெனவும் உறுதி கொண்டேன். அவர் படத்தில் தேடுவதிலும் அல்லது தேட நேரம் ஒதுக்கமுடியாமல் காலம் கழிந்ததிலும் மூன்று நாட்கள் ஓடிவிட்டன.  

                   இந்த மூன்று நாட்களில் வெகுநாட்களாக நெஞ்சில் ஒரு பழைய சிந்தனையும்  ஒரு எதிர்பாராத படமும் கிடைத்தது.

                   அந்தப் பழைய சிந்தனை:  50 ஆண்டுகளுக்கு முன்னர்  தைப் பூசத் திருவிழாவிற்காக  செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து பழநிக்குப் பாதயாத்திரையாக நடந்து சென்றவர்கள் சில நூறு பேர் தான்.  இன்று செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து மட்டும் பல்லாயிரக் கணக்கானோர் நடக்கின்றனர்.  தமிழகமெங்குமிருந்து பல லட்சம் பேர் பழநிக்குப் பாத யாத்திரையாக நடந்து வருகின்றனர்.  இதைப் போல எல்லா வகையான வழிபாடுகளும் பல்கிப் பெருகியிருக்கின்றன.  இது திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு பிரச்சாரம் என்ற பேரில் இந்து மதத்திற்கு எதிரான பிரச்சாரத்தின் எதிர்விளைவு எனக் கருதுகிறேன்.     

              என்னுடைய இந்த மாபெரும் ஆய்வு முடிவைத் தவிடு பொடி ஆக்கிவிட்டது இந்த மூன்று நாள் இடைவெளியில் எதிர்பாராமல் கிடைத்த படம்..  அந்தப் படம் கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் கலைஞர் அவர்களின் சமாதியில் பால் ஊற்றிய படம் தான்.  நான் இதுவரை பகுத்தறிவுப் பிரச்சாரங்கள் இந்து மதத்தினரிடம் தான் ஒரு பக்தி வேகத்தை ஊட்டியது என நினைத்திருந்தேன்.  கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் தாமே முன்வந்து பகுத்தறிவுப் பிரச்சாரங்கள் பகுத்தறிவு பிரச்சாரகர்களிடமும் பக்தி வேகத்தை ஊட்டியிருக்கிறது என சான்றளித்துள்ளார்.


           
            கணித மேதை ராமானுஜம் எவ்வளவு சிக்கலான கணக்கிற்கு நொடிப் பொழுதில் விடை தந்துவிடுவார்.  பல கணித சூத்திரங்களைப் பயன்படுத்தி படிப்படிப்பாகத் தான் அந்தக் கணக்குப் புதிரை விடுவித்து விடையைக் கொண்டு வர முடியும்.  ஆனால் கணித மேதை அந்தப் படிநிலைகளையெல்லாம் விளக்காமல் நேரடியாக விடையைத் தருவார்.


              என்னை வெகு காலம் வாட்டிக் கொண்டிருக்கும் பகுத்தறிவு பிரச்சாரத்தின் விளைவு எனும் புதிருக்கான விடையை கவிப்பேரரசு கணித மேதையைப் போல நேரடியாக விடையளித்திருக்கிறார். கவிப் பேரரசு வைரமுத்து அவர்களுக்கு நன்றி.

              
நலந்தா செம்புலிங்கம்
12.08.2018