Sunday 12 August 2018

பெரியார் கண்ணில் படாத சீர்திருத்தங்கள் !

 பெரியார் கண்ணில் படாத சீர்திருத்தங்கள் !


                    உண்மையை நிலைநாட்டுவது எளிதல்ல.  உண்மை உண்மையாக மட்டுமே இருப்பதால்  அது எவருடைய நோக்கத்தையோ கோட்பாட்டையையோ வேட்டகையையோ நிறையேற்றும்  கருவியாக இருப்பதில்லை.  

                    ஆகவே உண்மையில்  நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் தான் நாம் நிலைநாட்டிக் கொள்கிறோம்.

                   ஆரியர்கள் பார்ப்பனர்கள் ஆகியோர் தம்மைக்  கடவுளின் பிரதிநிதிகளாக முன்னிலைபடுத்திக் கொண்டு திராவிடர்கள் தமிழர்கள் எனும் பெரும்பான்மையினர் மீது ஆதிக்கம் செய்கிறார்கள் என்று கருத்து வலுவாக நிலைநாட்டுப்பட்டுவிட்டது. 




https://www.youtube.com/watch?v=akjWdelWzM8


                    எங்களூரில்  கோட்டையம்மன் கோவில் திருவிழா 23.07.2018 முதல் 06.08.2018 (ஆடி மாதம் 7ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை) கோலாகமாக நடந்தது.  இது எங்களூரின் மிக முக்கியமான திருவிழா. எங்களூரின் அருணகிரிப் பட்டிணம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவிலும்  ஆயிரக் கணக்கானோர் பூத்தட்டு, பால்க் குடம் எடுப்பார்கள். இதைப் போல நகரின் வெவ்வேறு பகுதிகளில் பல திருவிழாக்கள் மக்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.  எங்களூர் என்றில்லை  தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் முத்துமாரியம்மன் திருவிழாக்களும் முனீஸ்வரர் திருவிழாக்களும் நடந்த வண்ணம் உள்ளன.

                     இது போன்ற திருவிழாக்களில் பொங்கலிடுவது, மாவிளக்கு வைப்பது போன்றவற்றோடு அருச்சனை செய்யவும் பக்தர்கள் அலை மோதுவார்கள்.  அருச்சனைக் கூடையை பூசாரியிடம் கொடுப்பதற்கே தள்ளுமுள்ளாக இருக்கும்.  அருச்சசனை செய்த பிறகு வாங்குவதற்கு அதை விடக் கூடுதலாக        சிரமப்படவேண்டியிருக்கும்.  

கோட்டையம்மன்
              அருச்சனையை எப்படிச் செய்வார்கள்? சமஸ்கிரதத்தில் மந்திரம் சொல்வார்களா? ஒரு போதும் இல்லை, தமிழிலும் மந்திரம் சொல்ல மாட்டார்கள்.  பிறகு பிரஞ்சு மொழியில் தான் அருச்சனை செய்வார்களோ என கேட்காதீர்கள்.  பூசாரி ஒரு மொழியிலும் அருச்சனை செய்யமாட்டார்.    அருச்சனை மொழி மனமொழி தான், அதுவும் பக்தரின் மனமொழி தான்.  பூசாரி அரச்சனைக் கூடையில் உள்ள தேங்காயை உடைத்து சன்னதியில் படைத்து தீபம் காட்டிவிட்டு தருவார் அவ்வளவு தான்.  அந்தப் பூசாரி விபூதியை நீட்டினால், அதனை பவ்யமாக வலக்கையில் வாங்கிக் கொள்வதோடு பெரும்பாலான பக்தர்கள் அமைதி கொள்வதில்லை, நெற்றியையும் காட்டுவார்கள்.  பூசாரியும் பக்தர்கள் நெற்றியில் விபூதியைப் பூசிவிடுவார்.

                         அந்தப்  பூசாரியும் -- இறை நம்பிக்கை இல்லாமல் வழிபாட்டு முறையிட்டீல் தலையிடுவோரின் அங்கீகரம் பெற்ற -- தமிழர் தான்.  இதன் மூலம் தமிழன் கருவறைக்குள் போய்விட்டான்.  சமஸ்கிரதம் வழிபாட்டு மொழியாக இல்லை.  

                         இவையெல்லாம் காமராசர் காலத்திலோ கலைஞர் காலத்திலோ அம்மா காலத்திலோ ஏற்றபட்ட சீர் திருத்தங்கள் அல்ல.  பெரியாரினால் ஏற்பட்ட சீர்திருத்தங்களும் அல்ல.  பெரியார் பிறப்பதற்கு முந்திய காலத்திலிருந்து வழக்கில் இருக்கும் நடைமுறை தான்.  ஏனோ இந்த சீர்திருத்தங்கள்  பெரியார் கண்ணில் படவில்லை.

சுத்தானந்த பாரதியார்

                              இந்த சீர்திருத்தங்களுக்கு மேலே ஒரு மிகப்பெரிய சீர்திருத்தம், தேவகோட்டை கோட்டையம்மன் கோவிலில் 60, 70 ஆண்டுகளுக்கு முன்னரே அரங்கேறியிருக்கிறது.  அப்போது கோட்டையம்மனுக்கு ஆடு பலியிடும் பழக்கம் இருந்திருக்கிறது.  அதை நிறுத்தியவர் ஒரு பார்ப்பனர் தான். தமிழிற்கும்  சுதந்திரப் போராட்டத்திற்கும் பெரும்பணியாற்றிய சுத்தானந்த பாரதியார் தான் அந்தப் பார்ப்பனர்.  பல்லாண்டுகளாக வழக்கில் இருந்த பலிகடா வழக்கத்தை எப்படி அந்த ஒற்றை மனிதர் நிறுத்தினார்?  மிகவும் எளிதாகச் செய்துவிட்டார்.  பலி பீடத்தில் ஆட்டைக் கொண்டு வந்து நிறுத்துவதற்கு முன் இவர் கழுத்தை நீட்டிவிட்டார்.  என் கழுத்தை வெட்டிவிட்டு ஆட்டை வெட்டுங்கள் என்றார். அத்துடன் ஆடு பலியிடம் பழக்கம் நின்றுவிட்டது.
சுத்தானந்த பாரதியார்

                           இந்தப் பதிவை 09.08.2018 அன்றே எழுதிவிட்டேன். சுத்தானந்த பாரதியாரின் படத்துடன் தான் இப்பதிவை வெளியிட வெளியிட வேண்டுமெனவும் உறுதி கொண்டேன். அவர் படத்தில் தேடுவதிலும் அல்லது தேட நேரம் ஒதுக்கமுடியாமல் காலம் கழிந்ததிலும் மூன்று நாட்கள் ஓடிவிட்டன.  

                   இந்த மூன்று நாட்களில் வெகுநாட்களாக நெஞ்சில் ஒரு பழைய சிந்தனையும்  ஒரு எதிர்பாராத படமும் கிடைத்தது.

                   அந்தப் பழைய சிந்தனை:  50 ஆண்டுகளுக்கு முன்னர்  தைப் பூசத் திருவிழாவிற்காக  செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து பழநிக்குப் பாதயாத்திரையாக நடந்து சென்றவர்கள் சில நூறு பேர் தான்.  இன்று செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து மட்டும் பல்லாயிரக் கணக்கானோர் நடக்கின்றனர்.  தமிழகமெங்குமிருந்து பல லட்சம் பேர் பழநிக்குப் பாத யாத்திரையாக நடந்து வருகின்றனர்.  இதைப் போல எல்லா வகையான வழிபாடுகளும் பல்கிப் பெருகியிருக்கின்றன.  இது திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு பிரச்சாரம் என்ற பேரில் இந்து மதத்திற்கு எதிரான பிரச்சாரத்தின் எதிர்விளைவு எனக் கருதுகிறேன்.     

              என்னுடைய இந்த மாபெரும் ஆய்வு முடிவைத் தவிடு பொடி ஆக்கிவிட்டது இந்த மூன்று நாள் இடைவெளியில் எதிர்பாராமல் கிடைத்த படம்..  அந்தப் படம் கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் கலைஞர் அவர்களின் சமாதியில் பால் ஊற்றிய படம் தான்.  நான் இதுவரை பகுத்தறிவுப் பிரச்சாரங்கள் இந்து மதத்தினரிடம் தான் ஒரு பக்தி வேகத்தை ஊட்டியது என நினைத்திருந்தேன்.  கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் தாமே முன்வந்து பகுத்தறிவுப் பிரச்சாரங்கள் பகுத்தறிவு பிரச்சாரகர்களிடமும் பக்தி வேகத்தை ஊட்டியிருக்கிறது என சான்றளித்துள்ளார்.


           
            கணித மேதை ராமானுஜம் எவ்வளவு சிக்கலான கணக்கிற்கு நொடிப் பொழுதில் விடை தந்துவிடுவார்.  பல கணித சூத்திரங்களைப் பயன்படுத்தி படிப்படிப்பாகத் தான் அந்தக் கணக்குப் புதிரை விடுவித்து விடையைக் கொண்டு வர முடியும்.  ஆனால் கணித மேதை அந்தப் படிநிலைகளையெல்லாம் விளக்காமல் நேரடியாக விடையைத் தருவார்.


              என்னை வெகு காலம் வாட்டிக் கொண்டிருக்கும் பகுத்தறிவு பிரச்சாரத்தின் விளைவு எனும் புதிருக்கான விடையை கவிப்பேரரசு கணித மேதையைப் போல நேரடியாக விடையளித்திருக்கிறார். கவிப் பேரரசு வைரமுத்து அவர்களுக்கு நன்றி.

              
நலந்தா செம்புலிங்கம்
12.08.2018

2 comments:

  1. You are a person who has got guts to publish these kind of Articles. Keep it up. May God Bless you.

    ReplyDelete
  2. நல்ல நறுக்குத் தெறித்தார் போன்ற பதிவு.

    ReplyDelete