Thursday 28 February 2019

ஜாக்குலின் வகுப்பறை வாழ்க்கை முறை!

ஜாக்குலின் வகுப்பறை வாழ்க்கை முறை!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

         எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே!

         
கோட்பாடு நன்றாகத்தான் இருக்கிறது, செயற்பாட்டில் சாத்தியமா?

         
எல்லோருக்கும் வாக்குரிமை அளிக்கப்படுகிறதல்லாஅதனால் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தாம் என எவ்வளவு பெரிய மேதை எப்படி விளக்கினாலும் அது கோட்பாட்டின் விளக்கம் தான்.  உள்ளபடியே 5, 10 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பில் கூட ஆலோசனை நிலை வரையில் தான் அனவரும் பங்கேற்கலாம், முடிவெடுக்கும் அதிகாரம் ஒருவரிடம் மட்டும் இருந்தால் தான் அமைப்பு சீராக இயங்க 
முடியும். கணவன் மனைவி இடையே கூட யாராவது ஒருவர் விட்டு கொடுத்துப் போகவேண்டும் என்றே வழிகாட்டப்படுகிறது.  ஆகவே "எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே!" என்பது ஒரு சிறந்த கோட்பாட்டின் அலங்கார முழக்கம் தான். 

         ஆனால் "எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே" என்ற அந்த அலங்கார முழக்கத்தையே அச்சுப் பிசகாமல் அமலாக்கிவருகிறது ஒரு அதிசய வகுப்பறை!!        

       
அது தான் நாட்டின் முன்மாதிரிப் பள்ளிகளுள் ஒன்றாகத் திகழும் காரைக்குடி இராமநாதன் செட்டியார் பள்ளியின் இந்த ஆண்டிற்கான சிறந்த வகுப்பறை விருதினைப் பெற்ற 9A வகுப்பறை.

       இப்பள்ளியின் ஐந்தாம் ஆண்டு விருது வழங்கும் விழா 21.02.2019 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.  அவ்விழாவில் பள்ளியின் பல்வேறு சாதனையாளர்களுக்கும் வெற்றியாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.   சிறந்த வகுப்பறைக்குரிய விருது விருதுகளின் விருது என்றே அறிமுகப்படுத்தப்பட்டது..  21 வகுப்புகளில் 7A & 9A  ஆகிய இரண்டு வகுப்புகள் மட்டுமே தேர்வு நிலையை (NOMINATION) எய்தியிருந்தன.  இந்த இரண்டு வகுப்பறைகளைப் பற்றியும்  ஒலி ஒளிப் பதிவுகள் ஆண்டு விழாவில் திரையிடப்பட்டன.

           இந்த வகுப்பறை எங்கும் பொன்மொழிகள் எழுதி வைக்கப் பட்டுள்ளது. 
ஆனால் அவை வெறும் சுவர் அலங்காரமாக இல்லை. ஒவ்வொன்றிற்கும் 
  உள்ள  பின்னணியையும், அவற்றை மாணவர்கள் அணுகும் முறையையும், ஒலி ஒளிப் பதிவில் விளக்கினார்கள்.  அந்தப் பொன்மொழி அட்டைகளுள் ஒன்று MAGIC WORDs  இந்த மாயச்  சொற்களைப் பயன்படுத்தினால் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மாயமாகும் என்கிறார்கள் அந்த சொற்கள்.Excuse Me, Sorry. Please, Thank you, Welcome. என்பதை அனுபவ பூர்வமாகச் சொல்கிறது 9A  வகுப்பறை.
       
            இந்த வகுப்பறையில் மாணவர்கள் ஒருவரை ஒருவர்  Brother  Sister என்று அழைத்துக் கொள்கிறார்கள்.  இது போன்ற அணுகுமுறைகள்  நற்பண்புகளை உரிய பருவத்தில், பதின்பருவத்தில் இருக்கும் இந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடையே
விதைக்கிறது.

            உடல் நலம் பேணுதலில்  நீர் அருந்துதலுக்குப் பெரிய பங்கு இருக்கிறது. இந்த வகுப்பில் மாணவர்கள் ஒழுங்காக நீர் அருந்துகிறார்களா  என்பது  கவனிக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது.  பல மாணவர்கள் குறிப்பாக மாணவியர் பள்ளியில் இருக்கும் பொழுது ஓய்வு அறைக்குச் செல்லத் தயங்குவார்கள்.  இந்தப் பள்ளியில் மாணவர் எண்ணி்க்கை மிக மிக அதிகமாக இருப்பதால் ஒய்வு அறை பயன்பாட்டிற்கே வகுப்புவாரி நேர ஒதுக்கீடு உள்ளது.  இந்த நெருக்குடி காரணமாக தயக்க மனப்பான்மை உள்ள மாணவர்கள் ஒய்வு அறைக்கு செல்லவதை எளிதாக தவிர்த்துவிட முடியும்.  ஆனால் 9 A வகுப்பு ஆசிரியை திருமதி ஜாக்குலின் கனிமொழி அதற்கு துரும்பு அளவும் இடமளிப்பதில்லை

         தம் மாணவர்களின் மாணவியர்களின் உடல் நலத்தையும் குறிப்பாக பதின்பருவ நிலையையும் கருத்தில் கொண்டு வகுப்பு ஆசிரியயை ஜாக்குலின் கனிமொழி மாணவர்கள் இவற்றை முறையாக கடைபிடிக்கிறார்களா என்பதை மாணவர்களுள் ஒருவர் மூலமாகவே கண்காணிக்கிறார்.  அவரே கண்காணிப்பதை விட மாணவர் ஒருவர் மூலமாக கண்காணிக்கும் போது தயக்கங்கள் எளிதில் கரைந்துவிடும்.

          உரிய அளவு நீர் அருந்துதல், ஒய்வு அறை பயன்படுத்ததுல், இனிய சொற்களை கையாளுதல், சீருடையை முறையாக அணிதல், வீட்டுப்பாடம் செய்தல், பெற்றோர் ஒப்புகை பெறுதல், போட்டிகளில் பங்கேற்றல் .......    எனப் பல நற்பண்புகளை எல்லாம் இனம் கண்டு ஒவ்வொரு பண்பையும் எல்லா மாணவர்களும் கடைபிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பையும் ஒவ்வொரு பண்பிற்கு ஒரு மாணவர் என மாணவர்களிடமே ஒப்படைத்துள்ளார் வகுப்பாசிரியை திருமதி ஜாக்குலின் கனிமொழி.
           
           அந்தந்தப் பண்பைக் கண்காணிக்கும் மாணவர் அந்தந்தப் பண்பிற்கு உரிய தலைவர். அதன்படி ஐம்பது மாணவர்களும் தலைவர் ஆகிவிட்டார்கள்.  ஆகவே  9A  வகுப்பறையில் உள்ளபடியே எல்லோரும் அந்த வகுப்பறையின் மன்னராகிவிட்டார்கள்.

         மாணவர்களை மதிப்பெண் எந்திரங்களாகவே மாற்றிவிட ஆசிரியர்களும் பெற்றோர்களும் வணிகமயக் கல்வியும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்  காரைக்குடி இராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியின் 9A  வகுப்பறையில் கற்றல் ஒரு பகுதியாகவும் இருக்கிறது, பண்பாடு மிகுதியாகவும் உள்ளது.

           மிகச் சிலவாக உள்ள மிக நல்ல பள்ளிகளில் தான் கற்றல் அப்பாலும் மாணவர்களை  ஏதேனும் ஒரு நல்ல தடத்தில் வழி நடத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.  அப்பள்ளிகளும் மாணவர்களை  சுய முன்னேற்றப் பயிற்சிகள், கல்வி சார்ந்த போட்டிகள் விளையாட்டு சார்ந்த போட்டிகளில் வழிநடத்துகிறார்கள்.  
              காரைக்குடி இராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியின் 9A  வகுப்பறையோ மேலும்  ஒரு படி உயர்ந்து நிற்கிறது. 9A  வகுப்பறையோ தம்  மாணவர்கள், நற்பண்பு மிக்க வாழ்க்கையை இந்தப் பருவத்திலேயே வாழ்வதற்கு வகுப்பறையையே உயர் களமாக் கொடுத்திருக்கிறது..

            என் அறிவிற்கு எட்டியவரை இந்த நடைமுறை பண்பாட்டுப் பயிற்சிக்கு முன்னுதாரணம் இல்லை. ஆகவே இந்த நன்முறையை ஜாக்குலின் வகுப்பறை வாழ்க்கை முறை என்றே அழைக்கலாம்.

          ஒவ்வொரு ஜாக்குலின் மாணவரும் இன்னொரு பண்பாளரையாவது உருவாக்குவார்.  ஆயிரமாயிரம் ஜாக்குலின் மாணவர்கள் ஒரு முன்னுதாரணமான சமூகத்தை படைப்பார்கள்.


நலந்தா செம்புலிங்கம்


28.02.2019






Wednesday 20 February 2019

காமராசர் திறந்து வைத்த பள்ளியின் ஆண்டு விழா !






காமராசர் திறந்து வைத்த பள்ளியின் 
ஆண்டு விழா !  

            தலைப்பு பிடித்திருக்கிறதா? 

            காமராசர், பள்ளி, ஆண்டு விழா எல்லாம் நல்ல விஷயங்கள் தானே எனப் பெருபான்மையினர் வரவேற்பார்கள்.  சில நக்கீரர்கள் எத்தனையாவது ஆண்டு விழா என்று சொல்லவில்லையே என்று குற்றம் காண்பார்கள்.


             ஐந்தாவது விருது வழங்கும் விழா என பதிலளித்தால்
      
              தலைப்பில் ஆண்டு விழா விளக்கத்தில் விருது வழங்கும் விழாவா?

              காமராசர் தான் 1975 ஆம் ஆண்டிலேயே இயற்கை எய்திவிட்டாரே, 2019 ஆம் ஆண்டில் அவர் திறந்த வைத்த பள்ளிக்கு ஐந்தாம் ஆண்டு விழாவா? என கேள்விக் கணைகளை விளாசுவார்கள்

            இது, உள்ளபடியே 1936 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட காரைக்குடி இராமநாதன் செட்டியார்  பள்ளியைப் பற்றிய செய்திதான்.
       
        ஆனால் நான் சாட்சியோடு தான் சொல்கிறேன்  காமராசர் வந்தார்! இந்த சர்ச் வீதிக்கே வந்தார்! பள்ளியத் திறந்து வைத்தார்!  

         அந்த வரலாற்று நிகழ்வு அன்றைய பள்ளித் தலைமை ஆசிரியர் உயர்திரு கெளஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  அந்தத் தலைமை ஆசிரியர் இப்பொழுது மதுரையில்  தான் இருக்கிறார்.

       ஒரு தொடக்கப் பள்ளியைத் திறந்த வைக்க ஒரு முதலமைச்சர்  வந்தார், வெறும் மூன்று கார்களில்  வந்தார்.இவையெல்லாம் 1963 ஆண்டின் வரலாற்று சுவடுகள்.

       ஒரு தொடக்கப் பள்ளியைத் திறந்து வைக்க ஒரு முதலமைச்சரே வருவதும், வெறும் மூன்றே கார்களில் வந்ததையும், இன்று நாம் யாரிடம் எதிர்பார்க்க முடியும்?

         தமிழகத்தின் கடைக்கோடி ஏழை எளிய பிள்ளைகளுக்கு கல்வியை நினைந்தூட்டிய கல்விக் காவலனை நினைக்காத நாளைலெல்லாம் நாளல்ல.

        அந்த நிகழ்வில்  திறப்புவிழாக் கல்வெட்டிற்கு காமராசர் மலர் தூவதற்காக மலர் தட்டை ஏந்திய  ஐந்தாம் வகுப்பு மாணவன் வேறு யாரும் அல்ல நம் மாதவன் சார் தான்.  (தலைமை ஆசிரியர் (பணிநிறைவு) மற்றும் அறிவியல் இயக்கத்தின் காரைக்குடி புத்தகக் கண்காட்சிக் குழுவின் தலைவர்) 
          
          அப்போது இராமநாதன் செட்டியார் பள்ளி தொடக்கப் பள்ளியாக இயங்கியது.  ஆனால் அதற்கு முன்னர் செக்காலை முதல் வீதி என்றும் அண்ணாமலையார் வீதி என்றும் அறியப்படுகிற வீதியில் செக்காலை பேக்கரிக்கு பின்பக்கம் இயங்கியுள்ளது.

          2002 ஆம் ஆண்டில் இராமநாதன் செட்டியார் பள்ளி நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது.  2013-14 கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.  

          அப்போது கல்வித் துறையில் வட்டார மேற்பார்வையாளராகப் பணியாற்றிய திரு ஆ. பீட்டர் ராஜா உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்ட இராமநாதன் செட்டியார் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 

          இது இந்த உயர்நிலைப் பள்ளிக்கு ஆறாவது கல்வியாண்டு.  அன்று மாணவர் எண்ணிகை 288, இன்று 1200.  இந்த உயர்நிலைப் பள்ளி.  ஐந்து ஆண்டுகளில் ஐந்து மடங்கு மாணவர் எண்ணிக்கையை உயர்த்தி அரசுப் பள்ளி என ஈடு இணையில்லா சாதனையை நிகழ்த்திய பள்ளியாக இப்பள்ளி திகழ்கிறது.  

           தலைமை ஆசிரியர் மட்டுமல்லாது அனைத்து ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வும் உழைப்பும் வெற்றி நாணயத்தின் ஒரு முகம்.  இன்னொரு முகம் பெற்றோர் ஆசிரியர் கழகம்.

            மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆண்டு முழுவதும் திருவிழா நடந்த கொண்டே இருக்கும்.  காரைக்குடியில் இராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு ழுழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு மாணவரோ ஆசிரியரோ பரிசு, விருது பெற்ற வண்ணம் இருப்பார்.  

        அத்தகைய வெற்றியாளர்களை பள்ளியின் சார்பில்  ஆண்டில் ஒரு நாள் பாராட்டு விழா தான் விருது வழங்கும் விழா.

         இந்த வரிசையில் இப்பள்ளியின் ஐந்தாம் ஆண்டு விருது வழங்கும் விழா நாளை(21.02.2019) அழகப்பா பல்கலைக் கழக வளாகத்தினுள் அமைந்துள்ள L.CT L  பழநியப்பச் செட்டியார் அரங்கில் நடைபெறவுள்ளது.  
       
   இந்த விழா உச்சிக்கும் உச்சியான மதியம் 2 மணி வெயில் நேரத்தில் ஆரம்பித்து இரவு 8 வரை கூட நீடிக்கும். .100 பேர்களுக்காவது விருது நினைவுப் பரிசு வழங்கிய வண்ணம் இருப்பார்கள்.  ஏராளமான கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறும்.  
       
           ஒரு முன்னுதாரணமாக தலைமை ஆசிரியரான திரு ஆரோக்கியசாமியின் மகனான பீட்டர் ராஜா

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். 

என்ற குறள்நெறிக்கோப்ப  இந்தப் பள்ளியை அகில இந்திய அளவில் பேசப்படும் பள்ளியாக வளர்த்துவருகிறார்.
    
நலந்தா செம்புலிங்கம்
20.01.2019

Monday 11 February 2019

Kashmir & Demonetization

காஷ்மீர் அனுப்பிய அமைதி ரோஜா!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^



                     -- நலந்தா செம்புலிங்கம்
                         ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 (நோட்டு மாற்றம் காஷ்மீரில் ஏற்படுத்திய மாற்றத்தைப் பற்றி காஷ்மீரைச் சேர்ந்த அப்சல் ரஹ்மான் பிரமதர் மோடி அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் கவிதையாக்கம்)


அது கடிதம் அல்ல,
காஷ்மீர் அனுப்பிய
அமைதி ரோஜா!

காஷ்மீர் 
ரோஜாக்கள் பூக்கும்! 
தோட்டாக்களும் வெடிக்கும்!!



சிறுபான்மை (2%)
கலகக் கூட்டம்
பெரும்பான்மை
மக்கள் பேரைக் கெடுக்கும்,
வாழ்க்கையைக் குலைக்கும்!

அடைப்பதற்காகவே
கடை வீதிகள்
எறிப்பதற்காகவே
பள்ளிக் கட்டிடங்கள்
அமைதி என்றொரு சொல்
அகராதியில் மட்டும் இருக்கும்!


படித்த இளைஞர்களுக்கு
வாய்த்த வேலைகள்:
கல் எறிதல்,
ஆயுதம் கவர்தல்,
கைக்குண்டு எறிதல்,
பேரம் பேசாமல் 
கூலி கிடைக்கும்!
யாரோ எங்கோ
அச்சடித்த நோட்டுக்களில்!



எதுவும் நடக்கும் பூமியில்
எட்டாம் தேதிக்கு* பிறகு
நாடெங்கும்
நோட்டு மாற்றம்!
ரோஜா பூமியிலோ
கலகக்காரர்களின்
நோட்டு முடக்கம்!

பொழுது புலர்ந்தது,
கற்கள் தரையிலேயே கிடந்தன,
கையில் எடுப்போரில்லை!

கல்லடிபடாத கட்டிடங்கள்,
கிள்ளிப் பார்த்துக் கொண்டன!

வீதிகளில் நடமாட்டம்!
கடைகளில் வியாபாரம்!
முகங்களில் மகிழ்ச்சி!!


பள்ளிகள் திறந்தன!
தேர்வுகள் நடந்தன!
95 %  மாணவர்கள் எழுதினர்!!
விடைத்தாள் 
திருத்தப்படும் முன்னரே
பதிவானது வெற்றி !



வங்கிகளெங்கும் வரிசைகள்
சலித்துப் புளித்தது நாடு
பெருமிதத்தில் மிளிர்ந்தது 
ஆப்பிள் காடு



மோடி 
இரண்டு நோட்டுக்களைத்
திரும்பப் பெற்றார்,
ஒரு புதிய நோட்டை
அறிமுகப் படுத்தினார்.



காஷ்மீரில்
ஹவாலா ஆறு
வற்றிப் போனது!
கலகம் ஓய்ந்தது
அமைதி மலர்கிறது!!


* 08.11.2016
(நலந்தா செம்புலிங்கம் எழுதிய  நோட்டு மாற்றம் நாட்டை மாற்றுமா? எனும் நூலின் இறுதி அத்தியாயமாக பிரசுரமான புதுக் கவிதை.  பதிப்பாளர்: விஜயா பதிப்பகம், கோயமுத்தூர் தொலைபேசி: 04222394614)