Wednesday 27 May 2020

தொல் தமிழால் புகழுறும் புதிய தொழில் நுட்பங்கள்!!


தொல் தமிழால் புகழுறும் புதிய தொழில் நுட்பங்கள்!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^



தமிழ்ப் பேச்சு உயிர் மூச்சு, இது புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி, பல இளைஞர்களை புகழணியில் ஏற்றிவிட்ட நிகழ்ச்சியும் தான்.  இந்தக் கவித்துவத் தலைப்பு மிகவும் பிரபலமானதற்குக் காரணம் இது மாபெரும் உண்மையைப் பதிவு செய்தது தான்.  ஆம் தமிழர்களால் பேசாமல் இருக்கவும் முடியாது, மேடைப் பேச்சுக்களைத் துய்க்காமல் இருக்கவும் முடியாது.


           மேடைப் பேச்சு தமிழக அரசியலில் செயலுத்திய ஆதிக்கம் மாணப் பெரியது.  அரசியல் பிரச்சாரங்களுக்கு நாடகங்கள் திரைப்படங்கள் தொலைக்காட்சி எனத் தளங்கள் விரிந்து வந்தன, அண்மைக் காலங்களில் சமூக வலைத்தங்களில் அரசியல் பிரச்சாரம் பேராதிக்கம் செலுத்தி வருகிறது. 

       காலங்கள் மாறினாலும் புதிய புதிய தொழில் நுட்பங்கள் பூத்த வண்ணம் இருந்தாலும்  அரசியல்  அரங்குகளிலும் இலக்கிய மன்றங்களிலும் நல்ல மேடைப் பேச்சுக்களுக்கு வரவேற்பு தொடர்கிறது.

       
உலகத்தையே முடக்கும் கொரோனா தொற்று நோய் பல சவால்களை மனிதகுலத்தின் மீது ஏவியுள்ளது.  ஒவ்வொரு தனிமனிதனும் எந்தவொரு மனிதனோடும் அணுக்கமாக இருக்கக் கூடாது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருக்க வேண்டும் என்பது இத்தொற்றினால் ஏற்பட்டுள்ள பெரிய தாக்கம்.  இதனால் கல்வித் துறை போக்குவரத்து தொழில் துறைகளெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கும் போது மேடைப் பேச்சு மன்றங்கள் மட்டும் கூட்டம் நடத்த முடியாது?   முடியாது என்பதல்ல விடை , கூடாது என்பது தான் சரியான சவால்.

      இந்த சவால் தமிழ் மன்றங்கள் தொழில் நுட்ப உதவியோடு எதிர்கொண்டு வெற்றியும் பெற்றுள்ளது.  WEBINAR மற்றும் அதைப் போன்ற தொழில் நுட்பங்களின் வாயிலாக பல தமிழ் மன்றங்கள் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

     சிங்கப்பூர் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் go to meeting எனும் இத்தகைய தொழில் நுட்பச் செயலி வாயிலாக  28.05.2020 வியாழக் கிழமை சிங்கப்பூர் நேரம் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை (இந்திய நேரம் மதியம் 2.30 முதல் 4.00 மணி வரை) புகழ் பெற்ற மேடைப் பேச்சாளர் தேவகோட்டை இராமநாதன் அவர்களின் பேருரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

      இந்நிகழ்ச்சி அந்தக் கலைக் கழகத்திற்கு மட்டுமல்லாது அத்தொழில் நுட்பத்திற்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

          தொலைத் தொடர்புத் துறையும் கணிப்பொறி மென்பொருள் துறையும் மின்மயமான 21 நூற்றாண்டின் ஆம் நாயகர்கள் தாம்.

           சகல துறைகளிலும் அந்த வல்லவர்கள் கோலோச்சினாலும் அவர்கள் ஒரு தொழில்சார் வட்டத்திற்குள் அரியணையேகுபவர்கள் தான்.

          இப்போது தமிழ் மன்றங்கள் அந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொள்வதாக பலர் நினைக்கிறார்கள்.

           உள்ளபடியே அத்தொழில்நுட்பங்களுக்குத் தமிழ் மன்றங்கள் தான் பெரிய மேடை அமைத்துக் கொடுத்து அத்தொழில்நுட்பங்களை ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வீதிக்கும் கொண்டுபோய் சேர்க்கின்றன.

           அதிலும் இது தேவகோட்டை இராமநாதன் பேருரை, மிக மிக நேர்த்தியான தலைப்பும் அமைந்திருக்கிறது: இதயத்தில் பூக்கட்டும் இலக்கியப் பூ   இந்நிகழ்ச்சி உலகளாவிய கவனம் பெறும் மாபெரும் நிகழ்ச்சியாக அமையும்.  

            இது, தொழில் நுட்பத்துறையினருக்கு சிங்கப்பூர் தமிழ் பட்டிமன்றக் கலைக் கழகம் நல்கும் வரம் தான்!

நலந்தா செம்புலிங்கம்
27.05.2020


Sunday 17 May 2020

இணையத்தில் தமிழ்க் கொடி காக்கும் தன்னார்வலர்கள்!!

இணையத்தில் தமிழ்க் கொடி காக்கும் தன்னார்வலர்கள்!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
            காதல்களிலெல்லாம் சுவையானது மோதலில் மலரும் காதல் தான்.  இளவல் லெனினிற்கும் எனக்குமான நட்பும் அத்தகையதே. ஒரு புறம் எதிர்நிலை கருத்துக்களால் தான் எங்கள் நட்பு மலர்ந்தது.  மற்றொரு புறம் தமிழ்ப்  பற்று என்ற ஒருமித்த ஈர்ப்பு எங்கள் நட்பிற்கு வலிமை சேர்த்தது. லெனினின் தமிழ்ப் பற்றும் மிக ஆக்கபூர்வமான பங்களிப்புகளும் வியக்க வைக்கின்றன.


             2015 ஆம் ஆண்டில் கொடையின் கதை (மூன்றாம் பதிப்பு) எனும் வள்ளல் அழகப்பர் காவியத்தைக் காரைக்குடியில் பல நகலச்சு (xerox) கடைகளின் வாயிலாக விற்பனை செய்ய முனைந்தேன்.  ஒவ்வொரு கடையிலும் ஐந்து பிரதிகள் கொடுத்து விட்டு ஒரு வாரம் கழித்து விற்ற புத்தகங்களுக்குப் பணத்தைப் பெற்றுக் கொண்டு மீண்டும் புத்தகங்களைக் கொடுப்பது என்பது தான் அந்தத் திட்டம்.  பல நகலச்சுக் கடைகாரர்கள் எங்களால் உள்ள வேலையைப் பார்க்க முடியாவில்லை  இந்த புத்தக விற்பனையெலாம் செய்ய முடியுமா என மறுத்தார்கள். அவற்றுள் ஒரு பிரபல நகலச்சுக் கடையில் ஏற்பட்ட அனுபவம் மிகவும் கசப்பனானது. அவர் புத்தகங்களைத் தொடவே மறுத்தார். இது அழகப்பர் வாழ்க்கை என அழுத்திச் சொன்ன போதும் அவர் ஏற்க மறுத்ததோடு இது கம்பெனி சார் செராக்ஸ் கடை நிறைய இருக்கு அங்கே போய் இந்த புத்தகத்தைக் கொடுங்க என உறுதியாக உதாசீனப்படுத்தினார்.  மற்ற நகலச்சு கடைகளில், இது அழகப்பர் வரலாறு என்றதும் புத்தகங்களை எடுத்துக் கொண்டார்கள்.

            லெனினின் சன் கிரியேஷன்ஸ் நகலச்சுக் கடைக்கும் சென்றேன்.  அறிமுகமில்லாத லெனின் முகம் சுழிக்காமல் வாங்கிக் கொண்டார். உரிய தொகையையும் உடனே கொடுத்தார்.  விற்பனை செய்த பிறகு கொடுத்தால் போதும் என்ற போதும் அவர் ஏற்கவில்லை.  தொகையை வற்புறுத்திக் கொடுத்தார்.
     
     
    பிறகு தான் இதைப் போன்ற (அச்சுப் ) புத்தகங்களுக்கு மாற்று வந்துவிட்டது அது தான் மின் புத்தகங்கள் (e books) என்றார்.  தானும் ஒரு மின் புத்தகத் தயாரிப்பாளர் என்றும் அறிமுகம் செய்து கொண்டார். மாற்றுக் கருத்தை அவர் எடுத்துரைத்த பாங்கிலேயே நான் வியந்து போனேன்.

        லெனின் அச்சுப் புத்தகங்களுக்கு மாற்றான மின் புத்தக தயாரிப்பாளராக இருந்த போதும் கொடையின் கதை அச்சுப் புத்தகத்தை விற்றுக் கொடுக்க  முன்வந்தது பிரபல நகலச்சுக் கடைக்காரர் அளித்த கசப்பான அனுபவத்திற்கு இனிப்பான மாற்றாக அமைந்தது.

          நாம் காலம் காலமாக படிக்கும் புத்தங்களுக்கும் இந்த நவீன மின் புத்தகங்களுக்கும் உள்ளபடியே எந்த வேறுபாடும் இல்லை.  அதே தாள் அதே அச்சு அதே அட்டை.  வாசகர்களைப் பொறுத்தவரைக்கும் இரண்டும் ஒன்று தான். தயாரிக்கும் முறையிலும் வேறுபடுகின்றன.  

            மின் புத்தகங்கள் வேண்டும் போது வேண்டிய பிரதிகளை மட்டும் அச்சிட்டுக் கொள்ளலாம். கையிருப்பு சுமை என்ற ஒன்று இருக்கவே இருக்காது என்றார்.  மின் புத்தக பதிவிறக்கங்களுக்கும் விலை வைக்கலாம் என்றும் அதன் சாதகங்களை அடுக்கினார். 

              இவையெலாம் நடந்த போது நலந்தா புத்தகக் கடை இடைவேளையிலிருந்தது.  அதற்கு சில மாதங்களுக்குப் பிறகு நலந்தா புத்தாக்கம் பெற்று சுப்பிரமணியபுரம் தெற்கு முதல் வீதியில் திறக்கப்பெற்றது.  அதற்குரிய அழைப்பிதழை லெனினிடமும் கொடுத்தேன்.

             குடும்ப மங்கல நிகழ்வு பத்திரிகைகளை உறவினர்களிடம் வைக்கும் போது பத்திரிகையைப் பெற்றுக் கொள்பவர்கள், முறை என்ற பெயரில் ஒரு அடையாளத் தொகையைக் கொடுப்பார்கள்

             லெனின் எனக்கு வைத்த முறை என்ன தெரியுமா?  மின் புத்தகங்களுக்குத் தான் இனி எதிர்காலம் நீங்கள் இப்போது புத்தகக் கடையை மீண்டும் திறக்கிறீர்களே என்ற பேருரை தான்.
   
            மாற்றுக் கருத்தை மதிக்கத் தெரிந்தவர்கள் தம் கருத்தில் வேறு எவரையும் விட உறுதியோடு இருப்பார்கள். அவர்கள்  இதிகாச அன்னப் பறவை  போல மாற்றுக் கருத்தினர் கூறியவற்றில் உடன்படக் கூடியவற்றையும் வெளிப்படையாக ஏற்றுக் கொள்வார்கள்.  மற்றவற்றை நாகரீகமாக நிராகரிப்பார்கள்.  எங்கள் நட்பில்  இத்தகைய அனுபவமும் உண்டு.  மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலந்தா புத்தகக் கடையின் சார்பில் ஒரு மலரைத் தொகுத்தோம்.  தலைப்பு :  தனித்தமிழும் இனித் தமிழும்.  மின் புத்தக ஆர்வலரும் தயாரிப்பாளருமான லெனின் அச்சுப் புத்தகமாக வெளியிடப்பட்ட அந்த தொகுப்பில் எழுதினார்.  அவருடைய கட்டுரையின் தலைப்பு : தமிழிற்குத் தற்போதைய தேவை மின்மயமாக்கல் மட்டுமே

         மாற்றுக் கருத்தினிரிடையே மலரும் இத்தகைய அறிவார்ந்த நட்பு  உள்ளபடியே, மெய்யியல் அறிஞன் ஹெகல் கூறும் -- கருத்து, எதிர் கருத்து புதுக் கருத்து -- கோட்பாட்டிற்குச் சான்றாகவும் திகழ்கிறது.

         இது வரை சொன்னதெல்லாம்  உண்மை! உண்மையான எங்கள் நட்பின் கதை.  இனிமேல் வருவதும் உண்மை தான்!! ஆனால் அறிவியல் புதினக் கதை போல, மாய ஜாலக் கதை போல, தன்னம்பிக்கை கதை போல, இவை எல்லாம் கலந்தது போலவும் இருக்கும்.

       பெரும்பான்மையினரிடையே தமிழும் நவீன அறிவியல், தொழிநுட்பம் போன்றவைகளெல்லாம் எதிரெதிர் துருவங்கள் என்ற எண்ணம் இருக்கிறது.  தமிழ் என்பது பழம் பெருமை பேசுவதற்கானது,  தமிழ் படிப்பது தமிழாசிரியர் வேலைக்கும் தமிழ் அறிவு என்பது மேடைப் பேச்சுக்கானது மட்டும் தான் போன்ற எண்ணங்களும்  நிலை பெற்றுவிட்டன.

       ஆனால் இணைய உலகம் தமிழிற்கு இன்றியாமையாத தேவை என்பதை ஒரு திருக்கூட்டம் கண்டு கொண்டுள்ளது.  இணைய இணைப்பபோடு தொழில் நுட்ப ஆற்றலோடு தமிழை வளப்படுத்தும்  வரலாற்றுப் பணியில் அந்த இளைய தமிழ்ப் படையினர் வெற்றி நடை பயின்று வருகின்றனர்.  அவர்கள் எல்லாம் பல்வேறு தமிழ்க் கணனி அமைப்புகளில் தன்னார்வலர்களாக மகத்தான தமிழ்த் தொண்டாற்றி வருகின்றனர்.


              காரைக்குடி எஸ். எம். எஸ் மேனிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் M.Sc (Nano Science)  பயின்ற  நம் லெனினும் அத்தகைய புதிய தலைமுறைத் தமிழ்த் தொண்டர்களில் ஒருவர்.   விக்கிபீடியா (Wikipeadia) சார்ந்த    கணினி மாநாடுகளிலும் பயிற்சி பட்டறைகளிலும் கலந்து கொண்டுள்ளார்கள.  சில பயிற்சி வகுப்புகளும் நடத்தியுள்ளார். அண்மையில் தேசிய அளவில் சாதனை படைத்த வெற்றித் தமிழன்.    கணியம்  மற்றும் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின்   தொண்டராக லெனின்
செயல்படுகிறார்.


      லெனினின் பணி தமிழ் மென்பொருள் ஆக்கம், (Software) மின் நூலாக்கம் (e books), மின் நூலக உருவாக்கம் (e library), மின் நூல் இணைய தளம்  (website for e books)  என விரிகின்றன.  இவற்றைச் செயல்படுத்தும் 

           காரைக்குடியின் புகழ் பெற்ற இராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் தான் முதல் மின் நூலகம் மூன்றாண்டுகளுக்கு முன் நிறுவப் பட்டது.  இதனை உருவாக்கிய குழுவில் லெனின் பணியாற்றினார்.

             freetamilebooks.com எனும் இணைய தளம் கணியம் அறக்கட்டளையின் (kaniyam.com) மின் நூலகத் தளமாகும்.  இந்த இணைய தளத்தில் இதுவரை 650 நூல்கள் பதிவேற்றம் செய்துள்ளனர்.  இந்தக் குழுவிலும் லெனின் பணியாற்றுகிறார்.

             இந்த இணைய தளம் அழகப்பரின் 111 வது பிறந்த நாளான 06.04.2020 அன்று வ. சுப. மாணிக்கனார் இயற்றிய கொடை விளக்கு எனும் அழகப்பர் குறுங்காப்பியத்தை பதிவேற்றியது குறிப்பிடத் தக்கது.
இந்த குறுங்காவியம் ஒலி வடிவில் ஒலிப்புத்தகமாகவும் யூடியூப்பில் கல்லூரி மாணவர்களின் உதவியுடன் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இக்குழு ஒலிபீடியா (Olipedia - https://www.youtube.com/channel/UCG0XGCZ1XroIWdBXvtqeI2g) என்னும் பெயரில் நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களை ஒலிப்புத்தகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.  

               இவை யாவும் எந்தக் கடல் கோளாலும் எந்த சுனாமியாலும் எந்த கொரோனாவாலும் தமிழை சேதப்படாமல் காக்கும் மின் வேலிகள் ஆகும். இவை கரையான்களிடமிருந்து தமிழ் இலக்கியங்களை மீட்டு அவற்றை அச்சு வாகனம் ஏற்றிய தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதைய்யரின் பணிகளுக்கு ஒப்பானவை.

                இந்தக் கணினித் தமிழ் உலகம். தொண்டர்களால் இயங்கும் அதிசய உலகம்.  இது பழைய நூல்களைக் காக்கும். புதிய நூல்களை உருவாக்கத் துணை நிற்கும்.   வணிகம், நிர்வாகம், என எல்லாவற்றையும் மின்னூடகத்தில் தமிழிலேயே கையாள மென்பொருள்களை உருவாக்கும்.

              இணைய உலகத்தில் பல தளங்கள் தகவல் களஞ்சியங்களாகத் திகழ்ந்தாலும் அவற்றுள்ளெல்லாம் சிகரம் விக்கிபீடியா (Wikipeadia)  தான்.  விக்கிபீடியாவிலும் பல துணைத் தளங்கள் உள்ளன.  அவற்றுள் விக்கி சோர்ஸ் (wikisource) என்பது பன்மொழித் தளங்களை உள்ளடக்கியது.  அந்தந்த மொழிக்கான தளத்தில் அந்தந்த மொழி நூல்கள் பதிவேற்றப்படும். (எ.கா. தமிழ் மொழிக்கு - ta.wikisource.org)


          செப்பேடுகள் கல்வெட்டுக்கள் போல மேற்சொன்ன மின் ஊடகப் (electronic media) பதிவுகளும்  இணையத் தொடர்பும் (internet connectivity) அழியாப் பதிவுகளாகும்.  மேலும் மின் ஊடகத்தில் பதிவானால் தான் கைபேசி கருவி போன்ற  தகவல் பரிமாற்ற கருவிகளுள் ஏற்கப்படும்.  ஆகவே இவை அழியாப் பதிவாக நிலைப்பதோடு உயிர்ப்போடு இயங்கவும் முடியும்.  பல அரசுகளும் ஐக்கிய நாட்டு சபை போன்ற உலகளவிய அமைப்புகளும் இணைந்த செய்ய வேண்டிய இமாலயப் பணியை சில நூறு தன்னார்வலர்கள் சாதித்து வருகிறார்கள்.

        இந்த மின் ஊடகங்களில் தமிழ் மிகத் தாமதமாகத் தான் அடியெடுத்து வைத்தது.. சுமார் 10 அல்லது 15 ஆண்டுகளாகத் தான் தமிழ் நூல்கள் பதிவாக வருகின்றது. ஆங்கிலமோ 1971 களிலேயே மின் ஊடகத்தில் நுழைந்துவிட்டது. எனினும் இந்தக் குறுகிய காலகட்டத்தில் மின் ஊடக நூல்களின் எண்ணிக்கையிலும் மற்ற செயல்பாடுகளிலும் தமிழ் வேகமாக முன்னேறி இப்போது முன்னணியில் உள்ளது.

          தமிழின் மின் ஊடக சாதனைகள் எப்படி சாத்தியமாயின?  இதற்காக பல தொன்மை நூல்கள் அரசுடமை ஆக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றப்பட்டன.  ஒரு நூல் அச்சேறினாலும் சரி மின் பதிவாகினாலும் சரி மெய்ப்புப் பார்த்தல் தான் மிகவும் முக்கியமானது.

               விக்கி சோர்ஸ் (wikisource) இப்பணிகளை ஊக்குவிக்க அண்மையில் இந்திய அளவில் பன்மொழிகளுக்கிடையில் ஒரு போட்டி நடத்தியது.  அதில் அதிக பக்கங்களை பதிவேற்றியவர்களுக்கெனவும் அதிகப் பக்கங்களை மெய்ப்புப் பாரத்தவர்களுக்கும் தனித்தனியாகவும் பரிசுகள் வழங்கியுள்ளது.




                மொழிகளின் வரிசையில் தமிழ் இரண்டாவது இடத்தையும் தனி நபர் பங்களிப்பில் லெனின் முதல் இடத்தையும் பெற்றுள்ளனர்.



               இன்றைய கணிப்பொறி பேராற்றலையும் இணையத் தொடர்பு வலிமையையும் பலர் சமூக  வலைத்தளத்திற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பெரும்பாலான சமூக வலைத் தளங்கள் பொழுது போக்கிற்கும். வதந்தி பரப்பவதற்குமே பயன்படுகிறது. இந்நிலையில் தமிழ்த் தொண்டாற்றவும் தமிழைத் தொழில் நுட்பத்திற்கேற்ப தகவமைக்கவும் பாடுபடும் தன்னார்வலர்கள் இராணுவ வீரர்களைப் போல கொண்டாடப்பட வேண்டும்.

               ஆனால் பொது ஊடகங்களிலும் சரி சமூக வலைத் தளங்களிலும் சரி திரையுலகினர்  சில விளையாட்டுத் துறையினர், அரசியல்வாதிகள் நீங்கலாக சர்ச்சைக்குரியவர்களும் ஆள் வைத்து காசு கொடுத்து புகழை விலைக்கு வாங்குபவர்கள் பின்னால் தான் ஓடுகிறது.

           இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் நடிகர்களைப்  பற்றி மட்டுமல்லாது  பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமாக இருந்த நடிகர்களின் தனிப்பட்ட செய்திகள் கூட  முக்கிய ஊடகச் செய்தியாகிறது. சமூக வலைத்தளங்களிலும் அவை பக்தி சிரத்தையோடு மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்படுகிறது.  YOU TUBE இதைப் போன்ற செய்திகளை உடனுடக்குடன் அறிந்த கொள்ள SUBSCRIBE  செய்யுங்கள் பெல் பட்டனை அமுக்குங்கள் என்று கட்டளைகளும் பிறப்பிக்கின்றன.

          அகில இந்திய அளவில் சாதனை படைத்த காரைக்குடி இளைஞனை விட காரைக்குடியில் அதிகமாக அறியப்பட்டிருப்பவர்கள் புதிய பழைய பிரபல நடிகர்கள் தான். காரைக்குடியைச் சேர்ந்த சமூக வலைத் தளப்பதிவாளர்களால் இந்த அவல நிலையை மாற்ற முடியும். 

               .  தமிழைத் தொழில் நுட்பத்திற்கேற்ப தகவைக்கும் பணியில் நூற்றுக் கணக்கான தன்னார்வலர்கள் எவ்வித எதிர்பார்ப்புமின்றி பாடுபட்டுவருகிறார்கள்.  அவர்களுள்  லெனின் ஒரு வெற்றி அடையாளம், அவர்  காரைக்குடியைச் சேர்ந்தவர். ஆகவே காரைக்குடி உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும் அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டுமென பணிவோடு வேண்டுகிறேன்.   அது அவருக்கான விழாவாக மட்டும் அமையாது. இணையத்திலும் மின் ஊடகத்திலும் தமிழ்க் காெடியை உயர்த்திப் பிடித்து காக்கும் தன்னார்வலர்கள் அனைவருக்குமான விழாவாகவும் கருதப்படும்.

          கம்பன் கழகத்தினை 80 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவி கம்பன் இலக்கியத்திற்கு புத்தூக்கம் அளித்த காரைக்குடி கணினித் தமிழிற்கும் புத்தூக்கம் அளிக்கட்டும்

நலந்தா செம்புலிங்கம்
17.05.2020