Wednesday 25 December 2019

நினைந்தூட்டும் தாயின் அக்கறை

பிள்ளையார் நோன்பு வந்து விட்டது(31.12.2019)

       கோலம், தடுக்கு, சங்கு ஊதுதல் என இந்து மதத்திற்கு பொதுவான பழக்கங்களில் கூட நகரத்தார்கள் ஒரு தனித்துவ அடையாளத்தை முன்னோர்கள் உருவாக்கி வைத்துகிறார்கள்.  நகரத்தார்களுக்குரிய மிக அழுத்தமான தனித்துவ அடையாளம் பிள்ளையார் நோன்பு தான்.



       பிள்ளையார் நோன்பு  சவால்கள் மிக்க கொண்ட்டாடமான விழா தான்.  அதற்கு விதவிதமாகப் பலகாரங்கள் செய்வது பாடுமிக்க வேலை தான். எனினும் பல பெண்கள், அது,  தங்கள் திறமையைக் காட்டுவதற்கான சவாலாகக் கருதி வரவேற்கிறார்கள்.  அடுத்து இழையைச் சுடரோடு விழுங்வதாக என்பது எல்லோருக்கும் பொதுவான சவால்.  புது மாப்பிள்ளைகளுக்கு ஒரு கெளரவப் பிரச்சனையும் கூட !

          கூடவே எங்கே இழை எடுத்துக் கொள்வது என்ற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால், பல ஊர்களில் நகரவிடுதிகள்  இருப்பதாலும்  எல்லா ஊரிலும் சங்கங்கள் இருப்பதாலுமும், அவற்றின் முக்கிய பணிகளுள் பிள்ளையார் நோன்பும் ஒன்றாகயிருப்பதாலும்,  நம்முடைய பாரம்பரிய 76 ஊர்களிலும் பொது இடங்களில் பிள்ளையார் நோன்பு இழை எடுத்துக் கொள்வது வழக்கமாகிவிட்டதாலும் ஒவ்வொருவருக்கும் இரண்டு அமைப்புகளிலிருந்தாவது அழைப்பு வந்திருக்கிறது.

        பிள்ளையார் நோன்பு இழை எடுத்துக் கொள்வதற்காகப் பொது இடத்தில் கூடுவது ஒரு சமூக நிகழ்ச்சியாகவும் பரிணமித்துள்ளது, பெரிதும் வரவேற்கப்படுகிறது.

        எங்கே இழை எடுத்துக் கொள்வது வீட்டிலா? பொது இடத்திலா? இந்த விவாதத்திற்கே இடம் கொடுக்காமல் இரண்டு இடங்களிலும் எடுத்துக் கொள்பவர்கள் தான் இன்று அதிகமாகவுள்ளனர். பொது இடங்களில் இழை எடுத்துக் கொள்ளுவதற்கு ஆண்டிற்கு ஆண்டு வரவேற்பும் அதிகரிக்கிறது, இந்த வேகம் தொடர்ந்தால் வீட்டில் இழை எடுப்பது அருகிவிடுமோ என்று கூடத் தோன்றுகிறது.  அப்படி ஒருபோதும் ஆகாது எனச் சிலர் ஆறுதல் சொல்வார்கள்.  வேறு சிலர்  அதனால் என்ன? என மறித்தும் கேள்வி கேட்பார்கள்.  

       பிள்ளையார் நோன்பிற்கு தேவைப்படும் முதன்மைப் பொருளான இழை மாவு மற்றும் சில வகைப் பொரிகள் வெளியூர்களில் கிடைப்பது உள்ள சிரமமும்  பலகாரங்கள் செய்வதற்கு உரிய வசதி மற்றும் நேரக் குறைவினாலும் வெளியூர்களில் வசிப்பவர்களும்  பிள்ளையார் நோன்பைக் கூட்டாகக் கொண்டாடும் நிலை ஏற்பட்டது.  பல ஊர்களில் ஆரம்ப காலத்தில் சங்கம், விடுதி இருந்தாலும் இல்லாவிடினும் யாரேனும் ஒருவர் வீட்டில் கூடி எல்லோரும் இழை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அந்த வகையில் வசதிக் குறைவான சூழலிலும் நமது மரபைக் கடைபிடித்த நற்செயலாகும். எல்லோரையும் சந்திக்கும் வாய்ப்பு என்ற கூடுதல் பரிசும் இதில் கிடைத்தது.  பிறகு சங்கத்தில் பிள்ளையார் நோன்பைக் கொண்டாடுவது பழக்கத்தில் வந்தது.  சங்கங்களின் மிக முக்கிய செயல்பாடாக முக்கியத்துவம் பெற்றது.

             இந்து மத பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு காரண காரியம் இருக்கும்.  அதைத் தான் கவியரசர் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் என்றார்.  ஆனால் அந்தக் காரண காரியத்தை நாம் உணர்ந்து கடைபிடிக்கவிட்டால் அது வெற்றுச் சடங்காகிவிடும்.  காலப் போக்கில் நீர்த்துப் போகும்.
                      
         
       
   பிள்ளையார் நோன்பு பொது இடங்களில் கொண்டாடப்படும் காலகட்டத்திற்கு  முன்னர் வெளியூர்களில் வசிக்கும் திருமணமாகாத இளைஞர்களை அந்த ஊரில் வசிக்கும்  தந்தை நிலையில் அண்ணன் நிலையில் உள்ளவர்கள் இழை எடுத்துக்க வீட்டுக்கு வா என உரிமையோடு கட்டளையிடுவார்கள்.   இன்றும் மகபேறு உண்டாகியிருக்கும் பெண்களுக்கு இரண்டு இழை எடுத்துக் கொடுப்பதும் பிள்ளையார் நோன்பின் மிக மிக முக்கியமான மகத்துவத்தை சுட்டிக் காட்டுகின்றன.  அது தான் வம்ச விருத்தி.  பிள்ளையார் நோன்பின் நோக்கம் வம்சவிருத்தி எனில் வீட்டில் இழை எடுத்துக் கொள்வது அவசியமாகும். கூடுதலாக பொது இடங்களிலும் இழை எடுத்துக் கொள்ளலாம்.  ஆனால் பொது இடங்களில் இழை எடுத்துக் கொள்ளும் வசதி ஏற்பட்டுவிட்டதால் வீட்டில் இழை எடுத்துக் கொள்ளும் வழக்கம் குறைந்துவிடக் கூடாது.

         பிள்ளையார் நோன்பின் நோக்கம் வம்ச விருத்தி என்று உணர்ந்தோடு பிள்ளையார் நோன்பை வீட்டில் கொண்டாடும் மரபை மீட்டெடுக்க வேண்டும் எனக் கருதிய தேவகோட்டையைச் சேர்ந்தவரும் சென்னை மகாலிங்கபுரத்தில் லெட்சுமி மெடிக்கல்ஸ் நடத்திவருபவருமான திரு எம். தண்ணீர்மலை அவர்கள் அந்த நல்ல எண்ணத்திற்கு ஒரு செயல் வடிவம் கொடுக்க முனைந்தார்.  அதன்படி பிள்ளையார் நோன்பிற்கு இன்றியமையாதவையாகிய இழை நூல், இழைமாவு, பொரி வகைகள் மற்றும் கோலக் கூடு ஆகியவைகளை பாக்கெட் போட்டு இலவசமாக 2015 முதல் சென்னை வாழ் நகரத்தார்களுக்கு வழங்கிவருகிறார்கள். மரபை இந்த நற்பணியில் திரு  எம். தண்ணீர்மலை அவர்களுக்கு மூன்று இளைஞர்கள் துணை நிற்கிறார்கள்.  

                  S.S.S.SP. முத்துக்குமார் (Zonal Manager, Channel & Retail Finance, Mahindra & Mahindra ---  S.S.S  வீடு, தேவேகாட்டை)

                  V. உடையப்பன் (Muthu Lakshmi Strores, Chennai ---  உதயாச்சியார் வீடு, தேவகோட்டை)

                  K. சீதாராமன்    (Swathi Agencies & Skandha Guru Chit funds  ---  உதயாச்சியார் வீடு, தேவகோட்டை)  

     இவர்கள் இந்த பிள்ளையார் நோன்புப் பொருட்களை சென்னை வாழ் நகரத்தார்களுக்கு இலவசமாக 2015 முதல் வழங்கிவருகிறார்கள்.

            2015 ஆம் ஆண்டில் 40 குடும்பங்களுக்கும், 2016 ஆம் ஆண்டில் 90 குடும்பங்களுக்கும்,2017 ஆம் ஆண்டில் 110 குடும்பங்களுக்கும், 2018 ஆம் ஆண்டில் 300 குடும்பங்களுக்கும் பிள்ளையார் நோன்புப் பொருள்கள் வழங்கியுள்ளார்கள். நடப்பு 2019 ஆம் ஆண்டில் 500 குடும்பங்களுக்கும் பிள்ளையார் நோன்புப் பொருள்கள் வழங்கவுள்ளார்கள்.

வம்ச விருத்திக்குரிய பிள்ளையார் நோன்பின் மகிமையை உணர்ந்து அப்பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டுவதற்கு வழிவகை செய்யும் இந்த சேவை உள்ளபடியே நினைந்தூட்டும் தாயின் அக்கறை போன்றது தான். ஆகச் சிறந்த இ்நதப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மேற்சொன்ன நால்வரோடு கடந்த ஆண்டிலிருந்து (2018) கீழ்க்கண்ட இருவரும் சேர்ந்து தோள்கொடுக்கிறார்கள்.

                  கதி. கார்த்திக் (Valli Entrerprises, Chennai -- கிழவன் செட்டியார் வீடு, தேவகோட்டை)

                  ராதா நாகப்பன் (Nagappa Pharmacy. Chennai -- கூலிக்கார வீடு, தேவகோட்டை)

   
         பிள்ளையார் நோன்புப் பொருளைப் பெற விரும்புவோர் இவர்கள் குறித்த பதிவுக் காலத்தில் கீழ்க்கண்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

              1. பெயர்
              2. சொந்த ஊர்
              3. கோயில்
              4. சென்னையில் இருக்குமிடம்
              5. தொலைபேசி எண்

பொதுவாக பிள்ளையார் நோன்பிற்கு இரண்டு வாரங்களுக்கு இரண்டு வாரம் முன்பு தொடங்கி ஒரு வாரம் பெயர் பதிவு நேரிலோ தொலைபேசி அல்லது வாட்ஸ் ஆப் மூலம் ஏற்றுக் கொள்ளப்படும்.  பிள்ளையார் நோன்பிற்கு இரண்டு நாட்கள் முன்னர் இவர்கள் குறிப்பிடும் இடங்களில் இந்தப் பிள்ளையார் நோன்புப் பொருளைப் பெற்றுக் கெள்ளலாம்.   இந்த ஆண்டு 13.12.2019 முதல் 20.12.2019 வரை பெயர்கள் பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு 28.12.2019  29.12.2019 தேதிகளில் விநியோகம் நடைபெறுகிறது.

            பிள்ளையார் நோன்பின் மகத்துவமான வம்ச விருத்தியை உணர்ந்து அந்த நல்ல மரபை மீட்கும் நல்லவர்களை நெஞ்சார வாழ்த்துவோம்.

நலந்தா செம்புலிங்கம்
அலைபேசி 9361410349
25.12.2019

Sunday 15 December 2019

அறிவின் உச்சம்: அர்த்தமுள்ள இந்து மதம்!!

அறிவின் உச்சம்: அர்த்தமுள்ள இந்து மதம்!!
                ******************************



                   இறைமறுப்பையும் 

                     மதிக்கின்றன  மதம்
                      இந்து  மதம்!

                      அது அறிவின் உச்சம்!!

                       🌿🌿🌿🌿



                       இந்து மதத்தை

                      தேர்ந்தெடுத்து நிந்திப்பது

                      மூன்றாம் தலைமுறை (3G)

                       கற்றற்ற சுதந்திரம்!

                      அவர்தம் இல்லத்தார்க்கும்     

                                                                 உண்டு

                        தனிமனித சுதந்திரம்!!




                     

                   🌿🌿🌿🌿


                      திருமதி ஸ்டாலின்

                      கோவில் கோவிலாக

                      வலம் வருகிறார்

                      ஊடக வெளிச்சத்தோடு!

                      கோயில்களும் வரவேற்கின்றன

                      மாலை மரியாதைகளோடு!!

                      பரம்பரை பக்தனோ

                      காத்துக் கிடந்து

                     இடிபட்டு மிதிபட்டு

                     வைகுண்டம் அடைகிறான்!

                    🌿🌿🌿🌿


                    அவர் பிரார்த்தனை 

                    அவர் சுதந்திரம்!

                    உவகையோடு ஊரரறிய
  
                    மரியாதை பெறுபவர்

                   ஒரு பிரார்த்தனையை



                      ஊரரறிய வைக்ககட்டும்



                        தெய்வ நிந்தனை ஒழிக!   

                 

                   
                  

                 
                   கோவில் மரியாதை மட்டுமல்ல

                   கோவிலுக்கு வரும்

                   ஒவ்வொரு பக்தனின்

                   மரியாதையும் நிச்சியம்!!

                  புரிந்து கொள்ளுங்கள் இதுதான்

                  அர்த்தமுள்ள இந்து மதம்!!

  
   ----- நலந்தா செம்புலிங்கம்
         26.07.2019



















Friday 27 September 2019

Google 21

இன்று கூகிளின் 21 ஆம் பிறந்த நாள்  படையெடுத்த உலகை வென்றதெல்லாம் வரலாறு.  அந்த மாவீரர்கள் கூட அரசின் தலைமைகளைக் கைப்பற்றி அதன் மூலம் தான் மக்களை ஆண்டார்கள்.

        கூகிள் தொழில் நுட்பதால் உலகை வென்றுள்ளது.

        ஒவ்வொரு மனிதைனயும் நேரடியாக ஆள்கிறது.  அவனுடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் வல்லமை பெற்றுள்ளது.

        கூகிளையும் வெல்லும் சக்தி நிச்சயமாகத் தோன்றும்.  அது ஒரு வேளை ஒவ்வொரு மனிதனின் எண்ணைகளைக் கூட கண்காணிக்கக் கூடும்.

         நிலையாமைத் தத்துவமே நிலைக்கும்.

கூகிள் பற்றிய 45 விநாடி காணோளியை இணைப்பைச் சொடுக்கினால் பார்க்கலாம்..  பார்க்கத் தவறாதீர்கள்

Wednesday 18 September 2019

பள்ளியின் புறச் சூழல் அகச் சூழலை மேம்படுத்தும்!!

பள்ளியின் புறச் சூழல் அகச் சூழலை மேம்படுத்தும்!!




           வணிகமயமான கல்வி கோலோச்சும் இந்நாளில் காமராசரின் மக்கள் கல்வியை மீட்டெடுக்க மிகச் சிறந்த வழி அரசுப் பள்ளிகளை ஊக்கப்படுத்தி மேம்படுத்துவதுதான்.

           அந்த நற்சிந்தனைக்கு செயல்வடிவமாகத் திகழ்கிறது   உலகப் புகழ்பெற்ற கோவை மருத்துவர் டாக்டர் பாலவெங்கட் ,  தன் தந்தையார் பெயரில் வழங்கும் சிறந்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கான தலைமை ஆசிரியர் ஜெகன்னாதன் விருது.

            தனியார் பள்ளிகளுக்குச் சாத்தியப்படாத பல சாதனகளை சாதித்து வரும் கோவை மசக்காளிப் பாளைய மாநகராட்சிப் பள்ளியின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் பெரிதும் காரணமான அப்பள்ளியின்  தலைமை ஆசிரியை திருமதி மைதிலி கண்ணன், இந்த ஆண்டிற்கான தலைமை ஆசிரியர் ஜெகன்னாதன் விருதினை பெறுகிறார்.  இவ்விழா கோவையில் 19.09.2019 வியாழனன்று நடைபெறுகிறது.
Tmt Mythili Kannan, HM

                திருமதி மைதிலி கண்ணன் பள்ளியின் புறச் சுழல் மாணவனிடமும் அவர்களது பெற்றோர்களிடமும் ஊர் மக்களிடமும் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தவர்.  அவர் 1995 ஆம் ஆண்டில்   ஆசிரியப் பணியில் வலது காலை எடுத்து வைத்த   நாட்களிலேயே  அவர் பணியாற்றிய  பிச்சனூர் பள்ளியை தூய்மையாக வைத்திருப்பதிலும் வகுப்பறையை அழகூட்டுவதிலும் அக்கறை செலுத்தியிருக்கிறார்.  2017இல் மசக்காளிப்பாளையத்தில் உள்ள கோவை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பதவி உயர்வில் தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றதும் அப்பள்ளியை பொலிவூட்டுவதில் பெரும் கவனம் செலுத்தினார்.

  இவர் பொறுப்பேற்பதற்கு முன்னர் இப்பள்ளியை சிறப்பாக வழிநடத்திய கணித ஆசிரியர் திருமதி சுகுணா அவர்களும்   சக ஆசிரியர்களும், தொடர்ந்து அப்பகுதி கவுன்சிலரும் கைகொடுத்துள்ளனர்.பள்ளி பொலிவுற்றதும் அப்பகுதி மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. பாடத்திற்கு அப்பாலும் மாணவர்களின் ஆற்றலை வளர்ப்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.  அதன் விளைவாக யோகா பயிற்சிக்கு உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று ஏற்பாடு செய்திருக்கிறார் தலைமை ஆசிரியை திருமதி மைதிலி கண்ணன்.  யோகாவுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிள்ளையாக காரேத்த பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.  வணிகமான கல்வியின் மையப் புள்ளியும் தனியார் சிறப்புப் பயிற்சி தொழிலில் முக்கியமானதும் விளம்புநிலை வருவாய் ஈட்டும் குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கு எட்டாக் கனியான அபாகஸ் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளார் தலைமையாசிரியர் திருமதி மைதிலி கண்ணன்.அவருக்கே நேரடி ஈடுபாடுள்ள ரோபோடிக்ஸ் (ROBOTICS) வகுப்புகளுக்கும் muscial band குழு அமைத்து மாணவர்களுக்கு இசைக் கருவி பயிற்சிகளும் வழங்குகிறார்கள்.

                   இப்பள்ளியின் உற்சாகச் செயல்பாடுகளை 
முகநூலில் பதிவு செய்து பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்புணர்வையும் பள்ளியின் முன்னேற்றங்களையும் உலகளாவச் செய்திருக்கிறார்கள் ஆசிரியர்கள் சக்திவேலும் திவ்யா பீட்டரும்.  இந்த வீச்சு முன்னணி மென்பொருள் நிறுவனமான CTS Software யும் ஈர்த்திருக்கிறது. அந்நிறுவனத்தின் CTS Out Reach தொண்டு அமைப்பும் பள்ளியின் முன்னேற்றத்திற்கு ப்ள்ளியின் ஆசிரியர்களோடும் பெற்றோர்களோடும்
Dr J Bala Venkat
 அப்பகுதி மக்களோடும் இணைந்து பள்ளியை முன்னெடுத்துச் செல்கிறது.  

                       இப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு வழங்கப்படும் விருது, இப்பள்ளியின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் ஊக்கமளிக்கும்.  இது இன்னும் பல அரசுப் பள்ளிகளை இந்த வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லும். இவற்றினால் காமராசரின் நோக்கம் மென் மேலும் வெற்றியடையும் என்ற பொதுநலனோடு இவ்விருதை வழங்கும் உலகப் புகழ் பெற்ற கோவை மருத்துவர் பால வெங்கட்டிற்கு ஒரு சுயநலமும் கைகூடும்.

                      அந்த சுயநலம் வேறொன்றுமில்லை இன்னும் பல"தலைமை ஆசிரியர் ஜெகன்னாதன்"கள் உருவாகுவார்கள்.

நலந்தா செம்புலிங்கம்
18.09.2019




Sunday 25 August 2019

போஸ்ட் ஆபிஸ் சாவியைப் பெற்றுக் கொண்டேன்


காரைக்குடியைச் சேர்ந்த பொறியாளர் சுப. அண்ணாமலை நாசிக்கில் தனியார் நிறுவனம் ஒன்றில் PLANT HEAD ஆகப் பணியாற்றி வருகிறார்.  நாட்டுக்கோட்டை நகரத்தார் காசி சத்திர மேலாண்மைக் கழகத்திற்குப் பாத்தியமான நாசிக் சொத்து ஒன்றை மீட்கும் மிகுந்த சிக்கலான சவாலான ஆபத்து நிறைந்து பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.  அந்த அனுபங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.  இதுமுதல் பகுதி

                      - நலந்தா செம்புலிங்கம்
                        25.08.2019




Saturday 27 July 2019

தென்னவன் தந்தை எந்நோற்றான் கொல்




தென்னவன் தந்தை எந்நோற்றான் கொல்
***********

தென்னவன் அளவுகோல்களால் அளக்கவியலாத நல்லாசிரியர் மிக மிக வெற்றிகரமான தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் என்பதைத் தான் அறிந்திருந்தேன்.
அவருடைய தந்தையின் மரணச் செய்தியின் வாயிலாகத்
வாயிலாகத் தான் அவருடைய தந்தையும் ஒரு நல்லாசிரிரயர் என்பதும் அவரும் தலைமையாசிரியாகப் பணியாற்றினார் என்பதையும் அறிந்தேன்.






2018 புத்தாண்டு நாளையொட்டி 2017 ஆண்டிற்கு விடை கொடுக்கும் பாங்கில் தன் மாணவர்களிடமிருந்து என்னென்ன கற்றேன் என அருமையாக முகநூலில் எழுதியிருந்தார். அவருடைய முகநூல் பதிவை வைத்தே "தென்னவன் -- கற்பித்தலில் கண்ணதாசன்" வலைப் பதிவு எழுதினேன். அவரைப் பற்றியும் அவர் பள்ளியைப் பற்றியும் நான்கு வலைப் பதிவுகள் எழுதியுள்ளேன். ஆனால் ஒவ்வொரு நாளும் நான்கு பேரிடமாவது அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்.

இன்று அவர் தன் தந்தைக்கு எழுதியுள்ள அஞ்சலி சிலிர்க்க வைக்ககிறது.

விதை ஒன்று வீழ்ந்திட
செடிவந்து சேரும்

என இந்த அஞ்சலியில் அவரே எழுதியிருக்கிறார். விதை, கவிதையாகட்டும் -- செடி, விருதாகட்டும்

மிகச் சிறந்த அஞ்சலி, ஆகச் சிறந்த அஞ்சலியாகவும் போற்றப்படலாம். கல்வி துறையில் விருதுகளைக் குவித்தவர், கவிதைத் துறையில் விருகளைக் குவிக்கட்டும்.

நலந்தா செம்புலிங்கம்
26.07.2019



தென்னவனின் அஞ்சலி தொடர்கிறது, வாசிக்க வேண்டுகிறேன்


*போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க*
-------------------------------------------------------------------
ஜென்மம் நிறைந்தது
சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட
வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும்
கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி
இவ்விடம் சூழ்க!
ஜனனமும் பூமியில்
புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில்
இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை
பாசம் உலாவிய
கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?
தேசம் அளாவிய
கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது
சாம்பலும் இங்கே
கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது
மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட
உருவங்கள் போக
எச்சங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமலே
நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும்
நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும்
நினைவுகள் தொல்லை
மறதியைப் போல்
ஒரு மாமருந்தில்லை
கடல் தொடு ஆறுகள்
கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள்
அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே
விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர்
மயங்குவதேன்ன !
மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை
மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட
செடிவந்து சேரும்
பூமிக்கு நாம் ஒரு
யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன்
நித்திரை கொண்டோம்
நித்திரை போவது
நியதி என்றாலும்
யாத்திரை என்பது
தொடர்கதையாகும்
தென்றலின் பூங்கரம்
தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி
தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி
செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன்
வாழ்ந்திட கூடும்
மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க !
தூயவர் கண்ணொளி
சூரியன் சேர்க !
பூதங்கள் ஐந்திலும்
பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம்
எம்முடன் சேர்க !

Sunday 14 July 2019

சாலைகளை அளந்த காமராசா் !!




          சாலைகளை  அளந்த   காமராசா்  !!



எல்லா அரசுகளும்
எல்லா நிலங்களையும்
அளக்கும், வரி விதிக்கும்
******


காமராசர் அரசும்
நிலங்களை அளந்தது
சாலைகளையும் அளந்தது
******                                  
புதுமாதரியாக அளந்தது
கல்விச் சாலைகளால்
சாலைகளை அளந்தது  

******
காமராசர்
அணைகளைக் கட்டினார் 

பள்ளிகளை விதைத்தார்
கல்விப் பயிரும் விளைந்தது
******
இன்று 
குடிநீருக்கே
கூப்பாடு போடுகிறோம்
******
கல்விச் சாலைகள்
புற்றீசலாய் பெருகிவிட்டன
கல்வி தான் கடைச்
சரக்காகி விட்டது
******
அரசே வீதி வீதியாய்
கள்ளுக் கடை திறக்கிறது
அரசு கொழிக்கிறது
சமூகம் சீரழிகிறது
******
நல்ல வேளை 
இது காமராசர் மண் 
என எவரும் முழங்கவில்லை
******
சிவகாமி மைந்தன்
நிம்மதியாய் துயில்
கொள்கிறார் - காந்தியின்* நிழலில்!

நலந்தா செம்புலிங்கம்
14.07.2019

* காமராசர் நினைவிடம் சென்னையில் காந்தி மண்டபம் அருகில் உள்ளது.





Tuesday 18 June 2019

எஸ். எஸ். கோட்டை: காமராசர் மனம் குளிரும் கல்வித் தலம்




எஸ். எஸ். கோட்டை: 

காமராசர் மனம் குளிரும் கல்வித் தலம்



           " சம்முகவேல் நல்ல படிக்கறவே(ன்) "  என்று வட்டார வழக்கிலேயே அந்த சண்முகவேல் சொன்ன போது அரங்கமே கரவோலிகளால் அதிரந்தது.   

                ஒருவன் தன்னைத் தானே நன்றாகப் படிப்பவன் எனும் போது அவன் தன்னிலையைத் தான் வெளிப்படுத்துகிறான்.  அதில்
உணர்ச்சிகரமான வெளிப்பாடோ எழுச்சி முழக்கமோ இல்லையே? ஒரு சாதாரண தன்னிலை வெளிப்பாட்டிற்கு அவ்வளவு பரவசம் ஏற்படுமா? அன்று அந்த அரங்கில் ஏற்பட்டது! எப்படி ஏற்பட்டது?  வாருங்கள் அந்த அரங்கிற்கே செல்வோம்.


                 அந்த  அரங்கில் இருந்தவர்களில் சரி பாதியினர் அந்த சண்முகவேலை விட ஒரிரு ஆண்டுகள் இளையவர்கள், 9 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மாணவர்கள்.  இன்னொரு பாதியினர் அவன் பெற்றோரை போன்றவர்கள்.  அது  08.06.2019 அன்று முன்னுதாரணப் பள்ளியான காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற "தேர்வுகள் இனி இன்பமயமே!" எனும் கருத்தரங்கம்.

                    அந்தக் கருத்தரங்கின் நாயகன் 2018-19 கல்வியாண்டின் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 490/500 மதிப்பெண்கள் பெற்றிருந்த சிவகங்கை மாவட்டத்தின் முதல் மாணவன் எனும் பெருமைக்குரிய  செல்வன் சண்முகவேல் தான்.

                      சிற்றூரன எஸ். எஸ். கோட்டையிலுள்ள அரசு மேனிலைப் பள்ளியின் மாணவனான சண்முகவேல் மாவட்டத்தின் முதல் மாணவனாக வெற்றி பெற்றது பெருமகிழ்ச்சியையும் அதைவிட கூடுதலாக வியப்பையும் ஏற்படுத்தியது.

                    15 ஆண்டுகளுக்கு முன்னர் பிள்ளை பிறந்த நொடியிலிருந்தே,  தங்கள் கனவுகளை இறக்கி வைக்க இவன் பிறந்தான்/இவள் பிறந்தாள் என்ற உவகையோடு எண்கணிதம் பார்த்து மிகவும் மாறுபட்ட பெயர் சூட்டப்பட்டி, இரண்டு வயதிலேயே பள்ளியில் தள்ளப் பட்டு, ஒவ்வோராண்டும் பல்லாயிரம் செலவழித்து படிக்க வைத்து, பத்தாம் வகுப்பு நெருங்கும் வேளையில் கூடுதலாக இரண்டு மூன்று தனிப் பயிற்சிகளுக்கும் (டியூஷனுகளுக்கும்) அனுப்பப்படும் மாணவனோ மாணவியோ தான் மாவட்ட தரவரிசை (ரேங்க்) பெற முடியும் என்ற எண்ணம் நம் பொது புத்தியில் பதிந்த நிலையில் அந்த சூழலுக்கு முற்றிலும் மாறுபட்ட நிலையில் பிறந்து வளர்ந்து படித்த சண்முகவேல் முதல் மாணவன் என்ற அலங்காரப் பெருமைக்குள் மட்டும் நிற்பவனா?
பொது புத்தியில் கல்வி குறித்துப் பதிந்துள்ள மாயக் கணக்குகளை வேறரத்த வெற்றி வீரனுமாவான்.

                       அவன் 490 மதிப்பெண்கள் பெற்றதை, நம்பியே ஆகவேண்டிய அதிசயமாக அந்த அரங்கம் கருதியது. கடின உழைப்பைத் தவிர வேறு வழி என்ன இருந்திருக்க முடியும்?  அதனால் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என்று அந்த அரங்கில் கூடியிருந்த முத்தரப்பினரும் அவனுடைய கடின உழைப்பைக் கேட்கவே கூர்மையாக செவிகளைத் தீட்டிக் கொண்டிருந்தார்.  

                         அவனுடைய உரையின் முற்பகுதியில்  எங்கள் ஊரில் (அதுவே சிற்றூர்) யாருக்கும் என்னைத் தெரியாது, என் பெற்றோர்களையும் தெரியாது என் தாத்தாவை மட்டும் தான் தெரியும் ஆனால் இப்போது நான் 490 மதிப்பெண்கள் பெற்றதால், சண்முகவேல் என்பவன் நன்றாகப் படிப்பவன் என்று எங்கள் ஊரில் எல்லோருக்கும் தெரியும் என்றான்.

                            உணவு, உடை, உறையுள்ளிற்கு பிறகு மனிதனின் இன்றியாமையாத தேவை அடையாளம்.  அடையாளம் என்பது புகழின் விதை.

                             கல்வி என்பது அறிவு மட்டுமல்ல அடையாளமும் ஆகும் தன்னையே சான்றாக்கி ஒரு வெற்றி மாணவன் உரைக்கும் போது அவனைப் போன்ற மாணவர்கள், அவன் பெற்றோரைப் போன்றவர்கள்  எப்படி மெய்சிலர்க்காமல் இருக்க முடியும்?

                           சண்முகவேலுக்கு நல்ல மதிப்பெண்களால் இந்த உள்ளூர் அடையாளம் மட்டும் தான் கிடைத்ததா?  அவன் முதல் மதிப்பெண் எடுத்திருந்தாலும், அவன் எவரும் எதிர்பாராத ஒரு சிற்றூர் அரசுப் பள்ளி மாணவன் தானே, அந்தச் சாதனையும் குடத்திலிட்ட விளக்காகத் தான் இருந்திருக்கிறது.  அவனது மதிப்பெண் பட்டியலை முதலில் மாவட்டக் கல்வி அதிகாரியிடம் காட்டியிருக்கிறார்கள்.  அவர் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்திருக்கிறார்.  மாவட்ட ஆட்சியரும் சண்முகவேலை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.  சண்முகவேல் தான் ஆட்சியரைப் பார்த்தப் பெருமையை விட அத்தகைய வாய்ப்பை தன் பெற்றோருக்கும் ஏற்படுத்திக் கொடுத்ததைத் தான் மிகப் பெரிய பலனாக் கருதுகிறான். நல்ல மார்க் வாங்குனதால தான் என் பெற்றோருக்கு கலைக்ட்டர் சாரை பாக்கற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன் எனப் பெருமையோடு சொன்னான்.

                         அந்தப் பெருமையைச் சொல்ல வாய்த்த இடமும் பெருமைக்குரிய பள்ளியல்லவா? காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி!
 ஐந்து ஆண்டுகளில் ஐந்து மடங்கு மாணவர் எண்ணிக்கையை உயர்த்தி அரசுப் பள்ளி, மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததால் ஷிப்ட் முறையில் வகுப்புகள் நடத்திய அரசுப் பள்ளி  தில்லியில் பேசப்பட்ட பள்ளி எனப் பல பெருமைகளை உடைய பள்ளி.

                  உதவி       வரைத்தன் றுதவி உதவி
                செயப்பட்டார் சால்பின் வரைத்து (திருக்குறள் 105)


என்ற குறளின் உட்பொருளாய், சண்முகவேலும் இராமநாதன் செட்டியார் பள்ளியின் அங்கீகாரத்திற்குத் தகுதியானவன் எனத் தனனை நிலைநாட்டிக் கொண்டான்.
அவன் பேசப் பேச அந்தப் பள்ளி மாணவர்களின் முன்மாதரி மாணவனாகப் (ROLE MODEL STUDENT) பரிணமித்தான். இனிவரும் காலங்களில் எல்லா மாணவர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்வான்.

                            சண்முகவேல் உரையாற்றுவதற்கு முன்னர் பேசிய ஒரு சமூக ஆர்வலர், பொதுத் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் அலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது, அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக பெற்றோர்களும் கூட கட்டுபாடாக அலைபேசியை உரையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், சமூக வலைத்தளங்களைப் பார்ப்பதற்கு பயன்படுத்தக் கூடாது என்றார்.  அந்தக் கருத்திற்கு மிகுந்த வரவேற்பு இருந்ததை அப்போது எழுந்த கரவோலி உறுதிப்படுத்தியது.

                       அலைபேசிகளும் அதனூடாக நாம் பார்க்கும் சமூக வலைத் தளங்களும் சில பல எதிர்விளைகளை ஏற்படுத்துவதற்கு முன்னர் முதலில் காலவிரயத்தை ஏற்படுத்திவிடுகின்றன.  இதில் யாருக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியும்?  ஆனால் அலைபேசி என்ற அறிவியல் அதிசியத்தையே தீமைக் கருவி எனலாமா? அது கருவி தான் அதனை நன்மையாக்குவதும் தீமையாக்குமவதும் அதனைப் பயன்படுத்துபவன் தான் எனும் மிக நுட்பமான கருத்தை சண்முகவேல் மிக எளிதாக நிலைநாட்டிய போது நான் மலைத்துபோனேன்.  

                  இந்த வாதத்திலும்  அவன் தன்னே சான்றாக்கினான்.  போனைப் பயன்படுத்தக் கூடாதுன்னாங்க பயன்படுத்தலாம் நான் போன்ல தான் பாடசாலை டாட் நெட் பார்ப்பேன் என்றவாறு பாடசாலை வலைத் தளத்தைப் பற்றி எடுத்துரைத்தான்.  

                    இராமநாதன் செட்டியார் பள்ளியில் மாணவர்களுக்கு பல நவீன வசதிகள் உள்ளன என்பதை அறிந்திருப்பீர்கள், அதைவிட சிறப்பானது  மின் நூலகத்தை முதன்முதலில் பெற்ற பள்ளியும் இராமநாதன் செட்டியார் பள்ளி தான்.  அந்த முன்னோடிப் பள்ளியில் பாடசாலை வலைத்தளத்தைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை சண்முகவேல் நிகழ்ச்சிக்குப் பிறகு தான் நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள்.  ஆனால் சண்முகவேல் பாடசாலை வலைத்தளத்தை அறிந்து பயன்படுத்தி வெற்றி பெற்றவனாக அந்தப் பள்ளியில் நின்று கொண்டிருந்தான் என்றால் அவரது உயரம் வெறும் 149 சென்டி மீட்டர் தானா?  உலகம் அவனை அண்ணாந்து பார்க்கும் நாள் தொலைவில் இல்லை
                     
                   தன்னைச் சான்றாக்கி பேசுவது  தான் சண்முகவேலின் பாணி.  கடந்த வந்த வெற்றிப் பாதையைத் தான் தன்னைச் சான்றாக்கிச் சொல்லமுடியும்.  எதிர்காலப் பலனை எப்படிச் சொல்வது? ஒரு இலக்கை குறிக்கோளைச் சுட்டிதான் எதிர்காலப் பலனைச் சொல்ல முடியும்.  அதையும் சண்முகவேல் விட்டுவைக்கவில்லை.  உங்கள் பெற்றோரின் வறுமையை மாற்ற வேண்டுமென்றால் நீங்க படிக்கணும் என உறுதியாக உரைத்தான்  

              சண்முகவேல் உரையாற்றிய பிறகு மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என முத்தரப்பினரும் கேள்வி கேட்ட சண்முக வேல் பதிலுரைக்கும் பகுதிக்கு வருகிறோம். ஆசிரியர்கள் கேள்விக்கு முன்னர் ஒரு சின்னப் பாரட்டடோடு தம் சார்பில் கேள்வி கேட்காமல் தன் பிள்ளையின் கண்ணோட்டத்தில் தான் கேள்வி கேட்டார்கள்.  மாணவர்களின் கேள்விகளில் ஆர்வமும் தன்னிலைப்பாடுகளும் வெளிப்பட்டது.  ஒரு தாய் தன் மகனுக்கு வாசிக்கத் தெரிகிறது ஆனால் வேகமாக வாசிக்கத் தெரியவில்லை அதனால் தேர்வுகளில் கேள்வித் தாளைப் படித்துப் புரிந்து கொள்ளவதற்கே அதிக நேரமாகிறது இதற்கு என்ன வழி எனக் கேட்டார்.  அவர் அத்தோடு நிறுத்தியிருக்கலாம்.  தமிழ் படிக்கத் தன் பிள்ளை சிரமப்படுவதாகவும் வேறு கூறினார்.

               தனக்கு முன்னர் பேசிய சமூக ஆர்வலரின் அலைபேசி குறித்த கருத்தில் உடன்படாத சண்முகவேல் அப்போது தனது மாற்றுக் கருத்தை மென்மையாகத் தான் சொன்னான்.  ஆனால் இப்போது ஒரு தாய் தன் மகனுக்கு தமிழும் வாசிக்கச் சிரமமாகயிருக்கிறது ஆங்கிலமும் வாசிக்கச் சிரமமாக இருக்கிறது என்றபோது 
        
                  " தமிழ் வாசிக்கத் தெரியான்னு சொல்றது  தப்பு அம்மா " என  தீர்ப்புரைக்கும் ஒரு நீதிபதி போல ஆணித்தரமாக உரைத்தான்.

                ஆங்கில வாசிப்பில் எதிர்கொள்ளும் இடர்ப்பாடைப்  பொறுத்தவரை அவன் பயிற்சியையும் விடாமுயற்சியும் பயிற்சியும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் தான் தீர்வு என்றான்.  அதற்கும் சான்றுரைத்தான்.  இதற்கு  அவன் சான்றாக முடியாதே?  தன் பள்ளித் தோழனைச் சான்றுரைத்தான்.  ஆங்கிலத்தை எழுத்துக் கூட்டி வாசிக்கவே சிரமப்பட்டு ஒன்பதாம் வகுப்பில் முதல் முறை தோல்வியடைந்து மறு ஆண்டில் ஒன்பதாம் வகுப்புத் தேறி பத்தாம் வகுப்பு வந்த மாணவனே பொதுத் தேர்வில் வெற்றி பெற்றதைச் சான்றாக்கினான்.

                  சண்முகவேலின் வாழ்க்கை முறையும் திகைக்க வைக்கிறது.  காலை நான்கு மணிக்கே எழுகிறான்.  நள்ளிரவு வரை படிக்கிறான். தினமும் பள்ளிக்கு 5 கிலோ மீட்டர் சைக்கிளில் வந்து போகிறான்.  பள்ளி தொடங்குவதற்கு முன்னரே வந்து விடுகிறான். முயற்சி மிக்கான். பயிற்சிச் சளைக்காதவன், மீண்டும் மீண்டும் படிக்கிறான், கணக்கைப் போட்டுப் போட்டுப் பார்க்கிறான்.  ஆசிரியர்களிடம் ஐயங்களைக் கேட்ட வண்ணமிருக்கிறான். அவன் பேறுகளிலெல்லாம் பேறு இவனது சளைக்காத கேள்விகளுக்குச் சலிக்காமல் பதிலுரைக்கும் ஆசிரியர்கள் தாம்.  பாடங்களோடு ஒன்றிய இந்த வாழ்க்கையில் ஆங்கில ஆசிரியர் அறிமுகப்படுத்திய நல்ல புத்தகங்களையும் வாசிக்கிறான்.  இதுவரை அக்னி சிறகுகளையும் இறையன்புவின் ஏழாம் அறிவையும் வாசித்திருக்கிறான். வால்காவிலிருந்து கங்கை வரை நூலைப் படித்துக் கொண்டிருக்கிறான்.

                 ஒரு பக்கம்  அவன் பாடசாலை வலைத்தளத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளான் மற்றொரு ஆசிரியர்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறான், அத்தோடு வால்காவிலிருந்து கங்கை வரை நூலையும் வாசிக்கிறான். இவற்றிலிருந்தே அவனுடைய தேடலையும் வேட்கையையும் புரிந்து கொள்ளலாம்.

                   நானும் சண்முகவேலை பாரட்டுவதற்காகத் தான் அந்தக் கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன்.  அவனை அவனுடைய மதிப்பெண்களுக்காகத் தான் பாராட்ட நினைத்தேன், ஏனென்றால் நான் அவனிடம் அந்த 490 மதிப்பெண்களுக்கு மேல் வேறொன்றையும் எதிர்பார்க்கவில்லை. அவனிடம் கேட்கப்பட்ட கேள்விகளை அவன் கையாண்ட முறை என்னைத் திகைக்க வைத்தது.  பிசிறில்லாத சிந்தனைத் தெளிவு அவனுடைய உரை முழுவதும் விரவிக் கிடந்தது. இந்த சிந்தனைத் தெளிவு (CLARITY OF THOUGHT)   அவனுடைய I.A.S  கனவிற்கு நிச்சியமாகப் பெருந்துணையாகும்.  அல்லது இந்த சிந்தனைத் தெளிவு தான் I.A.S கனவிற்கே வித்திட்டதா?

      எது எப்படியாகினும் பொதுத் தேர்வில் அவன் பெற்ற 490 மதிப்பெண்கள்,  சண்முகவேலின் ஆளுமை எனும் மாபெரும் மாளிகைக்கான சின்னத் திறவு கோல் தான் என்பதை அவன் பேசிய பிறகு புரிந்து கொண்டேன்.  

             இதே கருத்தை காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா வேறு சொற்களில் கூறினார். எங்கள் பள்ளி பல ஆளுமைகள், சான்றோர்கள், சாதனையாளர்கள் உயர் பதவி வகிப்பவர்கள் பேசியிருக்கிறார்கள், அந்த நிகழ்வுகளை எல்லாம் விட இந்த கருத்தரங்கமே சிறந்த நிகழ்வு என்றார்.

           காமராசரின் மக்கள் கல்விக் கொள்கையின் வெற்றிக்கு சண்முகவேல் மிகப் பெரிய சான்றாவான். சண்முகவேலை உருவாக்கிய எஸ். எஸ் கோட்டை அரசு மேனிலைப் பள்ளி காமராசர் மனம் குளிரும் கல்வித் தலமாகும்.

            அதைவிட  இந்த கார்ப்பரேட் கல்விக் காலத்தில் காமராசரின் கல்விக் கொள்கை அரித்துக் கொண்டு போய்விடாமல் இருக்க இன்னும் பல சண்முகவேல்கள் வேண்டும்.  ஆசிரியர்கள் மனம் வைப்பார்களாக!

நலந்தா செம்புலிங்கம்
18.06.2019