Tuesday, 4 September 2018

தென்னவன்:விருதுகளை விஞ்சிய வேந்தன்!

தென்னவன்:விருதுகளை விஞ்சிய வேந்தன்!

சிவபெருமான் இலக்கணத்தை மீறுவதும் புலவர் நக்கீரன் குற்றம் கண்டுபிடித்த அதிசயமும்  நடந்த மதுரையில் தான் ஒரு கல்வித் துறை அதிகாரி உண்மையை உள்ளபடியே சொல்ல பத்திரிக்கையாளர்கள் சின்ன வெற்றிக்காக பெரிய பின்னடைவுகளை ஒதுக்கித் தள்ளிய சம்பவமும் மதுரையில்  ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடந்தது.

                  அது சரி, பத்திரிக்கையாளர் சந்திப்பு என்றால் என்ன?

                 ஒரு பிரமுகர்/அதிகாரி எல்லாப் பத்திரிக்கைகளுக்கு ஒரு செய்தியை வாய்மொழியாகவோ எழுத்து மூலமாகவோ தெரிவிக்க எல்லாப் பத்திரிக்கைப் பிரதிகளை அழைத்து செய்தியை வெளியிடுவது.

                   அது பத்திரிக்கையாளர் சந்திப்புக் கூட்டும் பிரமுகர்/அதிகாரியின் தன்னிலை விளக்கம்.  எந்தத் தன்னிலை விளக்கத்திலாவது எதிர் தரப்பினரின்  நியாயம் சொல்லப்பட்டிருக்குமா?  

                     எதிர்தரப்பினரின் நியாயம் வெளிப்பட வேண்டாமா? அதற்குத் தானே பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள்? அவர்கள் அந்தப் பிரமுகரை/அதிகாரியை துருவித் துருவி கேள்வி  கேட்பார்கள்.

                   ஆகவே பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டியவர் பூசி மெழுகுவார், பத்திரிக்கையாளர்கள்  அவர் பூசி மெழுகியதைப் போட்டு உடைப்பார்கள்.  இது தான் பத்திரிக்கையாளர் சந்திப்பின் இலக்கணம்.



                  இந்த இலக்கணம் மீறப்படுவதற்கு மதுரை ஒத்தக்கடையில் பீடுநடை போட்டுவரும்  ஒன்றிய தொடக்கப் பள்ளியும்  ஒரு காரணமாகும்.  மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க பல முயற்சிகள் செய்தும் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது என உண்மையை அந்த அதிகாரி தெரிவித்தார்.  பத்திரிக்கையாளர்கள் ஒத்தக்கடை தொடக்கப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை கூடியுள்ளதை சுட்டிக் காட்டினர்.  அந்த அதிகாரி விதிவிலக்காக ஒத்தக்கடை பள்ளி போன்ற சில பள்ளிகளில் தான் மாணவர் எண்ணிக்கை கூடியுள்ளது என அந்த அதிகாரி மறுவிளக்கம் கொடுக்க வேண்டியிருந்தது.

                 இத்தகைய புதுமைகளுக்கு காரணமாகிய ஒத்தக்கடை ஊராட்சி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசரியருக்கு என்ன விருது கொடுக்கலாம்?

                        
                        1. கிராம சேவைகள்.                   
                        2. பழங்குடி மேம்பாடு
                        3. பெண்கல்வி 
                        4. செயல் ஊக்கம்
                        5. மொழித் திறன்
                        6. அறிவியல் விழிப்புணர்வு
                        7.  படைப்பாற்றல் 
                        8.  சிறப்புக் குழந்தைகள்
                        9.   புதுமை

என ஒன்பது பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சி என்ன பிரிவிற்காக தலைமை ஆசிரியர் தென்னவனுக்கு விருது கொடுத்திருக்கும்? வேறு எதற்கு புதுமைக்குத் தான்.

                        இந்தப் பள்ளி தொடக்கப் பள்ளி, இதனைத் தேடி 5 வயது பிள்ளைகள் தான் வருவார்கள் என்றும் மட்டும் நினைக்காதீர்கள்.  ஒரு எழுபது ஆண்டு பழைமையான ஒரு கல்லூரியும் இந்தப் பள்ளிக்கு வந்துள்ளது.

                          மதுரையின் முதல் பெண்கள் கல்லூரியான லேடி டோக்கு கல்லூரியில்   INTERNATIONAL SERVICE LEARNING PROGRAMME 2018   பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது  அக்கருத்தரங்கில் பங்கேற்ற ஜப்பான், கொரியா மற்றும் சீனாவைச் சேர்ந்த 11 பயிற்சியாளர்கள் மூன்று நாட்கள் இப்பள்ளிக்கே வந்து தலைமையாசரியர் தென்னவன் கலந்துரையாடினர்.

                           தலைமை ஆசிரியர் தென்னவன், விருதுகளை விஞ்சிய வேந்தன் தான்.  புதிய தலைமுறைத் தொலைக்காட்சி விருது வழங்கும் விழா 05.09.2018 புதன் கிழமை ஒளிப்பரக்கிறது. 

நலந்தா செம்புலிங்கம்   .
03.09.2018





                       

1 comment: