Tuesday 18 June 2019

எஸ். எஸ். கோட்டை: காமராசர் மனம் குளிரும் கல்வித் தலம்




எஸ். எஸ். கோட்டை: 

காமராசர் மனம் குளிரும் கல்வித் தலம்



           " சம்முகவேல் நல்ல படிக்கறவே(ன்) "  என்று வட்டார வழக்கிலேயே அந்த சண்முகவேல் சொன்ன போது அரங்கமே கரவோலிகளால் அதிரந்தது.   

                ஒருவன் தன்னைத் தானே நன்றாகப் படிப்பவன் எனும் போது அவன் தன்னிலையைத் தான் வெளிப்படுத்துகிறான்.  அதில்
உணர்ச்சிகரமான வெளிப்பாடோ எழுச்சி முழக்கமோ இல்லையே? ஒரு சாதாரண தன்னிலை வெளிப்பாட்டிற்கு அவ்வளவு பரவசம் ஏற்படுமா? அன்று அந்த அரங்கில் ஏற்பட்டது! எப்படி ஏற்பட்டது?  வாருங்கள் அந்த அரங்கிற்கே செல்வோம்.


                 அந்த  அரங்கில் இருந்தவர்களில் சரி பாதியினர் அந்த சண்முகவேலை விட ஒரிரு ஆண்டுகள் இளையவர்கள், 9 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மாணவர்கள்.  இன்னொரு பாதியினர் அவன் பெற்றோரை போன்றவர்கள்.  அது  08.06.2019 அன்று முன்னுதாரணப் பள்ளியான காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற "தேர்வுகள் இனி இன்பமயமே!" எனும் கருத்தரங்கம்.

                    அந்தக் கருத்தரங்கின் நாயகன் 2018-19 கல்வியாண்டின் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 490/500 மதிப்பெண்கள் பெற்றிருந்த சிவகங்கை மாவட்டத்தின் முதல் மாணவன் எனும் பெருமைக்குரிய  செல்வன் சண்முகவேல் தான்.

                      சிற்றூரன எஸ். எஸ். கோட்டையிலுள்ள அரசு மேனிலைப் பள்ளியின் மாணவனான சண்முகவேல் மாவட்டத்தின் முதல் மாணவனாக வெற்றி பெற்றது பெருமகிழ்ச்சியையும் அதைவிட கூடுதலாக வியப்பையும் ஏற்படுத்தியது.

                    15 ஆண்டுகளுக்கு முன்னர் பிள்ளை பிறந்த நொடியிலிருந்தே,  தங்கள் கனவுகளை இறக்கி வைக்க இவன் பிறந்தான்/இவள் பிறந்தாள் என்ற உவகையோடு எண்கணிதம் பார்த்து மிகவும் மாறுபட்ட பெயர் சூட்டப்பட்டி, இரண்டு வயதிலேயே பள்ளியில் தள்ளப் பட்டு, ஒவ்வோராண்டும் பல்லாயிரம் செலவழித்து படிக்க வைத்து, பத்தாம் வகுப்பு நெருங்கும் வேளையில் கூடுதலாக இரண்டு மூன்று தனிப் பயிற்சிகளுக்கும் (டியூஷனுகளுக்கும்) அனுப்பப்படும் மாணவனோ மாணவியோ தான் மாவட்ட தரவரிசை (ரேங்க்) பெற முடியும் என்ற எண்ணம் நம் பொது புத்தியில் பதிந்த நிலையில் அந்த சூழலுக்கு முற்றிலும் மாறுபட்ட நிலையில் பிறந்து வளர்ந்து படித்த சண்முகவேல் முதல் மாணவன் என்ற அலங்காரப் பெருமைக்குள் மட்டும் நிற்பவனா?
பொது புத்தியில் கல்வி குறித்துப் பதிந்துள்ள மாயக் கணக்குகளை வேறரத்த வெற்றி வீரனுமாவான்.

                       அவன் 490 மதிப்பெண்கள் பெற்றதை, நம்பியே ஆகவேண்டிய அதிசயமாக அந்த அரங்கம் கருதியது. கடின உழைப்பைத் தவிர வேறு வழி என்ன இருந்திருக்க முடியும்?  அதனால் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என்று அந்த அரங்கில் கூடியிருந்த முத்தரப்பினரும் அவனுடைய கடின உழைப்பைக் கேட்கவே கூர்மையாக செவிகளைத் தீட்டிக் கொண்டிருந்தார்.  

                         அவனுடைய உரையின் முற்பகுதியில்  எங்கள் ஊரில் (அதுவே சிற்றூர்) யாருக்கும் என்னைத் தெரியாது, என் பெற்றோர்களையும் தெரியாது என் தாத்தாவை மட்டும் தான் தெரியும் ஆனால் இப்போது நான் 490 மதிப்பெண்கள் பெற்றதால், சண்முகவேல் என்பவன் நன்றாகப் படிப்பவன் என்று எங்கள் ஊரில் எல்லோருக்கும் தெரியும் என்றான்.

                            உணவு, உடை, உறையுள்ளிற்கு பிறகு மனிதனின் இன்றியாமையாத தேவை அடையாளம்.  அடையாளம் என்பது புகழின் விதை.

                             கல்வி என்பது அறிவு மட்டுமல்ல அடையாளமும் ஆகும் தன்னையே சான்றாக்கி ஒரு வெற்றி மாணவன் உரைக்கும் போது அவனைப் போன்ற மாணவர்கள், அவன் பெற்றோரைப் போன்றவர்கள்  எப்படி மெய்சிலர்க்காமல் இருக்க முடியும்?

                           சண்முகவேலுக்கு நல்ல மதிப்பெண்களால் இந்த உள்ளூர் அடையாளம் மட்டும் தான் கிடைத்ததா?  அவன் முதல் மதிப்பெண் எடுத்திருந்தாலும், அவன் எவரும் எதிர்பாராத ஒரு சிற்றூர் அரசுப் பள்ளி மாணவன் தானே, அந்தச் சாதனையும் குடத்திலிட்ட விளக்காகத் தான் இருந்திருக்கிறது.  அவனது மதிப்பெண் பட்டியலை முதலில் மாவட்டக் கல்வி அதிகாரியிடம் காட்டியிருக்கிறார்கள்.  அவர் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்திருக்கிறார்.  மாவட்ட ஆட்சியரும் சண்முகவேலை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.  சண்முகவேல் தான் ஆட்சியரைப் பார்த்தப் பெருமையை விட அத்தகைய வாய்ப்பை தன் பெற்றோருக்கும் ஏற்படுத்திக் கொடுத்ததைத் தான் மிகப் பெரிய பலனாக் கருதுகிறான். நல்ல மார்க் வாங்குனதால தான் என் பெற்றோருக்கு கலைக்ட்டர் சாரை பாக்கற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன் எனப் பெருமையோடு சொன்னான்.

                         அந்தப் பெருமையைச் சொல்ல வாய்த்த இடமும் பெருமைக்குரிய பள்ளியல்லவா? காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி!
 ஐந்து ஆண்டுகளில் ஐந்து மடங்கு மாணவர் எண்ணிக்கையை உயர்த்தி அரசுப் பள்ளி, மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததால் ஷிப்ட் முறையில் வகுப்புகள் நடத்திய அரசுப் பள்ளி  தில்லியில் பேசப்பட்ட பள்ளி எனப் பல பெருமைகளை உடைய பள்ளி.

                  உதவி       வரைத்தன் றுதவி உதவி
                செயப்பட்டார் சால்பின் வரைத்து (திருக்குறள் 105)


என்ற குறளின் உட்பொருளாய், சண்முகவேலும் இராமநாதன் செட்டியார் பள்ளியின் அங்கீகாரத்திற்குத் தகுதியானவன் எனத் தனனை நிலைநாட்டிக் கொண்டான்.
அவன் பேசப் பேச அந்தப் பள்ளி மாணவர்களின் முன்மாதரி மாணவனாகப் (ROLE MODEL STUDENT) பரிணமித்தான். இனிவரும் காலங்களில் எல்லா மாணவர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்வான்.

                            சண்முகவேல் உரையாற்றுவதற்கு முன்னர் பேசிய ஒரு சமூக ஆர்வலர், பொதுத் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் அலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது, அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக பெற்றோர்களும் கூட கட்டுபாடாக அலைபேசியை உரையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், சமூக வலைத்தளங்களைப் பார்ப்பதற்கு பயன்படுத்தக் கூடாது என்றார்.  அந்தக் கருத்திற்கு மிகுந்த வரவேற்பு இருந்ததை அப்போது எழுந்த கரவோலி உறுதிப்படுத்தியது.

                       அலைபேசிகளும் அதனூடாக நாம் பார்க்கும் சமூக வலைத் தளங்களும் சில பல எதிர்விளைகளை ஏற்படுத்துவதற்கு முன்னர் முதலில் காலவிரயத்தை ஏற்படுத்திவிடுகின்றன.  இதில் யாருக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியும்?  ஆனால் அலைபேசி என்ற அறிவியல் அதிசியத்தையே தீமைக் கருவி எனலாமா? அது கருவி தான் அதனை நன்மையாக்குவதும் தீமையாக்குமவதும் அதனைப் பயன்படுத்துபவன் தான் எனும் மிக நுட்பமான கருத்தை சண்முகவேல் மிக எளிதாக நிலைநாட்டிய போது நான் மலைத்துபோனேன்.  

                  இந்த வாதத்திலும்  அவன் தன்னே சான்றாக்கினான்.  போனைப் பயன்படுத்தக் கூடாதுன்னாங்க பயன்படுத்தலாம் நான் போன்ல தான் பாடசாலை டாட் நெட் பார்ப்பேன் என்றவாறு பாடசாலை வலைத் தளத்தைப் பற்றி எடுத்துரைத்தான்.  

                    இராமநாதன் செட்டியார் பள்ளியில் மாணவர்களுக்கு பல நவீன வசதிகள் உள்ளன என்பதை அறிந்திருப்பீர்கள், அதைவிட சிறப்பானது  மின் நூலகத்தை முதன்முதலில் பெற்ற பள்ளியும் இராமநாதன் செட்டியார் பள்ளி தான்.  அந்த முன்னோடிப் பள்ளியில் பாடசாலை வலைத்தளத்தைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை சண்முகவேல் நிகழ்ச்சிக்குப் பிறகு தான் நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள்.  ஆனால் சண்முகவேல் பாடசாலை வலைத்தளத்தை அறிந்து பயன்படுத்தி வெற்றி பெற்றவனாக அந்தப் பள்ளியில் நின்று கொண்டிருந்தான் என்றால் அவரது உயரம் வெறும் 149 சென்டி மீட்டர் தானா?  உலகம் அவனை அண்ணாந்து பார்க்கும் நாள் தொலைவில் இல்லை
                     
                   தன்னைச் சான்றாக்கி பேசுவது  தான் சண்முகவேலின் பாணி.  கடந்த வந்த வெற்றிப் பாதையைத் தான் தன்னைச் சான்றாக்கிச் சொல்லமுடியும்.  எதிர்காலப் பலனை எப்படிச் சொல்வது? ஒரு இலக்கை குறிக்கோளைச் சுட்டிதான் எதிர்காலப் பலனைச் சொல்ல முடியும்.  அதையும் சண்முகவேல் விட்டுவைக்கவில்லை.  உங்கள் பெற்றோரின் வறுமையை மாற்ற வேண்டுமென்றால் நீங்க படிக்கணும் என உறுதியாக உரைத்தான்  

              சண்முகவேல் உரையாற்றிய பிறகு மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என முத்தரப்பினரும் கேள்வி கேட்ட சண்முக வேல் பதிலுரைக்கும் பகுதிக்கு வருகிறோம். ஆசிரியர்கள் கேள்விக்கு முன்னர் ஒரு சின்னப் பாரட்டடோடு தம் சார்பில் கேள்வி கேட்காமல் தன் பிள்ளையின் கண்ணோட்டத்தில் தான் கேள்வி கேட்டார்கள்.  மாணவர்களின் கேள்விகளில் ஆர்வமும் தன்னிலைப்பாடுகளும் வெளிப்பட்டது.  ஒரு தாய் தன் மகனுக்கு வாசிக்கத் தெரிகிறது ஆனால் வேகமாக வாசிக்கத் தெரியவில்லை அதனால் தேர்வுகளில் கேள்வித் தாளைப் படித்துப் புரிந்து கொள்ளவதற்கே அதிக நேரமாகிறது இதற்கு என்ன வழி எனக் கேட்டார்.  அவர் அத்தோடு நிறுத்தியிருக்கலாம்.  தமிழ் படிக்கத் தன் பிள்ளை சிரமப்படுவதாகவும் வேறு கூறினார்.

               தனக்கு முன்னர் பேசிய சமூக ஆர்வலரின் அலைபேசி குறித்த கருத்தில் உடன்படாத சண்முகவேல் அப்போது தனது மாற்றுக் கருத்தை மென்மையாகத் தான் சொன்னான்.  ஆனால் இப்போது ஒரு தாய் தன் மகனுக்கு தமிழும் வாசிக்கச் சிரமமாகயிருக்கிறது ஆங்கிலமும் வாசிக்கச் சிரமமாக இருக்கிறது என்றபோது 
        
                  " தமிழ் வாசிக்கத் தெரியான்னு சொல்றது  தப்பு அம்மா " என  தீர்ப்புரைக்கும் ஒரு நீதிபதி போல ஆணித்தரமாக உரைத்தான்.

                ஆங்கில வாசிப்பில் எதிர்கொள்ளும் இடர்ப்பாடைப்  பொறுத்தவரை அவன் பயிற்சியையும் விடாமுயற்சியும் பயிற்சியும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் தான் தீர்வு என்றான்.  அதற்கும் சான்றுரைத்தான்.  இதற்கு  அவன் சான்றாக முடியாதே?  தன் பள்ளித் தோழனைச் சான்றுரைத்தான்.  ஆங்கிலத்தை எழுத்துக் கூட்டி வாசிக்கவே சிரமப்பட்டு ஒன்பதாம் வகுப்பில் முதல் முறை தோல்வியடைந்து மறு ஆண்டில் ஒன்பதாம் வகுப்புத் தேறி பத்தாம் வகுப்பு வந்த மாணவனே பொதுத் தேர்வில் வெற்றி பெற்றதைச் சான்றாக்கினான்.

                  சண்முகவேலின் வாழ்க்கை முறையும் திகைக்க வைக்கிறது.  காலை நான்கு மணிக்கே எழுகிறான்.  நள்ளிரவு வரை படிக்கிறான். தினமும் பள்ளிக்கு 5 கிலோ மீட்டர் சைக்கிளில் வந்து போகிறான்.  பள்ளி தொடங்குவதற்கு முன்னரே வந்து விடுகிறான். முயற்சி மிக்கான். பயிற்சிச் சளைக்காதவன், மீண்டும் மீண்டும் படிக்கிறான், கணக்கைப் போட்டுப் போட்டுப் பார்க்கிறான்.  ஆசிரியர்களிடம் ஐயங்களைக் கேட்ட வண்ணமிருக்கிறான். அவன் பேறுகளிலெல்லாம் பேறு இவனது சளைக்காத கேள்விகளுக்குச் சலிக்காமல் பதிலுரைக்கும் ஆசிரியர்கள் தாம்.  பாடங்களோடு ஒன்றிய இந்த வாழ்க்கையில் ஆங்கில ஆசிரியர் அறிமுகப்படுத்திய நல்ல புத்தகங்களையும் வாசிக்கிறான்.  இதுவரை அக்னி சிறகுகளையும் இறையன்புவின் ஏழாம் அறிவையும் வாசித்திருக்கிறான். வால்காவிலிருந்து கங்கை வரை நூலைப் படித்துக் கொண்டிருக்கிறான்.

                 ஒரு பக்கம்  அவன் பாடசாலை வலைத்தளத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளான் மற்றொரு ஆசிரியர்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறான், அத்தோடு வால்காவிலிருந்து கங்கை வரை நூலையும் வாசிக்கிறான். இவற்றிலிருந்தே அவனுடைய தேடலையும் வேட்கையையும் புரிந்து கொள்ளலாம்.

                   நானும் சண்முகவேலை பாரட்டுவதற்காகத் தான் அந்தக் கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன்.  அவனை அவனுடைய மதிப்பெண்களுக்காகத் தான் பாராட்ட நினைத்தேன், ஏனென்றால் நான் அவனிடம் அந்த 490 மதிப்பெண்களுக்கு மேல் வேறொன்றையும் எதிர்பார்க்கவில்லை. அவனிடம் கேட்கப்பட்ட கேள்விகளை அவன் கையாண்ட முறை என்னைத் திகைக்க வைத்தது.  பிசிறில்லாத சிந்தனைத் தெளிவு அவனுடைய உரை முழுவதும் விரவிக் கிடந்தது. இந்த சிந்தனைத் தெளிவு (CLARITY OF THOUGHT)   அவனுடைய I.A.S  கனவிற்கு நிச்சியமாகப் பெருந்துணையாகும்.  அல்லது இந்த சிந்தனைத் தெளிவு தான் I.A.S கனவிற்கே வித்திட்டதா?

      எது எப்படியாகினும் பொதுத் தேர்வில் அவன் பெற்ற 490 மதிப்பெண்கள்,  சண்முகவேலின் ஆளுமை எனும் மாபெரும் மாளிகைக்கான சின்னத் திறவு கோல் தான் என்பதை அவன் பேசிய பிறகு புரிந்து கொண்டேன்.  

             இதே கருத்தை காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா வேறு சொற்களில் கூறினார். எங்கள் பள்ளி பல ஆளுமைகள், சான்றோர்கள், சாதனையாளர்கள் உயர் பதவி வகிப்பவர்கள் பேசியிருக்கிறார்கள், அந்த நிகழ்வுகளை எல்லாம் விட இந்த கருத்தரங்கமே சிறந்த நிகழ்வு என்றார்.

           காமராசரின் மக்கள் கல்விக் கொள்கையின் வெற்றிக்கு சண்முகவேல் மிகப் பெரிய சான்றாவான். சண்முகவேலை உருவாக்கிய எஸ். எஸ் கோட்டை அரசு மேனிலைப் பள்ளி காமராசர் மனம் குளிரும் கல்வித் தலமாகும்.

            அதைவிட  இந்த கார்ப்பரேட் கல்விக் காலத்தில் காமராசரின் கல்விக் கொள்கை அரித்துக் கொண்டு போய்விடாமல் இருக்க இன்னும் பல சண்முகவேல்கள் வேண்டும்.  ஆசிரியர்கள் மனம் வைப்பார்களாக!

நலந்தா செம்புலிங்கம்
18.06.2019