Thursday 28 June 2018

கல்லும் சொல்லும் திருப்பெருந்துறை !!

                                              கல்லும் சொல்லும் திருப்பெருந்துறை  !!

                 

      தியானம் என்றால் என்ன? புத்தகங்களுக்குள் தேடிப்  பார்த்திருக்கிறேன்.  அது கைவரக் கூடிய ஒன்று தான் ஆனால் எனக்குக் கை கூடவில்லை என்ற தன்னிலையைப் புரிந்து கொண்டேன். உண்மையில் எனக்குப் பெரிய தேடலும்  இல்லை.

      என்னுடைய தேடலின்மைக்கு. வகை வகையான  போலிச் சாமியார்கள் தான் பெரிதும் காரணமாவார்கள்.வணிக நோக்கமுடைய பயிற்றுநர்கள் அடுத்த காரணமாவர்கள்.    தியானம் செய்யும் போது அலைபேசி அழைப்பிற்காக இடைவேளை விடும் வேடிக்கை மனிதர்கள். இவர்கள் அளவு கூட மனதை ஒருமைப்படுத்தமுடியாத  ஆனால் தியானத்தை தவம் என சொல்லிக் கொள்ளும் பத்தாம் பசலிகள் எனப் பலர் கூட்டணி சேர்ந்து நான் தியான மார்க்கத்தைப் புறக்கணிக்கக்  காரணமாகி விட்டார்கள்.  

       நானும் சில முறை தியானப் பயிற்சி முயன்றிருக்கிறேன்.  கோவை பெர்க்ஸ் பள்ளியில் உள்ள பிரமிடினுள் முயற்சித்த போது மட்டும் ஒரு புதிய அனுபவம் ஏற்பட்டது.  அதனை இனிய அனுபவம் என்று தான் சொல்ல முடிந்தது. அதற்கு மேல் எடுத்துரைக்க முடியவில்லை.

         இரண்டு வாரங்களுக்குப் பிறகு அந்த பிரமிடிற்குச்   செல்வதற்காகவே கோவை சென்றேன். பிறகு கோவை போகும் போதெல்லாம் பிரமிடிற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டேன்.  அந்தப் பழக்கமும் பின்னர் மெல்லக் குறைந்து விட்டது.
                      பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழுவாகத் திருப்பெருந்துறையையும் வேறு இரண்டு தலங்களையும் தரிசிக்க ஒரு நாள் பயணமாகச் சென்றோம். அங்கு நடை திறப்பதற்காகக் காத்திருந்த வேளையில் முன் மண்டபத்தில் அமைந்திருந்த சிற்ப வேலைப்பாடுகளை சற்று ரசித்தோம்.  நடை திறந்ததும் சுவற்றில் எறியப்பட்டப் பந்து போல ஆலயத்தினுள் பாய்ந்த வேகத்தில் வாகனத்திற்குத் திரும்பினோம்.

     அந்தப் பயணத்தின் பயனே சிற்ப வேலைப்பாடுகளை ரசிப்பதற்காகவே எந்தக் குழுவிலும் சேராமல் தனியாக திருப்பெருந்துறைக்குப் போக வேண்டும் என்ற மென்மையான கடப்பாடு ஏற்பட்டது தான்.

          மென்மையான கடப்பாடு என்றால் நாம் நமது வீட்டில் ஒரு கடவுளின் பெயரால் எடுத்து வைக்கும் உண்டியலிலிருந்து கடனாகப் பணம் எடுத்துக் கொள்வது தான்.  இந்தக் கடனுக்கு வட்டி கிடையாது கால வரையறை கிடையாது கடனைத் திருப்பிச் செலுத்தப் போதியளவு பணமும் இரண்டு மடங்கு மனமும் வரும் போது நாம் கடனைத் திருப்பிச் செலுத்துவோம்.  இதைத் தான் மென்மையான கடப்பாடு என்கிறேன்.

     திருப்பெருந்துறை தரிசனம் பற்றிய இவ்வகையான மென்மையான கடப்பாடு குறித்த நினைவூட்டல் நண்பர் மூர்த்தி வாயிலாக வந்தது. அவர் ஒரு புதன் கிழமை திருப்பெருந்துறைக்குச் சென்றார்.  அங்கே ஆலய வாசலிலிருந்து என்னுடன் அலைபேசியில் பேசினார். அந்த புதன் கிழமையைத் தொடரந்த முதல் ஞாயிற்றுக் கிழமை திருப்பெருந்துறைக்குப் புறப்பட்டுவிட்டேன் ஒரு திருவாசகப் புத்தகத்துடன். ஆனாலும் சிற்பக் கலை ஆர்வம் தான் அந்தப் பயணத்திற்கு எண்பது விழுக்காடு காரணம்.

       நான் இறைவழிபாட்டில் பெரிய ஈடுபாடில்லாமலிருப்பது என் தாயார் தான் முதல் காரணம்.  என் தாயார் இறைவழிப்பாட்டில் மிக மிக அதிகமாக தோய்ந்தவர். என் தாயார் வாழ்க்கையில் பல சோதனைகளைச் சந்தித்தார்கள் ஆனால் சிலவற்றை தான் அவர்களால் வெல்ல முடிந்தது எனினும் அவர்களுடைய இறைநேயம் கூடியதே தவிர கடைசிவரை குறையவில்லை.
     
      என் தாயாரின் ஆழந்த இறைவழிபாடே எனக்கு இன்னும் மூன்று பிறவிக்கு வரும் என நண்பர்களிடம் வேடிக்கையாகச் சொல்வேன். உள்ளபடியே நானும் இறை உண்மை மீது அணு அளவும் ஐயமில்லாதவன் தான் அத்துடன் ஊழ்வினைக் கோட்பாட்டில் அசைக்க முடியாத நம்பிக்கையுடையவன்.. இறைவழிபாடுகளில் நான் பேரீடுபாடு இல்லாமல் இருப்பதற்கு இதுவே இரண்டாவது காரணம் முதல் காரணத்தை விட முதன்மையான காரணம்.  எனது திருப்பெருந்துறைப் பயணத்திற்குப் பெரிதும் காரணம் சிற்பக் கலை ஆர்வம் தான் என்பதற்கு வேறு சான்று தேவையில்லையே?
    ஆனால் இந்தத் திருப்பெருந்துறைப் பயணம் நல்கிய அனுபவம், சித்தர் பாடல்களைப் போல இருந்தது.  ஒரே அனுபவத்திற்கு வெவ்வேறு தாக்கங்கள், ஆலயத்தினுள் ஒரு தாக்கம் வெளியில் வந்த பிறகு வேறொரு தாக்கம்.  முதலில் உள் அனுபவத்தைப் பார்ப்போம்.
      
      பொதுவாக ஆலயத்தினுள் நுழைந்ததும் பிள்ளையாரைக் கும்பிட்டுவிட்டோ குடும்பிடாமலோ சாமி சந்நதிக்குப் போவார்கள்.  நானும் அவ்வழக்கத்தையே கைகொள்ளயிருந்தேன், ஆனால் முன் மண்டபத்தை கடக்கும் போது சந்நதியிலிருந்து வெளியே வந்த ஒரு குடும்பத்தினருக்கு உள்ளூர்காரர் ஒருவர் சிற்ப வேலைப்பாடுகளை விளக்கிக் கொண்டு வழிநடத்தினார், நான் அவர்களைப் பின் தொடர்ந்தேன்.  அந்தக் குடும்பத்தினரோடு பிரகாரம் வந்தேன், பிறகு தான் சாமி சந்நதிக்குச் சென்றேன்.

    இவ்வளவு புகழ் பெற்ற ஆலயத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் பகல் சுமார் 11 மணியளவில் சாமி சந்நதியில் என்னையும் சேர்த்து  ஐந்து பேர் மட்டுமே இருந்தோம், (சற்று நேரம் கழித்து கூட்டம் அலைமோதியது) அதுவே உங்களுக்கு வியப்பையளிக்கும். அதைவிட பெரிய வியப்புகளும் தொடர்ந்தன. முதலில் அந்த ஐவர் யார் யார் என்பதை சொல்லிவிடுகிறேன். நான், மூன்று பேர் குடும்பம் ஒன்று மற்றும் ஒரு வயதான இசுலாமியப் பெருமாட்டி. அந்தக் குடும்பத்தினரோ நானோ அருச்சனை செய்யவில்லை.  அந்த இசுலாமியப் பெருமாட்டி தான் அருச்சனை செய்தார். பக்தர் அருச்சனை செய்தார் என்று சொன்னாலும் அந்த அருச்சனையை அருச்சகர் தான் செய்தார் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால் நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது அந்த ஆன்மநாதர் என்ற குருசுவாமிக்கு ஒரு இசுலாமியப் பெண்ணிற்காக சமசுகிருதத்தில் அருச்சனை செய்யப்பட்டது. பிறகு அந்த இசுலாமியப் பெருமாட்டியிடம், நீங்கள் இங்கே வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றேன், நான் வேறெதுவும் சொல்லவில்லை கேட்கவில்லை.  அந்த இசுலாமியப் பெருமாட்டி, தான் ஏன் வந்தேன் என்பதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என நினைத்திருப்பார் போலும், பொக்கை வாய், குழிவிழுந்த கன்னம், ஒளி வீசும் விழிகளோடு மிகுந்த மனநிறைவாகச் சொன்னர்: "ஒரு வேண்டுதல் வச்சிருந்தேன், அது நிறைவேறியது அதற்காகத் தான் அருச்சசனை செய்ய வந்தேன்" என்றார்.
          நான் ஆலயத்தினுள் பல மணி நேரம் இருந்தேன்.  உச்சிக்காலத்திற்குப் (மதியம் சுமார் 1 மணி) பிறகு நடை சாத்திய போதும் வெளிப் பிரகாரத்திலுள்ள குருந்த மரத்தடியில் திருவாசகம் படித்துக் கொண்டிருந்தேன். நான் முதல் முறை சாமி சந்நதியில் வழிபட்ட போது ஐந்து பேர் தான் இருந்தோம் ஆனால் பிறகு ஏராளமான பக்தர்கள் வந்தவாறு இருந்தனர்.  தனியாக வந்தார்கள், குடும்பமாக வந்தார்கள், குழுவாக வந்தார்கள்.அந்தக் குழுக்களிலும். 10, 15 அன்பர்கள் கொண்ட பெருங்குழுக்கள், 4, 5 பேர் கொண்ட சிறு குழுக்கள் என இரு வகையினர் இருந்தனர் சிறு குழுக்களாக வந்தவர்கள் தான் இசையோடு திருவாசகம் ஓதினார்கள். அந்தக் குழுக்கள் அவ்வாறு வழிபட்ட போது அவர்களோடு சேர்ந்து பாடி அவர்களின் குரலினிமையை அவர்களுக்கு உணர்த்தினேன்.

        ஆடை அணிமணிகளில் எவ்வித பகட்டும் இல்லாத ஒரு குடும்பத்தினர், அவர்களுள் குடும்பத் தலைவி கை கூப்பிய வண்ணம் வழிபாட்டார்.  இரண்டு பிள்ளைகளும் தம் பெற்றோரை சுற்றிச் சுற்றி வந்தன. குடும்பத் தலைவர் மட்டும் மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தார். எவ்வளவு மெல்லிய குரல் என்றால் அவரிடமிருந்து ஒரடி விலகியிருந்தால் கூட நமக்குக் கேட்காது.  ஆனால் அவரோ அருகில் யாரவது வந்து ஓங்கிப் பாட ஆரம்பித்தால் அவர் பாடுவதை நிறுத்திவிடுவார். அவர் அவ்வாறு ஒரு இடைவெளி விட்ட போது எந்தப் பதிகம் படிக்கிறீர்கள் என்று சொன்னால் நானும் புத்தகத்தில் பார்த்துக் கொள்வேன் என்றேன்.  ஒவ்வொரு பதிகத்திலும் ஒரு பாட்டுப் படிக்கிறேன் என்றார்.
     
            அவர் 50 ஆம் பதிகத்தை எடுங்கள் என்றார்.  சரி அவருடன் சேர்ந்து படிக்கப் போகிறோம் என உற்சாமடைந்தேன்.  இரண்டாவது பாட்டின் பொருள் என்ன என்று கேட்டார். நான் பாடல்களைப் பதம் பிரித்துப் படிப்பதற்கே சிரமப்படுபவன், இந்த நிலை இவர் பொருள் கேட்கிறாரே என்ன சோதனை என நினைத்தவாறே பொருள் சொல்ல முயன்றேன்.  மீண்டும் அந்தப் பாட்டைப் படித்தேன் கடைசி அடி தான் தெளிவாகப் புரிந்தது, மாணிக்கவாசகர் சிவனுடன் கலக்க வேண்டுமென விரும்புகிறார் என்றேன். என் பதிலைப் பற்றி அவர் எந்தக் கருத்தும் சொல்லவில்லை. அவர் ஒவ்வொரு அடிக்கு மிக மிகத் தெளிவாக விளக்கம் சொன்னார்.

              அவர் மெல்லிய குரலில் பாடியதாக முதலில் குறிப்பிட்டிருந்தேன்.  உண்மையில் அவர் மெல்லிய குரலில் நெக்குருகப் பாடினார். எத்தனையோ பேர்களுக்கு இனிய குரல்வளம் அமைந்திருக்கிறது எல்லோராலுமா நெக்குருகப் பாட முடிகிறது?  அந்த அன்பராலும் அவர் நெக்குருகப் பாடிய பாங்கிலும் “சொல்லிய பாட்டின் பொருள் உணரந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார்” என்ற மணிவாசகத்தின் பொருள் நெஞ்சில் பதிந்தது..

                   

         மற்றபடி பெரும்பாலான நேரம் சாமி சந்நதியில் திருவாசகத்தை மெளனமாக வாசித்தேன். ஆக மொத்தில் எனது பெருநோக்கமான சிற்பக்கலை ரசனைக்கு 30 விழுக்காட்டிற்கு குறைவான நேரத்தத்தைத் தான் செலவழித்தேன்.


          ஆலயத்தின் ஒவ்வொரு அங்குலத்தலத்திலும் வியக்க வைக்கும் சிற்ப வேலைப்பாடுகள்.  ஒரு தூணின் கலைநயத்தை ஆய்வு செய்ய ஒரு நிபுணருக்கு ஒரு வாரமாவது வேண்டும். எத்தனை மண்டபங்கள் எத்தனை தூண்கள் எத்தனை சிற்பங்கள்.  இவற்றின் அழகை ரசிப்பதற்கே இவ்வளவு நேரமும் காலமும் கலாரசனையும் தேவைப்படுமெனில் இவ்ற்றையெல்லாம் எப்படி உருவாக்கியிருப்பார்கள்?. மலைப்பாக இருக்கிறது.  ஒரு வேளை இதுவும் நரியைப் பரியாக்கிய கதை தானோ? களிமண்ணைப் பிசைந்தது தான் சிவபெருமான் கற்சிற்பங்களாக்கிவிட்டாரோ?


           
 



           பெரும்பாலான ஆலயங்களில் அருச்சகர்கள் காணிக்கை கேட்டு நச்சரிப்பார்கள் இங்கு அந்தச் சுவடே இல்லை.  சிற்ப வேலைப்பாடுகளுக்கு நிகராக பச்சிலை ஓவியங்கள் சுவர்களும் விதானங்களும் உள்ளன, நிறைய இடங்களில் சிதைந்துவிட்டன சிதைந்து கொண்டிருக்கின்றன. மஞ்சள் காவி அடித்த பிரகாரச் சுவர்களில் மக்கள் தம் கைவண்ணத்தில் கண்டதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள்.

நான் கோயிலில் உறைந்திருந்த பல மணி நேரத்தில் 250, 300 பக்தர்களாவது
வந்திருப்பார்கள்.  மிகச் சிலர் தான் யோசித்துப் பார்த்தால் 5 அல்லது 6பக்தர்கள்
தான் அலைபேசியில் படம் பிடித்தார்கள்.  சாமி சந்நதியில் தீபம் பார்க்கும் போது
ஒரே ஒரு பக்தரின் அலைபேசி தான் ஒலியெழுப்பியது. அலைபேசி தொல்லை
இவ்வளவு குறைவாக இருந்ததும் வியப்பாக இருந்தது.

          ஆலயத்துள் இருந்த சிற்பங்கள் மட்டும் மெய்சிலர்ப்பை அளிக்கவில்லை, ஆலயத்துள்
திருவாசக வாசிப்பும் ஒரு புதிய அனுபவத்தை நல்கியது.

              திருவாசகம் வாசிக்கும் போது எனக்கு  சில சொற்களுக்கு தான் பொருள் விளங்கும்
சில சொற்களுக்கு மேலோட்டமாக விளங்கும் சில சொற்களுக்கு அறவே பொருள் தெரியாது.
 ஆனால் ஆலயத்தினுள் திருவாசகத்தை வாசித்த போது ஒவ்வொரு சொல்லுக்கும் சற்று
கூடுதலாக பொருள் எனக்குத் தெரிந்தது. திருப்பெருந்துறை ஆலயம் கற்களால் மட்டும்
மேவப்படவில்லை, அமுதத் தமிழ் சொற்களாலும் மேவப்பட்டிருக்கிறது.
அவனருளால் அவன் சொற்களையும் அன்று நான் சற்று உணர்ந்தேன்.
                                      

          இதுவரை பார்த்தது உள் அனுபவம், இனி வருவது வெளி அனுபவம்.

           கனகசபை மண்டத்தில் உள்ளமாணிக்கவாசகரின் சிலைகளைப் பார்த்த போது ஒரு

மெய் சிலிர்ப்பு ஏற்பட்டது மற்றபடி அந்த எந்த வித்தியாசத்தையும் உணரவில்லை. ஆனால்

7 மணி நேரத்திற்கு பிறகு வெளியில் வந்த பிறகு தான் மனம் ஒரு இலகு நிலையை இழந்தது

வழக்கமான இருக்க நிலைக்குதிரும்பியதை உணர்ந்தேன். அதாவது இருக்கமான நிலை

தான் எனது இயல்பான நிலை என்பதையும் ஆலயத்தினுள் இலகுவான நிலையில்

இருந்திருக்கிறேன் என்பதையும் அறிந்தேன், வியந்தேன். இருக்கமான நிலையிலேயே

பழகிப் போயிருக்கிறேன்.  இதுவரை இந்த இலகு நிலை என்றவொன்றை அறியாதிருந்

திருக்கிறேன், நாடாதிருந்திருக்கிறேன், எனினும் அது எனக்கு வாய்த்தது, இது தான்

தாடுத்தாட்க்கொள்ளல் பேற்றின் முதல் அணுத் துகளோ?


நலந்தா செம்புலிங்கம்
28.06.2018






Saturday 23 June 2018

நற்கல்வியின் தொடக்கம் பகவான்!!

நற்கல்வியின் தொடக்கம் பகவான்!!

                                   ==================================

மதிப்பெண்கள்
மாணவனின் நல்ல அடையாளம்!
அதுவே ஒற்றை அடையாளமானது
தமிழ் நாட்டின் சாபம்!
~~~~




தனியார் பள்ளிகள்!
மதிப்பெண் தொழிற்சாலைகள்!
8வது, 9வது ஊதியக்குழு என கல்வியை 
திசைதிருப்பம் சாலைகளிலேயே
முனைந்து முனைந்து பயணிக்கிறோம் !
~~~~|
ஒரு பணிமாற்றத்தால்
 வந்தது மடைமாற்றம் !
~~~~~
நல்லாசிரியே எல்லாமுமாவார்
நன்மொழி மெய்யாகியுள்ளது
அது பள்ளிப்பட்டு மாணவரின்
உப்பு கண்ணீரில் பூத்தது
~~~

திருவள்ளூர் பள்ளிப்பட்டு 

வெளி அகரம் பகவான்

பெயர்களே ஊக்கமாய்!
~~~
எழுத்தின் தொடக்கம் அகரம்
உலகின் தொடக்கம் பகவன்
என்றான் பொய்யாமொழியன்
நற்கல்வியின் தொடக்கம் பகவான்
புதுக் குறள் படைத்தது பள்ளிப்பட்டு!
~~~
நல்லாசிரியர்கள் வெகு சிலர்
சமூக ஆர்வலர் பெரும்படையியனர்
கூட்டு வேள்வயியில் அரசுப் பள்ளிகளில்
அங்கொன்றும் இங்கொன்றுமாக
நம்பிக்கை துளிர் விடுகிறது
~~~|
ஆனாலும் 
லட்ச ரூபாய் எல் கே ஜி பள்ளி
வாசலில் தான் வரிசை நிற்கிறது!
காரணம் வேறொன்றுமில்லை
படிப்பது பிள்ளைகள் தான்!
தேர்ந்தெடுப்பதோ பெற்றோர்கள்!!
~~~~
இராமன்  அரியணையேற
அரசன் உத்தரவிட்டான்!
 ரத்து செய்தது கைகேகி வரம்!
~~~
இங்கே அரசு உத்திரவிட்டது!
பகவானின் பணியிடத்தை மாற்றி
பிள்ளைகளின் பாசக் கயிறு
உத்தரவை நிலைகுலைத்துவிட்டது
~~~
ஒவ்வொரு மாணவனின்
 கண்ணீர் துளியிலும்

ஒரு நல்லாசரியன் உருவாவான்

வெளியகரம் சொல்லும் செய்தி








~~~|
கல்வி  வணிகமான நாளில்
தப்பிப் பிறந்த தங்கமகன்!
பச்சைத் தமிழன் காமராசரின்
புதிய அவதாரம் இவன்!!

                   நலந்தா செம்புலிங்கம்
                   22.06.2018

Tuesday 19 June 2018

அரசுப் பள்ளி ஒன்று சமூக இயக்கமாகிறது!


அரசுப் பள்ளி ஒன்று சமூக இயக்கமாகிறது!
========================================


திரைப்படங்களின் செல்வாக்கு சற்று குறைந்தாலும் திரைப்படப் பாடல்களின் செல்வாக்கு என்றும் குறைவதில்லை.  அதிலும் மதுரையில் திரைப்படப் பாடல்கள் இன்றும் கோலோச்சிக் கொண்டு தான் இருக்கின்றன.











                                
                     திருமண வீடாக இருந்தாலும் சரி துக்க வீடாக இருந்தாலும் என  அததற்கென பொருத்தமான  திரைப்படப் பாடல் பட்டியல்கள் இருக்கும். அவை பிரம்மாண்டமான  ஸ்பீக்கர்கள்   மூலம்  ஒலிபரப்பப்படும்.  எட்டு வீதிக்கு பாடல்கள் கேட்க கூடிய ஒலி அளவு தான் குறைந்தபட்ச தகுதியாகும். 


மணமகளே மணமகளே வா வா (சாரதா)

வாராயென் தோழி வாராயோ   (பாசமலர் )

கல்யாண சாப்பாடு போடவா  ( மேஜர் சந்திரகாந்த் )

கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு  ( படகோட்டி )

கடவுள் அமைத்து வைத்த மேடை  ( அவள் ஒரு தொடர்கதை )


                அந்தப் பாடல்கள் அந்தந்த திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்டவை தான் என்றாலும்  அந்தப் பாடல்கள் திருமண விழாக்களுக்கு  மிகச் கச்சிதமாக பொருந்தும். அதைப் போல துக்க நிகழ்வுகள், வெற்றி விழாக்கள், வரவேற்புகள் என பல பட்டியல்கள் உள்ளன. அந்தப் பாடல்களைப் படைத்த கலைஞர்களைப் பாராட்டுவதா? கச்சிதமான பாடல்களைத் தேர்ந்தெடுத்த ரசிகர்களைப் (மைக் செட்கார்/ திருமண வீட்டார்) பாராட்டுவதா? எனத் திகைப்போம்.

                  
                    இந்தப் பாடல்கள் பெரும்பாலும்   டி.எம். செளந்தர் ராஜன், சுசீலா, சிவாஜி கணேசன், எம், எஸ். விசுவநாதன், கவிஞர் கண்ணதாசன் காலத்துப் பாடல்களாகத்   தான் இருக்கும். அடுத்த தலைமுறைக் கலைஞர்களான பாரதி ராஜா, ஏ. ஆர் ரஹ்மான், எஸ் பி பி. வைரமுத்து ஆகியோரின் கூட்டணியில் உருவான பாடல் ஒன்று இப்போது மதுரையையே மயக்கி வைத்திருக்கிறது.

               அந்த பாரம்பரிய மதுரை ரசிகர்கள் நெஞ்சைக் கொள்ள கொண்ட புதிய வார்ப்பு  கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் இடம் பெற்ற மானூத்து மந்தையிலே எனத் தொடங்கும் கவிஞர் வைரமுத்துவின் பாடல் தான்அது ஒரு தாய் மாமன் பாடும் பாடல், தங்கை பெற்றெடுத்த மருமகளுக்கு சீர் கொண்டுவருவதை நேர்த்தியாகவும் நெகிழ்ச்சியாகவும் எடுத்துரைக்கும் பாடல்!

                இன்று மதுரையில் பொற்கொல்லர் இல்லாமல் கூட ஒரு காதணி விழா நடக்கலாம்,  மானூத்து மந்தையிலே பாடல் இல்லாமல் ஒரு காதணி விழா கூட நடக்காது.  அந்தப் பாடலில் பல்லவியாக வரும்

                         
சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே.
                எனும் வரிகள் உடலிலுள்ள ஒவ்வொரு உயிர்த் துளியையும் மெய்சிலிர்க்க வைக்கும்.  
                மதுரை அந்த அற்புதமான பாடலையும் குறிப்பாக சீரு சொமந்த ஊரு சனமே என்ற பல்லவியையும் வாழும் இலக்கியமாக பரிணமிக்க வைத்திருக்கிறது.

                மதுரை அந்தப் பாடலை வாழும் இலக்கியமாக உயர்த்தியிருக்கிறது என்றால் காரைக்குடி, குறிப்பாக இராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளி மிகக் குறிப்பாக அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அந்த கிழக்கு சீமைப் பாடலுக்கு நெறியான இலக்கணம் வகுத்துள்ளார்கள்.
       ^^^^^^^^^^^^^^^^^^^                        ^^^^^^^^^^^^^^^^^^^^^^                         ^^^^^^^^^^^^^^^^^^^
                                  புதுமணத் தம்பதியருக்கும், பிள்ளை பெற்ற தாய்க்கும் ஆரத்தி எடுப்பது நமது மரபு, குடும்ப எல்லைக்குள் நின்ற இந்த மரபு  சமுக வெளியில் விரிந்து சாதனையாளர்களுக்கும் வெற்றி வீரர்களுக்கும் ஆரத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இரு சூழல்களும் உணர்வோடு ஒட்டியது, ஆரத்தி எடுக்கப்படுவதற்கு அது காரணமாகிறது.

                          அண்மையில் காரைக்குடியில் ஒரு கல்வி அதிகாரிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. அவருக்குப் பின்னால் ஒருவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் படத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார், என்றால்

                         சட்டத்தையும் மேலதிகாரிகளின் கட்டளைகளையும் தண்டவாளமாகக் கொண்டு பணியாற்றுகிற ஒரு அரசு அதிகாரியின் பணி வாழ்வில் உணர்ச்சிக்கு இடமில்லை.  அவர் மீது யார் உணர்ச்சி மேலிட ஆரத்தி எடுக்கப் போகிறார்கள்என எதிர்கேள்வி கேட்பீர்கள்.
                      ஆனால் காரைக்குடியின் கனவுப் பள்ளியான இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி அதனைச் சாத்தியமாக்கியிருக்கிறது. 
                      இது மடுவிலிருப்பவன் மலையின் சிகரத்தை வென்ற சாதனைக்கு ஒப்பானது தான்.  இது மந்திரத்தில் காய்த்த கனியல்ல. இப்பள்ளிக்கே தம்மை அர்பணித்துக் கொண்டுள்ள தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜாவும்  மற்றும்   ஆசிரியர்களின், ஒருமித்த முயற்சியால், இடைவிடா முயற்சியால் ஆகிய திருவினை. 

                         ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் காரைக்குடி இராமநாதன் செட்டியார்  நகராட்சி  நடுநிலைப் பள்ளி ஒரு உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது.  அப்போது ,  அந்தப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 218.  கடந்த 2017-18 ஆண்டில் மாணவர் எண்ணிக்கை  950. நடப்பு ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 1204.



                          இது உப்புச் சப்பு இல்லாத புள்ளிவிவரம், கள நிலவரம் என்னவென்றால்  ஆயிரக்கணக்கான  அரசுப் பள்ளிகள் உரிய அளவு மாணவர்கள் இல்லாமலும் போதியளவு புதிய மாணவர் சேர்க்கை இல்லாமலும் தவிக்கும் நேரத்தில் ஹவுஸ் புல் போர்டு (HOUSE FULL BOARD) மாட்டிய பள்ளி காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி என்பது தான்.  
                          மக்கள் காரணமில்லாமலா அந்தப் பள்ளியில் தம் பிள்ளைகளைச் சேர்க்கத் தவிக்கிறார்கள்.
                       ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் ஆசை காட்டும் பதிய வகுப்புறை, ஆய்வகம்நூலகம் SMART CLASS போன்ற  பல வசதிகள் இப்பள்ளியில் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.  எந்தத் தனியார் பள்ளியிலும் இல்லாத மின்  நூலகமும் இப்பள்ளியில் உள்ளது. வாசிப்புத் திறன் பயிற்சி, எழுத்துப் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, ஆளுமைத் திறன் பயிற்சி, மேடைப் பேச்சுப் பயிற்சி, கணினிப் பயிற்சி, கைத் தொழில் பயிற்சி எனப் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட பயிற்சிகளும் செயல்திட்டங்கள் ஆண்டு முழுவதும் நடைபெற்றுவருகிறது.
                         இவை எதுவும் ஆசிரியர்களின் முழு ஈடுபாடும் அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாம் சாத்தியமில்லை.  ஆசிரியர்களின் ஈடுபாடு மாணவர்களின் சாதனைகளாக ஒரு புறம் மலர்ந்தது, மற்றொரு புறம் மாணவர்களின் பெற்றோர்களை  பள்ளியில் வளர்ச்சிப் பணிகளில் முழு மூச்சாக இறக்கியது.
                           பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு என்னென்ன தேவை என்பதை தாமே உணர்ந்து செய்வார்களோ அதே போல ,இப்பள்ளியின் தேவைகளையும் தாம் அறிந்து உணர்ந்து செய்ய ஆரம்பித்தனர்.  சென்ற ஆண்டு (2017 -18) ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை நடந்த போது பெரும்பாலான வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்கு நாற்காலி, மேசை இல்லை.  பள்ளியைச் சிறப்பாக நடத்தும் ஆசிரியர்களின் சிரமத்தைப் போக்ககுவதற்காக  60 நாற்காலிகளும்  10 மேசைகளும் வழங்க முன்வந்தனர்.  இந்த மேசை நாற்காலிகளோடு பள்ளித் தேவையான மற்ற பொருட்களையும்  சேர்த்து ஜீலை மாதம் 21 ம் தேதி ஒரு எளிமையான நிகழ்ச்சியில்  ரு 1,70,000 மதிப்பிலான பொருட்களைக் கல்விச் சீராக வழங்கினர்.
                       இந்தக் கல்வியாண்டு (2018-19) கலக்கத்தோடு ஆரம்பித்தது.  ஆம் பள்ளியில் புதிதாக பிள்ளைகளைச் சேர்க்க வந்த நூற்றுக் கணக்கான பெற்றோரை திருப்பி அனுப்ப வேண்டிய நிலை. ஒரு வழியாக SHIFT முறை அறிமுகப்படுத்தியதால் புதிதாக 288 மாணவர்களை ஆறாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள வழியமைந்தது.  அந்தப் பெற்றோர்களின் மகிழ்ச்சியை சொற்களால் எடுத்துரைக்க முடியாது.  அவர்களே களத்தில் இறங்கினார்கள்.  இந்த 288 மாணவர்களை அமர வைப்பதற்குத் தேவையான ஸ்டையின் லேஸ் ஸ்டீல் பென்ஞ்ச் நாற்காலி மற்றும் பள்ளிக்குத் தேவையான பல தளவாடச் சாமான்களையும் சேர்த்து ரூ 3,70,000 மதிப்பலான பொருட்களை கல்விச் சீராக 09.06.2018 அன்று பெருந்திரளாக தத்தம் கைகளாலாலேயே தூக்கிக் கொண்டு வந்தனர். ஒலிபெருக்கியில் கிழக்குச் சீமையிலே பாடல்
                           "சீரு சொமந்த சாதி சனமே" ஒலிபரப்பாக வில்லை.  ஆனால் உள்ளபடி ஊர் சனம் சீரை தலைச் சுமையாகவும் கைச் சுமையாகவும்  சுமந்து கொண வந்தது.
                             இந்த உறவு முறையின்  உணர்ச்சிப் பெருக்கை நாதஸ்வரமும் மேளமும் இசை வெள்ளமாக பிரதிபலித்தது. இந்த சீர்வலத்திற்கு மாவட்ட கல்வி அதிகாரி திரு மாரிமுத்து தலைமை தாங்கினார். ஆசிரியையர்கள் இருவர் சீரவலத்திற்கு தலைமை தாங்கிய கல்வி அதிகாரிக்கு பள்ளி வாசலில் ஆரத்தி எடுத்தனர். 
                              ஒவ்வொரு பெண்ணிற்கும் தாய் வீட்டார் எவ்வப்போது எப்படி சீர் கொடுக்க வேண்டுமென்பதற்கு பல பரம்பரை முறைதலைகள் வழக்கில் உள்ளன.  ஒரு நிறுவனம், ஒரு பள்ளி சமூத்திடமிருந்து சீர் பெறுவதற்கு எப்படி நடத்தப்பட வேண்டுமென்பதற்கு காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராரட்சி உயர்நிலைப் பள்ளி இலக்கணம் வகுத்திருக்கிறது.

                      காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஒரு பள்ளி என்ற நிலையிலிருந்து உயர்ந்து சமூக இயக்கமாக (SOCIAL MOVEMENT) மிளர்கிறது.

நலந்தா செம்புலிங்கம்
19.06.2018






Saturday 9 June 2018

புனைகதையின் புதிய களம் PHOTOSHOP

புனைகதையின் புதிய களம் PHOTOSHOP






எந்தப் புலவனும் 
பாடாத சிம்மாசனம்!

நெகிழ்ச்சி நொடியில்
முகிழ்த்த தலைப்பு!!

யானையின் தும்பிக்கை
குட்டிச் சிங்கத்தை
சுட்டெறிக்கும் சூரியனிடமிருந்து
காக்கும் கையான அதிசயம்!

படமும் விளக்கமும்
கல்லையும் கனியாக்காதா?
உலகின் சிறந்த படமென
சாதனை முத்திரை 
பெற்றதில் வியப்பென்ன?

உணர்ச்சி வேறு அறிவு வேறு
அறிவு ஆய்விற்கு அடிபோடும்
ஆய்வு பொய்மை தோலையுரிக்கும்
உணர்ச்சி தலைகுனிய நேரிடும்

நானும் ஆய்வில் இறங்கினேன்
அந்த  உலக மகா சிறந்த படம்
எடுத்த கலைஞனைத் தேடி
இணையத்துள் விரல் நுனி வைத்தேன்
ஒரே நொடியில் SOCIAL MEDIA HOAX SLAYER
தவிடு பொடியாக்கியது 
PHOTO SHOP பொய்யுரையை


மக்களே போல்வர் கயவர்
 எனும் பொய்யா மொழி 
PHOTO SHOP காலத்திற்கு
மிகக் கச்சிதமாய் பொருந்தும் 


                                        நலந்தா செம்புலிங்கம்
                                         09.06.2018

குறிப்பு:

             ஏப்ரல் முதல் முட்டாள் தினத்தில் நாள் பார்த்து இப்புனை கதை வலைத்தளம் ஏறியிருக்கிறது.  ஏற்றியவரின் பெயர் Sloof Lipra எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  Sloof Lipra  என்பது apirL foolS என்பதை வலப்பக்கதிலிருந்து இடப்பக்கமாக எழுதியதில் உருவான சொற்கள் தான்

                வாட்ஸ் ஆப் முகநூல் ட்யூட்டரிலும் இப்புனைகதை வேகமாகப் பரவியுள்ளது. ட்யூட்டரில் மட்டும் ஒன்பதே நாட்களில் 1,18,716 முறை ரீ ட்யூட் செய்யப்பட்டுள்ளது.