Tuesday 27 March 2018

களைகட்டுகிறது கல்கத்தா !!

களைகட்டுகிறது கல்கத்தா !!
              ****
அன்று
பர்மா நகரத்தார்களின் கோட்டை
பன்னாட்டு அரிசி வணிகத்தில்
நகரத்தார் கொடி பட்டொளி வீசியது
கல்கத்தா படை வீடானது

சிங்காரவேலர் கடைக்கண் பார்வையில் கல்கத்தா கைவசமாகும்










                       

அந்தப் படை வீட்டிலிருந்து
எழுந்தப் புனிதப் பணி
காசி விசுவநாதர் திருப்பணி
                       ///
காலச் சுழற்சியில் 
பர்மாவும் அரசி வணிகமும்
பழம் பெருமையாயிற்று
                       ///
நம் மனமும்
காசியையும் கயாவையும்
தொழுது ஏற்றியது
கல்கத்தா சத்திரமும்
இறைப்பணிகளும்
தூரப் பார்வையிலேயே
தொடர்ந்தன
                       ///

மேலாண்மைக் கழத்தின்
நன்முயற்சியால் கல்கத்தா
செந்நகர் வாழ் நகரத்தார்  ஆதரவால்
புதிய அத்தியாயம்ஆரம்பமாகிறது
                       ///
வங்கத் தலைநகரில்
 சத்திரத்து சொத்துக் 
காப்பு மீட்புப் பணிகளில்
அரைக் கிணறு தாண்டியுள்ளோம்
                       ///
கூட்டுறவையும் 
கூட்டு முயற்சியையும்
கோட்பாடாகவும்
செயல்படாகவும் கொண்ட
பெருமுயற்சி கைகூடும்
நல்ல நேரம் வந்துவிட்டது
கெட்டி மேளம் கேட்கிறது
                       ///
ஹேவிளம்பி
பங்குனி உத்தரத்தில்
பால்க் குடம் காவடி
அபிக்ஷேக ஆராதனை
600 பேர் சங்கமம் என
களைகட்டுகிறது கல்கத்தா
சிங்கார வேலர் விழா
                       ///
சொத்துக்களால் எங்கும்
சண்டை வரும் நாளில்
கல்கத்தாவில் சிக்கல் விலக
நகரத்தார் எழுச்சி காண்கிறோம்
சிங்கார வேலர் துணை !!

                       --- நலந்தா செம்புலிங்கம்
                                                 26.03.2018 

Friday 23 March 2018

ஏர் செல்: சுருண்டு போன வாடிக்கையாளர்கள்


ஏர் செல்: சுருண்டு போன வாடிக்கையாளர்கள்

///// **** ///// **** /////

ஏறத்தாழ ஒரு தலைமுறை
கண்ட தொன்மைப் புதுமை
^^^
அது தான் தானைத்  
தமிழகத்தின் தலைப்பிள்ளையா?
உறுதியாகச் சொல்ல முடியாது
பிழைத்த செல் நிறுவனங்களுள்

அது தான் தலைப்பிள்ளை
^^^



அன்று
இன்கம்மிங் ஏழு ருபாய்
அவுட்கோயிங் எட்டு ருபாய்
கைவலிக்க வைக்கும்
கைபேசி விலை  அதிகமில்லை
நான்காயிரம் தான்
 நினைவு கொள்வீர் அன்று
தேநீர் ஒரு ருபாய் தான்
^^^

அந்தக் கொள்ளை லாபமும்
போட்டியில்லாத ஏகபோமும் தான்
மலேஷியத் தொழிலதிபர்
அனந்த கிருஷ்ணனை உறுத்தியதோ
ஏர்செல் நிறுவனர்
சிவசங்கரனை கட்டாயமாக
விற்க வைத்ததோ?
^^^

மெல்ல மெல்ல
சூடேறிய போட்டி
ஏர்செல்லின் ஏகபோகத்திற்கு
முடிவுரை எழுதியது
^^^

ஜியோ சுனாமிஏர்செல்லின் அடித்தளத்தையேஉலுப்பிவிடட்டது

^^^

ஏர்செல் நிறுவனமே
சந்தைக்கு வந்தது
பேரம் பேச நேரம் வேண்டுமே?
அந்த நேரம் வரை தாக்குபிடிக்க
இன்னும் கொஞ்சம் காசு வேண்டுமே?
^^^

சல்லிக் காசு கூட  போடமாட்டேன் 
கட்டாயத் தாலி கட்டிய
மலேஷிய மாயக் கண்ணன்
ஏர்செல்லை கைவிட்டுவிட்டார்
^^^

வங்கிக் கணக்கு
ஆதார் அட்டை
பிள்ளைகளின் பள்ளிகள்
என எல்லாவற்றிற்கும்
ஏர்செல் எண்ணை நீட்டியவர்கள்
சுருண்டு போனார்கள்
^^^

ஏர்செல்லின் நஷ்டம்BSNL யின் லாபம் அதிகமில்லை

ஏறத்தாழ இரண்டு லட்சம்
வாடிக்கையாளர்கள் தான்
^^^

இன்முகச் சேவை
தொழில் நுட்ப மேன்மை
என்ற தனியார் முத்திரைகளை
நம்பதன்மை எனும்
அரசு முத்திரை வென்றியிருக்கிறது

நலந்தா செம்புலிங்கம்
15.03.2018


Friday 9 March 2018

திருவண்ணாமலை ஆட்சியருக்கு பாரத் ரத்னா வழங்கப்படுமா?




    ஓரிரு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள்மாலை 3 மணி அளவில்  தேவகோட்டை நகராட்சி வாசலிருந்து  ஒரு ஊர்வலம் தொடங்கியது.  அந்தச் சுட்டெறிக்கும் முன்மாலைப் பொழுதில்  அந்த ஊர்வலத்தை தேவகோட்டை  நகராட்சி நடத்தியது.   நடந்து வதங்கியது என்னவோ பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் தான்.  அது விழிப்புணர்வு ஊர்வலமாம்.  திறந்த வெளியில் மலம் 
கழிக்கக் கூடாது என்பதை பற்றி 
விழிப்புணர்வு ஊர்வலமாம். 

           தேவகோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு  எதிரில் கைக்கு எட்டும் தொலைவில் தான் பேருந்து நிலையம் இருக்கிறது.  அந்த பள்ளி மாணவர்களை வதக்கி நடத்திய விழிப்புணர்வு ஊர்வலத்தின் போதும் பேருந்து நிலையத்தினுள் இருந்த இலவசக் கழிப்பிறை சகிக்க முடியாதளவு அருவருப்பாக இருந்தது.  கட்டணக் கழிப்பறையை பயன்படுத்துபவர்கள் எந்த யோக குருவிடமும் பயிலாமலேயே மூச்சுப் பயிற்சியில் வல்லவர்கள் ஆகிவிடுவார்கள்.  அந்த விழிப்புணர்வு நற்பணி நடந்து ஓரிரு ஆண்டுகளாகிவிட்ட பிறகு ஒரு "முன்னேற்றம்"  ஏற்பட்டுள்ளது.  இப்போது சும்மா பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தாலே  மூச்சுப் பயிற்சியில் வல்லவர்களாகிவிடுவீர்கள், அந்தளவு பேருந்து நிலைய வாசலில் உள்ள கழிவு நீர் சாக்கடை அடைபட்டு துர்நாற்றம் குடலைப் பிரட்டி எடுக்கிறது.  நிற்க இது தேவகோட்டையின் தனிச் சிறப்பு.  

              பொதுவாகவே  பேருந்து நிலைய கழிப்பறைகள் குறைந்தபட்ச அளவு கூட தூய்மையாக இருப்பதில்லை, கட்டணக் கழிப்பறைகளில் நிர்ணயிக்கப்பட்டக் கட்டணத்தை விட கூடுதலாகவே வசூலிக்கப்படுகிறது. பொது நிலவரமே இப்படி என்றால் உலகெங்கிலிருந்தும் பக்தர்கள் கூடும்  திருவண்ணாமலையின் நிலை எப்படி இருக்கும்? 
                     
                திருவண்ணாமலையில்  இன்னொரு அத்துமீறல் சர்வ சாதாரணமாக நடக்கிறது, பெளர்ணமி கிரிவல நாளில் கட்டணம் வசூலிக் கூடாது என்ற தடை இருக்கின்ற போதிலும் பத்து ருபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொது மக்களாகி நாம் ஒன்று அடாவடி கட்டணங்களை கொடுத்துவிடுகிறோம் அல்லது ஓரம்சாரம் சந்து பொந்துகளைத் தேடிப் போகிறோம் அல்லது இயற்கை உந்துதலை அடக்கிக் கொள்கிறோம். 

                பொது சுகாரத்தை பாதிக்கும் இந்த முறைகேடுகளில் கடமை தவறுதல் சேவைக்குறைபாடு ஊழல் எல்லாம் சரிசமாகக் கலந்திருக்கிறது, ஏனோ பெரும்பாலான அதிகாரிகள் இவற்றைக் கண்டும் காணமல் இருந்துவிடுகிறார்கள் 

               திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமியால் எல்லோரையும் போல பார்த்தும் பாராதது போல இருக்க முடியவில்லை.  அவரே களத்தில் இறங்கிவிட்டார்.  கிரவலத்தில் பக்தர்களோடு பக்தராக அவரே நான்கு பொதுக் கழிப்பறைக்குச் சென்றார், அவரிடமும் பத்து ருபாய் வசூலித்திருக்கிறார்கள்.  மறுநாள் சம்பந்தப்பட்ட நான்கு ஊராட்சி செயலர்களை இடை நீக்கம் செய்திருக்கிறார்.  வசூல் வேட்டையில் ஈடுபட்டோர் மீது காவல் துறை மூலமாகவும் நடவடிக்கை எடுத்தன் விளைவாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய இரண்டு பேர்களை காவல் துறை தேடி வருகிறது.  வசூல் வேட்டையர்களைக் காவல் துறை தேடுவது இருக்கட்டும், ஆட்சியர் கந்தசாமியை தேடி உயரிய விருதுகள் வரவேண்டாமா?

              உயரிய விருதுகள் என்றால்?
                                      

               இந்திய அரசு நடிகர் ரஜினிகாந்த்திற்கு  2016 ல் ஒரு உயரிய விருது கொடுத்திருக்கிறது. அது பத்ம விபூஷண் விருது எனும் இரண்டாவது உயரிய விருதாகும்.  அவ்விருது ரஜினிகாந்த் இந்தியத் திரைப்படத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு  வழங்கப்பட்டுள்ளது.  இந்திய திரைப்படத் துறையை விட பொதுசுகாதாரத் துறை இன்றையமையாத துறை என்பதையும் அதற்கு ஆட்சியர் கந்தசாமியின் பங்களிப்பு ரஜினிகாந்த் திரைப்படத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பு விடக் கூடுதலானது என்பதையும் எவரும் மறுக்கப் போவதில்லை.  ஆகவே ஆட்சியர் கந்தசாமிக்கு  பத்ம விபூஷண் விருதிற்குக் குறையாத விருது வழங்கப்பட வேண்டும்.  பத்ம விபூஷணுக்கு குறையாத விருது என்றால் அது பாரத் ரத்னா தான்.  




  தூய்மை பாரதத் திட்டம் தான்  பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் விருப்பமான திட்டம் என்பது உண்மை என்றால் திருவண்ணாமலை ஆட்சியருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படும்.





Monday 5 March 2018

கும்பகர்ணன் தோற்றுவிட்டான் ! பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் !!

            


கும்பகர்ணன் தோற்றுவிட்டான் !  பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் !!




  எந்நாட்டினருக்கும் அயல்நாட்டு மோகம் கொஞ்சமாவது இருக்கும்.  உலக அரங்கில் மிக அதிகமானோரைச்  சுண்டி இழுக்கும் அயல் நாடு அமெரிக்கா தான்.  அது ஒரு வல்லரசு, இராணுவ வலிமையினால் மட்டுமல்ல, அறிவியல் சாதனைகள் நேர்த்தியான நிர்வாகம்  எனப் பல துறைகளிலும் அமெரிக்க ஒரு வல்லரசு தான்.
              அந்த நாட்டு வங்கிகளின் இந்தியக் கிளைகளில் கணக்கு வைத்திருப்பதே ஒரு பெரிய பெருமித அடையாளமாகும்.   அமெரிக்க வங்கிகளும் பெரிய வல்லமை நேர்மை குணாதியங்களையல்லாம்  சூடியிருந்தன, எல்லாம் 2008 வரை தான்.  SUB PRIME CRISIS எனும் ஊழல் சுனாமி   அமெரிக்க வங்கித் துறையை அடித்து நொறுக்கி பிரட்டி உருட்டி சின்னாபின்னமாக்கிவிட்டது.  அந்தச் சின்னாபின்ன நச்சுத் துகள்கள் காற்றில் கரைந்து உலக வங்கித் தொழிலையே படுத்த படுக்கையாக்கிவிட்டது.  எனினும் அந்த சுனாமியோ நச்சுக் காற்றோ தீண்ட முடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்ந்த நாடு இந்தியா.   

               வங்கித் தொழிலில் இந்தியா ஒரு இரும்புக் கோட்டையாகத் திகழ வழி வகுப்பது ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்கள்.  ஆனால் இந்த இரும்புக் கோட்டையும் அவ்வப்போது கரையான்களால் அரிக்கப்படும்.


                    இரும்பைக் கரையான் அரிக்குமா? என எதிர்கேள்வி கேட்பீர்கள். கரையான்களுக்கு இரையாக்குவதற்காகவே சில  ஐந்தாம் படையினர் இரும்புத் தூண்களை அகற்றிவிட்டு மரத் தூண்களால் முட்டுக்கொடுப்பார்கள்

Nirav Modi
                 அதனால் தான் நியாயமாக  யாரும் எளிதில் ஏமாற்ற   முடியாத இந்திய வங்கிகளுள்ளும் ஏதேனும் ஒரு இந்திய வங்கியாவது பத்தாண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது எக்கச்சக்கமாக இழக்கும். அவற்றிற்கு காரணமான துறை ரீதயான குற்றங்குறைகளை ஆராய்வதைவிட அரசியல் காரணங்களை மோப்பம் பிடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்துகிறோம்.  

                அண்மையில் அம்பலாமாகியுள்ள  பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழலிற்கு காரணமான  நிரவ் மோடியின் உடம்பில்  காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறதா? பாரதிய ஜனதா ரத்தம் ஓடுகிறதா என்ற விவாதம் காரசாரமாக நடந்துவருகிறது.  இந்த விவாதம் ஒரு திசை திருப்பும் முயற்சி என்றே கருதுகிறேன்.


     1990 --92 ஆண்டுகளில் நடைபெற்ற மேத்தா ஊழலும் 2002--2005 ஆண்டுகளில் நடைபெற்ற ரூபால் பன்சால் ஊழலும் 2018 புத்தாண்டு பரிசாக அம்பலமாகியுள்ள நிரவ் மோடி ஊழலும் ஒரே வகை முறைகேடுகளே ஆகும்.  இந்த ஊழல்களத்தில் மோசடிப் பேர்வழிகள் வெற்றிபெற்றதாகக் கூடச் சொல்ல முடியாது, வங்கிகள் தேடிப் போய் சரணடைந்ததாகவே தோன்றுகிறது. 

Harshad Mehta
                 பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிராடி இல்லக்  கிளை   (BRADY HOUSE BRANCH MUMBAI) தனது வாடிக்கையாளர் நிரவ் மோடி குழுமத்திற்கு Letter of Undertaking (LOU) ஆவணத்தைக் கொடுக்கிறது.  இந்த ஆவணம் ஒரு உத்தரவாத உறுதி மொழி பத்திரம் ஆகும்.  இந்த ஆவணத்தை வைத்து சில இந்திய வங்கிகளின் வெளிநாட்டுக் கிளைகளில் நிரவ் மோடி குழுமம் கடன் பெற்றிருக்கிறது.  அந்தக் கடன்களை நிரவ் மோடி குழுமம் தீர்க்கவில்லை.  அவற்றை தீர்க்க வேண்டிய பொறுப்பு பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடமையாகிவிட்டது, . இந்த எட்டு ஆண்டு காலகட்டத்தில் நடந்த ஏராளமான பரிவர்த்தனைகளில் கூட்டுத் தொகை அதிகமில்லை பன்னிரெண்டாம் கோடி ருபாய் ஆகும்

                இந்த  ருபாய் 12 ஆயிரம் கோடியும்  ஒரே நாளில் ஒரே பரிவர்த்தனையில் வாரி வழங்கப்படவில்லை.  இந்த முறைகேடுகள்  சர்வ சுதந்திரமாக  8 ஆண்டுகள் அடை மழை போல தொடர்ந்து அரங்கேறியுள்ளன.

                 ஒரு சாமானியன் 12 ஆயிரம் ரூபாய் நகைக் கடன் கேட்டால் எத்தனை விதிமுறைகள் விதிக்கபடுகின்றன? 
Brady House Branch
      இந்த 12 ஆயிரம் கோடி கடனுக்கு ஒரே ஒரு கிளையின் ஒப்புதல் மட்டும் போதுமா?     இவ்வளவு பெரிய கடனுக்கு உள்ள படி எத்தனை அடுக்கு அதிகார நிலைகளில் (LAYERS OF AUTHORITY) ஒப்புதல் பெற வேண்டியிருக்கும்?  அத்தனை அடுக்கு அதிகார நிலையினரும் (LAYERS OF AUTHORITY) உறங்கிக் கொண்டிருந்தனரா? உறங்குவதைப் போல நடித்துக் கொண்டிருந்தனரா?

                  பாவம் கும்பகர்ணன் பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் தோற்றுவிட்டான்.




Thursday 1 March 2018

கசப்புச் சலிப்பிற்கு ஒரு இனிப்பு மாற்று

  தமிழ் மொழியின் பால் அயல் மொழியினரெல்லாம் காதல் கொள்ளும் போது தமிழர்களுக்கு தாய்மொழிப் பற்றாகவும் அது இரட்டிப்பாக இருக்க வேண்டுமே!  ஆனால் உண்மை கொஞ்சம் கசக்கும், அல்ல, அல்ல அதிகமாகவே கசக்கும்.  

         இந்தக் கசப்புச் சலிப்பிற்கு ஒரு இனிப்பு மாற்று காரைக்குடியில் இருக்கிறது.
 
          நமக்குத் தாய் மொழிப் பற்று இல்லாமல் இல்லை ஆனாலும் சில வேளைகளில் உயர்கல்வி வேலை வாய்ப்பு என ஏதோரு சாக்கிட்டு நீர்த்துப் போய்விடுகிறது.
 
            இந்த வடிகட்டியைத் தாண்டி நிற்கும் தமிழ்ப் பற்று ஒரு அரசியல் வாடையாகக் கரைந்துவிடுகிறது அல்லது இறையுணர்வு என்ற வட்டத்திற்குள் மையம் கொண்டுவிடுகிறது.

              இந்த வடிகட்டியையும் தாண்டி ஒருவருக்கு தமிழ்ப பற்று நிலைத்து நின்று அவர் நூற்றுக்கு நூறு தூய தமிழ் தொண்டாற்றி வந்தால் அது அதிசயமாக கருதப்படும்.  அந்த அதிசயம் அவருடைய வாரிசுகளால் தொடரப்படுமா என்பது கேள்விக் குறியாக இருக்கும்.  ஆனால் அப்படி ஒரு தமிழ்ப்பணி  காரைக்குடியில்  

              மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
               என்னோற்றான் கொல்எனும் சொல் (குறள் 70)

என ஒரு நற்றந்தையின் தமிழ்ப் பணியை பெரி. பெரியகருப்பன் மற்றும் பெரி. வீரப்பன் எனும் அவர்தம் மைந்தர்களால் தொடர்கிறது

                  1967 ஆம் ஆண்டு தமிழ்க் காதலர் இராம. பெரியகருப்பன் செட்டியார் அவர்களால் தொடங்கப்பட்ட இராமசாமி தமிழ்க் கல்லூரி இன்றும்  அவருடைய மைந்தர்கள் பெரி. பெரியகருப்பன் மற்றும் பெரி. வீரப்பன் நிர்வாகத்தில்  சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.   இன்று பல தமிழ் கல்லூரிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரிகளாக மாறினாலும் இக்கல்லூரி தனித் தமிழ்க கல்லூரியாகவே தொடர்கிறது.  

பெரி. பெரியகருப்பன் கெளரவிக்கப்படுகிறார்
பெரி. வீரப்பன் கெளரவிக்கப்படுகிறார்
                    இக்கல்லூரியின் ஆண்டு விழா 3, 4 நாள் விழாவாக நடைபெறும்.  அவ்விழாக்களில் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் குடும்ப விழாப் போல வந்து கலந்து கொள்கிறார்கள். இந்த ஆண்டு 51 ஆவது ஆண்டு விழா பிப்ரவரி 27 முதல் மார்ச்சு 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு ஒரு சிறப்பு மலர் வெளியிடுகின்றனர்.
                         
                   காரைக்குடியில் தமிழ்த் தாய்க்கு ஒரு கோவில் மட்டுமில்லை வளரும் தலைமுறைகளை அவள்பால் ஆற்றுப்படுத்த ஒரு பாடசாலையும் இருக்கிறது.