ஒரு மந்திரத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பது உச்சடானம், ஒரு மூர்த்தத்தின் மீது அல்லது விக்ரகத்தின் மீதோ அல்லது விக்ரகத்தை வைத்து செய்யப்படும் உச்சாடனம் அந்த மூர்த்தத்திற்கு அல்லது விக்ரகத்திற்கு உரு ஏற்றும் அல்லது சக்தியை மேலும் அதிகப்படுத்தும் என்பது ஐதீகம். இந்த ஐதீகங்களுக்கு நாமே நம் வாழ்வில் சான்றாக இருந்திருப்போம்.
தேவகோட்டையில் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த வயிரவர் உச்சாடனர் அமரர் சேவு.லெ. சேவுகன் செட்டியார். அவர் தினமும் அவர் வீட்டு முகப்பில் உள்ள தெற்குத் திண்ணையின் முதல் தூண் அருகில் இருந்து உச்சாடனம் செய்வார். வயிரவர் அருள் பெற்ற அவரிடம், நாய் கடியால் அவதியுற்றவர்கள் வந்து மந்திரத்துக் கொண்டு (அவர் ஒரு மந்திரத்தை மெல்ல உச்சரித்தபடி பாதிக்கப்பட்டவர் மீது தனது தோள் துண்டை வைத்து இறக்கிவிடுவார்) சுகம் பெறுவர். அவர் என் தாயாரின் பெரிய தகப்பனார், எனக்குப் பெரிய ஐயா. அவர்களுக்கும் எங்கள் ஐயாவிற்கும் மற்ற ஐயாக்களுக்குமான பொது வீட்டில் தான் நான் பிறந்து வளர்ந்தேன். எங்கள் பெரிய ஐயா மந்திரப்பதை எத்தனையோ முறை நேரில் பார்த்திருக்கிறேன். அவர் ஊரில் இல்லாத சமயத்தில் வருபவர்கள் ஐயா உச்சாடானம் செய்யும் தூணைச் சுற்றிச் சென்றும் சுகம் பெற்றிருக்கிறார்கள்.
இந்த வரலாற்றை மகாகவி அர. சிங்கார வடிவேலன் கவிதையாகவே பதிவு செய்தார்.
அங்கு நூறாண்டுகளுக்கு முன்னரோ அதற்கும் முன்னோரோ வாழ்ந்த மெய்யன்பர் அழ. சைவர். இவர் மெளனகுருசாமி என்ற மெய்யன்பரின் சீடராகவும் அணுக்கத் தொண்டராகயிருந்தார். குருநாதரும் திருமணவயலுக்கு வந்துவிட்டார். அழ. சைவர் தனது விவசாயப் பணிகளை முடித்துவிட்டு குருநாதர் இருக்கும் குடிலுக்கு (சிறிய கூரைக் கொட்டகை தான்) வந்துவிடுவார். குருநாதரும் சீடரும் ஒரு விநாயகர் விக்ரகத்தை வைத்து நாள் முழுதும் ஆண்டு முழுதும் தியானித்து வண்ணம் இருப்பார்கள். சீடர் அழ. சைவரின் மகன் சேதுராமன் இந்த தியானக் குடிலுக்கு உணவு கொண்டுவருவாராம். முதலில் குருநாதர் சாப்பிடுவாராம். குருநாதர் சாப்பிட்ட இலையிலேயே சீடர் சைவர் சாப்பிடுவாராம்.
தூணில் மந்திரம் துலங்கும் இல்லம்
நாயின் வாயால் நலிவுற்றோர்கள்
கோயில் சேர்ந்தால் குணம் பெற்றுய்வர்
அந்த தேவகோட்டையிலிருந்து எண்ணி ஆறாவது கிலோ மீட்டரில் உள்ள சிற்றூர் திருமணவயல் அது அருள்வயலாகவும் திகழ்கிறது.
அங்கு நூறாண்டுகளுக்கு முன்னரோ அதற்கும் முன்னோரோ வாழ்ந்த மெய்யன்பர் அழ. சைவர். இவர் மெளனகுருசாமி என்ற மெய்யன்பரின் சீடராகவும் அணுக்கத் தொண்டராகயிருந்தார். குருநாதரும் திருமணவயலுக்கு வந்துவிட்டார். அழ. சைவர் தனது விவசாயப் பணிகளை முடித்துவிட்டு குருநாதர் இருக்கும் குடிலுக்கு (சிறிய கூரைக் கொட்டகை தான்) வந்துவிடுவார். குருநாதரும் சீடரும் ஒரு விநாயகர் விக்ரகத்தை வைத்து நாள் முழுதும் ஆண்டு முழுதும் தியானித்து வண்ணம் இருப்பார்கள். சீடர் அழ. சைவரின் மகன் சேதுராமன் இந்த தியானக் குடிலுக்கு உணவு கொண்டுவருவாராம். முதலில் குருநாதர் சாப்பிடுவாராம். குருநாதர் சாப்பிட்ட இலையிலேயே சீடர் சைவர் சாப்பிடுவாராம்.
குருநாதர் மெளனசாமியும் சீடர் சைவரும் இடைவிடாது பல ஆண்டுகளாக தியானம் செய்ததைப் பார்த்த அழ. சைவரின் மகன் சேதுராமன், (இப்போது இவருக்கு வயது 85) அவர்கள் காலத்திற்குப் பிறகு அந்த விநாயகர் விக்ரகத்தை பேணிக் காத்திருக்கிறார். கூரைக் கொட்டகையாக இருந்த வழிபாட்டு கூடத்தை ஓட்டுக் கொட்டகையாக ஆக்கியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து இவருடைய மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் பாட்டனின் பக்திப் பணியை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். இவர்களுள்ளும் நடுவுல உள்ளவன் என திரு சேதுராமன் ஐயா அவர்களால் சொல்லப்படும் திரு கர்ணன் அதி அதி தீவிரமாகத் தொடர்கிறார்.
திரு சேதுராமன் ஐயா குடும்பத்தினர் |
செட்டிநாட்டில் ஆண் வாரிசு இல்லாதவர்கள் ஒரு ஆண் பிள்ளையை சுவீகாரம் கூட்டிக் கொள்வார்கள். அந்தப் பிள்ளையை, இந்தக் குடும்பத்தில் பிறந்து அந்தக் குடும்பத்திற்கு வளரச் சென்றிருக்கிறான் என்பார்கள். பெரும்பாலான சுவீகாரங்கள் அந்த சுவீகாரப் பிள்ளையின் கல்யாண வயதில் தான் நடைபெறும். பிறகென்ன வளரச் செல்லுதல் என்று பலர் நினைப்பார்கள். செட்டிநாட்டில் சுவீகாரம் கூட்டுவதற்கு மூன்று காரணங்கள் சொல்வார்கள். 1. விலாசம் வளர -- அதாவது வம்சம் தழைக்க 2 தொழில் வளர -- சுவீகாரத் தந்தையாரின் தொழிலை பெருக்க வேண்டியது சுவீகாரப் பிள்ளையின் கடமை 3 தர்மம் தழைக்க -- சுவீகாரத் தந்தை அவரின் முன்னோர்கள் செய்த தர்மத்தை பெருக்க வேண்டியது சுவீகாரப் பிள்ளையின் முக்கியமான கடமை.
திருமணவயலில் ஸ்ரீ மஹாகணபதியை உச்சாடனம் செய்த மெய்யன்பர் அழ சைவரின் பேரன் கர்ணனோ தர்மத்தை வளர்க்க வேண்டும் என்ற கடமையை மிகுந்த ஈடுபாட்டோடும் பெரும் பொருட்செலவோடும் செய்து வருகிறார். மிக இளம் வயதில் பள்ளிப் படிப்பை மட்டுமே கடந்த நிலையில் பெங்களூருக்குச் சென்ற திரு கர்ணன், ஸ்ரீ மஹாகணபதியின் திருவருளால் பெருந்தொழிலதிபராகத் திகழ்கிறார். அவர் தான் ஈட்டிய செல்வத்தின் பயனை திருவள்ளுவர் வழியில் ஈந்து துய்ப்பதை கோவில் திருப்பணியிலும் கோயில் சார்ந்த சமூகப் பணிகளிலும் காணமுடிகிறது.
இவருடைய முன்னெடுப்பால் கடந்த 15 ஆண்டுகளாக பிள்ளையார் சதுர்த்தியை பெரிய விழாவாகக் கொண்டாடி வருகிறார்கள். பிறகு 2013 ஆம் ஆண்டில் மிகச் சிறப்பான கற்கோயில் கட்ட விழைந்தார். கற்கோயில் எழுப்பும் பணியை புகழ் பெற்ற சிற்பியும் கன்னியாகுமரியில் - விவேகானந்தர் நினைவுச் சின்னத்தை உருவாக்கியவருமான எஸ் கே ஆச்சார்யா ஸ்தபதி அவர்களிடம் ஒப்படைத்தார்.
இந்த கற்கோயில் அமைப்பு இரண்டு அடுக்குகளைக் கொண்டது. தரைத் தளம் தியான செய்வதற்காக தியான மண்டபமாக உள்ளது, இ்ங்கு விக்ரகங்கள் ஏதுமில்லை. இந்த தியான மண்டபத்திற்கு நுழை வாசலாக கோயி்லின் இடப்புறத்தில் ஒரு சிறிய கதவு இருக்கிறது. அந்த கதவு நிலைக்குக் கீழுள்ள படிகட்டில் தான் இத் திருப்பணி 2013 ஆம் தொடங்கப் பெற்றது என்ற குறிப்பு இருக்கிறது. வலப்பக்கத்தில் உள்ள வாயிலின் வழியாக வெளியே வருகிறோம். இந்த வாயிலின் நிலைகதவில் கீழுள்ள படியில் தான் 2019 ஆம் கும்பாபிக்ஷேகம் நடைபெற்றது என்ற குறிப்பு உள்ளது. வாசல் படிக்கட்டில் இந்த வரலாற்று குறிப்புகள் பொறிக்கப்பட்டிருப்பதால் இவற்றைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது, அந்தளவு விளம்பர வெளிச்சத்தை விரும்பாதவர்கள் இவ்வாலய நிர்வாகிகள்.
தியான மண்டபத்தின் மையத்தில் ஒரு கருங்கால் பெரிய தூண் அமைக்கப் பெற்றுள்ளது. அந்தத் தூண் ஒரு மரம் போல அடிப்பகுதியில் குறுகலாகவும் உயரம் ஏற ஏற அகலமாகவும் விரிகிறது. தியான மண்டபத்தின் சுற்றுச் சுவரிலும் அழகான ஓவியங்கள் பொன் மொழிகள் பக்திப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தத் தளத்திற்கு மேலே தான் ஸ்ரீ மஹாகணபதி ஆலயம் அமைந்துள்ளது. கோயிலின் முன்புறம் உள்ள இடப்பக்க சிறிய வாயில் வழியாக தியான மண்டபத்திற்குகான நுழை வாயில். வலப் பக்க வாயில் வெளியே வருவதற்கான வாயில். இவை இரண்டிற்கும் நடுவில் சுமார் 16 அடி அகலமான சிற்ப வேலைப்பாடுமிக்க அழகான மரக் கதவு அதனுள் சிறிய நடை. அந்த நடையின் இருபுறங்களிலும் மாடிப் படிகள் உள்ளன. இடப்புறம் மேல் தளத்திற்கு செல்வதற்கான மாடிப் படிகள் வலப்புறம் கீழே இறங்குவதற்கான படிகள் ஆகும்.
மேல் தளத்தின் மையத்தில் அழ. சைவரும் அவர் குருநாதரும் வழிபட்டு வழிபட்டு உருயேற்றிய விநாயகர் விகர்கம் மற்றும் ஆற்றங்கரையிலிருந்த கொணர்ந்த பெரிய பிள்ளையார் எழுந்தருளி உள்ள அழகான கர்ப்பக் கிரகம், அதற்கு முன் இரண்டு துவரா பாலகர்கள். இந்த துவார பாலகர்களின் முகங்கள் நம்மிடம் பேசும் -- அந்தளவு திருத்தமான சிற்ப வேலைப்பாடு. கர்ப்பக் கிரக வெளிச் சுவற்றில் ஒவ்வொரு பக்கமும் இரண்டு இரண்டு ஆக எட்டு வகை விநாயகர் உருவங்கள் பொறிக்கப் பெற்றிருக்கின்றன. கர்ப்பக் கிரகத்திற்கு முன் அர்த்த மண்டபம். சுற்றுப் பிரகாரத்தில் கோஷ்ட தெய்வங்களாக தெக்ஷணா மூர்த்தி விஷ்ணு மற்றும் பிரம்மா அருள்பாலிக்கின்றனர். சரஸ்வதி லெஷ்மி பரிவார தேவதைகளாக அருள்பாலிக்கின்றனர். அவற்றிற்கு எதிர் முனைகள் இரண்டிலும் பக்தர்களை பிரதிபலிக்கும் இரண்டு மனித சுதை உருவங்கள்.
மேல் தளத்தில் பிள்ளையார் வீற்றிருக்கும் கர்ப்பக் கிரகத்திலிருந்து கீழ்தளத்தில் தியான மண்டபத்தின் மையத்திலுள்ள தூணையும் வழியாக ஒரு செப்புக் கம்பி பூமிக்கு செல்கிறது.
கோயிலிலும் தியான மண்டபத்திலும் ஒவ்வொரு கல்லும் கவிதை பேசும். விமானமோ அதைவிட அழகு. வெளிச் சுவர் எங்கும் பொன்மொழிகள் பாராயணப் பனுவல்கள் என கண்ணிற்கு மனதிற்கு விருந்தளிக்கிறது அதி அற்புதமான இத்திருக்கோயில். ஆனால் மிகப் பெரும் பொருட்செலவில் இந்த ஆலயத்தை எழுப்பியவர் பெயர் மட்டும் இல்லை. ஒரே ஒரு இடத்தில் குருநாதர் மெளன குருசாமியும் அழ. சைவரும் வழிபட்டதும் அவருடைய வம்சாவளிகளால் தொடர்ந்து பாராமரித்து பேணிக் காக்கப்பட்டு வருகிறது என்பது ஒரு சிறிய கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் லட்டு எப்படி பிரதான பிரசாதமோ திருமணவயல் ஸ்ரீ மஹாகணபதி அதிரசம் பிரதான பிரசாதமாகும். இவ்வாலயத்தில் காலை 7 மணியளவில் ஒரு பூஜை நடைபெறுகிறது. அதற்குப் பிறகு தனிப்பட்ட முறையில் அர்ச்சனையோ தீபாராதனையோ கிடையாது.
இந்த கிராமத்திலும் கிராமத்தை ஒட்டிய சிற்றூரிலும் அமைந்துள்ள மூன்று பள்ளிகளில் ஆண்டுதோறும் ஒவ்வொ ரு பள்ளியிலும் தனித் தனியாக மாணவர்களுக்கு திருக்குறள் போட்டியும் விளையாட்டுப் போட்டியும் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது. மேலும் மூன்று சிறந்த மாணவர்களுக்கு 10,000/- ரூபாய் அஞ்சல வைப்பு நிதி பரிசாக வழங்கப்படுகிறது. இந்த வைப்பு நிதி அந்தந்த மாணவர் பெயரிலும் அவருடைய தாயார் பெயரிலும் முதலீடு செய்து இந்த நிதி மாணவர் 18 வயது நிறைவடையும் காலத்தில் முதிர்வடையும் வகையிலும் அமைகிறது. இவ்வாறு கோயிலிலும் கோயில் சார்ந்த சமூகப் பணிகளிலும் திரு. கர்ணன் கொண்டுள்ள ஈடுபாடும் அக்கறையும் மலைக்க வைக்கிறது.
இந்தப் பிள்ளையாரின் தனிச் சிறப்பு மெளன குருசாமியும் சீடர் அழ. சைவரும் பல ஆண்டுகள் தியானித்து வழிபட்டு உருயேற்றியது தான். நூறாண்டுகளுக்கும் மேலாக உருயேற்றப் பெற்றுவரும் பிள்ளையாருக்கு மேலும் மேலும் உருவேற்ற வழிசெய்யும் வகையில் தான் கீழ்த் தளத்தில் தியான மண்டபமும் மேல் தளத்தில் கோயிலும் அமைக்கப் பெற்றிருக்கிறது. அந்த தியான வழிபாட்டு முறைமைகள் சீராகவும் அமைப்பு வழியாகவும் தொடர்ந்திடவும் இரண்டு நேரிய முறைகளை, ஆலய நிர்வாகிகள், கல்திருப்பணி நடைபெற்ற காலத்திலிருந்து செயல்படுத்திவருகிறார்கள்.
அபிராமி அந்தாதி, திவ்யப் பிரபந்தம், கம்பராமாயணம் போன்ற பக்திப் பனுவல்களை பாராயணம் செய்து வரும் பேராசிரியர் சேவு. சுப்பையா அவர்கள் தலைமையில் இயங்கும் அபிராமி அந்தாதி அன்பர் குழுவினர் இந்த ஆலயத்தில் 26.11.2019 முதல் ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதியில் அபிராமி அந்தாதி நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள். இதுவரை 43 நிகழ்ச்சிகள் நடத்தயுள்ளனர்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருவாசக முற்றோதுதல்களை நடத்திய பெருமைமிக்க தேவகோட்டை ஞானதான சபையினர் 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் சங்கட ஹர சதுர்த்தி திருநாளில் திருவாசக முற்றோதுதல் நடத்தி வருகின்றனர்.
இதுவரை திருமணவயல் ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் 99 சங்கட ஹர சதுர்த்தி நாட்களில் தேவகோட்டை ஞானதான சபையினர் 99 திருவாசக முற்றோதுதல்கள் நடத்தியுள்ளனர். இவர்களின் 100 வது திருவாசக முற்றோதுதல் எதிர் வரும் 30.12.2023 (சோபகிருது ஆண்டு கார்த்திகைத் திங்கள் 14 ஆம் நாள்) சனிக் கிழமை நடைபெறயிருக்கிறது. அவ்விழாவில் புகழ்பெற்ற திருவாசக அன்பரும் முற்றோதுதல் செய்பவரகளுக்கு வழிகாட்டும் நெறியாளருமான சிவத்திரு திருச்சி தாயுமானவர் என்ற கணேசன் மற்றும் பலர் கலந்து கொள்ளயிருக்கிறார்கள்.
நூறாண்டுகளுக்குமேலாக உருவேற் றப் பெற்று வரும் திருவேறிய திரு மணவயல் திருமணவயல் ஸ்ரீ மஹாகணபதி ஆலயத்தில் நடைபெறுகின்ற 100 வது சங்கட ஹர சதுரத்தி திருவாசக முற்றோதலில் அனைவரும் கலந்து கொள்வோம். அரிதினும் அரிதான இத்தனிச் சிறப்பு மிக்க ஆலயத்தின் பேரரு ளிற்கும் ஆனைமுகத்தானின் பேரருளி ற்கும் ஆளாக விழைவோம்.
---- நலந்தா ஜெம்புலிங்கம், தேவகோட்டை 27.12.2023
No comments:
Post a Comment