Tuesday 30 January 2018

மலையளவு உயர்வு கடுகளவு பாசாங்கு




  2018 ஜனவரி 19ஆம் தேதி தமிழகத்தில் பேருந்துக் கட்டணங்கள் மலையளவு உயர்த்தப்பட்டன.  அதற்கு எதிர்ப்பு வலிமை பெற்றபோது, ஜனவரி 28 ஆம் தேதி கட்டண உயர்வைக் குறைப்பதாகப் பாசங்கு செய்ய கடுகளவு குறைத்துள்ளார்கள்..

             
            கட்டணங்கள் உயர்த்தப்படும் போது சதவிகிதக் கணக்கில் அதாவது 55 முதல் 63 சதவிகிதம் வரை உயர்த்தினார்கள்..  குறைக்கப்படும் போது காசுக் கணக்கில் தான் குறைத்தார்கள்.  

           பேருந்துக் கட்டணம் 2011 இல் நான்கு வகைகளில்  கிலோ மீட்டருக்கு  முறையே  42 காசு 56 காசு 60 காசு 70 காசு என நிர்ணயிக்கப்பட்டன. 2018 இல் வகைப்பாடுகளிலும் மாற்றம் செய்துள்ளார்கள்..  இப்போது ஐந்து வகைகளில் கட்டணங்கள் முறையே கிலோ மீட்டருக்கு 60 காசு 80 காசு 90 காசு 110 காசு 140 காசு 170 காசு என  நிர்ணயித்துள்ளார்கள்.
  
            இந்தக் கட்டண உயர்வு ஒரு புறமிருக்க கட்டண விதிக்கப்படும் முறையிலும் இரு ஊர்களுக்கிடையேயான தொலைவுகளைக் கணக்கிடுவதிலும் அரசு தான் வகுத்த வரன் முறைகளையும் கூட அரசே வெளிப்படையாக மீறிவருகிறது.

              2011 ஆம் ஆண்டிலேயே முதல் வகைப் பேருந்துக்கு மூன்றாம் நிலைக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.  மதுரைக்கும் தேவகோட்டைக்குமான தொலைவு 100 கி.மீ. எனக் கணக்கிட்டு (ஆனால் தொலைவு 95 கி.மீ தான்)  கட்டணம் ரூபாய்  60 வசூலிக்கப்பட்டது.  இது  ஒரு கி.மீ-க்கு 60 காசு கட்டணமிட நிர்ணயிக்கப்பட்ட மூன்றாம் நிலைக் கட்டண விகிதம்.  பேருந்தோ ஒரு கி.மீ-க்கு 42 காசு கட்டணம் விதிக்கப்பட வேண்டிய முதல் நிலைப் பேருந்து தான்.  மேலும் மருந்துக் கூட குறைந்த கட்டணப் பேருந்துகள் விடப்படவில்லை.  

          2018 ஆம் ஆண்டு கட்டண உயர்வில் மதுரை தேவகோட்டை கட்டணம் முதலில் 88  ரூபாய்  என வசூலிக்கப்பட்டது.   இப்போது 82  ரூபாயாக ஆக்கப்பட்டுள்ளது.

            இப்போதும் 2018 கட்டண உயர்வில் புறநகர் (மோபசல்) குறைந்த பட்சக் கட்டணத்தை  5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக உயர்த்தியுளளதாக அறிவிக்கிறார்கள்.  ஆனால் 2011 யிருந்தே 7 ரூபாய் தான் வசூலிக்கிறார்கள்.  2018  கட்டண உயர்வுக்குப் பிறகு குறைந்த பட்சக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கிறார்கள்.  நகர் பேருந்துகளிலும் அறிவிப்பைவிடக் கூடுதலாவே வசூலிக்கிறார்கள்.

          பேருந்து வகைகளில் கட்டண விகதங்களை மீறுவதைப் போல தொலைவு கணக்கிடுவதிலும் மீறல்கள் உள்ளன.   இவையெல்லாம் அரசியல்வாதிகள் அதிகாரிகள் செய்யும் ஊழல் லஞ்ச வேட்டை கமிஷன் வெட்டல் போன்றவற்றை எல்லாம் மிஞ்சும் அரசே அரசு முத்திரையோடு செய்யும்  சுரண்டல்.

         பேருந்துக் கட்டணங்கள் மற்ற மாநிலங்களைவிடக் குறைவு என்ற அட்டவணைகள் போடுகிறார்கள். 

        அந்தந்த வகைப் பேருந்துக்கு அந்தந்த வகைக் கட்டணம் நிர்ணயித்து, தொலை கணக்கீடும் சரியாக இருந்தால் : 

            தேவகோட்டையிலிருந்து மதுரைக்கு 95 கிலோ மீட்டருக்கு சாதாரணப் பேருந்தில் 60 காசு விகிதம்  57 ரூபாய் தான் கட்டணமாகும்.  2011 கட்டணத்தின் பேரிலேயே இத்தனை ஆண்டுகளாக  60 ரூபாய் கட்டணம் கொடுத்துக் கொண்டிருந்தோம் (தனியார் பேருந்தில் 45 ரூபாய் தான்)

            ஆகவே புதிய கட்டண உயர்வை திரும்பப் பெறச் சொல்லியோ குறைக்க்ச் சொல்லியோ போராட வேண்டாம்.

             புதிய பேருந்துக் கட்டணங்களை உள்ளது உள்ளபடி அமல்படுத்தினாலேயே நாம் பயனடைவோம், ஆகவே முதலில் புதிய பேருந்துக் கட்டணங்களை முறையாக அமல்படுத்தப் போராடுவோம்.

            மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் செயலர் திரு பொன் ராஜ் போக்குவரத்துத் துறையில் 2011 ஆம் ஆண்டு கட்டணப் படியே லாபம் இருக்கிறது என்கிறார்.  அவர் கணக்கு படி போக்குவரத்துத் துறையை 2018 ஆம் ஆண்டுக் கட்டணத்தில் நடத்தினால் தமிழ்நாடு அரசு உலக மகா பணக்கார அரசாகி டாஸ்மேக்கை கூட ,மூடலாம் போலிருக்கிறதே. 

                                              -- நலந்தா செம்புலிங்கம்
                                                                               30.01.2018


Wednesday 24 January 2018

இந்தக் கனவு மெய்ப்படும்











இந்தக் கனவு மெய்ப்படும்!!

                  கலாம் என் கனவில் வந்தார், உங்களுக்கு பிடித்த ஊர் எது எனக் கேட்டேன். இராமேஸ்வரத்தைச் சொல்லுவார், அப்படிச் சொன்னால் தும்பாவை (விண்கல ஆய்வகம்) விடப் பிடித்த ஊரா? என மடக்கலாம் என்றிருந்தேன்.  அவர்  "எனக்குப் பிடித்த ஊர் காரைக்குடி தான்" என என்னை மடக்கிவிட்டார். நான் அசரவில்லை. ஏன் காரைக்குடி எனக் கேட்டேன். அங்கு தான் கலாம் வகுப்பறை இருக்கிறது என்றார்.  ஆம் காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் கலாம் வகுப்பறை இருக்கிறது, ஆனால் காரைக்குடி தான் உங்களுக்கு பிடித்த ஊர் என்பதற்கு வலுவான ஆதாரம் வேண்டும் எனக் கறராகச் சொல்லிவிட்டேன். அவர் ஆதாரங்களைப் பட்டியலிட்டுவிட்டார். முதலில் (07.11.2017) இந்தியா 2020 மாணவர்களுக்காக எளிமைப்படுத்தி தமிழாக்கம் செய்த எழுத்தாளர் கமலவேலனை அனுப்பினேன். பிறகு (20.01.2018) அக்னிசிறகுகள் விற்பனையில் சாதனை படைத்த "விஜயா" வேலாயுத்தை அனுப்பினேன். நேற்று (23.01.2018) அக்னிசிறகுகளை தமிழாக்கம் செய்த மு. சிவலிங்கத்தையும் அனுப்பிவிட்டேன். இதெல்லாம் சரி 


                 


தான் நீங்கள் எப்போது வருவீர்கள் எனக் கேட்டேன். "நிச்சியமாக வருவேன், காரைக்குடியில் பிறந்து கார்த்திகேயன் பள்ளிக்கு மாணவனாக வருவேன்" என்றார். இந்தக் கனவு நிச்சியம் மெய்ப்படும்.  நலந்தா செம்புலிங்கம். 24.01.18





Sunday 21 January 2018

கலாம் பிள்ளைகள்

ஒரு தாய் தன் பிள்ளையைத் திறமையான பிள்ளையாக வளர்க்கிறார்.  அவர்கள் வீட்டுக்கு வந்த விருந்தினர், இந்தப் பிள்ளை இன்னொரு வீட்டின் பிள்ளை என்று சொன்னால் அந்தத் தாய்க்கு எப்படி இருக்கும்? நேற்று காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் அது தான் நடந்தது

ஆடிப் பாடி  பலூன் விட்டு
புதிய கல்வியாண்டை வரவேற்பாா்கள் !
மழை ஓய்ந்த பிறகு 
மாணவா்களோடு ஆசாியா்களும்
காகிதக் கப்பல் விடுவாா்கள் !!
ஆசிாியா்கள் -- மாணவா்கள்
அன்னையா் -- பிள்ளைகளாய்
அவதாரம் எடுப்பாா்கள் !!       
         
            
           .
             
                     காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில்  ஆசிரியை லெட்சுமி தம் மாணவர் நெஞ்சங்களில் அப்துல் கலாமை விதைத்திட வேண்டுமென்பதில் மிகவும் முனைப்பாகவுள்ளார்,  கலாமின் வரலாறு,  கதைகள் கவிதைகள் படங்கள் பொன்மொழிகள் எனப்பல வகையாலும் கலாமை மாணவர்களிடம் பதியவைக்கிறார்.  இவருடைய வகுப்பறையின் பெயரே கலாம் வகுப்பறை தான்.  இந்தத் தகவலை அக்னிசிறகுகள் நுால் வெளியீட்டு விழாவில் (1999) முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டவரும் அந்நுால் விற்பனையில் சாதனை புரிந்து அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பட்டவருமான கோவை விஜயா பதிப்பக அதிபர் திரு மு வேலாயுதனார் அவர்களிடம் வெள்ளிக் கிழமை தற்செயலாகப் பேசும் போது சொன்னேன்.  உடனே அவர் பரவசமடைந்து நான் மேலுாரில் தான் நாளை அந்தப் பள்ளிக்குப் போய் பார்ப்போம் என்றார்.
நானும் சரி என்று சொல்லிவிட்டேன்.  பிறகு தான் இந்த சனிக்கிழமை விடுமுறை நாள் என்று தெரிந்தது, எனினும் வகுப்பாசிரியை லெட்சுமி அவர்களும் தலைமை ஆசிரியை ஸ்வேதா அவர்களும் கலாம் வகுப்பறை மாணவர்களுக்கு தகவல் கொடுத்துப் பெரும்பாலான மாணவர்களை வரவழைத்துவிட்டார்கள்.  


                    இந்த சந்திப்பில் விஜயா வேலாயுதன் அவர்களும் பேராசிரியர் பழனி ராகுலதாசன் அவர்களும் அந்தக் கலாம் வகுப்பறை மாணவர்களை கலாம் பிள்ளைகள் என்று பிரகடனப் படுத்திவிட்டார்கள். ஒப்புதல் கோராமல் நிறைவேற்றப்பட்ட சுவீகாரத்தில் அந்தத் தாய் ஆசிரியர்களும் நெகிழ்ந்து போனார்கள்.


Saturday 13 January 2018

என் இனிய தமிழ் மக்களே !

             நானும் பாரதிராஜாவின் ரசிகன் தான்.  ஆனால், மன்றத்தில் சேராத போட்டோ எடுத்துக் கொள்ளவோ ஆட்டோகிராப் வாங்கவோ தவிக்காத கலைரசிகன். 


            பாரதிராஜா தமிழ் திரையுலகை ஒரு படி உயர்த்தியவர் என்ற பறைசாற்றியவன் தான். பாலச்சந்தரையும் ஸ்ரீதரையும் விஞ்சிய தமிழன் பாரதிராஜா எனப் பெருமிதம் அடைந்தவன் தான்.  அது, மனிதனை அவனது தாய்மொழி வழியாக இனம் காணக் கூடாது சாதியின் வழியாகத் தான்  இனம் காணவேண்டும் என்ற கோட்பாட்டடிற்கு உடன்பட்ட காலம். 
          
           அந்தக் கோட்பாட்டிலிருந்து விடுபட்ட பிறகும் பாரதிராஜாவே எனக்கு சிறந்த இயக்குனராகத் திகழ்ந்தார்.  இதனால் அவரை ஒரு தமிழன் என்பதற்காக மட்டுமல்லாது சிறந்த இயக்குனர்  என்பதற்காக ரசிகப்பதாகவும் உணர்ந்தேன். இந்த பரிணாம வளர்ச்சி தான் பாரதிராஜாவிற்கும் மிகப் பெரிய வெற்றி எனவும் கருதுகிறேன்.


        பாரதி ராஜா, அவரை அவரது படைப்புகள் வழியாகப் பார்த்துப் பாராட்டிய ஒரு  ரசிகனின் மனதில் தீயினால் சுட்ட வடுவை ஏற்படுத்திவிட்டார்.

வைரமுத்து அவர்களுக்கு இது முதல் சர்ச்சை அல்ல.  வெளிப்படையாக சுயசரிதம் எழுதிய  கவிஞர் கண்ணதாசனின் தனிவாழ்க்கையைப் பற்றி அவரது காலமாகி பல்லாண்டு கழித்து கண்ணதாசனுக்காக எடுக்கப்படும் விழாக்களில் பேசி சுகம் கண்டவர் தான்.  தமிழிற்குச் சோறு போடுவதாக பேசியவர் தான்.


இந்த சர்ச்சைக்குரிய வைரமுத்துவின் பேச்சுக்கு கட்டுரைக்கு தளம் கொடுத்த தினமணியே வருத்தம் தெரிவித்த பிறகு வைரமுத்துக்காக  வைரமுத்துவே சப்பைக்கட்டு கட்டினாலும் எடுபடாது.



பாரதிராஜா, அவருடைய கரகரப்பான முன்னுரை பின்னுரைகளுக்காக திரையரங்குகளுக்கு முன் சென்று பின் எழுந்த  ஒரு ரசிகனின் மனதில் தீயினால் சுட்ட வடுவை ஏற்படுத்திவிட்டார்.  அவர் புதிதாகப் படம் எடுக்கப் போகிறாரா என்பது தெரியவில்லை ஆனால் பழைய படங்களைக் கூட பழைய மாதிரி ரசிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துவிட்டது.

             மற்றொரு புறம் நான் ஒரு சைவன் தான், இந்து என்பது அரசு ஆவணங்களுக்கு மட்டுமே என்ற என்னுடைய நிலைப்பாட்டையும்  பாரதி ராஜாவும்  வைரமுத்துவும் கூட்டணி போட்டு தகர்த்துவிட்டார்கள்.  



Tuesday 2 January 2018

திருவள்ளுவராலாவது தமிழர்களைக் கடைத்தேற்ற முடியுமா?


                 





                 சொந்தத் தொழில் செய்வோருக்கு , மாதப் பிறப்பு என்பது   செலவு ஏடு குறுக்கே மறிக்கும் நாள்.   ஒவ்வொரு செலவு இனமாகத் தீர்த்து  ஐந்து தேதிக்குள்ளாவது அல்லது 10 தேதிக்குள்ளாவது மாதக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.  அதனால் எனக்கு நானே முதல் தேதியன்றே அழுத்தம் கொடுத்துக்   கொள்வேன்.  நேற்று, ஜனவரி முதல் நாள் அப்படி ஒரு அழுத்தம் கொடுத்துக் கொள்ள மறந்துவிட்டேன். இரவு தான் அடடா ஒரு நாளை வீணடித்து விட்டோமே என்ற நினைவே வந்தது.

         எல்லாம் HAPPY NEW YEAR திணிப்பினால் வந்த வினை.

        நான் திருவள்ளுவர் ஆண்டைக் கொண்டாடுவோம் என முகநுாலில் பதிவு வாயிலாக வேண்டுகோள் விடுத்தும் அதனைப் பாராட்டுவோரும் கூட எனக்கும்  HAPPY NEW YEAR சொன்னதை என்னவென்று சொல்ல? 

              திருக்குறளன்பர்களுள்ளும் எத்தனை பேர் திருவள்ளுவர் ஆண்டை முன்னிலைப்படுத்துகிறார்கள்?

           இந்தியை திணிக்க இன்றும்  சிலர் இருக்கிறார்கள், ஆங்கிலேய பழக்க வழக்கங்களை யார் திணிக்கிறார்கள்? நம்மைத் தவிர?

          ரஜினி அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? விவாதங்களையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்.  திருவள்ளுவராலாவது தமிழர்களைக் கடைத்தேற்ற முடியுமா?


                                            நலந்தா செம்புலிங்கம்
                                              02.01.2018 (திருவள்ளுவர் ஆண்டு 2047 மார்கழி 18)

Monday 1 January 2018

தென்னவன்: கற்பித்தலில் கண்ணதாசன்




       



            நீங்கள் கவிதைகளை விரும்பிப் படித்திருப்பீர்கள்   லயித்து    எழுதியிருப்பீர்கள்.  கவிதைகளை ரசிப்பவர்களைப் பார்த்திருப்பீர்கள்.  கவிதை எழுதுபவர்களையும் பார்த்திருப்பீர்கள்.


       
  ஒரு பள்ளியையே கவிதையாக நடத்துபவரைப் பார்த்திருக்கிறீர்களா?  மதுரையின் வாசலாக இருக்கும் யானை மலையின் அடிவாரத்தில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற ஊராட்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னவனைப் பாருங்கள். 

       தென்னவனைப் உங்களுக்கு எப்படிக் காட்டுவது?  அவருடைய சொற்களிலேயே காட்டுகிறேன். இதோ அவருடைய புத்தாண்டுச் செய்தி (அவருடைய முக நுால் பதிவு)


'பயணங்கள் முடிவதில்லை'


                 வாழ்க்கையிலும் வகுப்பறையிலும் பல மாற்றங்கள் முன்னேற்றங்களுக்கு காரணமாக எம் குழந்தைகளே இருக்கின்றனர். சின்ன சின்ன முயற்சிகள் பலமான மாற்றங்களுக்கு காரணமாக இருக்கின்றன. குழந்தைகளின் தன்னலமில்லாத கேள்விகள் நம்மை மடைமாற்றம் செய்கின்றன. காலுக்கடியில் குட்டிப்பூனை போலிருந்த மகாலட்சுமி, ஒத்தக்கடை பள்ளியே தனக்குத்தான் சொந்தம் என எண்ணிய கனிஷா, தன் கணவர் இறந்த நிலையிலும் சொந்த பந்தங்கள் இல்லாத நிலையிலும் ஒத்தக்கடை ஆசிரியர்களுக்காக ஒத்தக்கடையில் தங்கி இருந்து படிக்க வைக்கும் மாசானம் என்ற மாணவனின் தாயார், பத்து லட்சம் மதிப்பிலான தகவல் தொழில் நுட்ப வகுப்பறை உருவாக காரணமான தமிழ்ஜெகன் என்னும் மாணவன், நடனம் ஆட கால் சுடுது மேடை வேணும் னு கேட்ட ரூபினா, சுகாதாரமான கழிப்பறைக்கு காரணமான பாத்திமா ரோஜா, தினம் தினம் என் பாதையை செப்பனிட்டு கொண்டிருக்கும் 500 குழந்தைகள் அனைவரையும் எண்ணிப் பார்க்கிறேன். ஓராண்டு ஓடியது. பயணிக்கிறேன் குழந்தைகளோடு, பயணங்கள் முடிவதில்லை. குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவும் பாதுகாப்பான நம்பிக்கையான எதிர்காலத்தினை ஏற்படுத்த என்னோடு பயணிக்கும் சக பயணிகளான ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் நினைத்து பார்க்கிறேன். முதல் வகுப்பில் சேர்ந்துள்ள சுபத்ரா முதல் இந்த ஆண்டு பள்ளியை விட்டு மாறப்போகும் ஹரீஷ் வரை அனைவரின் அன்பையும் பெற முயற்சிக்கிறேன். அன்பை மட்டும் அன்பைத் தவிர வேறு எது கொடுத்தும் வாங்க முடியாது என்பதால் அதனையே அடிப்படையாகக் கொண்டு கொடுக்க முயற்சிக்கிறேன். பல நேரங்களில் என்னுடைய மேதாவித்தனம் மேலோங்கும் போதெல்லாம் 'உனக்கு ஒன்னும் தெரியாது' என எனக்கு புரிய வைக்கும் எம் குழந்தைகளை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். 2018 ஆம் ஆண்டிலாவது குழந்தைகளின் மூளையை நோக்கி பயணிக்காமல் இதயத்தை நோக்கி பயணிக்க விரும்புகிறேன்.


அப்புறம்
உங்களுக்கும்
"எனது பேரன்பும் ப்ரியங்களும்"
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.