Monday, 5 March 2018

கும்பகர்ணன் தோற்றுவிட்டான் ! பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் !!

            


கும்பகர்ணன் தோற்றுவிட்டான் !  பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் !!




  எந்நாட்டினருக்கும் அயல்நாட்டு மோகம் கொஞ்சமாவது இருக்கும்.  உலக அரங்கில் மிக அதிகமானோரைச்  சுண்டி இழுக்கும் அயல் நாடு அமெரிக்கா தான்.  அது ஒரு வல்லரசு, இராணுவ வலிமையினால் மட்டுமல்ல, அறிவியல் சாதனைகள் நேர்த்தியான நிர்வாகம்  எனப் பல துறைகளிலும் அமெரிக்க ஒரு வல்லரசு தான்.
              அந்த நாட்டு வங்கிகளின் இந்தியக் கிளைகளில் கணக்கு வைத்திருப்பதே ஒரு பெரிய பெருமித அடையாளமாகும்.   அமெரிக்க வங்கிகளும் பெரிய வல்லமை நேர்மை குணாதியங்களையல்லாம்  சூடியிருந்தன, எல்லாம் 2008 வரை தான்.  SUB PRIME CRISIS எனும் ஊழல் சுனாமி   அமெரிக்க வங்கித் துறையை அடித்து நொறுக்கி பிரட்டி உருட்டி சின்னாபின்னமாக்கிவிட்டது.  அந்தச் சின்னாபின்ன நச்சுத் துகள்கள் காற்றில் கரைந்து உலக வங்கித் தொழிலையே படுத்த படுக்கையாக்கிவிட்டது.  எனினும் அந்த சுனாமியோ நச்சுக் காற்றோ தீண்ட முடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்ந்த நாடு இந்தியா.   

               வங்கித் தொழிலில் இந்தியா ஒரு இரும்புக் கோட்டையாகத் திகழ வழி வகுப்பது ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்கள்.  ஆனால் இந்த இரும்புக் கோட்டையும் அவ்வப்போது கரையான்களால் அரிக்கப்படும்.


                    இரும்பைக் கரையான் அரிக்குமா? என எதிர்கேள்வி கேட்பீர்கள். கரையான்களுக்கு இரையாக்குவதற்காகவே சில  ஐந்தாம் படையினர் இரும்புத் தூண்களை அகற்றிவிட்டு மரத் தூண்களால் முட்டுக்கொடுப்பார்கள்

Nirav Modi
                 அதனால் தான் நியாயமாக  யாரும் எளிதில் ஏமாற்ற   முடியாத இந்திய வங்கிகளுள்ளும் ஏதேனும் ஒரு இந்திய வங்கியாவது பத்தாண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது எக்கச்சக்கமாக இழக்கும். அவற்றிற்கு காரணமான துறை ரீதயான குற்றங்குறைகளை ஆராய்வதைவிட அரசியல் காரணங்களை மோப்பம் பிடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்துகிறோம்.  

                அண்மையில் அம்பலாமாகியுள்ள  பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழலிற்கு காரணமான  நிரவ் மோடியின் உடம்பில்  காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறதா? பாரதிய ஜனதா ரத்தம் ஓடுகிறதா என்ற விவாதம் காரசாரமாக நடந்துவருகிறது.  இந்த விவாதம் ஒரு திசை திருப்பும் முயற்சி என்றே கருதுகிறேன்.


     1990 --92 ஆண்டுகளில் நடைபெற்ற மேத்தா ஊழலும் 2002--2005 ஆண்டுகளில் நடைபெற்ற ரூபால் பன்சால் ஊழலும் 2018 புத்தாண்டு பரிசாக அம்பலமாகியுள்ள நிரவ் மோடி ஊழலும் ஒரே வகை முறைகேடுகளே ஆகும்.  இந்த ஊழல்களத்தில் மோசடிப் பேர்வழிகள் வெற்றிபெற்றதாகக் கூடச் சொல்ல முடியாது, வங்கிகள் தேடிப் போய் சரணடைந்ததாகவே தோன்றுகிறது. 

Harshad Mehta
                 பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிராடி இல்லக்  கிளை   (BRADY HOUSE BRANCH MUMBAI) தனது வாடிக்கையாளர் நிரவ் மோடி குழுமத்திற்கு Letter of Undertaking (LOU) ஆவணத்தைக் கொடுக்கிறது.  இந்த ஆவணம் ஒரு உத்தரவாத உறுதி மொழி பத்திரம் ஆகும்.  இந்த ஆவணத்தை வைத்து சில இந்திய வங்கிகளின் வெளிநாட்டுக் கிளைகளில் நிரவ் மோடி குழுமம் கடன் பெற்றிருக்கிறது.  அந்தக் கடன்களை நிரவ் மோடி குழுமம் தீர்க்கவில்லை.  அவற்றை தீர்க்க வேண்டிய பொறுப்பு பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடமையாகிவிட்டது, . இந்த எட்டு ஆண்டு காலகட்டத்தில் நடந்த ஏராளமான பரிவர்த்தனைகளில் கூட்டுத் தொகை அதிகமில்லை பன்னிரெண்டாம் கோடி ருபாய் ஆகும்

                இந்த  ருபாய் 12 ஆயிரம் கோடியும்  ஒரே நாளில் ஒரே பரிவர்த்தனையில் வாரி வழங்கப்படவில்லை.  இந்த முறைகேடுகள்  சர்வ சுதந்திரமாக  8 ஆண்டுகள் அடை மழை போல தொடர்ந்து அரங்கேறியுள்ளன.

                 ஒரு சாமானியன் 12 ஆயிரம் ரூபாய் நகைக் கடன் கேட்டால் எத்தனை விதிமுறைகள் விதிக்கபடுகின்றன? 
Brady House Branch
      இந்த 12 ஆயிரம் கோடி கடனுக்கு ஒரே ஒரு கிளையின் ஒப்புதல் மட்டும் போதுமா?     இவ்வளவு பெரிய கடனுக்கு உள்ள படி எத்தனை அடுக்கு அதிகார நிலைகளில் (LAYERS OF AUTHORITY) ஒப்புதல் பெற வேண்டியிருக்கும்?  அத்தனை அடுக்கு அதிகார நிலையினரும் (LAYERS OF AUTHORITY) உறங்கிக் கொண்டிருந்தனரா? உறங்குவதைப் போல நடித்துக் கொண்டிருந்தனரா?

                  பாவம் கும்பகர்ணன் பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் தோற்றுவிட்டான்.




Thursday, 1 March 2018

கசப்புச் சலிப்பிற்கு ஒரு இனிப்பு மாற்று

  தமிழ் மொழியின் பால் அயல் மொழியினரெல்லாம் காதல் கொள்ளும் போது தமிழர்களுக்கு தாய்மொழிப் பற்றாகவும் அது இரட்டிப்பாக இருக்க வேண்டுமே!  ஆனால் உண்மை கொஞ்சம் கசக்கும், அல்ல, அல்ல அதிகமாகவே கசக்கும்.  

         இந்தக் கசப்புச் சலிப்பிற்கு ஒரு இனிப்பு மாற்று காரைக்குடியில் இருக்கிறது.
 
          நமக்குத் தாய் மொழிப் பற்று இல்லாமல் இல்லை ஆனாலும் சில வேளைகளில் உயர்கல்வி வேலை வாய்ப்பு என ஏதோரு சாக்கிட்டு நீர்த்துப் போய்விடுகிறது.
 
            இந்த வடிகட்டியைத் தாண்டி நிற்கும் தமிழ்ப் பற்று ஒரு அரசியல் வாடையாகக் கரைந்துவிடுகிறது அல்லது இறையுணர்வு என்ற வட்டத்திற்குள் மையம் கொண்டுவிடுகிறது.

              இந்த வடிகட்டியையும் தாண்டி ஒருவருக்கு தமிழ்ப பற்று நிலைத்து நின்று அவர் நூற்றுக்கு நூறு தூய தமிழ் தொண்டாற்றி வந்தால் அது அதிசயமாக கருதப்படும்.  அந்த அதிசயம் அவருடைய வாரிசுகளால் தொடரப்படுமா என்பது கேள்விக் குறியாக இருக்கும்.  ஆனால் அப்படி ஒரு தமிழ்ப்பணி  காரைக்குடியில்  

              மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
               என்னோற்றான் கொல்எனும் சொல் (குறள் 70)

என ஒரு நற்றந்தையின் தமிழ்ப் பணியை பெரி. பெரியகருப்பன் மற்றும் பெரி. வீரப்பன் எனும் அவர்தம் மைந்தர்களால் தொடர்கிறது

                  1967 ஆம் ஆண்டு தமிழ்க் காதலர் இராம. பெரியகருப்பன் செட்டியார் அவர்களால் தொடங்கப்பட்ட இராமசாமி தமிழ்க் கல்லூரி இன்றும்  அவருடைய மைந்தர்கள் பெரி. பெரியகருப்பன் மற்றும் பெரி. வீரப்பன் நிர்வாகத்தில்  சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.   இன்று பல தமிழ் கல்லூரிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரிகளாக மாறினாலும் இக்கல்லூரி தனித் தமிழ்க கல்லூரியாகவே தொடர்கிறது.  

பெரி. பெரியகருப்பன் கெளரவிக்கப்படுகிறார்
பெரி. வீரப்பன் கெளரவிக்கப்படுகிறார்
                    இக்கல்லூரியின் ஆண்டு விழா 3, 4 நாள் விழாவாக நடைபெறும்.  அவ்விழாக்களில் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் குடும்ப விழாப் போல வந்து கலந்து கொள்கிறார்கள். இந்த ஆண்டு 51 ஆவது ஆண்டு விழா பிப்ரவரி 27 முதல் மார்ச்சு 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு ஒரு சிறப்பு மலர் வெளியிடுகின்றனர்.
                         
                   காரைக்குடியில் தமிழ்த் தாய்க்கு ஒரு கோவில் மட்டுமில்லை வளரும் தலைமுறைகளை அவள்பால் ஆற்றுப்படுத்த ஒரு பாடசாலையும் இருக்கிறது.
                      






Wednesday, 21 February 2018

காரைக்குடியையே பார்க்க முடிந்தது!


எல்லோரும் வைக்க மறந்த கோரிக்கை
                          //////  ****  //////  *****  /////

           
 ஒரு பள்ளி ஆண்டுவிழாவிற்கு எவ்வளவு கூட்டம் வரும்? பரிசு பெரும் மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளில் பங்குபெறும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களின் நண்பர்கள் குடும்பத்தினர், தலைமை ஏற்கும் பிரமுகரின் கட்சிக்கார்கள் அல்லது   அலுவலர்கள்.

            காரைக்குடியையே பார்க்க முடிந்தது. 

 ஆனால் இராமநாதன் செட்டியார் பள்ளி விழாவில்  பள்ளிக்கு நேரடியாகத் தொடர்புடைய பெற்றோர்கள் ஆசிரியர்களின் நண்பர்கள் மட்டுமல்ல அரிமா, சுழல் கழகம் தொழில் வணிகக் கழகம் நடையாளர் கழகம் எனப் பலதரப்பினரும் வந்திருந்தனர் 


              கலை நிகழ்ச்சிகளில்  தொழில்கலைஞர்களின் நேர்த்தியைக் காண முடிந்தது.  ஆங்கில நாடகம் நல்ல கருத்தை எளிமையாகவும் திருத்தமாகவும் சொன்னது. 5 அல்லது 6 காட்சிகள் இருந்தும் காட்சிமாற்றங்கள் பிசிறில்லாமலும் மாணவர்கள் வசனங்களில் தடுமாறுமலும்  திறமையை நிலைநாட்டினர்.

           

 கலை நிகழ்ச்சிக்கு முந்திய விருது அளிப்பு வாழ்த்து பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் துணை வேந்தர் கல்வித் துறை அதிகாரிகள் வாழ்த்துரை வழங்கினர்.  கலைநிகழ்ச்சிகளுக்கிடையிலும் விருதளிப்பு வாழ்த்துரைகள் தொடர்ந்தன.  விழாவிற்கு வருகை தந்த பள்ளி நலம்விரும்பிகளை எல்லாம் கெளரவித்து அவர்கள் கைகளால் மாணவர்களுக்கு விருதுகளை அளித்தனர்.   ஆக மொத்தம் நான் இருந்த 7 மணிவரை 20 வாழ்த்துரைகளுக்குக் குறைவில்லை.  அந்த 20 பிரமுகர்களுக்குள்ளும் பள்ளியைப் பாராட்டுவதில் கடுமையான போட்டி.  அத்தோடு சட்டமன்ற உறுப்பினரிடம் நேரடியாகவும் அவர் முலமாக அரசிற்கு பலர் பல கோரிக்கை வைத்தார்கள்.  முக்கிய பள்ளிக்கு கூடுதலாக இடம் வேண்டும் கட்டிடம் வேண்டும் ஆசிரியர்கள் வேண்டும் என்ற கோணத்தில் கோரிக்கைகள் அமைந்தன.  எல்லோரும் இன்னொரு முக்கிய கோரிக்கையை மறந்துவிட்டார்கள், அதை நான் வைக்கிறேன்.  இந்த விழா மிகப் பிரமாண்டமான L.CT.PL அரங்கில் தான் நடைபெற்றது, ஆனால் இந்தத் திருவிழாக் கூட்டத்திற்கு அதுவும் ஈடுகொடுக்க முடியவில்லையே! விருந்தினர்களை உட்கார வைப்பதற்காக மாணவர்களைக் கிளப்பிவிட்டார்களே! ஆகவே அடுத்த ஆண்டுக்குள் L.CT.PLஅரங்கினை இரண்டு மடங்காவது விரிவாக்க வேண்டும்





O






Tuesday, 30 January 2018

மலையளவு உயர்வு கடுகளவு பாசாங்கு




  2018 ஜனவரி 19ஆம் தேதி தமிழகத்தில் பேருந்துக் கட்டணங்கள் மலையளவு உயர்த்தப்பட்டன.  அதற்கு எதிர்ப்பு வலிமை பெற்றபோது, ஜனவரி 28 ஆம் தேதி கட்டண உயர்வைக் குறைப்பதாகப் பாசங்கு செய்ய கடுகளவு குறைத்துள்ளார்கள்..

             
            கட்டணங்கள் உயர்த்தப்படும் போது சதவிகிதக் கணக்கில் அதாவது 55 முதல் 63 சதவிகிதம் வரை உயர்த்தினார்கள்..  குறைக்கப்படும் போது காசுக் கணக்கில் தான் குறைத்தார்கள்.  

           பேருந்துக் கட்டணம் 2011 இல் நான்கு வகைகளில்  கிலோ மீட்டருக்கு  முறையே  42 காசு 56 காசு 60 காசு 70 காசு என நிர்ணயிக்கப்பட்டன. 2018 இல் வகைப்பாடுகளிலும் மாற்றம் செய்துள்ளார்கள்..  இப்போது ஐந்து வகைகளில் கட்டணங்கள் முறையே கிலோ மீட்டருக்கு 60 காசு 80 காசு 90 காசு 110 காசு 140 காசு 170 காசு என  நிர்ணயித்துள்ளார்கள்.
  
            இந்தக் கட்டண உயர்வு ஒரு புறமிருக்க கட்டண விதிக்கப்படும் முறையிலும் இரு ஊர்களுக்கிடையேயான தொலைவுகளைக் கணக்கிடுவதிலும் அரசு தான் வகுத்த வரன் முறைகளையும் கூட அரசே வெளிப்படையாக மீறிவருகிறது.

              2011 ஆம் ஆண்டிலேயே முதல் வகைப் பேருந்துக்கு மூன்றாம் நிலைக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.  மதுரைக்கும் தேவகோட்டைக்குமான தொலைவு 100 கி.மீ. எனக் கணக்கிட்டு (ஆனால் தொலைவு 95 கி.மீ தான்)  கட்டணம் ரூபாய்  60 வசூலிக்கப்பட்டது.  இது  ஒரு கி.மீ-க்கு 60 காசு கட்டணமிட நிர்ணயிக்கப்பட்ட மூன்றாம் நிலைக் கட்டண விகிதம்.  பேருந்தோ ஒரு கி.மீ-க்கு 42 காசு கட்டணம் விதிக்கப்பட வேண்டிய முதல் நிலைப் பேருந்து தான்.  மேலும் மருந்துக் கூட குறைந்த கட்டணப் பேருந்துகள் விடப்படவில்லை.  

          2018 ஆம் ஆண்டு கட்டண உயர்வில் மதுரை தேவகோட்டை கட்டணம் முதலில் 88  ரூபாய்  என வசூலிக்கப்பட்டது.   இப்போது 82  ரூபாயாக ஆக்கப்பட்டுள்ளது.

            இப்போதும் 2018 கட்டண உயர்வில் புறநகர் (மோபசல்) குறைந்த பட்சக் கட்டணத்தை  5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக உயர்த்தியுளளதாக அறிவிக்கிறார்கள்.  ஆனால் 2011 யிருந்தே 7 ரூபாய் தான் வசூலிக்கிறார்கள்.  2018  கட்டண உயர்வுக்குப் பிறகு குறைந்த பட்சக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கிறார்கள்.  நகர் பேருந்துகளிலும் அறிவிப்பைவிடக் கூடுதலாவே வசூலிக்கிறார்கள்.

          பேருந்து வகைகளில் கட்டண விகதங்களை மீறுவதைப் போல தொலைவு கணக்கிடுவதிலும் மீறல்கள் உள்ளன.   இவையெல்லாம் அரசியல்வாதிகள் அதிகாரிகள் செய்யும் ஊழல் லஞ்ச வேட்டை கமிஷன் வெட்டல் போன்றவற்றை எல்லாம் மிஞ்சும் அரசே அரசு முத்திரையோடு செய்யும்  சுரண்டல்.

         பேருந்துக் கட்டணங்கள் மற்ற மாநிலங்களைவிடக் குறைவு என்ற அட்டவணைகள் போடுகிறார்கள். 

        அந்தந்த வகைப் பேருந்துக்கு அந்தந்த வகைக் கட்டணம் நிர்ணயித்து, தொலை கணக்கீடும் சரியாக இருந்தால் : 

            தேவகோட்டையிலிருந்து மதுரைக்கு 95 கிலோ மீட்டருக்கு சாதாரணப் பேருந்தில் 60 காசு விகிதம்  57 ரூபாய் தான் கட்டணமாகும்.  2011 கட்டணத்தின் பேரிலேயே இத்தனை ஆண்டுகளாக  60 ரூபாய் கட்டணம் கொடுத்துக் கொண்டிருந்தோம் (தனியார் பேருந்தில் 45 ரூபாய் தான்)

            ஆகவே புதிய கட்டண உயர்வை திரும்பப் பெறச் சொல்லியோ குறைக்க்ச் சொல்லியோ போராட வேண்டாம்.

             புதிய பேருந்துக் கட்டணங்களை உள்ளது உள்ளபடி அமல்படுத்தினாலேயே நாம் பயனடைவோம், ஆகவே முதலில் புதிய பேருந்துக் கட்டணங்களை முறையாக அமல்படுத்தப் போராடுவோம்.

            மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் செயலர் திரு பொன் ராஜ் போக்குவரத்துத் துறையில் 2011 ஆம் ஆண்டு கட்டணப் படியே லாபம் இருக்கிறது என்கிறார்.  அவர் கணக்கு படி போக்குவரத்துத் துறையை 2018 ஆம் ஆண்டுக் கட்டணத்தில் நடத்தினால் தமிழ்நாடு அரசு உலக மகா பணக்கார அரசாகி டாஸ்மேக்கை கூட ,மூடலாம் போலிருக்கிறதே. 

                                              -- நலந்தா செம்புலிங்கம்
                                                                               30.01.2018


Wednesday, 24 January 2018

இந்தக் கனவு மெய்ப்படும்











இந்தக் கனவு மெய்ப்படும்!!

                  கலாம் என் கனவில் வந்தார், உங்களுக்கு பிடித்த ஊர் எது எனக் கேட்டேன். இராமேஸ்வரத்தைச் சொல்லுவார், அப்படிச் சொன்னால் தும்பாவை (விண்கல ஆய்வகம்) விடப் பிடித்த ஊரா? என மடக்கலாம் என்றிருந்தேன்.  அவர்  "எனக்குப் பிடித்த ஊர் காரைக்குடி தான்" என என்னை மடக்கிவிட்டார். நான் அசரவில்லை. ஏன் காரைக்குடி எனக் கேட்டேன். அங்கு தான் கலாம் வகுப்பறை இருக்கிறது என்றார்.  ஆம் காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் கலாம் வகுப்பறை இருக்கிறது, ஆனால் காரைக்குடி தான் உங்களுக்கு பிடித்த ஊர் என்பதற்கு வலுவான ஆதாரம் வேண்டும் எனக் கறராகச் சொல்லிவிட்டேன். அவர் ஆதாரங்களைப் பட்டியலிட்டுவிட்டார். முதலில் (07.11.2017) இந்தியா 2020 மாணவர்களுக்காக எளிமைப்படுத்தி தமிழாக்கம் செய்த எழுத்தாளர் கமலவேலனை அனுப்பினேன். பிறகு (20.01.2018) அக்னிசிறகுகள் விற்பனையில் சாதனை படைத்த "விஜயா" வேலாயுத்தை அனுப்பினேன். நேற்று (23.01.2018) அக்னிசிறகுகளை தமிழாக்கம் செய்த மு. சிவலிங்கத்தையும் அனுப்பிவிட்டேன். இதெல்லாம் சரி 


                 


தான் நீங்கள் எப்போது வருவீர்கள் எனக் கேட்டேன். "நிச்சியமாக வருவேன், காரைக்குடியில் பிறந்து கார்த்திகேயன் பள்ளிக்கு மாணவனாக வருவேன்" என்றார். இந்தக் கனவு நிச்சியம் மெய்ப்படும்.  நலந்தா செம்புலிங்கம். 24.01.18





Sunday, 21 January 2018

கலாம் பிள்ளைகள்

ஒரு தாய் தன் பிள்ளையைத் திறமையான பிள்ளையாக வளர்க்கிறார்.  அவர்கள் வீட்டுக்கு வந்த விருந்தினர், இந்தப் பிள்ளை இன்னொரு வீட்டின் பிள்ளை என்று சொன்னால் அந்தத் தாய்க்கு எப்படி இருக்கும்? நேற்று காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் அது தான் நடந்தது

ஆடிப் பாடி  பலூன் விட்டு
புதிய கல்வியாண்டை வரவேற்பாா்கள் !
மழை ஓய்ந்த பிறகு 
மாணவா்களோடு ஆசாியா்களும்
காகிதக் கப்பல் விடுவாா்கள் !!
ஆசிாியா்கள் -- மாணவா்கள்
அன்னையா் -- பிள்ளைகளாய்
அவதாரம் எடுப்பாா்கள் !!       
         
            
           .
             
                     காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில்  ஆசிரியை லெட்சுமி தம் மாணவர் நெஞ்சங்களில் அப்துல் கலாமை விதைத்திட வேண்டுமென்பதில் மிகவும் முனைப்பாகவுள்ளார்,  கலாமின் வரலாறு,  கதைகள் கவிதைகள் படங்கள் பொன்மொழிகள் எனப்பல வகையாலும் கலாமை மாணவர்களிடம் பதியவைக்கிறார்.  இவருடைய வகுப்பறையின் பெயரே கலாம் வகுப்பறை தான்.  இந்தத் தகவலை அக்னிசிறகுகள் நுால் வெளியீட்டு விழாவில் (1999) முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டவரும் அந்நுால் விற்பனையில் சாதனை புரிந்து அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பட்டவருமான கோவை விஜயா பதிப்பக அதிபர் திரு மு வேலாயுதனார் அவர்களிடம் வெள்ளிக் கிழமை தற்செயலாகப் பேசும் போது சொன்னேன்.  உடனே அவர் பரவசமடைந்து நான் மேலுாரில் தான் நாளை அந்தப் பள்ளிக்குப் போய் பார்ப்போம் என்றார்.
நானும் சரி என்று சொல்லிவிட்டேன்.  பிறகு தான் இந்த சனிக்கிழமை விடுமுறை நாள் என்று தெரிந்தது, எனினும் வகுப்பாசிரியை லெட்சுமி அவர்களும் தலைமை ஆசிரியை ஸ்வேதா அவர்களும் கலாம் வகுப்பறை மாணவர்களுக்கு தகவல் கொடுத்துப் பெரும்பாலான மாணவர்களை வரவழைத்துவிட்டார்கள்.  


                    இந்த சந்திப்பில் விஜயா வேலாயுதன் அவர்களும் பேராசிரியர் பழனி ராகுலதாசன் அவர்களும் அந்தக் கலாம் வகுப்பறை மாணவர்களை கலாம் பிள்ளைகள் என்று பிரகடனப் படுத்திவிட்டார்கள். ஒப்புதல் கோராமல் நிறைவேற்றப்பட்ட சுவீகாரத்தில் அந்தத் தாய் ஆசிரியர்களும் நெகிழ்ந்து போனார்கள்.


Saturday, 13 January 2018

என் இனிய தமிழ் மக்களே !

             நானும் பாரதிராஜாவின் ரசிகன் தான்.  ஆனால், மன்றத்தில் சேராத போட்டோ எடுத்துக் கொள்ளவோ ஆட்டோகிராப் வாங்கவோ தவிக்காத கலைரசிகன். 


            பாரதிராஜா தமிழ் திரையுலகை ஒரு படி உயர்த்தியவர் என்ற பறைசாற்றியவன் தான். பாலச்சந்தரையும் ஸ்ரீதரையும் விஞ்சிய தமிழன் பாரதிராஜா எனப் பெருமிதம் அடைந்தவன் தான்.  அது, மனிதனை அவனது தாய்மொழி வழியாக இனம் காணக் கூடாது சாதியின் வழியாகத் தான்  இனம் காணவேண்டும் என்ற கோட்பாட்டடிற்கு உடன்பட்ட காலம். 
          
           அந்தக் கோட்பாட்டிலிருந்து விடுபட்ட பிறகும் பாரதிராஜாவே எனக்கு சிறந்த இயக்குனராகத் திகழ்ந்தார்.  இதனால் அவரை ஒரு தமிழன் என்பதற்காக மட்டுமல்லாது சிறந்த இயக்குனர்  என்பதற்காக ரசிகப்பதாகவும் உணர்ந்தேன். இந்த பரிணாம வளர்ச்சி தான் பாரதிராஜாவிற்கும் மிகப் பெரிய வெற்றி எனவும் கருதுகிறேன்.


        பாரதி ராஜா, அவரை அவரது படைப்புகள் வழியாகப் பார்த்துப் பாராட்டிய ஒரு  ரசிகனின் மனதில் தீயினால் சுட்ட வடுவை ஏற்படுத்திவிட்டார்.

வைரமுத்து அவர்களுக்கு இது முதல் சர்ச்சை அல்ல.  வெளிப்படையாக சுயசரிதம் எழுதிய  கவிஞர் கண்ணதாசனின் தனிவாழ்க்கையைப் பற்றி அவரது காலமாகி பல்லாண்டு கழித்து கண்ணதாசனுக்காக எடுக்கப்படும் விழாக்களில் பேசி சுகம் கண்டவர் தான்.  தமிழிற்குச் சோறு போடுவதாக பேசியவர் தான்.


இந்த சர்ச்சைக்குரிய வைரமுத்துவின் பேச்சுக்கு கட்டுரைக்கு தளம் கொடுத்த தினமணியே வருத்தம் தெரிவித்த பிறகு வைரமுத்துக்காக  வைரமுத்துவே சப்பைக்கட்டு கட்டினாலும் எடுபடாது.



பாரதிராஜா, அவருடைய கரகரப்பான முன்னுரை பின்னுரைகளுக்காக திரையரங்குகளுக்கு முன் சென்று பின் எழுந்த  ஒரு ரசிகனின் மனதில் தீயினால் சுட்ட வடுவை ஏற்படுத்திவிட்டார்.  அவர் புதிதாகப் படம் எடுக்கப் போகிறாரா என்பது தெரியவில்லை ஆனால் பழைய படங்களைக் கூட பழைய மாதிரி ரசிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துவிட்டது.

             மற்றொரு புறம் நான் ஒரு சைவன் தான், இந்து என்பது அரசு ஆவணங்களுக்கு மட்டுமே என்ற என்னுடைய நிலைப்பாட்டையும்  பாரதி ராஜாவும்  வைரமுத்துவும் கூட்டணி போட்டு தகர்த்துவிட்டார்கள்.  



Tuesday, 2 January 2018

திருவள்ளுவராலாவது தமிழர்களைக் கடைத்தேற்ற முடியுமா?


                 





                 சொந்தத் தொழில் செய்வோருக்கு , மாதப் பிறப்பு என்பது   செலவு ஏடு குறுக்கே மறிக்கும் நாள்.   ஒவ்வொரு செலவு இனமாகத் தீர்த்து  ஐந்து தேதிக்குள்ளாவது அல்லது 10 தேதிக்குள்ளாவது மாதக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.  அதனால் எனக்கு நானே முதல் தேதியன்றே அழுத்தம் கொடுத்துக்   கொள்வேன்.  நேற்று, ஜனவரி முதல் நாள் அப்படி ஒரு அழுத்தம் கொடுத்துக் கொள்ள மறந்துவிட்டேன். இரவு தான் அடடா ஒரு நாளை வீணடித்து விட்டோமே என்ற நினைவே வந்தது.

         எல்லாம் HAPPY NEW YEAR திணிப்பினால் வந்த வினை.

        நான் திருவள்ளுவர் ஆண்டைக் கொண்டாடுவோம் என முகநுாலில் பதிவு வாயிலாக வேண்டுகோள் விடுத்தும் அதனைப் பாராட்டுவோரும் கூட எனக்கும்  HAPPY NEW YEAR சொன்னதை என்னவென்று சொல்ல? 

              திருக்குறளன்பர்களுள்ளும் எத்தனை பேர் திருவள்ளுவர் ஆண்டை முன்னிலைப்படுத்துகிறார்கள்?

           இந்தியை திணிக்க இன்றும்  சிலர் இருக்கிறார்கள், ஆங்கிலேய பழக்க வழக்கங்களை யார் திணிக்கிறார்கள்? நம்மைத் தவிர?

          ரஜினி அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? விவாதங்களையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்.  திருவள்ளுவராலாவது தமிழர்களைக் கடைத்தேற்ற முடியுமா?


                                            நலந்தா செம்புலிங்கம்
                                              02.01.2018 (திருவள்ளுவர் ஆண்டு 2047 மார்கழி 18)

Monday, 1 January 2018

தென்னவன்: கற்பித்தலில் கண்ணதாசன்




       



            நீங்கள் கவிதைகளை விரும்பிப் படித்திருப்பீர்கள்   லயித்து    எழுதியிருப்பீர்கள்.  கவிதைகளை ரசிப்பவர்களைப் பார்த்திருப்பீர்கள்.  கவிதை எழுதுபவர்களையும் பார்த்திருப்பீர்கள்.


       
  ஒரு பள்ளியையே கவிதையாக நடத்துபவரைப் பார்த்திருக்கிறீர்களா?  மதுரையின் வாசலாக இருக்கும் யானை மலையின் அடிவாரத்தில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற ஊராட்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னவனைப் பாருங்கள். 

       தென்னவனைப் உங்களுக்கு எப்படிக் காட்டுவது?  அவருடைய சொற்களிலேயே காட்டுகிறேன். இதோ அவருடைய புத்தாண்டுச் செய்தி (அவருடைய முக நுால் பதிவு)


'பயணங்கள் முடிவதில்லை'


                 வாழ்க்கையிலும் வகுப்பறையிலும் பல மாற்றங்கள் முன்னேற்றங்களுக்கு காரணமாக எம் குழந்தைகளே இருக்கின்றனர். சின்ன சின்ன முயற்சிகள் பலமான மாற்றங்களுக்கு காரணமாக இருக்கின்றன. குழந்தைகளின் தன்னலமில்லாத கேள்விகள் நம்மை மடைமாற்றம் செய்கின்றன. காலுக்கடியில் குட்டிப்பூனை போலிருந்த மகாலட்சுமி, ஒத்தக்கடை பள்ளியே தனக்குத்தான் சொந்தம் என எண்ணிய கனிஷா, தன் கணவர் இறந்த நிலையிலும் சொந்த பந்தங்கள் இல்லாத நிலையிலும் ஒத்தக்கடை ஆசிரியர்களுக்காக ஒத்தக்கடையில் தங்கி இருந்து படிக்க வைக்கும் மாசானம் என்ற மாணவனின் தாயார், பத்து லட்சம் மதிப்பிலான தகவல் தொழில் நுட்ப வகுப்பறை உருவாக காரணமான தமிழ்ஜெகன் என்னும் மாணவன், நடனம் ஆட கால் சுடுது மேடை வேணும் னு கேட்ட ரூபினா, சுகாதாரமான கழிப்பறைக்கு காரணமான பாத்திமா ரோஜா, தினம் தினம் என் பாதையை செப்பனிட்டு கொண்டிருக்கும் 500 குழந்தைகள் அனைவரையும் எண்ணிப் பார்க்கிறேன். ஓராண்டு ஓடியது. பயணிக்கிறேன் குழந்தைகளோடு, பயணங்கள் முடிவதில்லை. குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவும் பாதுகாப்பான நம்பிக்கையான எதிர்காலத்தினை ஏற்படுத்த என்னோடு பயணிக்கும் சக பயணிகளான ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் நினைத்து பார்க்கிறேன். முதல் வகுப்பில் சேர்ந்துள்ள சுபத்ரா முதல் இந்த ஆண்டு பள்ளியை விட்டு மாறப்போகும் ஹரீஷ் வரை அனைவரின் அன்பையும் பெற முயற்சிக்கிறேன். அன்பை மட்டும் அன்பைத் தவிர வேறு எது கொடுத்தும் வாங்க முடியாது என்பதால் அதனையே அடிப்படையாகக் கொண்டு கொடுக்க முயற்சிக்கிறேன். பல நேரங்களில் என்னுடைய மேதாவித்தனம் மேலோங்கும் போதெல்லாம் 'உனக்கு ஒன்னும் தெரியாது' என எனக்கு புரிய வைக்கும் எம் குழந்தைகளை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். 2018 ஆம் ஆண்டிலாவது குழந்தைகளின் மூளையை நோக்கி பயணிக்காமல் இதயத்தை நோக்கி பயணிக்க விரும்புகிறேன்.


அப்புறம்
உங்களுக்கும்
"எனது பேரன்பும் ப்ரியங்களும்"
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.






                

Thursday, 28 December 2017

மருத்துவ நெறிகளில் குடிகளைக் காக்கும் தலையரசு

சவுதி அரேபியா:
சட்டப்படி அது  முடியரசு!
மருத்துவ நெறிகளில் 
குடிகளைக் காக்கும் தலையரசு!!

ஒரு காலத்தில் இந்தியத் திருநாட்டிலும்
மருத்துவம் தொண்டாயிருந்தது! 
தொண்டு மெல்லத் தொழிலானது
தொழிலும் கொழிக்கக் கொழிக்க
துட்டும் கமிஷன் வெட்டும்
தானே பரிவட்டம் கட்டிக் கொண்டன


















இப்போது இந்தியத் திருநாட்டில்
மருத்துவம் வலைப் பின்னலாயிற்று
மருத்துவர் மருந்துக் கடை
ஸ்கேன் மையம் மருத்துவமனை
சோதனை மையம் எனயெல்லாமும்
வலிமையான வலைப் பின்னலாயிற்று
மக்களிடமும் அரசிடமும் கறந்து
பகிர்ந்து கொள்ளும் பின்னலாயிற்று

சவுதியில் சிசேரியன்
என்பதே இல்லையாம்
எல்லாமே சுகப்பிரசவமாம்**
என்பது மருத்துவ சாதனை


தேவையில்லாது கீறினால் தண்டனை
என்பதே அரச முத்திரை

                                   
                                
                        நலந்தா செம்புலிங்கம்
                         28.12.2017

**https://www.facebook.com/permalink.php?story_fbid=1958447717753977&id=100007663039148