Monday 5 March 2018

கும்பகர்ணன் தோற்றுவிட்டான் ! பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் !!

            


கும்பகர்ணன் தோற்றுவிட்டான் !  பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் !!




  எந்நாட்டினருக்கும் அயல்நாட்டு மோகம் கொஞ்சமாவது இருக்கும்.  உலக அரங்கில் மிக அதிகமானோரைச்  சுண்டி இழுக்கும் அயல் நாடு அமெரிக்கா தான்.  அது ஒரு வல்லரசு, இராணுவ வலிமையினால் மட்டுமல்ல, அறிவியல் சாதனைகள் நேர்த்தியான நிர்வாகம்  எனப் பல துறைகளிலும் அமெரிக்க ஒரு வல்லரசு தான்.
              அந்த நாட்டு வங்கிகளின் இந்தியக் கிளைகளில் கணக்கு வைத்திருப்பதே ஒரு பெரிய பெருமித அடையாளமாகும்.   அமெரிக்க வங்கிகளும் பெரிய வல்லமை நேர்மை குணாதியங்களையல்லாம்  சூடியிருந்தன, எல்லாம் 2008 வரை தான்.  SUB PRIME CRISIS எனும் ஊழல் சுனாமி   அமெரிக்க வங்கித் துறையை அடித்து நொறுக்கி பிரட்டி உருட்டி சின்னாபின்னமாக்கிவிட்டது.  அந்தச் சின்னாபின்ன நச்சுத் துகள்கள் காற்றில் கரைந்து உலக வங்கித் தொழிலையே படுத்த படுக்கையாக்கிவிட்டது.  எனினும் அந்த சுனாமியோ நச்சுக் காற்றோ தீண்ட முடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்ந்த நாடு இந்தியா.   

               வங்கித் தொழிலில் இந்தியா ஒரு இரும்புக் கோட்டையாகத் திகழ வழி வகுப்பது ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்கள்.  ஆனால் இந்த இரும்புக் கோட்டையும் அவ்வப்போது கரையான்களால் அரிக்கப்படும்.


                    இரும்பைக் கரையான் அரிக்குமா? என எதிர்கேள்வி கேட்பீர்கள். கரையான்களுக்கு இரையாக்குவதற்காகவே சில  ஐந்தாம் படையினர் இரும்புத் தூண்களை அகற்றிவிட்டு மரத் தூண்களால் முட்டுக்கொடுப்பார்கள்

Nirav Modi
                 அதனால் தான் நியாயமாக  யாரும் எளிதில் ஏமாற்ற   முடியாத இந்திய வங்கிகளுள்ளும் ஏதேனும் ஒரு இந்திய வங்கியாவது பத்தாண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது எக்கச்சக்கமாக இழக்கும். அவற்றிற்கு காரணமான துறை ரீதயான குற்றங்குறைகளை ஆராய்வதைவிட அரசியல் காரணங்களை மோப்பம் பிடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்துகிறோம்.  

                அண்மையில் அம்பலாமாகியுள்ள  பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழலிற்கு காரணமான  நிரவ் மோடியின் உடம்பில்  காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறதா? பாரதிய ஜனதா ரத்தம் ஓடுகிறதா என்ற விவாதம் காரசாரமாக நடந்துவருகிறது.  இந்த விவாதம் ஒரு திசை திருப்பும் முயற்சி என்றே கருதுகிறேன்.


     1990 --92 ஆண்டுகளில் நடைபெற்ற மேத்தா ஊழலும் 2002--2005 ஆண்டுகளில் நடைபெற்ற ரூபால் பன்சால் ஊழலும் 2018 புத்தாண்டு பரிசாக அம்பலமாகியுள்ள நிரவ் மோடி ஊழலும் ஒரே வகை முறைகேடுகளே ஆகும்.  இந்த ஊழல்களத்தில் மோசடிப் பேர்வழிகள் வெற்றிபெற்றதாகக் கூடச் சொல்ல முடியாது, வங்கிகள் தேடிப் போய் சரணடைந்ததாகவே தோன்றுகிறது. 

Harshad Mehta
                 பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிராடி இல்லக்  கிளை   (BRADY HOUSE BRANCH MUMBAI) தனது வாடிக்கையாளர் நிரவ் மோடி குழுமத்திற்கு Letter of Undertaking (LOU) ஆவணத்தைக் கொடுக்கிறது.  இந்த ஆவணம் ஒரு உத்தரவாத உறுதி மொழி பத்திரம் ஆகும்.  இந்த ஆவணத்தை வைத்து சில இந்திய வங்கிகளின் வெளிநாட்டுக் கிளைகளில் நிரவ் மோடி குழுமம் கடன் பெற்றிருக்கிறது.  அந்தக் கடன்களை நிரவ் மோடி குழுமம் தீர்க்கவில்லை.  அவற்றை தீர்க்க வேண்டிய பொறுப்பு பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடமையாகிவிட்டது, . இந்த எட்டு ஆண்டு காலகட்டத்தில் நடந்த ஏராளமான பரிவர்த்தனைகளில் கூட்டுத் தொகை அதிகமில்லை பன்னிரெண்டாம் கோடி ருபாய் ஆகும்

                இந்த  ருபாய் 12 ஆயிரம் கோடியும்  ஒரே நாளில் ஒரே பரிவர்த்தனையில் வாரி வழங்கப்படவில்லை.  இந்த முறைகேடுகள்  சர்வ சுதந்திரமாக  8 ஆண்டுகள் அடை மழை போல தொடர்ந்து அரங்கேறியுள்ளன.

                 ஒரு சாமானியன் 12 ஆயிரம் ரூபாய் நகைக் கடன் கேட்டால் எத்தனை விதிமுறைகள் விதிக்கபடுகின்றன? 
Brady House Branch
      இந்த 12 ஆயிரம் கோடி கடனுக்கு ஒரே ஒரு கிளையின் ஒப்புதல் மட்டும் போதுமா?     இவ்வளவு பெரிய கடனுக்கு உள்ள படி எத்தனை அடுக்கு அதிகார நிலைகளில் (LAYERS OF AUTHORITY) ஒப்புதல் பெற வேண்டியிருக்கும்?  அத்தனை அடுக்கு அதிகார நிலையினரும் (LAYERS OF AUTHORITY) உறங்கிக் கொண்டிருந்தனரா? உறங்குவதைப் போல நடித்துக் கொண்டிருந்தனரா?

                  பாவம் கும்பகர்ணன் பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் தோற்றுவிட்டான்.




1 comment:

  1. உறங்குவதைப் போல பல இடங்களில் நடித்துக்கொண்டிருந்தார்கள்.

    ReplyDelete