Thursday, 1 March 2018

கசப்புச் சலிப்பிற்கு ஒரு இனிப்பு மாற்று

  தமிழ் மொழியின் பால் அயல் மொழியினரெல்லாம் காதல் கொள்ளும் போது தமிழர்களுக்கு தாய்மொழிப் பற்றாகவும் அது இரட்டிப்பாக இருக்க வேண்டுமே!  ஆனால் உண்மை கொஞ்சம் கசக்கும், அல்ல, அல்ல அதிகமாகவே கசக்கும்.  

         இந்தக் கசப்புச் சலிப்பிற்கு ஒரு இனிப்பு மாற்று காரைக்குடியில் இருக்கிறது.
 
          நமக்குத் தாய் மொழிப் பற்று இல்லாமல் இல்லை ஆனாலும் சில வேளைகளில் உயர்கல்வி வேலை வாய்ப்பு என ஏதோரு சாக்கிட்டு நீர்த்துப் போய்விடுகிறது.
 
            இந்த வடிகட்டியைத் தாண்டி நிற்கும் தமிழ்ப் பற்று ஒரு அரசியல் வாடையாகக் கரைந்துவிடுகிறது அல்லது இறையுணர்வு என்ற வட்டத்திற்குள் மையம் கொண்டுவிடுகிறது.

              இந்த வடிகட்டியையும் தாண்டி ஒருவருக்கு தமிழ்ப பற்று நிலைத்து நின்று அவர் நூற்றுக்கு நூறு தூய தமிழ் தொண்டாற்றி வந்தால் அது அதிசயமாக கருதப்படும்.  அந்த அதிசயம் அவருடைய வாரிசுகளால் தொடரப்படுமா என்பது கேள்விக் குறியாக இருக்கும்.  ஆனால் அப்படி ஒரு தமிழ்ப்பணி  காரைக்குடியில்  

              மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
               என்னோற்றான் கொல்எனும் சொல் (குறள் 70)

என ஒரு நற்றந்தையின் தமிழ்ப் பணியை பெரி. பெரியகருப்பன் மற்றும் பெரி. வீரப்பன் எனும் அவர்தம் மைந்தர்களால் தொடர்கிறது

                  1967 ஆம் ஆண்டு தமிழ்க் காதலர் இராம. பெரியகருப்பன் செட்டியார் அவர்களால் தொடங்கப்பட்ட இராமசாமி தமிழ்க் கல்லூரி இன்றும்  அவருடைய மைந்தர்கள் பெரி. பெரியகருப்பன் மற்றும் பெரி. வீரப்பன் நிர்வாகத்தில்  சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.   இன்று பல தமிழ் கல்லூரிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரிகளாக மாறினாலும் இக்கல்லூரி தனித் தமிழ்க கல்லூரியாகவே தொடர்கிறது.  

பெரி. பெரியகருப்பன் கெளரவிக்கப்படுகிறார்
பெரி. வீரப்பன் கெளரவிக்கப்படுகிறார்
                    இக்கல்லூரியின் ஆண்டு விழா 3, 4 நாள் விழாவாக நடைபெறும்.  அவ்விழாக்களில் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் குடும்ப விழாப் போல வந்து கலந்து கொள்கிறார்கள். இந்த ஆண்டு 51 ஆவது ஆண்டு விழா பிப்ரவரி 27 முதல் மார்ச்சு 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு ஒரு சிறப்பு மலர் வெளியிடுகின்றனர்.
                         
                   காரைக்குடியில் தமிழ்த் தாய்க்கு ஒரு கோவில் மட்டுமில்லை வளரும் தலைமுறைகளை அவள்பால் ஆற்றுப்படுத்த ஒரு பாடசாலையும் இருக்கிறது.
                      






3 comments:

  1. அரிய பணியை தொடர்ந்து செய்துவரும் பெருமக்களின் மாண்பினை எடுத்துரைத்த விதம் நன்று ஐயா.

    ReplyDelete
  2. செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் தொண்டர்கள் நடத்தும் கல்லூரி தன்தமிழ்ப்பணி தொடர்வதறிய மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. அருமையான தமிழ்ப்பணி. பகிர்ந்தமைக்கு நன்றி :)

    ReplyDelete