Tuesday, 11 September 2018

செயங்கொண்டான்! தமிழ் கொண்டான்!!

செயங்கொண்டான்! தமிழ் கொண்டான்!!

 மழையின்றி மக்கள் வாடியிருக்கிறார்கள்,  மழை வேண்டி ஒரு தமிழ்ப் பாவலன் பாடுகிறான், மழை பொழிகிறது. இன்னொரு நாள் மழை கொட்டித் தீர்க்கிறது, அதையும் மக்களால் தாங்க முடியவில்லை.  உடனே அந்தப் பாவலன் மழையை நிற்கச்  சொல்லிப் பாடுகிறான். மழை நின்றுவிடுகிறது.

                மழையை வேண்டியும் நிறுத்தவும் பாடிய தமிழ் அருளாளர் தான் பாடுவார் முத்தப்பர்.  18 ஆம் நூற்றாண்டில் பிறந்த முத்தப்பர் நகரத்தார் குலத்தில் நேமம் கோவில் மரபில் பிறந்தவர்.  புலமைச் சமர்களில் எல்லாம் சிங்கமாய்த் திகழ்ந்தவர்.

                 அதே நேமங்கோவில் மரபில் தோன்றியவர் தான் காரைக்குடி வித்யாகிரி பள்ளியின் தமிழாசரியர் மெ. செயங்கொண்டான்.  

                 தமிழ் பற்றும் ஆற்றலும் மிக்க  செயங்கொண்டான் பள்ளி, கல்லூரிப் பருங்களிலேயே ஏராளமான பரிசுகளை வென்று சாதித்துள்ளார். 

  
 இன்று தமிழாசிரியாகத் திகழும் செயங்கொண்டானுக்கு   மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்சி அளிப்பது தான்   உயிர் மூச்சு.   தமிழக அரசு திருக்குறளை மாணவர்களிடையே பரப்புவதற்காக திருக்குறள் செல்வர் என்றொரு திட்டம் வைத்துள்ளது.  1330 குறட்பாக்களையும் முற்றோதும் மாணவர்களுக்கு ரூ. 10000/- (ரூபாய் பத்தாயிரம்) பணமுடிப்பும் சான்றிதழும்  வழங்கிவருகிறது.  அத்தகுதி மிக்க மாணவர்களை உருவாக்குவதை செயங்கொண்டான் தன் வாழ்க்கை முறையாக வரித்துக் கொண்டுள்ளார்.   தம் பள்ளி மாணவர் என்றில்லை எப்பள்ளி மாணவருக்கும் பேருவுகையோடு திருக்குறள் பயிற்சி அளிப்பார்.  இதுவரை 36 (முப்பத்தியாறு) திருக்குறட் செல்வர்களை உருவாக்கியுள்ளார்.

                        ஆசிரியப் பணி தமிழ்ப் பயிற்சி திருக்குறள் பயிற்சி சதுரங்கப் பயிற்சி என பணிமிகுந்த செயங்கொண்டானுக்கு உள்ளபடியே 24 மணி நேரம் போதாது. ஆனால் அவர் இவற்றோடு பல தமிழ், திருக்குறள், சதுரங்கக் கழகங்களிலும் தலையைக் கொடுத்து  கொண்டிருப்பவர். 

                        36 மாணவர்களுக்கு திருக்குறள் செல்வர் எனும் அரசு அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த செயங்கொண்டானுக்கு இந்த ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது எனும் அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளது.  இவருடைய எல்லைகள் நீத்த நட்பு வட்டம் இதனை பேருவுகையோடு கொண்டாடியது. மாணவர்களும் தாமே விருது பெற்றதைப் போல அகமகிழ்ந்தனர்.  பள்ளி நிர்வாகமும் சக ஆசிரியர்களும் உளம் குளிர்நதனர். குடும்பம் குதூகலித்தது, தாயார் ஈன்ற பொழுதினும் பெரிதும் உவந்தார்.

                        இவர்களையெல்லாம் விட இன்னொருவர் தான் இன்னும் அதிகமாக மகிழந்தார்!  அவர் தான் திருவள்ளுவர்!!

நலந்தா செம்புலிங்கம்
11.09.2018




6 comments:

  1. போற்றத்தக்க பணி மேற்கொள்கின்ற அவருக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி

    ReplyDelete
  2. இனுமொரு அதிசயம் செயங்கொண்டானின் உண்மையான உயரம் 133 அடி * 36. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இனுமொரு அதிசயம் செயங்கொண்டானின் உண்மையான உயரம் 133 அடி * 36. வாழ்த்துக்கள் - சபா

      Delete
  3. அருமை பணி காட்டும் உள்ளத்தை வணங்குகிறேன். நன்றி. வாழ்த்துக்கள். மேலும் பணி சிறக்க.

    ReplyDelete