Thursday 13 September 2018

நேரிலே பார்த்தால்? நிலவு தேய்ந்து தான் போகும்!

நேரிலே பார்த்தால்? நிலவு தேய்ந்து தான் போகும்!
      ^^^^^^^^^    ***********   ^^^^^^^^^    ***********     ^^^^^^^^^^

உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை  நீ  பார்க்கின்றாயே
உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை  நீ  பார்க்கின்றாயே
விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ  பார்க்கின்றாயே
விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ  பார்க்கின்றாயே
நேரிலே  பார்த்தாலென்ன  நிலவென்ன  தேய்ந்தா போகும்

( படம்: வாழ்க்கைப் படகு )  




               இது கவியரசர் கண்ணதாசனின் சொல்லோவியத்தில் விரியும் நயமான காதல் காட்சி.   நாயகி நேருக்கு நேராக பார்க்க நாணுகிறாள். நாயகனோ நாயகி தன்னைப் பார்க்க மாட்டாளா எனத் தவிக்கிறான்.  நாயகியை நிலவு எனப் புகழ்ந்து , நிலவே நேரிலே என்னைப் பார்த்தால் தேய்ந்தா போய்விடுவாய்? எனக் கேட்கிறான்.

               காதல் காட்சியில் நேருக்கு நேர் பார்த்தால் நிலவே போன்ற முகமானாலும் சரி சாதாரண முகமானாலும் சரி தேய்ந்து போகாது தான்.

               புகைப்படக் காட்சியில் அப்படி இல்லை.  கேமராவையோ செல்போனையோ நேருக்கு நேர் பார்த்துவிட்டால் முகம் இறுகிப் போய்விடும்.

               கேமரா முகத்தைப் பார்க்க முகமோ கேமராவைப் பார்க்கா நிலையில் இருந்தால் தான் படம் இயல்பாக இருக்கும்,  எடுப்பாக இருக்கும்.

                ஆர்வமிகுதால் சில புகைப்படக் கலைஞர்கள்,  புகைப்படத்தை மெருகூட்டுகிறேன் என்ற பெயரில் படங்களை TOUCH செய்து படத்தில் இயல்பு நிலையை மாற்றிவிடுவார்கள்.

.               பதிப்புச் செம்மல் மெய்யப்பனார் மற்றும் தமிழண்ணலுடன் நான் இருக்கும் படத்தை ஒரு அன்பர் மாற்றிவிட்டார். ஒரு திருக்குறள் வெளியீட்டு விழாவில் மாமனிதர் 
அப்துல் கலாமிடம் நான் திருக்குறளை 
பெற்றுக் கொண்ட காட்சியையும் ஒரு 
அன்பர் மாற்றிவிட்டார்.

     அண்மையில் ஒரு திருக்குறள் விழாவிற்கு பார்வையாளனாகத் தான் சென்றேன். மேடையேற்றி வாழ்த்துரைக்கவும் வாய்ப்பளித்தார்கள், .படமும் எடுத்தார்கள். படத்தை அவர்களாகத் தருவார்கள் என ஓரிரு வாரங்கள் காத்திருந்தேன், தரவில்லை. பிறகு மீண்டும் மீண்டும் நினைவூட்டி இரண்டு மாதங்களுக்குப் பிறகு வாங்கினேன்.  மிகவும் இயல்பான படம், ஆனால் அடிக்கடி நினைவூட்டியது உறவின் இயல்பை மாற்றிவிட்டது.

      இவ்வளவு கதையும்

1. ஒரு இயல்பான படத்திற்காகவும்

2..அப்படத்தை எடுத்து அனுப்பியவற்கு நன்றியுரைப்பதற்காகவும் தான்.

            காரைக்குடியின் நெடுநாள் பள்ளியாம், 108 ஆண்டு பாரம்பரிமிக்க பள்ளியாம்  கார்த்திகேயன் பள்ளியின் ஆசிரியை திருமதி பா. லெட்சுமி, மேதகு அப்துல் கலாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஏனோ நேரில் பார்க்கவில்லை. அவர் அப்துல் கலாமைப் பார்க்காததும் ஒரு தெய்வீக திருவினையாடல் போலும், அதனாலோ என்னவோ, அவர் இன்று அப்துல்  கலாமின் எழுத்துக்கள் மூலம் சிந்தனைகள் மூலம் தன்னுடைய மாணவர்களுக்கு  ஒவ்வொரு நாளும் அப்துல் கலாமை தரிசனம் செய்து வைக்கிறார்.  

      காரைக்குடி இராமநாதன் செட்டியார் பள்ளித் தலைமை ஆசிரியர்  திரு பீட்டர் ராஜா அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் எனக்கு  பேச வாய்ப்பளித்திருந்தார்கள்

. ஆசிரியை பா. லெட்சுமி அவர்களின் மகன் இறையன்பு அப்பள்ளியின் மாணவன், பல பரிசுகளை வென்ற மாணவன். 

         அவ்விழாவில் நான் பேசும் போது ஆசிரியை பா. லெட்சுமி அவர்கள் ஆறாவது அல்லது ஏழாவது வரிசையில் இருந்ததைப் பார்த்தேன். ஆனால் படம் எடுத்ததைப் பார்க்கவில்லை.  காலையில் 11  மணியளவில் நான் பேசினேன்.  நான் பேசிய காட்சியை  எனக்கு மதியம் 1 மணியளவில் அனுப்பிவிட்டார்கள்.

         குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி அண்ணாமலை தன் படத்தை ஒரு முறை கூடப் போட்டுக் கொண்டதில்லை.  குமுதம் தான் தெரிய வேண்டும் நான் தெரிய வேண்டியதில்லை என்பாராம்.  அவருடைய தாக்கத்தால் தான் நானும் எங்கள் நலந்தா புத்தகக் கடையில் முகவரி அட்டையில் என் பெயரைக் கூட போடுவதில்லை.
                  
                         குமுதம் எஸ். ஏ. பி அண்ணாமலை  என்னுள்  ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மை தான்.  ஆனால் பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பனார் தான் என் வழிகாட்டி.  அவர் புகைப்படங்களை பெரிதும் விரும்புபவர்.   அவரது புகைப்பட விருப்பம் வெளியில் தெரியும் சிப்பி, அந்த சிப்பிக்குள் இருக்கும் முத்து நல்ல படைப்புகளை நல்ல நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும் என்ற பெருநோக்கம் தான். 


           என் நெஞ்சில் வாழும் பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பனார் அடிக்கடி சொல்லும் வார்த்தை பதிவு செய்ய வேண்டும் பதிவு செய்ய வேண்டும் என்பதாகும்.  பீட்டர் ராஜாவிற்கு எடுக்கப்பட்ட பாராட்டுவிழா மிக முக்கியமான நிகழ்ச்சி, அதில் எனக்கு பேச வாய்த்தை ஆசிரியை லெட்சுமி  இயல்பாக பதிவு செய்துள்ளார், ச.மெ அவர்களின் தடத்தில் பயணித்த இரட்டிப்பு மகிழ்ச்சியும் நல்கியுள்ளார்

         
               ஆசிரியை லெட்சுமி சின்ன சின்ன உதவிக்கெல்லாம் ஒரு கோடி நன்றி கூறுவார்.  அவருக்கு நான் எத்தனை கோடி நன்றி சொல்வது? ஒரு முப்பது அல்லது நாற்பது கோடி நன்றி சொல்லிக் கொள்கிறேன்.  ஒரு முழுத் தொகையாக ஐம்பது கோடி நன்றி சொல்லக் கூடாதா?  என நீங்கள் கேட்கலாம்.  அவர் எனக்கு இதுவரை முப்பது அல்லது நாற்பது கோடி நன்றி சொல்லியிருப்பார், அவ்வளவு தான் கையிருப்பு இருக்கிறது, அவ்வளவையும் கொடுத்துவிடுகிறேன்.

நலந்தா செம்புலிங்கம்
13.09.2018




No comments:

Post a Comment