இன்று வாகனம் ஒரு அத்தியாவசியம்
அதன் விலை பெருமித அடையாளம்
அதன் வேகம் போதை ஊட்டும் பெருமிதம்
வேகத்திற்குத் தீனி போட
அரசும் வழுக்குச் சாலைகளை
நாடெங்கும் போடுகிறது
அதற்கான நிறுவனம் NHAI
அரசுத் துறை, நிறுவனமாகும் போது
ஊழலும் ஊதாரித்தனமும்
மற்ற கார்ப்பரேட் கலாச்சாரங்களும்
அதன் ரத்தமும் சதையும் ஆகின்றன
இன்று பெயர் பலகைகள் வழிகாட்டிகளுக்கே
தனியார் ஸ்பான்ஸர்ஷிப் தேவைப்படும்போது
பல்லாயிரம் கிலோ மீட்டர் சாலைகளை
NHAI நிறுவனமா போடும்? தனியாரிடம் ஒப்படைக்கும்
அவர்கள் சாலைகள் போடமாட்டார்கள்
ரப்பர் டயர்களுக்கு தாரினால் மெத்தை விரிப்பார்கள்
நகருக்குள் குறுக்கும் நெடுக்குமாய்
50 அடிசெங்குத்து மேம்பாலம் கட்டுவார்கள்
பாலத்தைத் தவிர மற்றதெல்லாம் சிதையுறும்
ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு
பல கிலோ மீட்டர் ஆற்று மணல், செம்மண்
உவர்மண் என வகைவகையாய்வாரி இறைப்பார்கள்
எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒன்றுக்கு நாலாய்
மக்கள் தலையில் கட்டுவார்கள்
கார்பேரட்கள் கல்லாப் பெட்டியில் கண்ணாகயிருக்கும்
சாலைகள் அரசின் சாதனைகளாகப் பறைசாற்றப்படும்
இது விமான ஓடுதளமா? வெளிநாட்டுச் சாலையா?
விபத்துக்களை விலை கொடுத்து வாங்கும்
வாகனசாரிகள் புளகாங்கிதம் அடைவர்
NHAI நிறுவனம் அவ்வப்போது
கட்டணங்களை உயர்த்தும் அது
உடனுக்குடன் அன்று நள்ளிரவே
அமலுக்கு வந்து விடும். ஆனால்
NHAI இணைய தளமோ 2005 திட்டத்தை **
நிகழாண்டு திட்டம் என்று சாற்றும்
சுங்கக் கட்டணங்களுக்கென தனி இணையதளம்
அது நாமக்கல் கரூர் திருச்சி நெடுஞ்சாலை **
மேற்கு வங்கத்தில் உள்ளதாய்ப் பகரும்
நாம் விரும்பித் தான் கப்பம் கட்டுகிறோம்
கார்ப்பரேட் சாலை முதலாளிகள்
கார் கம்பெனிகள் கொழிக்கின்றன.
விபத்துக்களும் உயிர்பலிகளும்
அவர்கள் திட்ட வரைவுகளில் இல்லை, நாமோ
எமனை வம்புக்கு இழுக்காமல் இருப்பதில்லை
பளபளப்பான கார்கள் பறக்கும் சக்கரங்கள்
இடதிலும் வலதிலும் மட்டுமல்ல இடக்காவும்
முன் செல்லும் வாகனத்தை முந்தலாம்
மிகைவேகம் ஒரு போதும் தண்டிக்கப்படாது
ஏனெனில் நீங்கள் அந்தச் சாலை முதலாளியின்
முக்கியமான வாடிக்கையாளர்
வேகத்திற்கு சேவகம் செய்வது தான்
இவர்கள் பிறப்பின் நோக்கம்
சாலை விதிகள் ஓரம்கட்டப்படுகின்றன
காலனுக்கு ஓவா் டைம் வேலை கட்டாயமாகிவிடுகிறது.
சாலை விபத்துக்கள் சாதாரணமாகிவிட்டன
விபத்துச் சாலைகள் ஏராளமாகிவிட்டன
நலந்தா செம்புலிங்கம்
02.07.2017