ஞாயிறு, 21 ஜனவரி, 2018

கலாம் பிள்ளைகள்

ஒரு தாய் தன் பிள்ளையைத் திறமையான பிள்ளையாக வளர்க்கிறார்.  அவர்கள் வீட்டுக்கு வந்த விருந்தினர், இந்தப் பிள்ளை இன்னொரு வீட்டின் பிள்ளை என்று சொன்னால் அந்தத் தாய்க்கு எப்படி இருக்கும்? நேற்று காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் அது தான் நடந்தது

ஆடிப் பாடி  பலூன் விட்டு
புதிய கல்வியாண்டை வரவேற்பாா்கள் !
மழை ஓய்ந்த பிறகு 
மாணவா்களோடு ஆசாியா்களும்
காகிதக் கப்பல் விடுவாா்கள் !!
ஆசிாியா்கள் -- மாணவா்கள்
அன்னையா் -- பிள்ளைகளாய்
அவதாரம் எடுப்பாா்கள் !!       
         
            
           .  காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில்  ஆசிரியை லெட்சுமி தம் மாணவர் நெஞ்சங்களில் அப்துல் கலாமை விதைத்திட வேண்டுமென்பதில் மிகவும் முனைப்பாகவுள்ளார்,  கலாமின் வரலாறு,  கதைகள் கவிதைகள் படங்கள் பொன்மொழிகள் எனப்பல வகையாலும் கலாமை மாணவர்களிடம் பதியவைக்கிறார்.  இவருடைய வகுப்பறையின் பெயரே கலாம் வகுப்பறை தான்.  இந்தத் தகவலை அக்னிசிறகுகள் நுால் வெளியீட்டு விழாவில் (1999) முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டவரும் அந்நுால் விற்பனையில் சாதனை புரிந்து அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பட்டவருமான கோவை விஜயா பதிப்பக அதிபர் திரு மு வேலாயுதனார் அவர்களிடம் வெள்ளிக் கிழமை தற்செயலாகப் பேசும் போது சொன்னேன்.  உடனே அவர் பரவசமடைந்து நான் மேலுாரில் தான் நாளை அந்தப் பள்ளிக்குப் போய் பார்ப்போம் என்றார்.
நானும் சரி என்று சொல்லிவிட்டேன்.  பிறகு தான் இந்த சனிக்கிழமை விடுமுறை நாள் என்று தெரிந்தது, எனினும் வகுப்பாசிரியை லெட்சுமி அவர்களும் தலைமை ஆசிரியை ஸ்வேதா அவர்களும் கலாம் வகுப்பறை மாணவர்களுக்கு தகவல் கொடுத்துப் பெரும்பாலான மாணவர்களை வரவழைத்துவிட்டார்கள்.  


                    இந்த சந்திப்பில் விஜயா வேலாயுதன் அவர்களும் பேராசிரியர் பழனி ராகுலதாசன் அவர்களும் அந்தக் கலாம் வகுப்பறை மாணவர்களை கலாம் பிள்ளைகள் என்று பிரகடனப் படுத்திவிட்டார்கள். ஒப்புதல் கோராமல் நிறைவேற்றப்பட்ட சுவீகாரத்தில் அந்தத் தாய் ஆசிரியர்களும் நெகிழ்ந்து போனார்கள்.

சனி, 13 ஜனவரி, 2018

என் இனிய தமிழ் மக்களே !

             நானும் பாரதிராஜாவின் ரசிகன் தான்.  மன்றத்தில் சேராத போட்டோ எடுத்துக் கொள்ளவோ ஆட்டோகிராப் வாங்கவோ தவிக்காத கலைரசிகன். 

            பாரதிராஜா தமிழ் திரையுலகை ஒரு படி உயர்த்தவர் என்ற பறைசாற்றியவன் தான். பாலச்சந்தரையும் ஸ்ரீதரையும் விஞ்சிய தமிழன் பாரதிராஜா எனப் பெருமிதம் அடைந்தவன் தான்.  அது, மனிதனை அவனது தாய்மொழி வழியாக இனம் காணக் கூடாது சாதியின் வழியாகத் தான்  இனம் காணவேண்டும் என்ற கோட்பாட்டடிற்கு உடன்பட்ட காலம். 
          
           அந்தக் கோட்பாட்டிலிருந்து விடுபட்ட பிறகும் பாரதிராஜாவே எனக்கு சிறந்த இயக்குனராகத் திகழ்ந்தார்.  இதனால் அவரை ஒரு தமிழன் என்பதற்காக மட்டுமல்லாது சிறந்த இயக்குனர்  என்பதற்காக ரசிகப்பதாகவும் உணர்ந்தேன். இந்த பரிணாம வளர்ச்சி தான் பாரதிராஜாவிற்கும் மிகப் பெரிய வெற்றி எனவும் கருதுகிறேன்.


        பாரதி ராஜா, அவரை அவரது படைப்புகள் வழியாகப் பார்த்துப் பாராட்டிய ஒரு  ரசிகனின் மனதில் தீயினால் சுட்ட வடுவை ஏற்படுத்திவிட்டார்.

வைரமுத்து அவர்களுக்கு இது முதல் சர்ச்சை அல்ல.  வெளிப்படையாக சுயசரிதம் எழுதிய  கவிஞர் கண்ணதாசனின் தனிவாழ்க்கையைப் பற்றி அவரது காலமாகி பல்லாண்டு கழித்து கண்ணதாசனுக்காக எடுக்கப்படும் விழாக்களில் பேசி சுகம் கண்டவர் தான்.  தமிழிற்குச் சோறு போடுவதாக பேசியவர் தான்.

இந்த சர்ச்சைக்குரிய வைரமுத்துவின் பேச்சுக்கு கட்டுரைக்கு தளம் கொடுத்த தினமணியே வருத்தம் தெரிவித்த பிறகு வைரமுத்துக்காக  வைரமுத்துவே சப்பைக்கட்டு கட்டினாலும் எடுபடாது.  

பாரதிராஜா, அவருடைய கரகரப்பான முன்னுரை பின்னுரைகளுக்காக திரையரங்குகளுக்கு முன் சென்று பின் எழுந்த  ஒரு ரசிகனின் மனதில் தீயினால் சுட்ட வடுவை ஏற்படுத்திவிட்டார்.  அவர் புதிதாகப் படம் எடுக்கப் போகிறாரா என்பது தெரியவில்லை ஆனால் பழைய படங்களைக் கூட பழைய மாதிரி ரசிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துவிட்டது.

             மற்றொரு புறம் நான் ஒரு சைவன் தான், இந்து என்பது அரசு ஆவணங்களுக்கு மட்டுமே என்ற என்னுடைய நிலைப்பாட்டையும்  பாரதி ராஜாவும்  வைரமுத்துவும் கூட்டணி போட்டு தகர்த்துவிட்டார்கள்.  

 


செவ்வாய், 2 ஜனவரி, 2018

திருவள்ளுவராலாவது தமிழர்களைக் கடைத்தேற்ற முடியுமா?


                 

                 சொந்தத் தொழில் செய்வோருக்கு , மாதப் பிறப்பு என்பது   செலவு ஏடு குறுக்கே மறிக்கும் நாள்.   ஒவ்வொரு செலவு இனமாகத் தீர்த்து  ஐந்து தேதிக்குள்ளாவது அல்லது 10 தேதிக்குள்ளாவது மாதக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.  அதனால் எனக்கு நானே முதல் தேதியன்றே அழுத்தம் கொடுத்துக்   கொள்வேன்.  நேற்று, ஜனவரி முதல் நாள் அப்படி ஒரு அழுத்தம் கொடுத்துக் கொள்ள மறந்துவிட்டேன். இரவு தான் அடடா ஒரு நாளை வீணடித்து விட்டோமே என்ற நினைவே வந்தது.

         எல்லாம் HAPPY NEW YEAR திணிப்பினால் வந்த வினை.

        நான் திருவள்ளுவர் ஆண்டைக் கொண்டாடுவோம் என முகநுாலில் பதிவு வாயிலாக வேண்டுகோள் விடுத்தும் அதனைப் பாராட்டுவோரும் கூட எனக்கும்  HAPPY NEW YEAR சொன்னதை என்னவென்று சொல்ல? 

              திருக்குறளன்பர்களுள்ளும் எத்தனை பேர் திருவள்ளுவர் ஆண்டை முன்னிலைப்படுத்துகிறார்கள்?

           இந்தியை திணிக்க இன்றும்  சிலர் இருக்கிறார்கள், ஆங்கிலேய பழக்க வழக்கங்களை யார் திணிக்கிறார்கள்? நம்மைத் தவிர?

          ரஜினி அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? விவாதங்களையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்.  திருவள்ளுவராலாவது தமிழர்களைக் கடைத்தேற்ற முடியுமா?


                                            நலந்தா செம்புலிங்கம்
                                              02.01.2018 (திருவள்ளுவர் ஆண்டு 2047 மார்கழி 18)

திங்கள், 1 ஜனவரி, 2018

தென்னவன்: கற்பித்தலில் கண்ணதாசன்
       


நீங்கள் கவிதைகளை விரும்பிப் படித்திருப்பீர்கள்   லயித்து    எழுதியிருப்பீர்கள்.  
கவிதைகளை ரசிப்பவர்களைப் பார்த்திருப்பீர்கள்.  கவிதை எழுதுபவர்களையும் பார்த்திருப்பீர்கள்.

       
  ஒரு பள்ளியையே கவிதையாக நடத்துபவரைப் பார்த்திருக்கிறீர்களா?  மதுரையின் வாசலாக இருக்கும் யானை மலையின் அடிவாரத்தில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற ஊராட்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னவனைப் பாருங்கள். 

       தென்னவனைப் உங்களுக்கு எப்படிக் காட்டுவது?  அவருடைய சொற்களிலேயே காட்டுகிறேன். இதோ அவருடைய புத்தாண்டுச் செய்தி (அவருடைய முக நுால் பதிவு)


'பயணங்கள் முடிவதில்லை'

வாழ்க்கையிலும் வகுப்பறையிலும் பல மாற்றங்கள் முன்னேற்றங்களுக்கு காரணமாக எம் குழந்தைகளே இருக்கின்றனர். சின்ன சின்ன முயற்சிகள் பலமான மாற்றங்களுக்கு காரணமாக இருக்கின்றன. குழந்தைகளின் தன்னலமில்லாத கேள்விகள் நம்மை மடைமாற்றம் செய்கின்றன. காலுக்கடியில் குட்டிப்பூனை போலிருந்த மகாலட்சுமி, ஒத்தக்கடை பள்ளியே தனக்குத்தான் சொந்தம் என எண்ணிய கனிஷா, தன் கணவர் இறந்த நிலையிலும் சொந்த பந்தங்கள் இல்லாத நிலையிலும் ஒத்தக்கடை ஆசிரியர்களுக்காக ஒத்தக்கடையில் தங்கி இருந்து படிக்க வைக்கும் மாசானம் என்ற மாணவனின் தாயார், பத்து லட்சம் மதிப்பிலான தகவல் தொழில் நுட்ப வகுப்பறை உருவாக காரணமான தமிழ்ஜெகன் என்னும் மாணவன், நடனம் ஆட கால் சுடுது மேடை வேணும் னு கேட்ட ரூபினா, சுகாதாரமான கழிப்பறைக்கு காரணமான பாத்திமா ரோஜா, தினம் தினம் என் பாதையை செப்பனிட்டு கொண்டிருக்கும் 500 குழந்தைகள் அனைவரையும் எண்ணிப் பார்க்கிறேன். ஓராண்டு ஓடியது. பயணிக்கிறேன் குழந்தைகளோடு, பயணங்கள் முடிவதில்லை. குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவும் பாதுகாப்பான நம்பிக்கையான எதிர்காலத்தினை ஏற்படுத்த என்னோடு பயணிக்கும் சக பயணிகளான ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் நினைத்து பார்க்கிறேன். முதல் வகுப்பில் சேர்ந்துள்ள சுபத்ரா முதல் இந்த ஆண்டு பள்ளியை விட்டு மாறப்போகும் ஹரீஷ் வரை அனைவரின் அன்பையும் பெற முயற்சிக்கிறேன். அன்பை மட்டும் அன்பைத் தவிர வேறு எது கொடுத்தும் வாங்க முடியாது என்பதால் அதனையே அடிப்படையாகக் கொண்டு கொடுக்க முயற்சிக்கிறேன். பல நேரங்களில் என்னுடைய மேதாவித்தனம் மேலோங்கும் போதெல்லாம் 'உனக்கு ஒன்னும் தெரியாது' என எனக்கு புரிய வைக்கும் எம் குழந்தைகளை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். 2018 ஆம் ஆண்டிலாவது குழந்தைகளின் மூளையை நோக்கி பயணிக்காமல் இதயத்தை நோக்கி பயணிக்க விரும்புகிறேன்.

அப்புறம்
உங்களுக்கும்
"எனது பேரன்பும் ப்ரியங்களும்"
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


                

வியாழன், 28 டிசம்பர், 2017

குடிகளைக் காக்கும் தலையரசு

சவுதி அரேபியா
சட்டப்படி அது  முடியரசு
மருத்துவ நெறிகளில் 
குடிகளைக் காக்கும் தலையரசு

ஒரு காலத்தில் இந்தியத் திருநாட்டிலும்
மருத்துவம் தொண்டாயிருந்தது 
தொண்டு மெல்லத் தொழிலானது
தொழிலும் கொழிக்கக் கொழிக்க
துட்டும் கமிஷன் வெட்டும்
தானே பரிவட்டம் கட்டிக் கொண்டன


இப்போது இந்தியத் திருநாட்டில்
மருத்துவம் வலைப் பின்னலாயிற்று
மருத்துவர் மருந்துக் கடை
ஸ்கேன் மையம் மருத்துவமனை
சோதனை மையம் எனயெல்லாமும்
வலிமையான வலைப் பின்னலாயிற்று
மக்களிடமும் அரசிடமும் கறந்து
பகிர்ந்து கொள்ளும் பின்னலாயிற்று

சவுதியில் சிசேரியன் 
என்பதே இல்லையாம்
எல்லாமே சுகப்பிரசவமாம்**
என்பது மருத்துவ சாதனை
தேவையில்லாது கீறினால் தண்டனை
என்பதே அரச முத்திரை
                                   
                                
                        நலந்தா செம்புலிங்கம்
                         28.12.2017

**https://www.facebook.com/permalink.php?story_fbid=1958447717753977&id=100007663039148


சனி, 9 டிசம்பர், 2017

வ.சுப.மாணிக்கனாரின் நுாற்றாண்டு விழா (பதிவு 7)

தவமும் தவமுடையார்க்கு ஆகும்!
                                               


காரைக்குடி கண்ட இமயங்களைக் கொண்டாடுவோம்
 எனப்பெயர் சூட்டி வள்ளல் அழகப்பருக்கும் வ.சுப.மாணிக்கனாருக்கும் ஒரு விழா எடுத்தோம். இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடத்த விழைந்தோம், மகிழ்வோடு இசைந்தார்கள், ஈடுபட்டோடு வேலை பார்த்தார்கள்
இவ்விழாவிற்குத் தலைமை தாங்கிய நீதியரசர் மகாதேவன் அவர்களுக்கு மூன்று வகையான வரவேற்புகள் அளிக்கப்பட்டன
முதலில் பூங்கொத்து வரவேற்பு. இதே பள்ளியில் காலையில் பூங்கொத்து தயாரிக்கும் போட்டி நடந்தது, அதில் வெற்றி பெற்ற மாணவர்களோடு ஆசிரியர்களும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.

பூங்கொத்து வரவேற்பினைத் தாண்டிய பிறகு மூன்று வகை சீருடைகளோடு மாணவர்கள் மாற்றி நின்று கொண்டிருந்தார்கள். முதலில் பள்ளிச் சீருடையில் ஒரு மாணவன் நின்றான் அடுத்தடுத்து Scout மற்றும் JRC சீருடையிலும் இரண்டு மாணவர்கள் நின்றார்கள். இதைப் போல 7 அல்லது 8 மூவர் அணியினர் நின்றனர். பள்ளிச் சீருடையில் நின்ற மாணவன் வணக்கம் சொல்லி வரவேற்றான். Scout மற்றும் JRC சீருடை மாணவர்கள் அந்தந்த முறைப்படி ஆங்கிலத்தில் வரவேற்றார்கள். நீதியரசர் வணக்கம் சொன்ன மாணவனுக்கு பதிலுக்கு வணக்கம் சொன்னார். ஆங்கிலத்தில் வரவேற்ற மாணவர்களுக்கு பதிலுக்கு THANK YOU சொன்னார்.
இந்த இரண்டு வரவேற்புப் படலங்களையும் மகிழந்து நீந்திக் கடந்த பிறகு தான் உச்சகட்ட நெகிழ்வு வரவேற்புக் காத்திருந்தது.
இவ்விழா இரண்டாம் மாடியில் உள்ள அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு வந்த நீதியரசர் மகாதேவன் அவர்கள் மாடிப் படியேறிய போது இரண்டு படிக்கு ஒரு மாணவர் நின்று கொண்டு ஒரு திருக்குறள் புத்தகத்தை கொடுத்து திருக்குறள் வரவேற்பு வழங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். முதல் மாணவன் முதல் திருக்குறளைக் கொடுத்ததும் அது யார் எழுதிய உரை என்பதை நீதியரசர் பார்த்துவிட்டு இது பெரியண்ணன் உரையா? அவரிடம் தான் நான் படித்தேன் என ஒரு உறவு இளவலிடம் பேசுவதைப் போல சொன்னார்.
வரவேற்பில் மாணவர்களை வைத்து ஆசிரியர் அசத்தினார்கள் என்றால் விடைபெறும் போது நீதியரசர் திக்குமுக்காடச் செய்துவிட்டார்.வரவேற்பு காண்டத்தில் அணி அணியாக வரிசையாவெல்லாம் நிறுத்தப்பட்டிருந்தார்கள். வழியனுப்புக் காண்டத்தில் நீதியரசருக்குப் பாதை விட்டு இருமருங்கிலும் மாணவர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். நீதியரசர் இரண்டு மூன்று மாணவர்களைக் கடந்திருப்பார், நான்கவதாகவோ ஐந்தாவதாகவோ நின்ற மாணவன் THANK YOU FOR COMING TO OUR SCHOOL, SIR என்றான். நீதியரசர் புன்முறுவலோடு அந்த மாணவனோடு கை குலுக்கினார். உடனே அங்கிருந்த எல்லா மாணவர்களும் (30, 40) கையை நீட்டினார்கள். எல்லா மாணவர்களிடமும் மகிழ்வோடு கைகுலுக்கிவிட்டுத் தான் மகிழ்வுந்து ஏறினார் நீதியரசர்.
தவமும் தவமுடையார்க்கு ஆகும்!

                                                                                                              நலந்தா செம்புலிங்கம்
                                                                                                                   09.12.2017

வியாழன், 7 டிசம்பர், 2017

வ.சுப.மாணிக்கனாரின் நுாற்றாண்டு விழா (பதிவு 6)

முகம் பார்க்க விழைகிறோம் !

தூயருக்கும் சீலருக்கும்
திருக்குறள் போற்றும்
நீதியரசர் தலைமையில்
பெருமிதப் பள்ளியில்
பெருவிழா திருவிழா

அகமகிழந்து ஆர்வமுடன்
முகநூலில் ஆர்ப்பரித்தோரே
முகம் பார்க்க விழைகிறோம்
தமிழ் நெஞ்சினீரே வருக வருகஇராமநாதன் செட்டியார் நகராட்சி 
உயர்நிலைப் பள்ளி, காரைக்குடி  

08.12.2017  வெள்ளி   மாலை 5.30 மணி

  வ.சுப.மாணிக்கனாரின் நுாற்றாண்டு விழா (பதிவு 5)

தமிழ் நெஞ்சினீரே வருக! வருக!!தொண்டால் பொழுது அளந்த தூயருக்கும் அவர் புகழைத் தமிழலால் அளந்த சீலருக்கும் கல்விக்குத் திருக்குறள் ஆரம் சூட்டிய தமிழ்நெறி போற்றும் மகாதேவர் தலைமையில் விழா எடுக்கிறோம்.
இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி, காரைக்குடி // 08.12.2017 // வெள்ளி // மாலை 5.30 மணி
தமிழ் நெஞ்சினீரே வருக! வருக!!


செவ்வாய், 5 டிசம்பர், 2017

வ.சுப.மாணிக்கனாரின் நுாற்றாண்டு விழா (பதிவு 4)

கண்டிப்புமிக்க .சுப.மா 
கடன் வாங்கிய குழந்தை நாதன்

               .சுப.மாணிக்கனார் ஈடிணையில்லா தமிழறிஞர் என்பதோடு அவர் கொஞ்சமல்ல மிகவும் கண்டிப்பனானவர் என்பதும்  ஊரறிந்து தான். அவரிடம் ஒருவர் கடன் வாங்கினால் வட்டியோடு கடனைத் திருப்பாமல் தப்பிக்க முடியுமா?


               பேரா. சு. குழந்தைநாதன் கடனும் வாங்கினார்வாங்கிய கடனை சாதாரண வட்டியோடு அல்ல தாரளமான வட்டியோடு திருப்பிக் கொடுத்துவிட்டார்.

                 .சுப,மா எங்கே வட்டித் தொழில் செய்தார்? என எதிர் கேள்வி கேட்பீர்கள்.

                பேரா சு.குழந்தைநாதன் கடன் வாங்கியது ரிசர்வ் வங்கி அச்சடித்த பணத்தையல்ல. அவர் .சுப.மா விடம் கடன் பெற்றது நற்றமிழ் சொற்களைத் தான்.
                  
                    1957 இல் .சுப.மா வள்ளல் அழகப்பர் மீது கொடை விளக்கு என்ற காப்பியத்தை இயற்றினார்அதில் 77 வது வெண்பாவாக இடம் பெற்றிருப்பது தான் புகழ் பெற்ற 

                 கோடி கொடுத்த கொடைஞன்  குடியிருந்த
                 வீடும் கொடுத்த விழுச் செல்வன்  தேடியும்
                 அள்ளிக் கொடுத்த அழகன் அறிவூட்டும்
                 வெள்ளி விளக்கே விளக்கு

                   1970 களின் பிற்பகுதியில் பேரா. சு. குழந்தை நாதன் வள்ளல் அழகப்பரின் வாழ்க்கை வரலாற்றை உரைநடையில்  எழுதினார்அந்த நூலின் பெயரே கோடி கொடுத்த கொடைஞன் தான்நூலும் அந்த வெண்பாவை மேற்கோள் காட்டி தான் தொடங்குகிறது.

                   இந்த கவிநயமிக்க வரி யாருடையது ? .சுப.மாணிக்கனாருடையது தானேஇதை பேரா. சு. குழந்தைநாதன் கையாண்டால் அது கடன் தானே?

                     இந்தக் கடனை பேரா. சு. குழந்தைநாதன் தமது நூலின் 180 வது பக்கத்தில் திருப்பிக் கொடுத்துவிடுகிறார்.

                                        ""முற்றிலும் நிறைவுடையவராகவே அவர்                                                                    வாழ்ந்திடவில்லைதம் குறைகள் பலவற்றை அவர்                                                 உணர்ந்திருந்தார் எனினும் தம்மிடையே   
                                          வியத்தகு நல்லியல்புகளை வளர்த்துக் கொண்டு                                                        முழுநிறை    மனிதராக ஆவதற்கு எப்பொழுதும்                                                          முயன்று வந்தார்ஒரு  காலத்தில் அழகாக உடுத்து                                                  நல்லுணவே கொண்டு ஆடம்பரச்  சுழலில் வாழ்ந்து                                                     பழகியவர் தமக்கென நூறு ரூபாய்களைக்                                                                     கூட தாரளமாகச் செலவழிக்க அஞ்சும் அளவுக்கு                                                       தேவைகளைக்  குறைத்துக் கொண்டார்இந்த                                                              நூறு ரூபாய்  இருந்தால் ஒரு ஏழைப் பையனுக்கு                                                        உபகாரச் சம்பளம் கொடுக்கலாமே எனக்   
                                          கசிந்துருகி கணக்குப் பார்க்கும் அளவுக்கு மனம்                                                           நிறைந்த மாமனிதாராய் தொண்டால் பொழுதளந்த                                                தூயராய் உயர்ந்தார்.""

      இந்த மேற்கோளின் கடைசி சொற்றொடர்  தொண்டால் பொழுதளந்த தூயராய் உயர்ந்தார்.   என்னை தூங்க விடாமல் செய்ததுஇந்த சொற்றொடரை பலரிடம் கேட்டு இது யார் எழுதிய வரியாக இருக்கும் எனக் கேட்பேன்எல்லோரும் ஏகமனதாக .சுப. மாணிக்கனாரின் வரிகளாகத் தான் இருக்கவேண்டும் என்ற ஊகித்தார்கள்.

              வள்ளல் அழகப்பர் இவ்வளவு துல்லியமாகப் படம் பிடிக்கும் காவியச் சொற்றொடரை பிரபலமாக்க வேண்டுமென்ற அவாவில் ஒரு பதிவுப்படத்தை (STICKER) உருகவாக்கி அழகப்பர் படத்தோடு இந்த வரிகளை பிரசுரம் செய்துள்ளோம்.

               அப்பதிவுப்பட வெளியீட்டு விழாவிற்கு தமிழ் நெஞ்சினீரே வருக! வருக!!
                                                                                      --  நலந்தா செம்புலிங்கம்


                                                                          05.12.2017