அடிமாட்டு விலைக்காவது கொள்முதல் செய்
போராட்டங்கள் ஓய்வதில்லை
24 மணியும் நாளை தான்
24 ஆண்டும் நாளை தான்
அந்த தொலை நாளையில்,
தில்லித் தலை நகரில்
கொளுத்தும் வெயிலில்
மீத்தேன் முதலாளிகள்
எதிர் நிலைப் போராட்டம்
இன்றே என் கண் முன் விரிகிறது
மத்திய அரசே மாநில அரசே
கொள்முதல் செய் கொள்முதல் செய்
மீத்தேனைக் கொள்முதல் செய்
அடிமாட்டு விலைக்காவது கொள்முதல் செய்
ஓட்டாதே ஓட்டாதே வாகனங்களை
மின் சக்தியில் ஓட்டாதே
ஓட்டாதே ஓட்டாதே வாகனங்களை
சூரிய சக்தியில் ஓட்டாதே
ஓட்டு ஓட்டு அரசு வாகனங்களை
மீத்தேனில் மட்டும் ஓட்டு
மத்திய அரசு மாநில அரசு
வாக்குறுதிகளை நம்பித் தான்
மக்களை விரட்டினோம்
ஊரைச் சுடுகாடாக்கினோம்
நீர்நிலைகளை சின்னாபின்னமாக்கினோம்
வயல்களை ஒழித்தோம் நிலங்களைப் பிளந்தோம்
பெட்ரோலுக்குச் சரியான மாற்று மித்தேன் தான்
என உலகையே நம்ப வைத்தோம்
நாங்களும் ஏனோ நம்பித் தொலைத்தோம்
கோடியாய் கோடியாய்
கடன் வாங்கிக் கொட்டினோம்
எங்கள் கைகளில் கறைபடியாமல்
மீத்தேனை எதிர்த்தவர்களை ஒடுக்கினோம்
அந்த மதி மயக்கத்தில்
காற்றை மறந்தோம் கதிரவனை மறந்தோம்
மீத்தேனைக் கொள்வாரின்றி ***
நடுத்தெருவில் நிற்கிறோம்
---- நலந்தா செம்புலிங்கம்
08.07.2017
*** 2050 ஆம் ஆண்டில் பெட்ரோலே இருக்காது என்று அச்சுறுத்துகிறது ஒரு கணிப்பு. உலகமே மாற்று எரிபொருட்களுக்கு மாறிவிடும் ஆகவே 2050 ஆம் ஆண்டில் பெட்ரோலுக்குத் தேவையே இருக்காது என்று நம்பிக்கையூட்டு இன்னொரு கணிப்பு
இதற்கு முடிவே கிடையாது.
ReplyDeletesariyana nethiyadik kavithai.
ReplyDeleteArumai.
ReplyDelete