Wednesday, 22 April 2020

கச்சா எண்ணெய் தலைகீழ் வணிகம்: விற்பவன் விலை கொடுத்தது உண்மையா?

கச்சா எண்ணெய் தலைகீழ் வணிகம்: விற்பவன் விலை கொடுத்தது உண்மையா? 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


உண்மையின் கையைக் காலைக் கட்டிப் போட்டுவிட்டு, பொய்மை அதன் மேல் கொலை முயற்சி புகார் கொடுக்குமாம்.  ஊடகம் எனும் பஞ்சாயத்து தலைவரும் விசாரணையின்றி உண்மையைத் தண்டிப்பாராம்.

அப்படி வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு இப்போது அவலாகக் கிடைத்திருக்கிறது கச்சா எண்ணெய் விவகாரம்.
கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியத்திற்கும் குறைவாக வந்துள்ளது.

மோடி இன்னும் பெட்ரோலை 72 ரூபாய்க்கு விற்கிறார் 

"இது, அராஜாகம், இது மக்களை வாட்டி வதைக்கும் கொடுமையான அரசு"

என சமூக வலைத் தளங்களில் அனல் பறக்கிறது.

உண்மை மீது கட்டிவிடப்பட்ட  களங்களைக் களந்து உண்மையின் உண்மையைப் பார்ப்போம்.
  
1. கச்சா எண்ணெயின் மைனஸ் விலை, அது, சர்வதேச மார்க்கெட்டில் நடந்த உண்மை தான். அது பார்வர்டு டிரேடிங் சந்தையில் சூதாட்டத்தில் குதித்தவர்களால் ஏற்பட்ட பொருளாதார கொரோனா.

 2. இது ஆன் லைன் வணிகத்தில் ஈடுபட்டுள்ள பலரை வேரோடு சாய்க்கும். அசல் சந்தையிலும் இதன் தாக்கம் லேசாக இருக்கும். கடைக்கோடி நுகர்வோருக்கு பலன் கிடைக்க வாய்ப்பில்லை.

3. சூதாட்ட வணிகர்கள் ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்யயை  சேமிப்பதற்கு உரிய தூக்குச் சட்டி இல்லாமல் பல்லாயிரம் பேரல் கச்சா  எண்ணெய்யயை   ஆன் லைனில் வாங்குவார்கள்.
ஆன் லைனில் வாங்கிய  சரக்கை ஒப்புக் கொள்ள வேண்டிய நாளில் கச்சா எண்ணெய்யயை  உள்ளபடியே பயன்படுத்தும் (சுத்திகரிக்கும்) நிறுவனத்திற்கு விற்று விடுவார்கள். சில நேரங்களில் ஒப்பந்தத் தேதி விலையை விட சரக்கு ஒப்படைப்புத் தேதி விலை குறைவாக இருக்கலாம். அப்போது நஷ்டம் ஏற்படும். அந்த நஷ்டத்திற்கு அவர்கள் கைக் காசைக் கொடுப்பார்கள். இது தான் இதுவரை நடந்தது.

4. கொரோனா முடக்கத்தால் கச்சா எண்ணெய் பயன்பாடு சுருங்கிவிட்டது. அதனால் எவ்வளவு குறைந்த விலைக்கும் ஆன் லைனில் கச்சா எண்ணெய் வாங்கிய சூதாடிகளிடம் வாங்குவதற்கு ஆளில்லை.

5. ஆகவே ஆன் லைன் சூதாட்ட வணிகர்கள், சேமிப்பு கிடங்கு வசதியுள்ள அசல் சந்தை வணிகரிடமோ, சுத்திகரிப்பாளிரிடமோ அல்லது உற்பத்தியாளரிடமோ விற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிவிட்டார்கள்.

6. இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்ட ஆன் லைன்சூதாடிகளிடம் அசல் சந்தை வணிகர்கள் கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்ய ஒரு பைசா கூட விலை கொடுக்கவில்லை. கரும்பைத் தின்ன கூலியும் வாங்கிவிட்டார்கள்.

7. வரலாற்றில் முதல் முறையாக விற்பவன் வாங்குபவனுக்கு விலை கொடுக்கிறான். ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு தலை கீழ் விலை 3 முதல் 4 அமெரிக்க டாலர்.

8. மூன்றாவது பத்தியை மீண்டும் வாசித்தால் இது இயற்கை நீதி என்பதை ஏற்றுக் கொள்வீர்கள்.



9. இதனால் அசல் சந்தையில் பெரிய நன்மை ஏற்படாது. ஆனால் லைன் சந்தையில் மாட்டிக் கொண்டவர்களை மட்டுமல்ல ஆன்லைன் சந்தையையே புரட்டிப் போட்டுவிடும்.



10. பாரதம் போன்ற நாடு அன்றாடம் ஆன் லைன் விலை பார்த்து விலை வீழ்ச்சியடையும் நாள் வரை காத்திருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய முடியாது. 

11. முறையாகத் திட்டமிட்டு பல மாதங்களுக்கு முன் கொள்முதல் ஒப்பந்தம் செய்யும் போது, கச்சா எண்ணெய் பல மாதங்களுக்கு முந்தைய விலையில் (ஒப்பந்த விலையில்) தான் வந்திறங்கும்.
நலந்தா செம்புலிங்கம்
22.04.2020

Thursday, 16 April 2020

இயலார் அயலார் அல்ல!!


இயலார் அயலார் அல்ல!!

      வ.சுப. மாணிக்கனாரின் கொடைவிளக்கு 10 இயல்களை உடையது.  உலகக் கடன் என்பது பத்தாம் இயல். அதில் மாணவர், செல்வர் ,ஆசான்கள் என ஒவ்வொரு தரப்பினரும் வள்ளல் அழகப்பருக்கு  எப்படி நன்றி செலுத்த வேண்டும் என எடுத்துரைப்பார். அதில் கொடை நன்றி என்ற தலைப்பில் ஒரு  பாட்டு

“காதற்ற வூசியும் வாராமை கற்றுணர்ந்த//
 தீதற்ற ஞானி திருவுளத்தை - ஓதுற்றுக் //
கூட்டிய செல்வத்துள் கூடும் கொடைசெய்து //
காட்டுவோம் நன்றிக் கடன்”

நாமும் கொடை செய்வது தான்வள்ளல் அழகப்பருக்கு  செலுத்தும் நன்றிக் கடனாகும் என்கிறார் வ.சுப.மா.

   ஒவ்வொருவரும் கொடைஞராகவேண்டுமென்ற வ.சுப.மாணிக்கனாரின் கனவு நனவாகும் சுழலை கொரோனா நெருக்கடி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கொடை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் பல நல்ல உள்ளங்களில் ஊற்றெடுத்து, உடனடியாக கொடையளித்தும் வருகிறன்றனர்.  கொடையாளிகள் பொருள்களை  பயனாளிகளுக்கும் கொடுக்கும் படத்தை சமூகஊடகங்களில் வெளியிடுகிறார்கள்.  அந்தப் படங்கள் தான் இந்தக் கொடை மனப்பான்மையைத் தொற்றாக எட்டுத் திசையிலும் பரவ வைத்திருக்கிறது, மகிழ்ச்சி.  ஆனால் பயனாளிகள் படத்தை வெளியிடலாமா? என்றொரு நெருடலும் மெல்ல எழுகிறது.

    இந்த நெருடலுக்கு இடமளிக்காமல் தேவகோட்டை கலவைச் சோறு அமைப்பினர் உதவி தேவைப்படும் நிலையில் உள்ளவர்களைக் கண்டறிந்து உதவி வருகின்றனர். அவர்களை இந்த தொண்டு அமைப்பினர் பயனாளிகள் என்று கூட குறிப்பிடவில்லை. இயலார் அயலார் அல்ல என்றே சுட்டுகிறார்கள். 

    கலவைச் சோறு அமைப்பினரும் பொருள் தொகுப்புகளை வழங்கும் படங்களை வெளியிடுகிறார்கள், மிகுந்த அக்கறையோடு பயனாளிகளின் முகம் தெரியாமல் படம் வெளியிடுகிறார்.  இவர்களின் படங்களில்அந்த பயனாளிகளின் முகத்தை மறைப்பதிலும் ஒரு கலைநயம் மிளர்கிறது, ஆம் அந்த பயனாளிகளின் முகத்தின் மேல் ஒரு நட்சத்திரத்தைச் சூட்டியுள்ளார்கள்.

     
      நட்சத்திரக் கொடையாளர்கள் வாழிய!!
நலந்தா செம்புலிங்கம்
16.04.2020

குறிப்பு: கலவைச் சோறு ஒரு மொழிப் பண்பாட்டு அமைப்பாகும்.  இளம் படைப்பாளிகளை வெளிக் கொணர்வதில் இவ்வமைப்பு மிகச் சிறப்பாக செயலாற்றி வருகிறது.  தலைவர்: எபினேசர் மனோகரன்  (அலைபேசி 9865274849) செயலர்: இமயம் சரவணன்   (அலைபேசி 9585313161) பொருளாளர்: திருக்குறள்தாசன் இராசேந்திரன் (அலைபேசி 9363124665)




Tuesday, 14 April 2020

"வீறியெழு" தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து

"வீறியெழு" தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நாளும் கோளும்
வானியலும் தேர்ந்தவர்
கண்ட. கொண்டாடிய
சித்திரைப் புத்தாண்டு
நன்னாளில் வாழ்த்துக்கள்!



உயிர்க் கொல்லி
வைரஸ் கொரோனா !
நேர்மை கொல்லும்
வைரஸ் லஞ்சம் !
முன்னது தொற்றிக் கொல்லும்
பின்னது தொற்றித் தொடர்ந்து
நீங்காது நின்றும் கொல்லும்!
வாங்குபவனை மட்டுமல்ல
கொடுப்பவனையும் அடிமையாக்கும்
வினோத போதை வைரஸ்!



புதியதும் பழையதும்
வாட்டி வதைக்குது
சார்வரியே வா! வா!
வீறியெழு எனும் நற்றமிழ்
பெயர் கொண்ட புத்தாண்டே
பழைய புதிய வைரசுகளை
வழியனுப்பி நல்வாழ்வளிக்க
பீடு நடை போட்டு வா!!


நலந்தா செம்புலிங்கம்
14.04.2020

Sunday, 5 April 2020

அழகப்பர் இலக்கியத்தில் புதிய மலர்!!

அழகப்பர் இலக்கியத்தில் புதிய மலர்!!


  
நான் அறிந்தவரையில் அழகப்பர் பற்றி நூல்கள் மிகவும் குறைவு.  ஆங்கிலத்தில் இரண்டு தமிழில் உரைநடையில் வாழ்க்கை வரலாறு ஒன்று தமிழாக்க வரலாறு ஒன்று கவிதை நூல்கள் மூன்று உருவக வடிவ வாழ்க்கை வரலாறு ஒன்று. கொடைவிளக்கிற்கு உரை நூல் ஒன்று.

    இன்றைய காலத்திற்கேற்ற, கைபேசி வழயில் இலட்சக் கணக்கானோரை எளிதில் சென்றடையக் கூடிய இசை ஆல்பங்கள்  இரண்டு. கவிதாயினி வித்யா லட்சுமி மற்றும் உதவி இயக்குநர் இஸ்மாயில் வெளியிட்டுள்ளார்கள்.  

        கவிதைகள் நிறைய உள்ளன.  இப்பொழுதும் புதிது புதிதாய்ப் பூத்துக் கொண்டிருக்கின்றன.  அந்த வகையில் அழகப்பர் இலக்கியத்தில் பூத்த புதுமலர் கவிஞர் கண்டனூர் அரசி பழனியப்பனின் அழகப்பர் திருத்தசாங்கம்.
   
        திருத்தசாங்கம் பத்துப் பாக்களால் ஆனது.  ஒவ்வொரு பாவிலும் ஒவ்வொரு உருவகத்தால் பாட்டுடைத் தலைவனைப் போற்றுவது தான் திருத்தசாங்கம்.  கவிஞர் அரசி பழனியப்பன் வள்ளல் அழகப்பரை


           


             1. நாமம்
             2. நாடு
             3. நகர்
             4. ஆறு
             5.  மலை
             6. தேர்
             7. படை
             8. பறை
             9. தார்
           10. கொடி



என்ற பத்து உருவங்களால் போற்றுகிறார்.

ஒரு மனிதனுக்கென ஆறு இருக்க முடியுமா? நாடு நகரத்திற்குத் தானே ஆறு இருக்க முடியும் ? அழகப்பருக்கென ஆறு இருக்கிறதாம் அது மாணவர்களின் அறிவு எனும் ஆறாம்.

மனம் தான் வள்ளலின் மலை என்கிறார்.  இதைச் சொல்ல ஒரு கவிஞன் தேவையில்லை. பிறகு, அரசி பழனியப்பன் எங்கே முத்திரையைப் பதிக்கிறார்? அழகப்பரின் மனம் எனும் மலைக்கு நிகரான ஓங்கிய மலை எங்கே? என்ற கேள்வியால் அழகப்பரின் மனம் தான் உலகிலேயே ஓங்கிய மலை நிலைநாட்டுகிறார்.

அழகப்பர் நடந்த மாபெரும் சபைகளிலெல்லாம் ஆயிரம் மாலைகள் சூட்டப்பட்டன, எனினும் அவருக்கான மாலை எது? பல்கலைக் கழகங்கள் மாணவர்களுக்கு சூட்டும் பட்டங்கள் தான் அழகப்பரின் மாலையாம்.

அழகப்பர் ஈடுயிணைல்லா வள்ளல் பல் தொழில் அதிபர் கல்விமான்.  அவருக்குப் படையெல்லாம் தேவையா?  தேவையோ தேவையில்லையோ அழகப்பருக்கு ஒரு பெரிய படை இருந்ததாம் அது மாணவர்கள் எனும் வெற்றிப் படையாம்.

இவை எல்லாவற்றையும் விஞ்சுகிற உருவகம், கொடி எனும் உருவகம், இந்த தசாங்கத்தின் நிறைவுப் பாடலாக அமைகிறது.  இது  அரசி பழநியப்பனுக்கு கவிதா மண்டலத்திலும் குறிப்பாக அழகப்பர் இலக்கியத்திலும் தனித்த நிலைத்த இடத்தை பெற்றுத் தரும்.

ஒரு கொடி அதன் நிறத்தாலோ அது ஏந்திப் பட்டொளி வீசும் இலச்சினையாலோ அறியப்படுகிறது.  அழகப்பர் கொடியின் நிறத்தைப் பற்றியோ இலச்சினை பற்றியோ கவிஞர் அரசி பழநியப்பன் எதுவும் குறிப்பிடவில்லை, ஏனென்றால் கொடையறம் தான் அழகப்பரின் கொடியாம்.

இது நிச்சியமாக கவிஞரின் தந்தை அமரர் மகாகவி அரசியின் மனதை நிறைக்கும் தமிழ்ப் பா தான் ஐயமில்லை.

வள்ளல் அழகப்பர் திருத்தசாங்கம்
நாமம்
கூட்டை விரும்பாத கோலக் கிளியேநம்
பாட்டுடைய வள்ளல்பேர் மாண்புரைப்பாய் - போற்றும்
அலகில் கொடையால் அகிலம் புரந்த
அழகப்பர் என்பதுவே யாம்
நாடு
வண்ணப் பசுங்கிளியே! மாண்பார் அழகப்பர்
நண்ணிப் பிறந்ததிரு நாடுரைப்பாய்!- எண்ணில்
கொடைபுரிந்தார் நாடு குடியால்,பண் பாட்டு
நடையிலுயர் நல்லதமிழ் நாடு
நகர்/ஊர்
வான்பறக்கும் பைங்கிளியே! வள்ளல் அழகப்பர்
தான்பிறந்த நன்னகரம் தானுரைப்பாய் !- வான்தழுவு
கோட்டைகளால் ஓங்குசெல்வக் கோட்டையூர் செட்டிமக்கள்
நாட்டிலுயர் வள்ளல் நகர்
ஆறு
மழலை மொழிகின்ற வண்ணக் கிளியே!
அழகப்பர் ஆறதுவும் யாதாம்?- உளத்தே
செறிவாகி மாணவரின் சீரை உயர்த்தும்
அறிவுகளே வற்றாத ஆறு
மலை
மலைக்கும் அழகுடைய பைங்கிளியே! வள்ளல்
நிலைக்கு நிகர்மலையை நீசொல் !- உலகில்
இனிதோங்கு மாமலைதான் ஏதுநிகர்?வள்ளல்
மனமே உயர்ந்த மலை.
தேர்/ஊர்தி
கூரலகுப் பைங்கிளியே! கோமான் அழகப்பர்
தேரதனைச் சற்றே தெரிவிப்பாய் - காரைநகர்க்(கு)
அன்(று)ஈந்த கல்வி அறுவடைசெய் சோலைகளின்
தென்றல் அவரூரும் தேர்
படை
சாய்ந்து நடைபயிலும் தத்தையே! வள்ளலுக்கு
வாய்ந்த படையை மகிழ்ந்துரைப்பாய்! - வாய்ந்தசெல்வம்
ஆனவரை கல்விக்கே அள்ளிக் கொடுத்ததனால்
மாணவரே வெற்றிப் படை
பறை/முரசு
காண இனிய கவினார் பசுங்கிளியே!
தானக் கொடைஞர்பறை சாற்றிடுவாய்- ஞானமருள்
வேதங்கள் போலும் வியன்பல் கலைக்கழகப்
பாடங்கள் கொட்டு பறை

தார்
கொஞ்சுமொழி அஞ்சுகமே! கோமான் அழகப்பர்
நெஞ்சமகிழ் தாரெதுவோ நீயுரைப்பாய் !- விஞ்சுமுயர்
பட்டங்கள் மாணவர்க்குப் பல்கலையார் சூட்டுவதே
இட்டமலர்த் தாராம் இவர்க்கு
கொடி
பச்சைக் கிளியே! நம் வள்ளல் அழகப்பர்
மெச்சு புகழ்க்கொடியை விண்டுரைப்பாய்! - சற்றும்
தடையின்றிக் கல்விக்கே தாளாற்றித் தந்த
கொடையறமே ஏத்து கொடி.
அரசி .பழனியப்பன்
05.04.2020

Friday, 10 January 2020

வாசிப்பு இயக்கங்கள் கவனிக்க வேண்டிய உத்தி!

           
வாசிப்பு இயக்கங்கள் 
கவனிக்க வேண்டிய உத்தி!!

செங்கோல் செலுத்தும் கவியரசன்: காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தில் பாரதியும் இளம் நண்பர்களும் இடமிருந்து வலம்: அ.மு.க.மு.க.கறுப்பன் செட்டியார்


ராய.சொக்கலிங்கன், பாரதிசொ.முருகப்பா, 

கி.நாராயணன் செட்டியார். பின்னால்: மு.நடராசன்; சிறுவன் பெயர் தெரியவில்லை
       

         புவிக்கு புவி ஈர்ப்பு ஆற்றல் உண்டு, இயல்பானது.

          எழுத்துக்களுக்கும் எழுத்து ஈர்ப்பு ஆற்றல் உண்டு, ஆனால் அது இயல்பாக எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை.



        அத்தகைய ஆற்றல் வாய்க்கப் பெற்றவர் சமூக வலைத்தளங்களிலும் ஏராளமான பத்திரிகைகளிலும் முத்திரை பதித்துவரும்  கவிதாயினி தேனம்மை லெட்சுமணன்.இவருடைய எழுத்துக்கள் பெரும்பாலும் சுயானுபவத்திலிருந்து மலர்கின்றன.  இவருடைய எழுத்தின் களங்கள் விரிந்து பரந்துள்ளன.  எந்தக்  களத்தையும் எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லும் ஆற்றல் பெற்றவராகவுள்ளார்.  எழுத்து நூலாக வெளிவருவது தான் எழுத்தாளருக்குப் பெரிய அங்கீகாரம்.  தேனம்மை லெட்சுமணன் 19 நூல்களை எழுதியுள்ளார்.



         அச்சு நூல்கள் சில, மின் அச்சு நூல்கள் சில, இரண்டு வடிவங்களிலும் சில.  இந்த கலவைக்குக் காரணம் அவர் மின் ஊடகங்களிலிருந்து எழுந்த நாற்று.  வலைப் பக்கங்கள் இவரின் தாய் வீடு.

          சமையல் குறிப்புகள், கோலங்கள், புகைப்படங்கள் என ஆரம்ப நிலை படைப்புகளிலிருந்து, கவிதைகள்,  நூல் விமர்சனங்கள், பயண இலக்கியங்கள், நேர்காணல்கள், எனப் பல நிலைகளில் வகை வகையான  படைப்புகளை  தினந்தோறும்  வலைப் பக்கத்தில் ( BLOG SPOT)பதிவு செய்து வருகிறார். வகைவாரியாக  சும்மா, டைரி கிறுக்கல்கள், கோலங்கள், THENU's RECIPES, CHUMMA என ஐந்து வலைப்பக்களில் எழுதிவருகிறார். இதுவரை சுமார் 7000 பதிவுகள் ( ஆம்,ஏழாயிரம் பதிவுகள் தான்) செய்து 20 லட்சம் பார்வைகள் பெற்றுள்ளார்.

            அதனினும் ஒரு படி மேலே சென்று இவருடைய வலைப்பக்கத்திலேயே மற்றவர்களையும் பதிவை செய்ய வரவேற்கிறார்.   சனிக் கிழமை தோறும் ஒரு நண்பரைப் பதிவு செய்ய வைப்பதற்காகவே சாட்டர்டே ஜாலி கார்னர் என்றொரு துணைப்  பக்கம்   ஏற்படுத்தியுள்ளார். மை கிளிக்ஸ் என்றொரு துணைப் பக்கத்தில் புகைப் படங்களைப் பதிவு செய்கிறார்.

             இன்று இவரைப் பற்றி நான் இவ்வளவு நீண்ட பதிவு எழுதக் காரணம் இவருடைய ஒரு சின்ன முகநூல் பதிவு தான். 

            கம்பன் கழகம் மாணவர்களுக்கு நடத்தும் பேச்சுப் போட்டிக்கு இவரை நடுவராகப் பணித்திருந்தார்கள்.  இவரும் மாணவர்களைப் போல கம்பராமாயண நூலைத் தேடினார்.  என் சொந்த சேகரிப்பிலுள்ள சொ. முருகப்பா பதிப்பித்த இராமகாதை நூலை இவருக்கு வாசிக்கக் கொடுத்தேன்.  அந்த நூல் கைமாற்றுக்கு அவரது முகநூல் பக்கத்தில் எனக்கு நன்றியுரைத்துள்ளார்.  அது வெறும் நன்றியுரையாக இருந்தால் அதற்கு முகநூல் தேவையில்லை.  அந்த நன்றியுரையோடு ஒரு போட்டியையும் நடத்தியுள்ளார்.



             அது வேறொன்றுமல்ல அந்தப் பதிப்பிலுள்ள ஒரு பாடல் நாம் வழக்கமாக படிக்கும் பாடத்திலிருந்து ஒரு சொல் வேறுபட்டடிருக்கிறது.  அந்த வேறுபட்ட சொல் என்ன என்பது தேனம்மை லெட்சுமணன் முகநூலில் வைத்த கேள்வி.  அது சாதாரணக் கேள்வி தான், அந்த கேள்வியின் மூலம்  பல தசாப்பங்கள் முன் வெளிவந்த ஒரு சிறந்த நூல் பலருக்கு அறிமுகமாகிறது..

           கம்பராமாயணப் பதிப்புகள் பல வெளிவந்துள்ளது போதும், சொ. முருகப்பா பதிப்பு தனித்து நிற்கும் சிறப்புடையது.  அந்த பதிப்பை மாமேதை சொ. முருகப்பா உருவாக்கிய நோக்கத்தையும், அப்பதிப்பின்  செழுமையையும் அறிந்தால் தான் அதன் உயரம் நமக்கு தெரியும்.   நமக்குக் கிடைத்திருக்கும் கம்பராமாயணம் பன்னிரண்டாயிரம் பாடல்களைக் கொண்டது, ஆனால்  இடைச்செருகல்கள் நிறைந்தது.  இந்த இடைச் செருகல்களை வடிகட்டுவதில் பல கம்பன் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.  இடைச் செருகல்களை அடையாளம் காட்டுவதிலும் அறிஞர்கள் வேறுபடுகிறார்கள்.  சொ. முருகப்பா தேர்ந்தெடுத்த 3248 பாடல்களில் இராமகாதையை முழுமையாக தொகுத்துவிடுகிறார்.  அந்தத் தொகுதியும்  மிக நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது.

                                   
       இந்தப் பதிப்புப் பணியை  சொ,முருகப்பா தன் வாழ்நாளிலேயே நிறைவு செய்திருந்த போதிலும் இப்பதிப்பு வெளிவரும் நேரத்தில் அவர் காலமாகிவிட்டார்.  இந்தப் பதிப்பின் சிறப்பு குறித்தும் சொ. முருகப்பாவின் இந்த மாபெரும் இலக்கியப் பணி குறித்தும் தமிழ்க் கடல் இராய சொ அவர்களின் முன்னுரை மிக தெளிவாக உரைக்கிறது.

        சினிமாவின் வெற்றி அது நமது அன்றாட வாழ்க்கையில் கலந்துவிட்டது தான், திரையரங்கங்களுக்கு அப்பாலும் அது கோலோச்சுகிறது.  புத்தகங்களைப் பற்றி மற்ற ஊடகங்களிலும் பேசப்பட வேண்டும்.  கவிதாயினி தேனம்மை லெட்சுமணன் அற்புதமாக இராமகாதை சொ, முருகப்பா பதிப்பைப் பற்றி நடத்தி சின்னஞ்சிறிய போட்டி அத்தகைய உத்தியாகக் கருதுகிறேன்.  வாசிப்பு இயக்கங்கள் கவனிக்க வேண்டிய உத்தி.

நலந்தா செம்புலிங்கம்
10.01.2020


Wednesday, 8 January 2020

இடி நம்மை கேட்டுத் தலையில் விழுவதில்லை



இடி நம்மை கேட்டுத்  
     தலையில் விழுவதில்லை!!        

      மக்கள் குடியரசுத் தலைவர், மாணவர்களின் நாயகர், நம்பிக்கை தூதர் எனப் பன்முகம் கொண்டவர் அப்துல் கலாம்.  

               அவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுப்படுதற்கு முன்னரே ஊடகங்களால் கொண்டாடப்பட்டவர்.
        
                அது அவருடைய அவருடைய சுயசரிதையான அக்னிச் சிறகுகள் நூலின் வெற்றியை தொடர்நத விளைவு எனக் கருதுகிறேன்

                ஊடகங்கள் கொண்டாடுவதற்கு முன்னரேயே அப்துல் கலாம் அவர்களின் மாண்பையும் திருக்குறள் பற்றையும் உணர்ந்து கொண்டாடியவர் நம் நெஞ்சில் நிற்கும் அழகப்ப இராம் மோகன் ஐயா.

                ஏன் நினைவு சரியாக இருக்குமேயானால் 1999 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அக்னிசிறகுகள் வெளியிடப்பட்டது. 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  சென்னை புத்தகத் திருவிழாவில் அக்னிசிறகுகள் பரபரப்பாக விற்பனையானது. அக்னிசிறகுகள் நூல் கல்லூரிகளுக்குள் காட்டாற்றாற்று வெள்ளமாகப் பாய்ந்ததுஒரு லட்சம் புத்தகங்கள் விற்பனை என்ற தமிழ் பதிப்புலகம் நினைத்துப் பார்த்திராத இலக்கை வென்றதுஅப்துல் கலாம் இளைஞர்களின் நாயகரானார் அதன் விளைவாக ஊடகங்களாலும் கொண்டாடப்பட்டார்.

               சென்னை புத்தகத் திருவிழாக்கு பிறகு  வாசகர்களுக்கு அப்துல் கலாம் அவர்கள் நூலில் கையெழுத்திட்டுத் தரும் நிகழ்ச்சி  சென்னையின் புகழ் அடையாளங்களுள் ஒன்றான ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்ததுஅது காலை நிகழ்ச்சிஅங்கு தமிழ் நாட்டின் புத்தக உலகமே கூடியிருந்தது.

              அன்று மதியம் 2.00 மணியளவில் அந்த  ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடைக்கு ஓரிரு கிலோ மீட்டர் தொலைவில் காமராசர் அரங்கில் ஒரு பெரிய திருக்குறள் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுவும் அப்துல் கலாம் கலந்து கொள்ளும் விழா தான்ஆனால்  ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையில் கண்ட புத்தகத் துறையே கூடியிருந்ததுமதியம் காமராசர் நடைபெற்ற திருக்குறள் விழாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய புத்தகத் துறையினர் தான் வந்திருந்தோம்அந்தத் தேதியில் அக்னிச் சிறகுகள் நூல் தான் பிரபலம்.
 
                மதியம் 2.00 மணிக்கு இலக்கிய விழாவாஒரு இலக்கிய விழாவை கொளுத்தும் வெயில் நேரத்தில் நடத்தினால் யார் வருவார்கள்? எனப் பலரும் புருவங்களை உயர்த்தினார்கள்

                யார் வந்தாலும் வராவிட்டாலும்அந்த விழாவிற்கு போக வேண்டிய கடப்பாடு எனக்கு இருந்ததுதினமணி நாளிதழும் எங்கள் புத்தகக் கடையின்  திருக்குறள்.ஆர்வமிக்க மூன்று வாசகர்களும் தான் அந்தக் கடப்பாட்டிற்கு காரணமானவர்கள்

                இந்தத் திருக்குறள் விழாவைப் பற்றி அதற்கு முந்தைய மூன்று நாட்கள் தினமணி மிகச் சிறப்பான அறிமுகத்தையும்  முன்னோட்டத்தையும் தொடர்ந்து வழங்கியதுஅந்த விழாவிற்குள் பல நிகழ்ச்சிகள் அவற்றுள் முக்கியமானது தமிழ் மறை திருக்குறள் Thirukural: The Holy Scripture  எனும் நூல் வெளியீட்டு விழா என்பதையும் அந்த நூலின் சிறப்புகளையும் மிக மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்ட அந்த விழா பற்றிய முன்னோட்டத்தையும் மிகத் தெளிவாக வெளியிட்டதுஅவை மூன்று நாட்கள் தொடராக வெளியிடப்பட்டதால் மிகப் பெரிய எதிர்பபார்ப்பையும் ஏற்படுத்தியது. தினமணியின் கட்டுரைகள் என்னை சுண்டி இழுத்ததுஅந்த நூலைப் பற்றியும் விழாவைப் பற்றியும் பல வாசகர்களிடம் எடுத்துச் சொன்னேன்நூலின் விலை 600/-  ஆனால் அந்த நூலின் தாள் அச்சமைப்பு போன்றவற்றிற்கே அதற்கு மேலும் கொடுக்கலாம்உள்ளடக்கம் மதிப்பிடவே முடியாததுஎனினும் அன்றைக்கு 600/- ரூபாய் என்பது சற்று அதிகமாகத் தெரிந்ததுஅதனால் மூன்றே மூன்று வாசகர்கள் தான் என்னிடம் முன்பணம் தந்தார்கள்.

                   ஈடு இணையில்லாத அந்த  தமிழ் மறை திருக்குறள் Thirukural: The Holy Scripture எனும் இருமொழி நூலை பைபிள் தாளி்ல் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட அற்புதமான நூலை பதிப்பித்தவரும் அந்த விழா நடத்தியவரும் மிக அண்மையில் (12.12.2019) நம்மை விட்டுப் பிரிந்த திருக்குறள் நெறியில் வாழந்த அழகப்பா ராம் மோகன் ஐயா தான்.

                   அந்த நூலைப் பற்றிய தகவல்கள் இந்த நூலில் வேறு சிலரால் பதிவு செய்யப்பட்டிருப்பதால், நானும் அதை எடுத்துரைப்பது கூறின கூறலாகிவிடும்அந்த நூல் வெளியீட்டு விழாவை ஏறத்தாழ இருபதாண்டுகளுக்குப் பிறகும் ன்னால் மறக்க முடியவில்லை.

                 மீண்டும் நினைவூட்டுகிறேன்அது மதியம் 2.00 மணியளவில் தொடங்கும் விழாதினமணியில் விழா முன்னோட்டத்தை படித்திருந்ததாலும் நான்கு புத்தகங்களுக்கு பதிவு செய்திருந்ததால், விழா நிர்வாகி ஒருவருடன் தொலைபேசியில் பேசியிருந்ததாலும் மற்ற விழாக்களைப் போல கூட்டம் சேர்ந்த பிறகு கூட்டத்தை ஆரம்பிப் போம் என்ற எண்ணத்திற்கு இடமளிக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்அதனால் 1.50 மணியளவில் அரங்கிற்கு வந்து சேர்ந்தேன். இருந்தாலும் கூட்டமெல்லாம் கூடும் என்ற நம்பிக்கை இல்லைஆனால் விழா தொடங்குவதற்கு முன்னரே அரங்கம் ஏறத்தாழ முழுமையாக நிரம்பிவிட்டதுஅதற்குக் காரணம் இந்த விழா அமைப்பாளர்கள் தமிழகமெங்கும் சுற்றி வந்து எல்லா திருக்குறள்  அமைப்பினரை இனங்கண்டு  அந்த விழா குறித்தும் நூல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்த திருக்குறள் தொண்டர்களை அழைத்து தான். அது சாதாரணக் கூட்டம் அல்ல, ஆழ்கடலில் மூழ்கி  எடுத்த முத்துக்களைப் போன்றோரின் கூட்டம்அத்தகைய கூட்டம் மதியம் 2.00 மணியல்ல நடுநிசி 2.00 மணிக்கும் திருக்குறளிற்காகக் கூடும்.

            அந்தக் கூட்டத்தில் வழக்கமான வரவேற்புரை தலைமையுரை நூல் வெளியீடு போன்றவற்றோடு நிறைவு பெற்றிடவில்லைகூட்டு வழிபாடு தியானம் எல்லாம் நடந்ததுஒவ்வொன்றும் நிகழ்ச்சி நிரலில் குறித்தபடி  கடிகார இயக்கம் போல  நிமிடக் கணக்கு பிசிறாமல் சீராக நிகழ்ந்தது.

              அந்தக் கூட்டம் சில படிப்பினைகளைத் தந்தது. ஒரு விழாவிற்கு பெருங் கூட்டம் கூட வேண்டுமெனில் மிகப் புகழ்பெற்ற பிரமுகர், உணர்ச்சிகரமாக அவை ஆளும் பேச்சாளர்  போன்றரை வைத்து விழாவை நடத்த வேண்டுமென பொதுவாக நினைக்கிறோம். அதுவும் ஓரளவு சரியானது தான்ஆனால் ஒரு விழாவிற்கு நல்ல நோக்கம் இருக்க வேண்டும் அல்லது நல்ல நோக்கத்திற்காகத் தான் விழா எடுக்கப்பட வேண்டும் என்பது தான் இராம் மோகன் ஐயா அளித்த முதல் படிப்பினை. நோக்கம் எவ்வளவு சிறந்ததாயினும்  அதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது இரண்டாவது பிடிப்பினைஇவற்றையெல்லாம் விட ஆகச் சிறந்த பிடிப்பினை விழாவிற்கு தகுதியானவர்களைத் தேடி அழைக்க வேண்டும் என்பதாகும்.

               இராம் மோகன் ஐயா அவர்கள், உலகெங்குமுள்ள திருக்குறள் ஆர்வலர்களைப் படையாகத் திரட்டி  பல ஆண்டுகள்  கடுமையாக உழைத்துதமிழ் மறை திருக்குறள் Thirukural: The Holy Scripture  எனும்  மிகச் சிறந்த தொகுப்பை
  உருவாக்கினார்கள்அந்த நூலின் வீச்சினால் ஐயா ஒரு மாபெரும் திருக்குறள் ஆர்வலர் என்ற குணநலத்திற்கும் அவர்களின்  மற்ற பல குணநலங்களை நம் உணராமல் இருந்துவிடுகிறோம்.

             திருக்குறளுக்கு அப்பாலும்  தமிழ் மொழி, தமிழ் இனம், இனத்தின் முன்னேற்றம்  என ஐயாவின் ஈடுபாடு கோபுரமாக உயர்கிறதுமாணவர் நலமும் முன்னேற்றமும் இவற்றுள் உட்கிளையாக உள்ளது.   தமிழால் வளம் கூட்டுக என்பது உலக தமிழ் மொழி அறக்கட்டளையின் தாரக மந்திரம்.  

              தமிழ் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இழந்த மேன்மையை மீட்கவும் அதனினும் மேலாக உயர்ந்த ஓங்க வேண்டும் என்பது ஐயாவின் பெருங்கனவுஅக்கனவு மெய்ப்பட  தமிழ் வட்டம் எனும் உலகளாவிய அமைப்பைத் தோற்றிவித்தார்கள்
அந்தத் தமிழ் வட்டம் உலகெங்கும் பிரிட்டிஷ் கவுன்சில், லயன்ஸ், ரோட்டரி அமைப்புகள் போல உலகெங்கும் கிளை விரித்து பரவ பல செயல் திட்டங்களும் வகுத்துள்ளார்கள்அறிவை வளர்க்கும்  நூலகம் படிக்கம் கணனி அறை எனப் பல உள்கட்டமைப்புகளைக் கொண்ட வள்ளுவர் அறிவகம் எனும் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பது ஐயாவின்  பெருங்கனவாகும்.   அதற்கு முன்னுதாரணமாக தமது சொந்த ஊரான கானாடுகாத்தான் (சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு) எனும் சிற்றூரில் ஒரு வள்ளுவர் அறிவகத்தை எழுப்ப விழைந்தார்கள்.

                       எந்தப் பணியையும் சீராகவும் செம்மையாகவும் திட்டமிட்டு நிறைவேற்றும் ஆற்றல் மிக்க ஐயா அவர்கள் கானாடுகாத்தானில் வள்ளுவர் அறிவகம் எழுப்ப கடந்த சில ஆண்டுகளாக அரும்பாடுபட்டு வந்தார்கள்முதலில் தமக்குச் சொந்தமான மனையை இப்பணிக்கு அர்ப்பணித்தார்கள்அந்த வள்ளுவர் அறிவகத்திற்கு கோடிக் கணக்காக ரூபாய் திட்டத்தில் ஒரு கட்டிடம் ஒன்றைக் கட்டிட விழைந்தார்கள்அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்த வரும் வேளையில் தான் அவர்கள் கொடிய நோய்க்கு ஆளானார்கள்மருத்துவ சிகிச்சைகளுக்கும் வலிகளுக்கிடையிலும் வள்ளுவர் அறிவகப் பணியிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார்கள். முன்னேற்பாடுகள் பெரும்பாலும் நிறைவேறிய நிலையில் வள்ளுவர் அறிவக அடிக்கல் நாட்டுவிழாவிற்கு ஒரு நாளை உத்சேதமாகக் குறித்தார்கள்நோயும் சிகிச்சையும் அத்திட்டத்தை ஊடுருவினஅடிக்கல் நாட்டு விழா ஒத்திவைக்கப்பட்டதுநோய் தீவிரமானது, ஐயாவும் வள்ளுவர் அறிவக அடிக்கல் நாட்டுவிழாப் பணியில் தீவிரமானார்கள்நோயின் கொடுமை ஐயா அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளியதுஐயா அவர்கள் தான் தனது மண்ணைத் தொட முடியாத நிலை என்றாலும் அமெரிக்காவில் இருந்தவாறே நடத்தப்பட வேண்டும் என தீர்மானித்தார்கள்.



                   இராம் மோகன் ஐயாவுடன் திருக்குறள் போல ஒன்றிய அவர் தம் துணைவியார் மீனாட்சி ஆச்சி அவர்கள் கானாடுகாத்தான் வந்து வள்ளுவர் அறிவக அடிக்கல் நாட்டு விழாவை 26.12.2019 நடத்த எல்லா ஏற்பாடுகளை செய்தார்கள்ஐயா அவர்கள் காணோலி வாயிலாக அமெரிக்காவிலிருந்து கானாகாத்தான் விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது.

                     ஐயகோ, விழாவிற்கு பதிநான்கு நாட்களுக்கு முன்னர் 12.12.2019 ஐயாவை இழந்தோம். திருக்குறளை கற்று உணர்ந்து அந்நெறியில் வாழ்ந்த இராம் மோகன் ஐயாவுடன் நாமும் பழகியிருக்கிறோம் அவர்களின் அப்பழுக்கில்லா அன்பிற்குப் பாத்திரமாகியுள்ளோம் என்பது நம் வாழ்க்கை பேறாகும்.

                     அவர்களை நாம் இழக்கப் போகிறோம் என்பதை  அறிந்திருந்தோம் எத்தனை ஆறுதல் சொல்லிக் கொண்டாலும் இழப்பு இழப்பு தான். விழா கைக்கு எட்டும் தொலைவில் இருந்த வேளையில் நாம் ஐயா இழந்திருப்பது பேரிடி தான்.

                     என்ன செய்யஇடி நம்மை கேட்டுத் தலையில் விழுவதில்லை.

நலந்தா செம்புலிங்கம்
20.12.2019