Showing posts with label தேனம்மை லெட்சுமணன். Show all posts
Showing posts with label தேனம்மை லெட்சுமணன். Show all posts

Friday, 10 January 2020

வாசிப்பு இயக்கங்கள் கவனிக்க வேண்டிய உத்தி!

           
வாசிப்பு இயக்கங்கள் 
கவனிக்க வேண்டிய உத்தி!!

செங்கோல் செலுத்தும் கவியரசன்: காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தில் பாரதியும் இளம் நண்பர்களும் இடமிருந்து வலம்: அ.மு.க.மு.க.கறுப்பன் செட்டியார்


ராய.சொக்கலிங்கன், பாரதிசொ.முருகப்பா, 

கி.நாராயணன் செட்டியார். பின்னால்: மு.நடராசன்; சிறுவன் பெயர் தெரியவில்லை
       

         புவிக்கு புவி ஈர்ப்பு ஆற்றல் உண்டு, இயல்பானது.

          எழுத்துக்களுக்கும் எழுத்து ஈர்ப்பு ஆற்றல் உண்டு, ஆனால் அது இயல்பாக எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை.



        அத்தகைய ஆற்றல் வாய்க்கப் பெற்றவர் சமூக வலைத்தளங்களிலும் ஏராளமான பத்திரிகைகளிலும் முத்திரை பதித்துவரும்  கவிதாயினி தேனம்மை லெட்சுமணன்.இவருடைய எழுத்துக்கள் பெரும்பாலும் சுயானுபவத்திலிருந்து மலர்கின்றன.  இவருடைய எழுத்தின் களங்கள் விரிந்து பரந்துள்ளன.  எந்தக்  களத்தையும் எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லும் ஆற்றல் பெற்றவராகவுள்ளார்.  எழுத்து நூலாக வெளிவருவது தான் எழுத்தாளருக்குப் பெரிய அங்கீகாரம்.  தேனம்மை லெட்சுமணன் 19 நூல்களை எழுதியுள்ளார்.



         அச்சு நூல்கள் சில, மின் அச்சு நூல்கள் சில, இரண்டு வடிவங்களிலும் சில.  இந்த கலவைக்குக் காரணம் அவர் மின் ஊடகங்களிலிருந்து எழுந்த நாற்று.  வலைப் பக்கங்கள் இவரின் தாய் வீடு.

          சமையல் குறிப்புகள், கோலங்கள், புகைப்படங்கள் என ஆரம்ப நிலை படைப்புகளிலிருந்து, கவிதைகள்,  நூல் விமர்சனங்கள், பயண இலக்கியங்கள், நேர்காணல்கள், எனப் பல நிலைகளில் வகை வகையான  படைப்புகளை  தினந்தோறும்  வலைப் பக்கத்தில் ( BLOG SPOT)பதிவு செய்து வருகிறார். வகைவாரியாக  சும்மா, டைரி கிறுக்கல்கள், கோலங்கள், THENU's RECIPES, CHUMMA என ஐந்து வலைப்பக்களில் எழுதிவருகிறார். இதுவரை சுமார் 7000 பதிவுகள் ( ஆம்,ஏழாயிரம் பதிவுகள் தான்) செய்து 20 லட்சம் பார்வைகள் பெற்றுள்ளார்.

            அதனினும் ஒரு படி மேலே சென்று இவருடைய வலைப்பக்கத்திலேயே மற்றவர்களையும் பதிவை செய்ய வரவேற்கிறார்.   சனிக் கிழமை தோறும் ஒரு நண்பரைப் பதிவு செய்ய வைப்பதற்காகவே சாட்டர்டே ஜாலி கார்னர் என்றொரு துணைப்  பக்கம்   ஏற்படுத்தியுள்ளார். மை கிளிக்ஸ் என்றொரு துணைப் பக்கத்தில் புகைப் படங்களைப் பதிவு செய்கிறார்.

             இன்று இவரைப் பற்றி நான் இவ்வளவு நீண்ட பதிவு எழுதக் காரணம் இவருடைய ஒரு சின்ன முகநூல் பதிவு தான். 

            கம்பன் கழகம் மாணவர்களுக்கு நடத்தும் பேச்சுப் போட்டிக்கு இவரை நடுவராகப் பணித்திருந்தார்கள்.  இவரும் மாணவர்களைப் போல கம்பராமாயண நூலைத் தேடினார்.  என் சொந்த சேகரிப்பிலுள்ள சொ. முருகப்பா பதிப்பித்த இராமகாதை நூலை இவருக்கு வாசிக்கக் கொடுத்தேன்.  அந்த நூல் கைமாற்றுக்கு அவரது முகநூல் பக்கத்தில் எனக்கு நன்றியுரைத்துள்ளார்.  அது வெறும் நன்றியுரையாக இருந்தால் அதற்கு முகநூல் தேவையில்லை.  அந்த நன்றியுரையோடு ஒரு போட்டியையும் நடத்தியுள்ளார்.



             அது வேறொன்றுமல்ல அந்தப் பதிப்பிலுள்ள ஒரு பாடல் நாம் வழக்கமாக படிக்கும் பாடத்திலிருந்து ஒரு சொல் வேறுபட்டடிருக்கிறது.  அந்த வேறுபட்ட சொல் என்ன என்பது தேனம்மை லெட்சுமணன் முகநூலில் வைத்த கேள்வி.  அது சாதாரணக் கேள்வி தான், அந்த கேள்வியின் மூலம்  பல தசாப்பங்கள் முன் வெளிவந்த ஒரு சிறந்த நூல் பலருக்கு அறிமுகமாகிறது..

           கம்பராமாயணப் பதிப்புகள் பல வெளிவந்துள்ளது போதும், சொ. முருகப்பா பதிப்பு தனித்து நிற்கும் சிறப்புடையது.  அந்த பதிப்பை மாமேதை சொ. முருகப்பா உருவாக்கிய நோக்கத்தையும், அப்பதிப்பின்  செழுமையையும் அறிந்தால் தான் அதன் உயரம் நமக்கு தெரியும்.   நமக்குக் கிடைத்திருக்கும் கம்பராமாயணம் பன்னிரண்டாயிரம் பாடல்களைக் கொண்டது, ஆனால்  இடைச்செருகல்கள் நிறைந்தது.  இந்த இடைச் செருகல்களை வடிகட்டுவதில் பல கம்பன் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.  இடைச் செருகல்களை அடையாளம் காட்டுவதிலும் அறிஞர்கள் வேறுபடுகிறார்கள்.  சொ. முருகப்பா தேர்ந்தெடுத்த 3248 பாடல்களில் இராமகாதையை முழுமையாக தொகுத்துவிடுகிறார்.  அந்தத் தொகுதியும்  மிக நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது.

                                   
       இந்தப் பதிப்புப் பணியை  சொ,முருகப்பா தன் வாழ்நாளிலேயே நிறைவு செய்திருந்த போதிலும் இப்பதிப்பு வெளிவரும் நேரத்தில் அவர் காலமாகிவிட்டார்.  இந்தப் பதிப்பின் சிறப்பு குறித்தும் சொ. முருகப்பாவின் இந்த மாபெரும் இலக்கியப் பணி குறித்தும் தமிழ்க் கடல் இராய சொ அவர்களின் முன்னுரை மிக தெளிவாக உரைக்கிறது.

        சினிமாவின் வெற்றி அது நமது அன்றாட வாழ்க்கையில் கலந்துவிட்டது தான், திரையரங்கங்களுக்கு அப்பாலும் அது கோலோச்சுகிறது.  புத்தகங்களைப் பற்றி மற்ற ஊடகங்களிலும் பேசப்பட வேண்டும்.  கவிதாயினி தேனம்மை லெட்சுமணன் அற்புதமாக இராமகாதை சொ, முருகப்பா பதிப்பைப் பற்றி நடத்தி சின்னஞ்சிறிய போட்டி அத்தகைய உத்தியாகக் கருதுகிறேன்.  வாசிப்பு இயக்கங்கள் கவனிக்க வேண்டிய உத்தி.

நலந்தா செம்புலிங்கம்
10.01.2020


Monday, 15 April 2019

காதல் வனம்: முட்சாலையில் பனிச்சறுக்குப் பயணம்!


காதல் வனம்: முட்சாலையில் பனிச்சறுக்குப் பயணம்
********************
காதல் வனம்
ஆசிரியர் : தேனம்மை லெட்சுமணன்
பதிப்பாளர்:  படி வெளியீடு (டிஸ்வகரி புக் பேலஸ்)
சென்னை - 78        
அலைபேசி: 87545 07070 , 99404 46650
விலை ரூ.100/-
         எழுத்தாளரும் வலைப்
பதிவருமான திருமதி தேனம்மை லெட்சுமணன், சமூக வலைத்தளங்களில் தனக்கென  ஒரு பெரிய வட்டத்தை உருவாக்கிக்கொண்டவர். இப்போது பல மேடைகளுக்கும் அழைக்கப்படுகிறார், மேடைகளில் மட்டுமல்ல நேரிலும் படபடவென வேகமாகப் பேசுவார்.  அந்த வேகத்தை அவரது பேச்சில் மட்டுமல்ல எழுத்திலும் காணலாம் வேகத்திற்குக் காரணம் வேறொன்றுமில்லை, சுமையை அறிவுச்சுமையை இறக்கி வைக்கிற அவசரம் தான்.
              அவருடைய அண்மைப் படைப்பு காதல் வனம் எனும் நாவல்.  அந்த நாவல் அச்சசுப் புத்தகமாகவும் மின் புத்தமாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது.  இந்த இரண்டு வடிவங்களிலும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் அந்த நாவல் வெளிவந்திருப்பதே படைப்பையும், படைப்பாளியையும், பதிப்பாளரையும் நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. அது எளிதில் கை கூடக்கூடிதில்லை, அதற்குப் பின்னர் அயராத தேடலும் உழைப்பும் இருக்கிறது.
            மிகவும் நெருடலான கதைக் கரு.  அந்த நெருடல் கருவும் தானாக வளர்கிறது ஒன்றிற்கு மேல் ஒன்றாகக்  குவிகிறது.  இந்தக் கருக்களுக்கு அப்பாற்பட்டு ஒரு சிக்கல் வேறு முளைக்கிறது.  அதற்கு விஞ்ஞானம் மூலம் ஒரு தீர்வு தெரிகிறது, ஆனால் நடைமுறைப்படுத்த கயிற்றின் மேல் நடக்க வேண்டியுள்ளது.  முட்கள் நிறைந்த இந்தக் கதைச் சாலையில் பனிச்சறுக்கு போல கதையை நகர்த்திக் கொண்டு போகிறார் நாவலாசிரியர் தேனம்மை லெட்சுமணன்.  இது எப்படி சாத்தியமாகிறது?
     இந்தப் பனிச்சறுக்குப் பயணத்தைச் சாத்தியமாக்குவது தத்ரூபமான களக்காட்சிகள் தான்.  அதற்கு உயிரூட்டுபவை துல்லிமான
களத்தகவல்கள் தான்.
              தேனம்மை லெட்சுமணன் ஆயிரம் சாளரங்களை திறந்து வைத்து ஆழ்வார் இலக்கியத்தியிலிருந்து, பாட்டி வைத்தியம்,  கரு முட்டை தானம், கருப்பப்பை தானம்,  டாங்கோ நடனம் வரை அகிலத்திலின் சந்து பொந்துகளில் புதைந்து கிடக்கும் தகவல்களை எல்லாம் சேகரித்த வண்ணம் இருக்கிறார் --   ஐந்து வகையான வலைப்பக்கங்களில் அவர் எழுதியுள்ள ஆறாயிரத்திற்கும் அதிகமான வலைப் பதிவுகளே அதற்கு சான்று.
   
       
           களத்தகவல்களால் அச்சு அசலாக நிதர்சன உலகத்தையே காட்டக் கூடியவர்கள் Arther Hailey யும்  பாலகுமாரனும்.  அவர்கள் கூட ஒரு நாவலில் ஒரு களத்தைத் தான் காட்டுவார்கள்.  தேனம்மை லெட்சுமணனின்  காதல்வனம் பல தளங்களைக் காட்டுகிறது.  கதையின் புதிர்முடிச்சு அவிழ்க்கப்படுகிறதா மேலும் முறுக்கேறுகிறதா? என்ற மயக்கத்தை கடைசிப் பக்கம் வரை சலனமின்றி தக்க வைத்துக் கொண்டு கதையை நகர்த்துகிறர்.
         நாவல் நெடுகிலும் ஆங்கில சொற்கள், சொற்றோடர்கள். நாவலாசிரியர் சற்று கவனம் செலுத்தியிருந்தால் 50% கலப்புச் சொற்களையாவது தவிர்த்திருக்கலாம்.
             
நலந்தா செம்புலிங்கம்
15.04.2019

பின் குறிப்பு: இது காலத்தால் தான் பின்குறிப்பு, ஆனால் உள்ளபடியே இது ஒரு முன்னேற்றக் குறிப்பு தான்.

        இந்த நூல் மதிப்புரை எழுதியதற்கு ஒராண்டிற்குப் பிறகு இந்த நாவல் ஒலி வடிவமும் பெற்றுள்ளது (ஆடியோ புக்). ஒலிப் புத்தகத்தின் இணைப்பு https://pocketfm.app.link/jioARE8WL5