Sunday 5 April 2020

அழகப்பர் இலக்கியத்தில் புதிய மலர்!!

அழகப்பர் இலக்கியத்தில் புதிய மலர்!!


  
நான் அறிந்தவரையில் அழகப்பர் பற்றி நூல்கள் மிகவும் குறைவு.  ஆங்கிலத்தில் இரண்டு தமிழில் உரைநடையில் வாழ்க்கை வரலாறு ஒன்று தமிழாக்க வரலாறு ஒன்று கவிதை நூல்கள் மூன்று உருவக வடிவ வாழ்க்கை வரலாறு ஒன்று. கொடைவிளக்கிற்கு உரை நூல் ஒன்று.

    இன்றைய காலத்திற்கேற்ற, கைபேசி வழயில் இலட்சக் கணக்கானோரை எளிதில் சென்றடையக் கூடிய இசை ஆல்பங்கள்  இரண்டு. கவிதாயினி வித்யா லட்சுமி மற்றும் உதவி இயக்குநர் இஸ்மாயில் வெளியிட்டுள்ளார்கள்.  

        கவிதைகள் நிறைய உள்ளன.  இப்பொழுதும் புதிது புதிதாய்ப் பூத்துக் கொண்டிருக்கின்றன.  அந்த வகையில் அழகப்பர் இலக்கியத்தில் பூத்த புதுமலர் கவிஞர் கண்டனூர் அரசி பழனியப்பனின் அழகப்பர் திருத்தசாங்கம்.
   
        திருத்தசாங்கம் பத்துப் பாக்களால் ஆனது.  ஒவ்வொரு பாவிலும் ஒவ்வொரு உருவகத்தால் பாட்டுடைத் தலைவனைப் போற்றுவது தான் திருத்தசாங்கம்.  கவிஞர் அரசி பழனியப்பன் வள்ளல் அழகப்பரை


           


             1. நாமம்
             2. நாடு
             3. நகர்
             4. ஆறு
             5.  மலை
             6. தேர்
             7. படை
             8. பறை
             9. தார்
           10. கொடி



என்ற பத்து உருவங்களால் போற்றுகிறார்.

ஒரு மனிதனுக்கென ஆறு இருக்க முடியுமா? நாடு நகரத்திற்குத் தானே ஆறு இருக்க முடியும் ? அழகப்பருக்கென ஆறு இருக்கிறதாம் அது மாணவர்களின் அறிவு எனும் ஆறாம்.

மனம் தான் வள்ளலின் மலை என்கிறார்.  இதைச் சொல்ல ஒரு கவிஞன் தேவையில்லை. பிறகு, அரசி பழனியப்பன் எங்கே முத்திரையைப் பதிக்கிறார்? அழகப்பரின் மனம் எனும் மலைக்கு நிகரான ஓங்கிய மலை எங்கே? என்ற கேள்வியால் அழகப்பரின் மனம் தான் உலகிலேயே ஓங்கிய மலை நிலைநாட்டுகிறார்.

அழகப்பர் நடந்த மாபெரும் சபைகளிலெல்லாம் ஆயிரம் மாலைகள் சூட்டப்பட்டன, எனினும் அவருக்கான மாலை எது? பல்கலைக் கழகங்கள் மாணவர்களுக்கு சூட்டும் பட்டங்கள் தான் அழகப்பரின் மாலையாம்.

அழகப்பர் ஈடுயிணைல்லா வள்ளல் பல் தொழில் அதிபர் கல்விமான்.  அவருக்குப் படையெல்லாம் தேவையா?  தேவையோ தேவையில்லையோ அழகப்பருக்கு ஒரு பெரிய படை இருந்ததாம் அது மாணவர்கள் எனும் வெற்றிப் படையாம்.

இவை எல்லாவற்றையும் விஞ்சுகிற உருவகம், கொடி எனும் உருவகம், இந்த தசாங்கத்தின் நிறைவுப் பாடலாக அமைகிறது.  இது  அரசி பழநியப்பனுக்கு கவிதா மண்டலத்திலும் குறிப்பாக அழகப்பர் இலக்கியத்திலும் தனித்த நிலைத்த இடத்தை பெற்றுத் தரும்.

ஒரு கொடி அதன் நிறத்தாலோ அது ஏந்திப் பட்டொளி வீசும் இலச்சினையாலோ அறியப்படுகிறது.  அழகப்பர் கொடியின் நிறத்தைப் பற்றியோ இலச்சினை பற்றியோ கவிஞர் அரசி பழநியப்பன் எதுவும் குறிப்பிடவில்லை, ஏனென்றால் கொடையறம் தான் அழகப்பரின் கொடியாம்.

இது நிச்சியமாக கவிஞரின் தந்தை அமரர் மகாகவி அரசியின் மனதை நிறைக்கும் தமிழ்ப் பா தான் ஐயமில்லை.

வள்ளல் அழகப்பர் திருத்தசாங்கம்
நாமம்
கூட்டை விரும்பாத கோலக் கிளியேநம்
பாட்டுடைய வள்ளல்பேர் மாண்புரைப்பாய் - போற்றும்
அலகில் கொடையால் அகிலம் புரந்த
அழகப்பர் என்பதுவே யாம்
நாடு
வண்ணப் பசுங்கிளியே! மாண்பார் அழகப்பர்
நண்ணிப் பிறந்ததிரு நாடுரைப்பாய்!- எண்ணில்
கொடைபுரிந்தார் நாடு குடியால்,பண் பாட்டு
நடையிலுயர் நல்லதமிழ் நாடு
நகர்/ஊர்
வான்பறக்கும் பைங்கிளியே! வள்ளல் அழகப்பர்
தான்பிறந்த நன்னகரம் தானுரைப்பாய் !- வான்தழுவு
கோட்டைகளால் ஓங்குசெல்வக் கோட்டையூர் செட்டிமக்கள்
நாட்டிலுயர் வள்ளல் நகர்
ஆறு
மழலை மொழிகின்ற வண்ணக் கிளியே!
அழகப்பர் ஆறதுவும் யாதாம்?- உளத்தே
செறிவாகி மாணவரின் சீரை உயர்த்தும்
அறிவுகளே வற்றாத ஆறு
மலை
மலைக்கும் அழகுடைய பைங்கிளியே! வள்ளல்
நிலைக்கு நிகர்மலையை நீசொல் !- உலகில்
இனிதோங்கு மாமலைதான் ஏதுநிகர்?வள்ளல்
மனமே உயர்ந்த மலை.
தேர்/ஊர்தி
கூரலகுப் பைங்கிளியே! கோமான் அழகப்பர்
தேரதனைச் சற்றே தெரிவிப்பாய் - காரைநகர்க்(கு)
அன்(று)ஈந்த கல்வி அறுவடைசெய் சோலைகளின்
தென்றல் அவரூரும் தேர்
படை
சாய்ந்து நடைபயிலும் தத்தையே! வள்ளலுக்கு
வாய்ந்த படையை மகிழ்ந்துரைப்பாய்! - வாய்ந்தசெல்வம்
ஆனவரை கல்விக்கே அள்ளிக் கொடுத்ததனால்
மாணவரே வெற்றிப் படை
பறை/முரசு
காண இனிய கவினார் பசுங்கிளியே!
தானக் கொடைஞர்பறை சாற்றிடுவாய்- ஞானமருள்
வேதங்கள் போலும் வியன்பல் கலைக்கழகப்
பாடங்கள் கொட்டு பறை

தார்
கொஞ்சுமொழி அஞ்சுகமே! கோமான் அழகப்பர்
நெஞ்சமகிழ் தாரெதுவோ நீயுரைப்பாய் !- விஞ்சுமுயர்
பட்டங்கள் மாணவர்க்குப் பல்கலையார் சூட்டுவதே
இட்டமலர்த் தாராம் இவர்க்கு
கொடி
பச்சைக் கிளியே! நம் வள்ளல் அழகப்பர்
மெச்சு புகழ்க்கொடியை விண்டுரைப்பாய்! - சற்றும்
தடையின்றிக் கல்விக்கே தாளாற்றித் தந்த
கொடையறமே ஏத்து கொடி.
அரசி .பழனியப்பன்
05.04.2020

No comments:

Post a Comment