^^^^^^^^^^^^^^^^^^^ ///////////////////////// ^^^^^^^^^^^^^^^^^^^ //////////////////////// ^^^^^^^^^^^^^^
கோவைக்குப் புகழ் சேர்க்கும் பாரம்பரியமிக்க கிக்கானி பள்ளியில் அண்மையில் (19.09.2018) ஒரு விழா கோலாகமாக நடைபெற்றது.
அந்த விழா, சமூக நலம் விழையும் கூட்டமா?, இலக்கியம் இயம்பும் தமிழ்க் கூட்டமா? நெகிழ்வு மழையில் திக்குமுக்காட வைத்த குடும்பக் கூட்டமா? என வகைப்படுத்துவது எளிதல்ல.
நமது பெருமைக்குரிய பண்பாட்டிற்கு அடிவேரான குடும்பப் பாசம் தான் அந்த விழாவின் அடிநாதம். அவ்விழாவில் இலக்கியப் பொழிவுகள் கவரி வீசின. நல்லாசிரியர்களைக் கொண்டாட வேண்டும் எனும் சமூக நலம் தான் அந்த விழாவைஅலங்கரித்த சிம்மாசனம். அது தான் தலைமை ஆசிரியர் ஜெகன்னாதன் நினைவு விருதின் முதலாண்டு விருது வழங்கும் விழா.
ஜெகன்னாதன் மாஸ்டர் |
கோவை மாவட்டம், சுல்தான்பேட்டையில் 1936 ஆம் ஆண்டில் பிறந்த தலைமை ஆசிரியர் ஜெகன்னாதன் தொண்டாமுத்தூர் அரசுப் பள்ளி, கிக்கானி பள்ளி, டி.ஏ. இராமலிங்கம் செட்டியார் உயர்நிலைப் பள்ளி, சி.பி.எம் சகுந்தலா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியராக, உதவித் தலைமை ஆசிரியராக, தலைமை ஆசிரியராக . எனப் பல நிலைகளில் பல ஆண்டுகள் கல்விப் பணியாற்றினார். அவரிடம் 30, 40, 50 ஆண்டுகளுக்கு முன்னர் பயின்றவர்களும் அவர் தம்முள் ஏற்படுத்திய தாக்கத்தை மகிழ்வோடு எடுத்தியம்புகின்றனர்.
ஜெகன்னாதன் மாஸ்டர் என்று இன்றும் அன்போடு அவரது பழைய மாணவர்களால் நினைவு கூரப்படும் தலைமை ஆசிரியர் ஜெகன்னாதன் இந்த ( 2018 ஆம்) ஆண்டு பிப்ரவரி மாதம் தமது 82 ஆம் அகவையில் இயற்கை எய்தினார். அந்த இறுதி நாட்களிலும் குறிப்பாக அவர் நினைவிழந்த பொழுதிலும், அவர் இயல்பாக இருப்பதாகவே கருதி அவரிடம், அவர் குடும்பத்தினர், காட்டிய அணுக்கத்தை ஒரு மருத்துவர் விவரித்த போது மெய் சிலர்த்துப் போனேன்.
அந்தப் பாசப் பிணைப்பை அவருடைய மகனும் மகள்களும், அவர் காலத்திற்குப் பிறகும் அவருடைய நெஞ்சுக்கினிய வழியிலேயே வெளிபடுத்த தீர்மானித்தனர். தலைமை ஆசிரியர் ஜெகன்னாதனின் நெஞ்சுக்கினயது கல்வியும் கற்பித்தலும் தானே?
டாக்டர் பால வெங்கட் |
இன்று, தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் நிலை ஒரு திரிசங்கு நிலை தான். பள்ளிக் கல்வியில் தனியார் சுயநிதிப் பள்ளிகள் அரசுப் பள்ளிகள் எனும் இரு துருவங்களுக்கிடையில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
தனியார் பள்ளிகளில் முறையாக கல்வி அளிக்கப்படுவதாகவும். அவை நல்ல தரமாக இருப்பதாகவும் ஒரு தோற்றம் மக்கள் மனதில் வலுவாகப் பதிந்துள்ளது. ஆனால் கட்டணங்கள் தான் வரம்பு மீறும். உயர் நடுத்தர வகுப்பினருக்கே கையைச் சுடும்.
அரசுப் பள்ளிகளுக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அரசு கொட்டிக் கொடுப்பதற்கு நிகராக அவை கல்விச் சேவை அளிப்பதில்லை என்று ஒரு நிலை. அதனால் தான் வசதி வாய்ப்பு இல்லாத அடித்தட்டு மக்களுக்கும் கூட ஏதேனும் ஒரு தனியார் பள்ளியில் தான் தம் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டுமெனத் தவிக்கின்றனர். இந்த இருள் நிலையிலிருந்து நாம் மீண்டு விடுவோம் என அங்காங்கே ஒரு சில நல்லாசிரியர்கள் அரிய நட்சத்திரங்களாக நம்பிக்கை அளிக்கிறார்கள்.
அரிதாக இருக்கும் அத்தகைய நம்பிக்கை நட்சத்திர ஆசிரியர்களை ஊக்குவித்தால் இன்னும் பல நம்பிக்கை நட்சத்திர ஆசிரியர்கள் உருவாகுவார்கள், அவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக அரசுப் பள்ளிகள் மேன்மையுறும். அதன் விளைவாக சமூகத்திற்கு குறிப்பாக அரசுப் பள்ளிகளைச் சார்ந்திருக்கும் மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும். அதுவே தலைமை ஆசிரியர் ஜெகன்னாதனுக்கு பொறுத்தமான அஞ்சலியாக இருக்குமென அவரது குடும்பத்தினர் தீர்மானித்தனர். அத்தீர்மானத்தின் நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றும் அரசுப் பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் விருதும் 50,000 ரூபாய் பணமுடிப்பும் வழங்க முடிவு செய்தனர். அவ்விருதை இந்த ஆண்டே விருதை வழங்குவதென அதனையும் தலைமை ஆசிரியர் ஜெகன்னாதன் பிறந்த நாளான செப்டம்பர் 19 ஆம் நாளே வழங்குவதெனவும் முடிவு செய்தனர். முதலாண்டு விருதிற்கு காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பீட்டர் ராஜாவும் திருச்சி மாவட்டம் பூவாளூர் திரு சதீஸ் குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இது வரை சொன்னது பாயிரம்! விழாவோ காவியம்!.
திருக்குறள் நேசர் சி. ராஜேந்திரன் IRS |
விருதாளர் பீட்டர் ராஜா |
விருதாளர் சதீஸ் குமார் |
திருமதி பர்வீன் சுல்தானா |
விருது வழங்கும் விழாக்களில் பாராட்டுரை சிறப்புரை ஏற்புரைகளைத் தான் பார்க்கிறோம் இந்த விழாவில் காணிக்கைவுரை என ஜெகன்னாதன் மாஸ்டரின் மூன்று மாணவர்கள் தம் ஆசரியருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அந்த பழைய மாணவர்களும் தத்தம் துறையில் உலக அளவில் பேசப்படும் டாக்டர் ராஜ சேகர் (பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர்) டாக்டர் ராஜசபை (ஆர்த்தோ மருத்துவர்) அன்ன பூர்ணா ஹோட்டல் குழுமத்தின் தலைவர் சீனிவாசன் ( உலக உணவக அமைப்பின் தலைவர்) சாதனையாளராகத் திகழ்ந்தது விழாவிற்கு மேலும்மெருகேற்றியது. இந்தப் பழைய மாணவர்களின் காணிக்கைவுரை விழாவை சமூக விழாவாகவும் உயர்த்தியது.
இந்த விழா அமைப்பாளர்களின் நண்பர்கள் தான் அரங்கில் பெரும்பான்மையினர், அவர்கள் ஜெகன்னாதன் மாஸ்டரை அறிந்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள், குறிப்பாக, நிகழ்ச்சிக்கு திருமதி பர்வீன் சுல்தானா அவர்களின் சிறப்புரையை ஆவலோடு எதிர்பார்த்து வந்த சுமார் 500 மாணவர்களுக்கு ஜெகன்னாதன் மாஸ்டரை அறிமுகப்படுத்த வேண்டாமா? சுமார் 1000 பேர் கூடிய அரங்கில் வெகு சிலர் தானே விருதாளர்களை அறிவார்கள், மற்றவர்களுக்கும் விருதாளர்களை அறிமுகம் செய்ய வேண்டாமா? இந்தத் தேடல்களுக்குத் தீர்வாக நிகழ்ச்சியின் இடையில் ஜெகன்னாத ன் மாஸ்டர் மற்றும் இரண்டு விருதாளர்கள் குறித்த ஆவணப் படங்களும் திரையிடப்பட்டன.
தலைமையுரையாற்றிய தென்மண்டல மத்திய கலால், சுங்க வரிகள் தீர்ப்பாயத் துணைத் தலைவர் திரு சி. ராஜேந்திரன், திருக்குறளில் மிகுந்த ஈடுபாடுமிக்கவர். அவருடைய தலைமையுரை திருக்குறள் இலக்கியப் பொழிவாகவே திகழ்ந்தது. இன்றைய மாணவர்களின் அறிவுக் கூர்மைப் பாராட்டினார், அவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாம் என்றார். கல்வி சிறக்க குறிப்பாக பள்ளிக் கல்வி சிறக்க எளிய வழிகளை முன்மொழிந்தார். கல்வியாளர்கள் அவரை வழிமொழிந்தால் நாடு பயனுறும். திரு சி. ராஜேந்திரன் அவர்களின் உரையை தினமலர் விரிவாக வெளியிட்டுள்ளது (தினமலர் 23.09.2018, திருச்சிப் பதிப்பு பக்கம் 5)
சிறப்புரையாற்றிய திருமதி பர்வீன் சுல்தானா அவையோரை தமிழால் கட்டிப் போட்டார், பின்வரிசைகளில் இருந்த மாணவர்களை சுண்டி இழுத்தார். ஜெகன்னாதன் மாஸ்டரின் பேராளுமையையும் அவரோடு தாம் பழகியதையும் நெகிழ்வோடு விவரித்தார்.
பார்வையாளர்கள் கரங்களில் "ஆசிரியர்களைக் கொண்டாடுவோம்" |
இந்த விழாவை விஜயா பதிப்பகத்தார் எழுத்து வடிவிலும் ஆவணமாக்கினார்கள். ஜெகன்னாதன் மாஸ்டர் மற்றும் விருதாளர்களைப் பற்றிய குறிப்புகளோடு கல்விச் சிந்தனைகளையும் உள்ளடக்கிய ஆசிரியர்களைக் கொண்டாடுவோம் என்ற சிற்றேடு இவ்விழாவில் வெளியிடப்பட்டது.
ஒரு குடும்பம் தம் தலைவனின் நினைவை எப்படிப் போற்ற வேண்டும் என்பதற்கு இவ்விழா நல்ல முன்னுதாரணமாகத் திகழ்கிறது. ஒரு ஆசிரியர் எத்தகைய வழியில் பணியாற்றினால் தலைமுறைகள் தாண்டியும் மாணவர்கள் நெஞ்சில் நிற்க முடியும் என்பதை இந்த விழா தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது. நாடு உயர கல்வி உயர வேண்டும் கல்வி உயர நல்லாசரியர்களைக் கொண்டாட வேண்டும் என்பதை செயலில் காட்டியிருக்கிறார்கள் ஜெகன்னா தன் மாஸ்டரின் மகன் டாக்டர் ஜெ. பால வெங்கட சுப்பிரமணியனும் மகள்கள் ஆசரியை திருமதி ஜெ. மீனா மற்றும் ஆசிரியை திருமதி ஜெ. பால விஜய லட்சுமி.
விழாப் பணிகளில் ஒவ்வொரு அங்குலத்தையும் பார்த்துப் பார்த்து அழகுற செதுக்கிய டாக்டர் பால வெங்கட் ஒரு விஷயத்தை மட்டும் அனேகமாக இருட்டடிப்பே செய்துவிட்டார். அது தான் விருதாளர்களுக்கு வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு. இதைப் பற்றி, விழா குறித்த அறிவிப்பிலோ அழைப்பிதழிலோ ஒரு சிறு குறிப்பு கூட இல்லை. அது அவரது தன்னடக்கம், நான் இதை வெளிச்சத்திற்குக் கொண்டு வராவிட்டால் ஒரு நல்ல முன்னுதாரணம் பதிவாகமல் போய்விடும். பொறுத்துக் கொள்ளுங்கள், டாக்டர்!
நலந்தா செம்புலிங்கம்
24.09.2018