Thursday 28 June 2018

கல்லும் சொல்லும் திருப்பெருந்துறை !!

                                              கல்லும் சொல்லும் திருப்பெருந்துறை  !!

                 

      தியானம் என்றால் என்ன? புத்தகங்களுக்குள் தேடிப்  பார்த்திருக்கிறேன்.  அது கைவரக் கூடிய ஒன்று தான் ஆனால் எனக்குக் கை கூடவில்லை என்ற தன்னிலையைப் புரிந்து கொண்டேன். உண்மையில் எனக்குப் பெரிய தேடலும்  இல்லை.

      என்னுடைய தேடலின்மைக்கு. வகை வகையான  போலிச் சாமியார்கள் தான் பெரிதும் காரணமாவார்கள்.வணிக நோக்கமுடைய பயிற்றுநர்கள் அடுத்த காரணமாவர்கள்.    தியானம் செய்யும் போது அலைபேசி அழைப்பிற்காக இடைவேளை விடும் வேடிக்கை மனிதர்கள். இவர்கள் அளவு கூட மனதை ஒருமைப்படுத்தமுடியாத  ஆனால் தியானத்தை தவம் என சொல்லிக் கொள்ளும் பத்தாம் பசலிகள் எனப் பலர் கூட்டணி சேர்ந்து நான் தியான மார்க்கத்தைப் புறக்கணிக்கக்  காரணமாகி விட்டார்கள்.  

       நானும் சில முறை தியானப் பயிற்சி முயன்றிருக்கிறேன்.  கோவை பெர்க்ஸ் பள்ளியில் உள்ள பிரமிடினுள் முயற்சித்த போது மட்டும் ஒரு புதிய அனுபவம் ஏற்பட்டது.  அதனை இனிய அனுபவம் என்று தான் சொல்ல முடிந்தது. அதற்கு மேல் எடுத்துரைக்க முடியவில்லை.

         இரண்டு வாரங்களுக்குப் பிறகு அந்த பிரமிடிற்குச்   செல்வதற்காகவே கோவை சென்றேன். பிறகு கோவை போகும் போதெல்லாம் பிரமிடிற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டேன்.  அந்தப் பழக்கமும் பின்னர் மெல்லக் குறைந்து விட்டது.
                      பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழுவாகத் திருப்பெருந்துறையையும் வேறு இரண்டு தலங்களையும் தரிசிக்க ஒரு நாள் பயணமாகச் சென்றோம். அங்கு நடை திறப்பதற்காகக் காத்திருந்த வேளையில் முன் மண்டபத்தில் அமைந்திருந்த சிற்ப வேலைப்பாடுகளை சற்று ரசித்தோம்.  நடை திறந்ததும் சுவற்றில் எறியப்பட்டப் பந்து போல ஆலயத்தினுள் பாய்ந்த வேகத்தில் வாகனத்திற்குத் திரும்பினோம்.

     அந்தப் பயணத்தின் பயனே சிற்ப வேலைப்பாடுகளை ரசிப்பதற்காகவே எந்தக் குழுவிலும் சேராமல் தனியாக திருப்பெருந்துறைக்குப் போக வேண்டும் என்ற மென்மையான கடப்பாடு ஏற்பட்டது தான்.

          மென்மையான கடப்பாடு என்றால் நாம் நமது வீட்டில் ஒரு கடவுளின் பெயரால் எடுத்து வைக்கும் உண்டியலிலிருந்து கடனாகப் பணம் எடுத்துக் கொள்வது தான்.  இந்தக் கடனுக்கு வட்டி கிடையாது கால வரையறை கிடையாது கடனைத் திருப்பிச் செலுத்தப் போதியளவு பணமும் இரண்டு மடங்கு மனமும் வரும் போது நாம் கடனைத் திருப்பிச் செலுத்துவோம்.  இதைத் தான் மென்மையான கடப்பாடு என்கிறேன்.

     திருப்பெருந்துறை தரிசனம் பற்றிய இவ்வகையான மென்மையான கடப்பாடு குறித்த நினைவூட்டல் நண்பர் மூர்த்தி வாயிலாக வந்தது. அவர் ஒரு புதன் கிழமை திருப்பெருந்துறைக்குச் சென்றார்.  அங்கே ஆலய வாசலிலிருந்து என்னுடன் அலைபேசியில் பேசினார். அந்த புதன் கிழமையைத் தொடரந்த முதல் ஞாயிற்றுக் கிழமை திருப்பெருந்துறைக்குப் புறப்பட்டுவிட்டேன் ஒரு திருவாசகப் புத்தகத்துடன். ஆனாலும் சிற்பக் கலை ஆர்வம் தான் அந்தப் பயணத்திற்கு எண்பது விழுக்காடு காரணம்.

       நான் இறைவழிபாட்டில் பெரிய ஈடுபாடில்லாமலிருப்பது என் தாயார் தான் முதல் காரணம்.  என் தாயார் இறைவழிப்பாட்டில் மிக மிக அதிகமாக தோய்ந்தவர். என் தாயார் வாழ்க்கையில் பல சோதனைகளைச் சந்தித்தார்கள் ஆனால் சிலவற்றை தான் அவர்களால் வெல்ல முடிந்தது எனினும் அவர்களுடைய இறைநேயம் கூடியதே தவிர கடைசிவரை குறையவில்லை.
     
      என் தாயாரின் ஆழந்த இறைவழிபாடே எனக்கு இன்னும் மூன்று பிறவிக்கு வரும் என நண்பர்களிடம் வேடிக்கையாகச் சொல்வேன். உள்ளபடியே நானும் இறை உண்மை மீது அணு அளவும் ஐயமில்லாதவன் தான் அத்துடன் ஊழ்வினைக் கோட்பாட்டில் அசைக்க முடியாத நம்பிக்கையுடையவன்.. இறைவழிபாடுகளில் நான் பேரீடுபாடு இல்லாமல் இருப்பதற்கு இதுவே இரண்டாவது காரணம் முதல் காரணத்தை விட முதன்மையான காரணம்.  எனது திருப்பெருந்துறைப் பயணத்திற்குப் பெரிதும் காரணம் சிற்பக் கலை ஆர்வம் தான் என்பதற்கு வேறு சான்று தேவையில்லையே?
    ஆனால் இந்தத் திருப்பெருந்துறைப் பயணம் நல்கிய அனுபவம், சித்தர் பாடல்களைப் போல இருந்தது.  ஒரே அனுபவத்திற்கு வெவ்வேறு தாக்கங்கள், ஆலயத்தினுள் ஒரு தாக்கம் வெளியில் வந்த பிறகு வேறொரு தாக்கம்.  முதலில் உள் அனுபவத்தைப் பார்ப்போம்.
      
      பொதுவாக ஆலயத்தினுள் நுழைந்ததும் பிள்ளையாரைக் கும்பிட்டுவிட்டோ குடும்பிடாமலோ சாமி சந்நதிக்குப் போவார்கள்.  நானும் அவ்வழக்கத்தையே கைகொள்ளயிருந்தேன், ஆனால் முன் மண்டபத்தை கடக்கும் போது சந்நதியிலிருந்து வெளியே வந்த ஒரு குடும்பத்தினருக்கு உள்ளூர்காரர் ஒருவர் சிற்ப வேலைப்பாடுகளை விளக்கிக் கொண்டு வழிநடத்தினார், நான் அவர்களைப் பின் தொடர்ந்தேன்.  அந்தக் குடும்பத்தினரோடு பிரகாரம் வந்தேன், பிறகு தான் சாமி சந்நதிக்குச் சென்றேன்.

    இவ்வளவு புகழ் பெற்ற ஆலயத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் பகல் சுமார் 11 மணியளவில் சாமி சந்நதியில் என்னையும் சேர்த்து  ஐந்து பேர் மட்டுமே இருந்தோம், (சற்று நேரம் கழித்து கூட்டம் அலைமோதியது) அதுவே உங்களுக்கு வியப்பையளிக்கும். அதைவிட பெரிய வியப்புகளும் தொடர்ந்தன. முதலில் அந்த ஐவர் யார் யார் என்பதை சொல்லிவிடுகிறேன். நான், மூன்று பேர் குடும்பம் ஒன்று மற்றும் ஒரு வயதான இசுலாமியப் பெருமாட்டி. அந்தக் குடும்பத்தினரோ நானோ அருச்சனை செய்யவில்லை.  அந்த இசுலாமியப் பெருமாட்டி தான் அருச்சனை செய்தார். பக்தர் அருச்சனை செய்தார் என்று சொன்னாலும் அந்த அருச்சனையை அருச்சகர் தான் செய்தார் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால் நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது அந்த ஆன்மநாதர் என்ற குருசுவாமிக்கு ஒரு இசுலாமியப் பெண்ணிற்காக சமசுகிருதத்தில் அருச்சனை செய்யப்பட்டது. பிறகு அந்த இசுலாமியப் பெருமாட்டியிடம், நீங்கள் இங்கே வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றேன், நான் வேறெதுவும் சொல்லவில்லை கேட்கவில்லை.  அந்த இசுலாமியப் பெருமாட்டி, தான் ஏன் வந்தேன் என்பதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என நினைத்திருப்பார் போலும், பொக்கை வாய், குழிவிழுந்த கன்னம், ஒளி வீசும் விழிகளோடு மிகுந்த மனநிறைவாகச் சொன்னர்: "ஒரு வேண்டுதல் வச்சிருந்தேன், அது நிறைவேறியது அதற்காகத் தான் அருச்சசனை செய்ய வந்தேன்" என்றார்.
          நான் ஆலயத்தினுள் பல மணி நேரம் இருந்தேன்.  உச்சிக்காலத்திற்குப் (மதியம் சுமார் 1 மணி) பிறகு நடை சாத்திய போதும் வெளிப் பிரகாரத்திலுள்ள குருந்த மரத்தடியில் திருவாசகம் படித்துக் கொண்டிருந்தேன். நான் முதல் முறை சாமி சந்நதியில் வழிபட்ட போது ஐந்து பேர் தான் இருந்தோம் ஆனால் பிறகு ஏராளமான பக்தர்கள் வந்தவாறு இருந்தனர்.  தனியாக வந்தார்கள், குடும்பமாக வந்தார்கள், குழுவாக வந்தார்கள்.அந்தக் குழுக்களிலும். 10, 15 அன்பர்கள் கொண்ட பெருங்குழுக்கள், 4, 5 பேர் கொண்ட சிறு குழுக்கள் என இரு வகையினர் இருந்தனர் சிறு குழுக்களாக வந்தவர்கள் தான் இசையோடு திருவாசகம் ஓதினார்கள். அந்தக் குழுக்கள் அவ்வாறு வழிபட்ட போது அவர்களோடு சேர்ந்து பாடி அவர்களின் குரலினிமையை அவர்களுக்கு உணர்த்தினேன்.

        ஆடை அணிமணிகளில் எவ்வித பகட்டும் இல்லாத ஒரு குடும்பத்தினர், அவர்களுள் குடும்பத் தலைவி கை கூப்பிய வண்ணம் வழிபாட்டார்.  இரண்டு பிள்ளைகளும் தம் பெற்றோரை சுற்றிச் சுற்றி வந்தன. குடும்பத் தலைவர் மட்டும் மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தார். எவ்வளவு மெல்லிய குரல் என்றால் அவரிடமிருந்து ஒரடி விலகியிருந்தால் கூட நமக்குக் கேட்காது.  ஆனால் அவரோ அருகில் யாரவது வந்து ஓங்கிப் பாட ஆரம்பித்தால் அவர் பாடுவதை நிறுத்திவிடுவார். அவர் அவ்வாறு ஒரு இடைவெளி விட்ட போது எந்தப் பதிகம் படிக்கிறீர்கள் என்று சொன்னால் நானும் புத்தகத்தில் பார்த்துக் கொள்வேன் என்றேன்.  ஒவ்வொரு பதிகத்திலும் ஒரு பாட்டுப் படிக்கிறேன் என்றார்.
     
            அவர் 50 ஆம் பதிகத்தை எடுங்கள் என்றார்.  சரி அவருடன் சேர்ந்து படிக்கப் போகிறோம் என உற்சாமடைந்தேன்.  இரண்டாவது பாட்டின் பொருள் என்ன என்று கேட்டார். நான் பாடல்களைப் பதம் பிரித்துப் படிப்பதற்கே சிரமப்படுபவன், இந்த நிலை இவர் பொருள் கேட்கிறாரே என்ன சோதனை என நினைத்தவாறே பொருள் சொல்ல முயன்றேன்.  மீண்டும் அந்தப் பாட்டைப் படித்தேன் கடைசி அடி தான் தெளிவாகப் புரிந்தது, மாணிக்கவாசகர் சிவனுடன் கலக்க வேண்டுமென விரும்புகிறார் என்றேன். என் பதிலைப் பற்றி அவர் எந்தக் கருத்தும் சொல்லவில்லை. அவர் ஒவ்வொரு அடிக்கு மிக மிகத் தெளிவாக விளக்கம் சொன்னார்.

              அவர் மெல்லிய குரலில் பாடியதாக முதலில் குறிப்பிட்டிருந்தேன்.  உண்மையில் அவர் மெல்லிய குரலில் நெக்குருகப் பாடினார். எத்தனையோ பேர்களுக்கு இனிய குரல்வளம் அமைந்திருக்கிறது எல்லோராலுமா நெக்குருகப் பாட முடிகிறது?  அந்த அன்பராலும் அவர் நெக்குருகப் பாடிய பாங்கிலும் “சொல்லிய பாட்டின் பொருள் உணரந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார்” என்ற மணிவாசகத்தின் பொருள் நெஞ்சில் பதிந்தது..

                   

         மற்றபடி பெரும்பாலான நேரம் சாமி சந்நதியில் திருவாசகத்தை மெளனமாக வாசித்தேன். ஆக மொத்தில் எனது பெருநோக்கமான சிற்பக்கலை ரசனைக்கு 30 விழுக்காட்டிற்கு குறைவான நேரத்தத்தைத் தான் செலவழித்தேன்.


          ஆலயத்தின் ஒவ்வொரு அங்குலத்தலத்திலும் வியக்க வைக்கும் சிற்ப வேலைப்பாடுகள்.  ஒரு தூணின் கலைநயத்தை ஆய்வு செய்ய ஒரு நிபுணருக்கு ஒரு வாரமாவது வேண்டும். எத்தனை மண்டபங்கள் எத்தனை தூண்கள் எத்தனை சிற்பங்கள்.  இவற்றின் அழகை ரசிப்பதற்கே இவ்வளவு நேரமும் காலமும் கலாரசனையும் தேவைப்படுமெனில் இவ்ற்றையெல்லாம் எப்படி உருவாக்கியிருப்பார்கள்?. மலைப்பாக இருக்கிறது.  ஒரு வேளை இதுவும் நரியைப் பரியாக்கிய கதை தானோ? களிமண்ணைப் பிசைந்தது தான் சிவபெருமான் கற்சிற்பங்களாக்கிவிட்டாரோ?


           
 



           பெரும்பாலான ஆலயங்களில் அருச்சகர்கள் காணிக்கை கேட்டு நச்சரிப்பார்கள் இங்கு அந்தச் சுவடே இல்லை.  சிற்ப வேலைப்பாடுகளுக்கு நிகராக பச்சிலை ஓவியங்கள் சுவர்களும் விதானங்களும் உள்ளன, நிறைய இடங்களில் சிதைந்துவிட்டன சிதைந்து கொண்டிருக்கின்றன. மஞ்சள் காவி அடித்த பிரகாரச் சுவர்களில் மக்கள் தம் கைவண்ணத்தில் கண்டதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள்.

நான் கோயிலில் உறைந்திருந்த பல மணி நேரத்தில் 250, 300 பக்தர்களாவது
வந்திருப்பார்கள்.  மிகச் சிலர் தான் யோசித்துப் பார்த்தால் 5 அல்லது 6பக்தர்கள்
தான் அலைபேசியில் படம் பிடித்தார்கள்.  சாமி சந்நதியில் தீபம் பார்க்கும் போது
ஒரே ஒரு பக்தரின் அலைபேசி தான் ஒலியெழுப்பியது. அலைபேசி தொல்லை
இவ்வளவு குறைவாக இருந்ததும் வியப்பாக இருந்தது.

          ஆலயத்துள் இருந்த சிற்பங்கள் மட்டும் மெய்சிலர்ப்பை அளிக்கவில்லை, ஆலயத்துள்
திருவாசக வாசிப்பும் ஒரு புதிய அனுபவத்தை நல்கியது.

              திருவாசகம் வாசிக்கும் போது எனக்கு  சில சொற்களுக்கு தான் பொருள் விளங்கும்
சில சொற்களுக்கு மேலோட்டமாக விளங்கும் சில சொற்களுக்கு அறவே பொருள் தெரியாது.
 ஆனால் ஆலயத்தினுள் திருவாசகத்தை வாசித்த போது ஒவ்வொரு சொல்லுக்கும் சற்று
கூடுதலாக பொருள் எனக்குத் தெரிந்தது. திருப்பெருந்துறை ஆலயம் கற்களால் மட்டும்
மேவப்படவில்லை, அமுதத் தமிழ் சொற்களாலும் மேவப்பட்டிருக்கிறது.
அவனருளால் அவன் சொற்களையும் அன்று நான் சற்று உணர்ந்தேன்.
                                      

          இதுவரை பார்த்தது உள் அனுபவம், இனி வருவது வெளி அனுபவம்.

           கனகசபை மண்டத்தில் உள்ளமாணிக்கவாசகரின் சிலைகளைப் பார்த்த போது ஒரு

மெய் சிலிர்ப்பு ஏற்பட்டது மற்றபடி அந்த எந்த வித்தியாசத்தையும் உணரவில்லை. ஆனால்

7 மணி நேரத்திற்கு பிறகு வெளியில் வந்த பிறகு தான் மனம் ஒரு இலகு நிலையை இழந்தது

வழக்கமான இருக்க நிலைக்குதிரும்பியதை உணர்ந்தேன். அதாவது இருக்கமான நிலை

தான் எனது இயல்பான நிலை என்பதையும் ஆலயத்தினுள் இலகுவான நிலையில்

இருந்திருக்கிறேன் என்பதையும் அறிந்தேன், வியந்தேன். இருக்கமான நிலையிலேயே

பழகிப் போயிருக்கிறேன்.  இதுவரை இந்த இலகு நிலை என்றவொன்றை அறியாதிருந்

திருக்கிறேன், நாடாதிருந்திருக்கிறேன், எனினும் அது எனக்கு வாய்த்தது, இது தான்

தாடுத்தாட்க்கொள்ளல் பேற்றின் முதல் அணுத் துகளோ?


நலந்தா செம்புலிங்கம்
28.06.2018






3 comments:

  1. Fine.you have agreed that every common man with their own problems cannot involve in meditation(which the g.......).I like the humour by saying that other sung ..

    Anyway you have visited a great Siva temple and enjoyed the pleasure & shared the same with us.valthukkal

    ReplyDelete
  2. உள்ளதையும், உள்ளத்தில் உள்ளதையும்....

    உள்ளது - மாணிக்கவாசகப் பெருமான் அமைச்சராக வந்து அடியாராகத் திரும்பியர். அவர் அமைச்சராக இருந்ததைக் காட்டும் திருமேனி வலமாகவும், அவர் அடியாரான திருமேனி இடமாகவும் உள்ளது. எனது இந்த அமைப்பைக் கொண்டு பார்த்தால், “இந்தக் கோயிலை வலமாக வரக் கூடாது, இடமாகச் சுற்றிவர வேண்டும்” என்ற எனது சிந்தனையைத் தங்கள் முன் வைக்கிறேன்.

    உள்ளத்தில் உள்ளது -
    இந்தியாவில் முகமதியர் கிருத்துவர் என்று யாரும் இல்லை. எல்லோரும் இந்துக்களே யாவர்.

    ReplyDelete
  3. பார்க்கவேண்டிய அருமையான கோயில்.பல முறை சென்றுள்ளேன். இப்போது உங்களுடன் மறுபடியும் சென்றுவந்த உணர்வு. நன்றி.

    ReplyDelete