Tuesday 19 June 2018

அரசுப் பள்ளி ஒன்று சமூக இயக்கமாகிறது!


அரசுப் பள்ளி ஒன்று சமூக இயக்கமாகிறது!
========================================


திரைப்படங்களின் செல்வாக்கு சற்று குறைந்தாலும் திரைப்படப் பாடல்களின் செல்வாக்கு என்றும் குறைவதில்லை.  அதிலும் மதுரையில் திரைப்படப் பாடல்கள் இன்றும் கோலோச்சிக் கொண்டு தான் இருக்கின்றன.











                                
                     திருமண வீடாக இருந்தாலும் சரி துக்க வீடாக இருந்தாலும் என  அததற்கென பொருத்தமான  திரைப்படப் பாடல் பட்டியல்கள் இருக்கும். அவை பிரம்மாண்டமான  ஸ்பீக்கர்கள்   மூலம்  ஒலிபரப்பப்படும்.  எட்டு வீதிக்கு பாடல்கள் கேட்க கூடிய ஒலி அளவு தான் குறைந்தபட்ச தகுதியாகும். 


மணமகளே மணமகளே வா வா (சாரதா)

வாராயென் தோழி வாராயோ   (பாசமலர் )

கல்யாண சாப்பாடு போடவா  ( மேஜர் சந்திரகாந்த் )

கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு  ( படகோட்டி )

கடவுள் அமைத்து வைத்த மேடை  ( அவள் ஒரு தொடர்கதை )


                அந்தப் பாடல்கள் அந்தந்த திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்டவை தான் என்றாலும்  அந்தப் பாடல்கள் திருமண விழாக்களுக்கு  மிகச் கச்சிதமாக பொருந்தும். அதைப் போல துக்க நிகழ்வுகள், வெற்றி விழாக்கள், வரவேற்புகள் என பல பட்டியல்கள் உள்ளன. அந்தப் பாடல்களைப் படைத்த கலைஞர்களைப் பாராட்டுவதா? கச்சிதமான பாடல்களைத் தேர்ந்தெடுத்த ரசிகர்களைப் (மைக் செட்கார்/ திருமண வீட்டார்) பாராட்டுவதா? எனத் திகைப்போம்.

                  
                    இந்தப் பாடல்கள் பெரும்பாலும்   டி.எம். செளந்தர் ராஜன், சுசீலா, சிவாஜி கணேசன், எம், எஸ். விசுவநாதன், கவிஞர் கண்ணதாசன் காலத்துப் பாடல்களாகத்   தான் இருக்கும். அடுத்த தலைமுறைக் கலைஞர்களான பாரதி ராஜா, ஏ. ஆர் ரஹ்மான், எஸ் பி பி. வைரமுத்து ஆகியோரின் கூட்டணியில் உருவான பாடல் ஒன்று இப்போது மதுரையையே மயக்கி வைத்திருக்கிறது.

               அந்த பாரம்பரிய மதுரை ரசிகர்கள் நெஞ்சைக் கொள்ள கொண்ட புதிய வார்ப்பு  கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் இடம் பெற்ற மானூத்து மந்தையிலே எனத் தொடங்கும் கவிஞர் வைரமுத்துவின் பாடல் தான்அது ஒரு தாய் மாமன் பாடும் பாடல், தங்கை பெற்றெடுத்த மருமகளுக்கு சீர் கொண்டுவருவதை நேர்த்தியாகவும் நெகிழ்ச்சியாகவும் எடுத்துரைக்கும் பாடல்!

                இன்று மதுரையில் பொற்கொல்லர் இல்லாமல் கூட ஒரு காதணி விழா நடக்கலாம்,  மானூத்து மந்தையிலே பாடல் இல்லாமல் ஒரு காதணி விழா கூட நடக்காது.  அந்தப் பாடலில் பல்லவியாக வரும்

                         
சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே.
                எனும் வரிகள் உடலிலுள்ள ஒவ்வொரு உயிர்த் துளியையும் மெய்சிலிர்க்க வைக்கும்.  
                மதுரை அந்த அற்புதமான பாடலையும் குறிப்பாக சீரு சொமந்த ஊரு சனமே என்ற பல்லவியையும் வாழும் இலக்கியமாக பரிணமிக்க வைத்திருக்கிறது.

                மதுரை அந்தப் பாடலை வாழும் இலக்கியமாக உயர்த்தியிருக்கிறது என்றால் காரைக்குடி, குறிப்பாக இராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளி மிகக் குறிப்பாக அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அந்த கிழக்கு சீமைப் பாடலுக்கு நெறியான இலக்கணம் வகுத்துள்ளார்கள்.
       ^^^^^^^^^^^^^^^^^^^                        ^^^^^^^^^^^^^^^^^^^^^^                         ^^^^^^^^^^^^^^^^^^^
                                  புதுமணத் தம்பதியருக்கும், பிள்ளை பெற்ற தாய்க்கும் ஆரத்தி எடுப்பது நமது மரபு, குடும்ப எல்லைக்குள் நின்ற இந்த மரபு  சமுக வெளியில் விரிந்து சாதனையாளர்களுக்கும் வெற்றி வீரர்களுக்கும் ஆரத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இரு சூழல்களும் உணர்வோடு ஒட்டியது, ஆரத்தி எடுக்கப்படுவதற்கு அது காரணமாகிறது.

                          அண்மையில் காரைக்குடியில் ஒரு கல்வி அதிகாரிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. அவருக்குப் பின்னால் ஒருவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் படத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார், என்றால்

                         சட்டத்தையும் மேலதிகாரிகளின் கட்டளைகளையும் தண்டவாளமாகக் கொண்டு பணியாற்றுகிற ஒரு அரசு அதிகாரியின் பணி வாழ்வில் உணர்ச்சிக்கு இடமில்லை.  அவர் மீது யார் உணர்ச்சி மேலிட ஆரத்தி எடுக்கப் போகிறார்கள்என எதிர்கேள்வி கேட்பீர்கள்.
                      ஆனால் காரைக்குடியின் கனவுப் பள்ளியான இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி அதனைச் சாத்தியமாக்கியிருக்கிறது. 
                      இது மடுவிலிருப்பவன் மலையின் சிகரத்தை வென்ற சாதனைக்கு ஒப்பானது தான்.  இது மந்திரத்தில் காய்த்த கனியல்ல. இப்பள்ளிக்கே தம்மை அர்பணித்துக் கொண்டுள்ள தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜாவும்  மற்றும்   ஆசிரியர்களின், ஒருமித்த முயற்சியால், இடைவிடா முயற்சியால் ஆகிய திருவினை. 

                         ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் காரைக்குடி இராமநாதன் செட்டியார்  நகராட்சி  நடுநிலைப் பள்ளி ஒரு உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது.  அப்போது ,  அந்தப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 218.  கடந்த 2017-18 ஆண்டில் மாணவர் எண்ணிக்கை  950. நடப்பு ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 1204.



                          இது உப்புச் சப்பு இல்லாத புள்ளிவிவரம், கள நிலவரம் என்னவென்றால்  ஆயிரக்கணக்கான  அரசுப் பள்ளிகள் உரிய அளவு மாணவர்கள் இல்லாமலும் போதியளவு புதிய மாணவர் சேர்க்கை இல்லாமலும் தவிக்கும் நேரத்தில் ஹவுஸ் புல் போர்டு (HOUSE FULL BOARD) மாட்டிய பள்ளி காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி என்பது தான்.  
                          மக்கள் காரணமில்லாமலா அந்தப் பள்ளியில் தம் பிள்ளைகளைச் சேர்க்கத் தவிக்கிறார்கள்.
                       ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் ஆசை காட்டும் பதிய வகுப்புறை, ஆய்வகம்நூலகம் SMART CLASS போன்ற  பல வசதிகள் இப்பள்ளியில் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.  எந்தத் தனியார் பள்ளியிலும் இல்லாத மின்  நூலகமும் இப்பள்ளியில் உள்ளது. வாசிப்புத் திறன் பயிற்சி, எழுத்துப் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, ஆளுமைத் திறன் பயிற்சி, மேடைப் பேச்சுப் பயிற்சி, கணினிப் பயிற்சி, கைத் தொழில் பயிற்சி எனப் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட பயிற்சிகளும் செயல்திட்டங்கள் ஆண்டு முழுவதும் நடைபெற்றுவருகிறது.
                         இவை எதுவும் ஆசிரியர்களின் முழு ஈடுபாடும் அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாம் சாத்தியமில்லை.  ஆசிரியர்களின் ஈடுபாடு மாணவர்களின் சாதனைகளாக ஒரு புறம் மலர்ந்தது, மற்றொரு புறம் மாணவர்களின் பெற்றோர்களை  பள்ளியில் வளர்ச்சிப் பணிகளில் முழு மூச்சாக இறக்கியது.
                           பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு என்னென்ன தேவை என்பதை தாமே உணர்ந்து செய்வார்களோ அதே போல ,இப்பள்ளியின் தேவைகளையும் தாம் அறிந்து உணர்ந்து செய்ய ஆரம்பித்தனர்.  சென்ற ஆண்டு (2017 -18) ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை நடந்த போது பெரும்பாலான வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்கு நாற்காலி, மேசை இல்லை.  பள்ளியைச் சிறப்பாக நடத்தும் ஆசிரியர்களின் சிரமத்தைப் போக்ககுவதற்காக  60 நாற்காலிகளும்  10 மேசைகளும் வழங்க முன்வந்தனர்.  இந்த மேசை நாற்காலிகளோடு பள்ளித் தேவையான மற்ற பொருட்களையும்  சேர்த்து ஜீலை மாதம் 21 ம் தேதி ஒரு எளிமையான நிகழ்ச்சியில்  ரு 1,70,000 மதிப்பிலான பொருட்களைக் கல்விச் சீராக வழங்கினர்.
                       இந்தக் கல்வியாண்டு (2018-19) கலக்கத்தோடு ஆரம்பித்தது.  ஆம் பள்ளியில் புதிதாக பிள்ளைகளைச் சேர்க்க வந்த நூற்றுக் கணக்கான பெற்றோரை திருப்பி அனுப்ப வேண்டிய நிலை. ஒரு வழியாக SHIFT முறை அறிமுகப்படுத்தியதால் புதிதாக 288 மாணவர்களை ஆறாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள வழியமைந்தது.  அந்தப் பெற்றோர்களின் மகிழ்ச்சியை சொற்களால் எடுத்துரைக்க முடியாது.  அவர்களே களத்தில் இறங்கினார்கள்.  இந்த 288 மாணவர்களை அமர வைப்பதற்குத் தேவையான ஸ்டையின் லேஸ் ஸ்டீல் பென்ஞ்ச் நாற்காலி மற்றும் பள்ளிக்குத் தேவையான பல தளவாடச் சாமான்களையும் சேர்த்து ரூ 3,70,000 மதிப்பலான பொருட்களை கல்விச் சீராக 09.06.2018 அன்று பெருந்திரளாக தத்தம் கைகளாலாலேயே தூக்கிக் கொண்டு வந்தனர். ஒலிபெருக்கியில் கிழக்குச் சீமையிலே பாடல்
                           "சீரு சொமந்த சாதி சனமே" ஒலிபரப்பாக வில்லை.  ஆனால் உள்ளபடி ஊர் சனம் சீரை தலைச் சுமையாகவும் கைச் சுமையாகவும்  சுமந்து கொண வந்தது.
                             இந்த உறவு முறையின்  உணர்ச்சிப் பெருக்கை நாதஸ்வரமும் மேளமும் இசை வெள்ளமாக பிரதிபலித்தது. இந்த சீர்வலத்திற்கு மாவட்ட கல்வி அதிகாரி திரு மாரிமுத்து தலைமை தாங்கினார். ஆசிரியையர்கள் இருவர் சீரவலத்திற்கு தலைமை தாங்கிய கல்வி அதிகாரிக்கு பள்ளி வாசலில் ஆரத்தி எடுத்தனர். 
                              ஒவ்வொரு பெண்ணிற்கும் தாய் வீட்டார் எவ்வப்போது எப்படி சீர் கொடுக்க வேண்டுமென்பதற்கு பல பரம்பரை முறைதலைகள் வழக்கில் உள்ளன.  ஒரு நிறுவனம், ஒரு பள்ளி சமூத்திடமிருந்து சீர் பெறுவதற்கு எப்படி நடத்தப்பட வேண்டுமென்பதற்கு காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராரட்சி உயர்நிலைப் பள்ளி இலக்கணம் வகுத்திருக்கிறது.

                      காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஒரு பள்ளி என்ற நிலையிலிருந்து உயர்ந்து சமூக இயக்கமாக (SOCIAL MOVEMENT) மிளர்கிறது.

நலந்தா செம்புலிங்கம்
19.06.2018






1 comment:

  1. ஒரு முன்னுதாரணப் பள்ளி. தொடர்புடைய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete