Saturday, 9 December 2017

வ.சுப.மாணிக்கனாரின் நுாற்றாண்டு விழா (பதிவு 7)

தவமும் தவமுடையார்க்கு ஆகும்!
                                               


காரைக்குடி கண்ட இமயங்களைக் கொண்டாடுவோம்
 எனப்பெயர் சூட்டி வள்ளல் அழகப்பருக்கும் வ.சுப.மாணிக்கனாருக்கும் ஒரு விழா எடுத்தோம். இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடத்த விழைந்தோம், மகிழ்வோடு இசைந்தார்கள், ஈடுபட்டோடு வேலை பார்த்தார்கள்
இவ்விழாவிற்குத் தலைமை தாங்கிய நீதியரசர் மகாதேவன் அவர்களுக்கு மூன்று வகையான வரவேற்புகள் அளிக்கப்பட்டன
முதலில் பூங்கொத்து வரவேற்பு. இதே பள்ளியில் காலையில் பூங்கொத்து தயாரிக்கும் போட்டி நடந்தது, அதில் வெற்றி பெற்ற மாணவர்களோடு ஆசிரியர்களும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.

பூங்கொத்து வரவேற்பினைத் தாண்டிய பிறகு மூன்று வகை சீருடைகளோடு மாணவர்கள் மாற்றி நின்று கொண்டிருந்தார்கள். முதலில் பள்ளிச் சீருடையில் ஒரு மாணவன் நின்றான் அடுத்தடுத்து Scout மற்றும் JRC சீருடையிலும் இரண்டு மாணவர்கள் நின்றார்கள். இதைப் போல 7 அல்லது 8 மூவர் அணியினர் நின்றனர். பள்ளிச் சீருடையில் நின்ற மாணவன் வணக்கம் சொல்லி வரவேற்றான். Scout மற்றும் JRC சீருடை மாணவர்கள் அந்தந்த முறைப்படி ஆங்கிலத்தில் வரவேற்றார்கள். நீதியரசர் வணக்கம் சொன்ன மாணவனுக்கு பதிலுக்கு வணக்கம் சொன்னார். ஆங்கிலத்தில் வரவேற்ற மாணவர்களுக்கு பதிலுக்கு THANK YOU சொன்னார்.
இந்த இரண்டு வரவேற்புப் படலங்களையும் மகிழந்து நீந்திக் கடந்த பிறகு தான் உச்சகட்ட நெகிழ்வு வரவேற்புக் காத்திருந்தது.
இவ்விழா இரண்டாம் மாடியில் உள்ள அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு வந்த நீதியரசர் மகாதேவன் அவர்கள் மாடிப் படியேறிய போது இரண்டு படிக்கு ஒரு மாணவர் நின்று கொண்டு ஒரு திருக்குறள் புத்தகத்தை கொடுத்து திருக்குறள் வரவேற்பு வழங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். முதல் மாணவன் முதல் திருக்குறளைக் கொடுத்ததும் அது யார் எழுதிய உரை என்பதை நீதியரசர் பார்த்துவிட்டு இது பெரியண்ணன் உரையா? அவரிடம் தான் நான் படித்தேன் என ஒரு உறவு இளவலிடம் பேசுவதைப் போல சொன்னார்.
வரவேற்பில் மாணவர்களை வைத்து ஆசிரியர் அசத்தினார்கள் என்றால் விடைபெறும் போது நீதியரசர் திக்குமுக்காடச் செய்துவிட்டார்.



வரவேற்பு காண்டத்தில் அணி அணியாக வரிசையாவெல்லாம் நிறுத்தப்பட்டிருந்தார்கள். வழியனுப்புக் காண்டத்தில் நீதியரசருக்குப் பாதை விட்டு இருமருங்கிலும் மாணவர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். நீதியரசர் இரண்டு மூன்று மாணவர்களைக் கடந்திருப்பார், நான்கவதாகவோ ஐந்தாவதாகவோ நின்ற மாணவன் THANK YOU FOR COMING TO OUR SCHOOL, SIR என்றான். நீதியரசர் புன்முறுவலோடு அந்த மாணவனோடு கை குலுக்கினார். உடனே அங்கிருந்த எல்லா மாணவர்களும் (30, 40) கையை நீட்டினார்கள். எல்லா மாணவர்களிடமும் மகிழ்வோடு கைகுலுக்கிவிட்டுத் தான் மகிழ்வுந்து ஏறினார் நீதியரசர்.
தவமும் தவமுடையார்க்கு ஆகும்!

                                                                                                              நலந்தா செம்புலிங்கம்
                                                                                                                   09.12.2017

1 comment:

  1. படிக்கும்போது உடன் படிகளில் ஏறிவருவது போலவும், மாணவர்களுடன் இருப்பதுபோலவும் உணர்வு ஏற்பட்டது.

    ReplyDelete