கண்டிப்புமிக்க வ.சுப.மா
கடன் வாங்கிய குழந்தை நாதன்
வ.சுப.மாணிக்கனார் ஈடிணையில்லா தமிழறிஞர் என்பதோடு அவர் கொஞ்சமல்ல மிகவும் கண்டிப்பனானவர் என்பதும் ஊரறிந்து தான். அவரிடம் ஒருவர் கடன் வாங்கினால் வட்டியோடு கடனைத் திருப்பாமல் தப்பிக்க முடியுமா?
பேரா. சு. குழந்தைநாதன் கடனும் வாங்கினார். வாங்கிய கடனை சாதாரண வட்டியோடு அல்ல தாரளமான வட்டியோடு திருப்பிக் கொடுத்துவிட்டார்.
பேரா சு.குழந்தைநாதன் கடன் வாங்கியது ரிசர்வ் வங்கி அச்சடித்த பணத்தையல்ல. அவர் வ.சுப.மா விடம் கடன் பெற்றது நற்றமிழ் சொற்களைத் தான்.
1957 இல் வ.சுப.மா வள்ளல் அழகப்பர் மீது கொடை விளக்கு என்ற காப்பியத்தை இயற்றினார். அதில் 77 வது வெண்பாவாக இடம் பெற்றிருப்பது தான் புகழ் பெற்ற
கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த
வீடும் கொடுத்த விழுச் செல்வன் தேடியும்
அள்ளிக் கொடுத்த அழகன் அறிவூட்டும்
வெள்ளி விளக்கே விளக்கு
1970 களின் பிற்பகுதியில் பேரா. சு. குழந்தை நாதன் வள்ளல் அழகப்பரின் வாழ்க்கை வரலாற்றை உரைநடையில் எழுதினார். அந்த நூலின் பெயரே கோடி கொடுத்த கொடைஞன் தான். நூலும் அந்த வெண்பாவை மேற்கோள் காட்டி தான் தொடங்குகிறது.
இந்த கவிநயமிக்க வரி யாருடையது ? வ.சுப.மாணிக்கனாருடையது தானே? இதை பேரா. சு. குழந்தைநாதன் கையாண்டால் அது கடன் தானே?
இந்தக் கடனை பேரா. சு. குழந்தைநாதன் தமது நூலின் 180 வது பக்கத்தில் திருப்பிக் கொடுத்துவிடுகிறார்.
""முற்றிலும் நிறைவுடையவராகவே அவர் வாழ்ந்திடவில்லை. தம் குறைகள் பலவற்றை அவர் உணர்ந்திருந்தார் எனினும் தம்மிடையே
வியத்தகு நல்லியல்புகளை வளர்த்துக் கொண்டு முழுநிறை மனிதராக ஆவதற்கு எப்பொழுதும் முயன்று வந்தார். ஒரு காலத்தில் அழகாக உடுத்து நல்லுணவே கொண்டு ஆடம்பரச் சுழலில் வாழ்ந்து பழகியவர் தமக்கென நூறு ரூபாய்களைக் கூட தாரளமாகச் செலவழிக்க அஞ்சும் அளவுக்கு தேவைகளைக் குறைத்துக் கொண்டார். இந்த நூறு ரூபாய் இருந்தால் ஒரு ஏழைப் பையனுக்கு உபகாரச் சம்பளம் கொடுக்கலாமே எனக்
கசிந்துருகி கணக்குப் பார்க்கும் அளவுக்கு மனம் நிறைந்த மாமனிதாராய் தொண்டால் பொழுதளந்த தூயராய் உயர்ந்தார்.""
இந்த மேற்கோளின் கடைசி சொற்றொடர் தொண்டால் பொழுதளந்த தூயராய் உயர்ந்தார். என்னை தூங்க விடாமல் செய்தது. இந்த சொற்றொடரை பலரிடம் கேட்டு இது யார் எழுதிய வரியாக இருக்கும் எனக் கேட்பேன். எல்லோரும் ஏகமனதாக வ.சுப. மாணிக்கனாரின் வரிகளாகத் தான் இருக்கவேண்டும் என்ற ஊகித்தார்கள்.
வள்ளல் அழகப்பர் இவ்வளவு துல்லியமாகப் படம் பிடிக்கும் காவியச் சொற்றொடரை பிரபலமாக்க வேண்டுமென்ற அவாவில் ஒரு பதிவுப்படத்தை (STICKER) உருகவாக்கி அழகப்பர் படத்தோடு இந்த வரிகளை பிரசுரம் செய்துள்ளோம்.
அப்பதிவுப்பட வெளியீட்டு விழாவிற்கு தமிழ் நெஞ்சினீரே வருக! வருக!!
-- நலந்தா செம்புலிங்கம்
No comments:
Post a Comment