Monday, 15 April 2019

காதல் வனம்: முட்சாலையில் பனிச்சறுக்குப் பயணம்!


காதல் வனம்: முட்சாலையில் பனிச்சறுக்குப் பயணம்
********************
காதல் வனம்
ஆசிரியர் : தேனம்மை லெட்சுமணன்
பதிப்பாளர்:  படி வெளியீடு (டிஸ்வகரி புக் பேலஸ்)
சென்னை - 78        
அலைபேசி: 87545 07070 , 99404 46650
விலை ரூ.100/-
         எழுத்தாளரும் வலைப்
பதிவருமான திருமதி தேனம்மை லெட்சுமணன், சமூக வலைத்தளங்களில் தனக்கென  ஒரு பெரிய வட்டத்தை உருவாக்கிக்கொண்டவர். இப்போது பல மேடைகளுக்கும் அழைக்கப்படுகிறார், மேடைகளில் மட்டுமல்ல நேரிலும் படபடவென வேகமாகப் பேசுவார்.  அந்த வேகத்தை அவரது பேச்சில் மட்டுமல்ல எழுத்திலும் காணலாம் வேகத்திற்குக் காரணம் வேறொன்றுமில்லை, சுமையை அறிவுச்சுமையை இறக்கி வைக்கிற அவசரம் தான்.
              அவருடைய அண்மைப் படைப்பு காதல் வனம் எனும் நாவல்.  அந்த நாவல் அச்சசுப் புத்தகமாகவும் மின் புத்தமாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது.  இந்த இரண்டு வடிவங்களிலும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் அந்த நாவல் வெளிவந்திருப்பதே படைப்பையும், படைப்பாளியையும், பதிப்பாளரையும் நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. அது எளிதில் கை கூடக்கூடிதில்லை, அதற்குப் பின்னர் அயராத தேடலும் உழைப்பும் இருக்கிறது.
            மிகவும் நெருடலான கதைக் கரு.  அந்த நெருடல் கருவும் தானாக வளர்கிறது ஒன்றிற்கு மேல் ஒன்றாகக்  குவிகிறது.  இந்தக் கருக்களுக்கு அப்பாற்பட்டு ஒரு சிக்கல் வேறு முளைக்கிறது.  அதற்கு விஞ்ஞானம் மூலம் ஒரு தீர்வு தெரிகிறது, ஆனால் நடைமுறைப்படுத்த கயிற்றின் மேல் நடக்க வேண்டியுள்ளது.  முட்கள் நிறைந்த இந்தக் கதைச் சாலையில் பனிச்சறுக்கு போல கதையை நகர்த்திக் கொண்டு போகிறார் நாவலாசிரியர் தேனம்மை லெட்சுமணன்.  இது எப்படி சாத்தியமாகிறது?
     இந்தப் பனிச்சறுக்குப் பயணத்தைச் சாத்தியமாக்குவது தத்ரூபமான களக்காட்சிகள் தான்.  அதற்கு உயிரூட்டுபவை துல்லிமான
களத்தகவல்கள் தான்.
              தேனம்மை லெட்சுமணன் ஆயிரம் சாளரங்களை திறந்து வைத்து ஆழ்வார் இலக்கியத்தியிலிருந்து, பாட்டி வைத்தியம்,  கரு முட்டை தானம், கருப்பப்பை தானம்,  டாங்கோ நடனம் வரை அகிலத்திலின் சந்து பொந்துகளில் புதைந்து கிடக்கும் தகவல்களை எல்லாம் சேகரித்த வண்ணம் இருக்கிறார் --   ஐந்து வகையான வலைப்பக்கங்களில் அவர் எழுதியுள்ள ஆறாயிரத்திற்கும் அதிகமான வலைப் பதிவுகளே அதற்கு சான்று.
   
       
           களத்தகவல்களால் அச்சு அசலாக நிதர்சன உலகத்தையே காட்டக் கூடியவர்கள் Arther Hailey யும்  பாலகுமாரனும்.  அவர்கள் கூட ஒரு நாவலில் ஒரு களத்தைத் தான் காட்டுவார்கள்.  தேனம்மை லெட்சுமணனின்  காதல்வனம் பல தளங்களைக் காட்டுகிறது.  கதையின் புதிர்முடிச்சு அவிழ்க்கப்படுகிறதா மேலும் முறுக்கேறுகிறதா? என்ற மயக்கத்தை கடைசிப் பக்கம் வரை சலனமின்றி தக்க வைத்துக் கொண்டு கதையை நகர்த்துகிறர்.
         நாவல் நெடுகிலும் ஆங்கில சொற்கள், சொற்றோடர்கள். நாவலாசிரியர் சற்று கவனம் செலுத்தியிருந்தால் 50% கலப்புச் சொற்களையாவது தவிர்த்திருக்கலாம்.
             
நலந்தா செம்புலிங்கம்
15.04.2019

பின் குறிப்பு: இது காலத்தால் தான் பின்குறிப்பு, ஆனால் உள்ளபடியே இது ஒரு முன்னேற்றக் குறிப்பு தான்.

        இந்த நூல் மதிப்புரை எழுதியதற்கு ஒராண்டிற்குப் பிறகு இந்த நாவல் ஒலி வடிவமும் பெற்றுள்ளது (ஆடியோ புக்). ஒலிப் புத்தகத்தின் இணைப்பு https://pocketfm.app.link/jioARE8WL5





Friday, 5 April 2019

கொடைவிளக்கின் பேரொளிகள்!!

கொடைவிளக்கின் பேரொளிகள்!!



கொடை விளக்கு, இருபதாம் நூற்றாண்டில் எழுந்த சங்க நூல்.  சங்க காலத்தில் கபிலர் பாரியைப் பாடினார்.  இருபதாம் நூற்றாண்டில் வ.சுப. மாணிக்கனார்


வள்ளல் அழகப்பரைப் பாடினார்.  171 வெண்பாக்களால் ஆனது கொடைவிளக்கு.  ஒவ்வொன்றும் தித்திக்கும் தேன் தான். 

           ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல ஒரு நூலினை அறிமுகப்படுத்த, நூலைப் பரப்ப முழு நூலையும்   வாசிக்க முடியாது, ஒரு சிறு பகுதியைத் தான் முன்னிலைப்படுத்த வேண்டும்.  அந்த வகையில் என்னைப் பெரிதும் கவர்ந்த பாட்டுடைத் தலைவனின் உள்ளத்தை மிக நேர்த்தியாகப் படம் பிடிக்கும் பத்து வெண்பாக்களை கொடை விளக்கில் பேராெளிகள் என தொகுத்துள்ளேன்

             
1.கம்பனொளி (ஒரு வெண்பா)
2. கண்ணைக் குளமாக்கும் சுடரொளிகள்  (இரண்டு வெண்பாக்கள்)
3. கொடையொளிகள் (இரண்டு வெண்பாக்கள்)
4. புரட்சியொளி (ஒரு வெண்பா)
5. கடைமயுரைத்தல் (ஒரு வெண்பா)
6. வள்ளல் வாழ்த்து (இரண்டு வெண்பாக்கள்)
என ஒன்பது வெண்பாக்களை ஆறு தலைப்புகளில் தொகுத்துள்ளேன்.  பத்தாவது வெண்பா, வ.சுப. மாணிக்கனார் சூடிய தமிழ்த் தவம் என்ற தலைப்பையே சூடியுள்ளேன்.  தமிழ்த் தவம் தான் கொடைவிளக்கின் மணிமுடி எனக் கருதுகிறேன்.



கம்பனொளி
1. வெண்பா எண் 84
நம்ப முடியவில்லை நாற்பத்தெட் டாண்றிக்குள்
கம்பனும் காணக் கலைநகராய்த் - தம்பொருளால்
எல்லோரும் கல்வியெழிலைப் பெறவைத்தான்
பல்லாரும் வாழப் பகுத்து

கண்ணைக் குளமாக்கும் சுடரொளிகள்

2. வெண்பா எண் 113
சாய்ந்த படுக்கையன் சாரா உணவினன்
ஓய்ந்த உடலன் உளம்வலியன்: - வாய்ந்தவோர்
ஆயிர மாணவரை அங்கழைத்துப் பேசினான்
சேயர் பலருடையான் சீர்

3. வெண்பா எண் 121
அரித்துக் குடையும் அழிநோய் வருந்தச் 
சிரிக்குக் குலுங்கும் திறத்தன்: - திரித்தும்
இறைபழியா அன்பன்: இருந்தும் கொடாஅர்க்
குறைபழியாச் சான்றோன் குணம்

கொடையொளிகள்
4. வெண்பா எண் 54
பாரும் உறங்கும் படுயாமம் தில்லியில் 
நேருவைக் கண்டு நிதியளித்தாள் - யாரும்
மடித்துத் தொகுக்கின்ற மண்ணுலகில் ஏனோ
துடித்துக் கொடுத்தான் தொகை


5. வெண்பா எண் 55

எண்ணாத் தமிழிசைக்கு ஏற்ற உயிர்கொடுத்த
அண்ணா மலையான் அமைத்தபெருந்த – திண்ணார்
கலைப்பல் கழகம் கலைப்பொறி காண்பான்
நிலைப்பல்  நிதியளித்தான் நேர்

புரட்சியொளி
6. வெண்பா எண் 146

மறப்பின்றிக் கல்வி வளர்த்தானை ஈண்டுப்
பிறப்பில்லை என்றமதம் பேசேல்; - சிறப்பின்றி
நாம்பிறத்தல் காறும் நலஞ்செய் அழகனைத்
தாம்பிறக்க வேண்டல் தகும்

கடமையுரைத்தல்

கொடைவிளக்கு நூலில் பாயிரத்தைத் தொடர்ந்து 10 அலகுகள் உள்ளன.  இறுதி (10 ஆம்) அலகின் தலைப்பு: உலகக் கடன். இதில் மாணவர் நன்றி, மாணவர் ஒழுக்கம், மாணவர் குறிக்கோள், ஆசான்கள், வணிகர், இந்திய மக்கள், புள்ளினங்கள், இளம்பெண்கள் என ஓரோருர் வகையினர் எப்படி அழகப்பருக்கு நன்றி பாராட்ட வேண்டுமென வ.சுப.மா வகுத்துள்ளார்.  அதில் இளம்பெண்கள் என்ற தலைப்பில் வரும் வெண்பா:


7. வெண்பா எண் 156

ஊரார் குழந்தையை ஊட்டி வளர்த்தானைக்
கூரார் குவிமுலையீர் கூப்புமினோ – சீரார்
அழகனைக் போலவொரு அள்ளிக் கொடுக்கும்
குழகனைப் பெற்றுக் கொள



வள்ளல் வாழ்த்து

8. வெண்பா எண் 73
இலக்கியம் கற்றான்: இயல் சட்டம் கற்றான்:
கலக்கியல் வாணிகமும் கற்றான்: - இலக்கம்
அடுக்கப் பயின்ற அழகப்பன் எங்கோ
கொடுக்கப் பயின்றான் கொடை


9. வெண்பா எண் 95

படித்தான் பறந்தான் படைத்தான் நினைத்தான்
கொடுத்தான் சிறந்தான் குறித்தான் - துடித்தான்
எடுத்தான் முடித்தான் இனித்தான் அழகன்
படுத்தான் விடுத்தோம் பணிந்து.

தமிழ்த் தவம்

(இத்தலைப்பு வ.சுப.மா வின் தலைப்பு)
10. வெண்பா எண் 31
வள்ளற் றமிழ்ச்சொல் வணங்கித் தவஞ்செய்து
கொள்ளப் பிறந்த கொடையழகன் - உள்ள 
உடைமை அனைத்தும் ஒழித்தான் ஒழியார்
மடமை தொலைக்கும் மகன்

நலந்தா செம்புலிங்கம்
05.04.2019

குறிப்பு: இந்த ஆக்கத்தினை அரசி. பழநியப்பன் ஒலி வடிவில் வழங்கவுள்ளார்கள்


Thursday, 4 April 2019

அழகப்பர் பதிவுப் படம் (STICKER)



அழகப்பர் பதிவுப் படம் (STICKER) 

       
          2015 ஆம் ஆண்டு கொடையின் கதை நூலின்  மூன்றாம் பதிப்பை வெளியிட்டோம். அந்த மூன்றாம் பதிப்பில் அழகப்பரைப் பற்றி அதுவரை வெளிவந்திருந்த  11 நூல்களின் பட்டியலை வெளியிட்டோம். அந்த 11 நூலைகளையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் முகிழ்ந்தது. நூல் வெளியீட்டு விழாவில் 11 நூல்களையும் அறிமுகம் செய்வதற்காக எல்லா நூல்களையும் ஒரு சேர எழுத்து எண்ணிப் படித்தேன்.

        பேராரிசிரியர் ச. குழந்தைநாதன் எழுதிய கோடி கொடுத்த கொடைஞனும் அவற்றுள் ஒன்று.  ஆனால், நான், அந்த நூல்  எத்தனையாவது முறையாகப் படிக்கிறேன் என்று கணக்கெல்லாம் வைத்துக் கொள்ளவில்லை.

         அந்த நூலில் இரண்டு பகுதிகள் என்னை பெரிதும் கவர்ந்த பகுதிகள் 

         அந்த நூலில் அழகப்பரின் பங்குச் சாதனைகள் ஓவியமாகவே தீட்டப்பட்டிருக்கும்.  ஒரு கட்டத்தில்  அவர் பால் பொறாமை கொண்டவர்கள் ஒன்று கூடி  திட்டமிட்டுப் பங்குச் சந்தையில் அவருக்குப் பேரிழப்பை ஏற்படுகிறார்கள். அது எனக்கே ஏற்பட்ட இழப்பை போல துடித்தேன், அது ஒரு புனைகதை போல என்னை சுண்டி இழுத்தது.
 அது தான் எழுத்தாளனின் வெற்றி.  

          172 ஆம் பக்கத்தில் அழகப்பர் கடைசி நாளில் கடைசி சில மணி நேரங்களில் தன் நினைவை இழந்தபோதும் கல்லூரி வளாகத்தினுள் இருப்பதாக நினைத்துக் கொண்டு பேசியதையும் எழுதியிருப்பார், கண்ணீர் சிந்தாமல் அந்த 172 ஆம் பக்கத்தைக் கடக்கவே முடியாது.

           . ஒரு நூலை, அதன் ஆசிரியர்/நாயகன்/கருத்து பால் ஏற்பட்ட தாகத்தினால் வாசிப்பதற்கும்  நூலறிமுகத்திற்காகவோ மதிப்பீட்டிற்காகவோ வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.  

            இம்முறை கோடி கொடுத்த கொடைஞனை நூலறிமுகத்திற்காக எழுத்தெண்ணி வாசித்த போது தான் 180 ஆம் பக்கத்திலிருக்கும் ஒரு சொற்றொடர் நெஞ்சில் தைத்தது.  அந்த சொற்றொடர் யார் எழுதிய சொற்றோடர்? எனப் பலரிடம் புதிர் போட்டேன்.  ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் வ.சுப. மாணிக்கனார் என அடித்துச் சொன்னார்கள். ஒரேயொருவர் சொன்ன மாற்று விடையோ கண்ணதாசன் என்பதாகும்.

               வ.சுப. மாணிக்கனாரே எழுதியதைப் போன்ற மயக்கத்தைத் தந்த  அந்த சொற்றொடர் என்ன உறங்கவிடவில்லை.

                வள்ளல் அழகப்பரை இவ்வளவு துல்லியமாகப் படம் பிடிக்கும் அச்சொற்றொடரை பிரபலமாக்க வேண்டுமென்ற அவாவில் ஒரு பதிவுப்படத்தை (STICKER) உருவாக்கி அழகப்பர் படத்தோடு அச்சொற்றொடரையும் பிரசுரம் செய்தோம். அந்தக் காவியச் சொற்றொடர்:

தொண்டால் பொழுதளந்த தூயர்!

அந்தப் பதிவுப் படம் (STICKER) தான் கொடைவிளக்கு புலனக் குழுவின் இலச்சினைப் படமாகத் திகழ்கிறது.

நலந்தா செம்புலிங்கம்
04.04.2019

குறிப்பு
 1. பதிவுப் படத்திற்கு விலை இல்லை. 
 
 2. விரும்புகிறவர்களுக்கு (ஒருவருக்கு 2 படங்கள்) பதிவுப் படம் அன்பளிப்பாக வழங்கப்படும். 
 
 3.  இந்தப் பதிவுப்படம் கிடைக்குமிடம் நலந்தா புத்தகக்    கடை  365/4 செக்காலை சாலை அண்ணா நாளங்காடி எதிரில் காரைக்குடி  அலைபேசி 9361410349 

Attachments area

Wednesday, 3 April 2019

பாட்டுடைத் தலைவர் அழகப்பர்!



பாட்டுடைத் தலைவர் அழகப்பர்!!

      அழகப்பர் நம் மண்ணின் மைந்தர் என்ற புவி சாரந்த வரையரைகளுக்கு அப்பாற்பட்ட காலத்தின் மைந்தர். அவர் 1909 ஆம் ஆண்டில் பிறந்தார், 1957 ஆம் ஆண்டில் புகழுடம்பு எய்தினார்.  அவர் இன்றும்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  கல்வி என்ற சொல் உள்ளவரை வாழ்வார்.
    
      பிறக்கும் போதே செல்வச் சீமானாகப் பிறந்தோரை ஆங்கிலத்தில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தோர் என்பர்.  ஆனால் வள்ளல் அழகப்பரை தங்கக் கரண்டியுடன் பிறந்தவர் என்று தான் சொல்ல வேண்டும், அத்தகைய செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார்.  அந்தத் தங்கக் கரண்டியையும் பிளாட்டினம் கரண்டியாகப் பெருக்கினார்.

          ஒரே நாளில் எட்டு கார்களை வாங்கினார்,  ஒரு நாளில் எட்டு விமானங்களை வாங்கினார். ஐரோப்பியர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட ஆடம்பர ரிட்ஸ் விடுதியை நினைத்த பொழுதிலேயே வாங்கினார்.

          1947 ஆம் ஆண்டில் மருத்துவரும் கல்வியாளரும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் நெடுநாள் துணை வேந்தருமான டாக்டர் ஏ. எல். முதலியார் செல்வந்தர்கள் தான் உயர்கல்வி நிறுவனங்களை நிறுவி சுதந்திர இந்தியாவன் கல்விப் பணிக்கு தோள் கொடுக்க வேண்டும் என ஒரு கூட்டத்தில் அறைகூவல் விடுத்தார். வள்ளல் அழகப்பர் அந்தக் கூட்டத்திலேயே நான் எங்கள் மாவட்டத்தில் கல்லூரி தொடங்குவேன் என உறுதியளித்தார். உறுதியளித்த 45 நாட்களுக்குள் காரைக்குடியில் கலைக் கல்லூரியைத் தொடங்கினார்.  அந்தப் பொன்னான 1947 ஆம் ஆண்டிலிருந்து அவர் புகழுடம்பு எய்திய  1957 ஆண்டு வரை காரைக்குடியில் சங்கிலித் தொடராக கல்லூரிகளையும் பிற கல்வி நிறுவனங்களையும் தொடங்கிய வண்ணம் இருந்தார்.  பல மாநில அரசுகள் போட்டி போட்ட மைய அரசின் மின் வேதியல் ஆய்வகத்தை (சிக்ரி) தமிழகத்திற்கு காரைக்குடிக்கு வென்று தந்தார்.  அழகப்பரின் வாழ்க்கையை மூன்று நிலைகளாக தொகுத்து அழகப்பரின் வரலாற்றை Dr. RM. Alagappa Chettiar: Life and Legacies of a Visionary எனும் நூலாக எழுதிய டாக்டர் கே. வயிரவன்
, இந்த 1947 -- 1957 காலவெளியை அழகப்பரின் கொடைக் காலம் என்பார். எனினும் அதற்கும் முன்னரே  கேரளப் பல்கலைக் கழகங்கள், தில்லி கல்வி நிறுவனம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியில் துறையை நிறுவியது, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்லூரி நிறுவியது என கல்விக்குக் கொடையளித்த வண்ணமிருந்தார் அந்தப் பிறவிக் கொடைஞர்.



                   அந்த 1947 -- 1957 காலகட்டத்தில்  வள்ளல் அழகப்பரின் சிந்தனை காரைக்குடியை மையம் கொண்டது. சிக்ரியை காரைக்குடிக்கு கொண்டு வருவதற்காக அவர் அளித்த கொடைகளை போலவே அதற்காக அவர் போராடியதும் மாணப் பெரிது.  குடியிருந்த வீட்டையும் கொடுத்தார்.  பிறவிக் கொடைஞரும் சிறந்த கல்வியாளருமான வள்ளல் அழகப்பர் மக்கள் நெஞ்சங்களில்  ஒரு தலைவனாகவும் திகழ்ந்தார். புலவர்களுக்கும் பாட்டுடைத் தலைவரானார்.

             வள்ளல் அழகப்பரை அன்றும் இன்றும் பாடாதவர்கள் இல்லை.  ஆனால் பாட்டுடைத் தலைவன் என்று பேசத் தலைப்பட்டால், வள்ளல் அழகப்பரை மிகச் சிறப்பாக கொண்டாடும் ஒரு பாட்டையோ, கட்டுரையையோ, வாழ்க்கை வரலாற்றையோ நூலையோ, படைப்பையோ இனம் கண்டு சுட்டிக் காட்ட வேண்டும்.

அழகப்பரின் கல்வி நிறுவனங்களில், நிறுவனர் வாழ்த்தாக  பாடப்படும், வெண்பா, 

           கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த
           வீடும் கொடுத்த விழுத் தெய்வம் - தேடியும்
            அள்ளிக் கொடுத்த அழகன் அறிவூட்டும்
            வெள்ளி விளக்கே விளக்கு

வ,சுப, மாணிக்கனாரின் கொடைவிளக்கு நூல் இடம் பெற்ற புகழ் பெற்ற வெண்பாவாகும்.



Dr. V.Sp. M  (addressing the gathering) with Vallal Alagappar

           கொடைவிளக்கு, அழகப்பர் புகழ் பாடும் வ.சுப, மாணிக்கனாரின் முத்திரைக் காப்பியம்.  வ.சுப,மா வும் சங்கப் புலவரைப் போன்றவர் கொடை விளக்கும் சங்கத் தமிழ் நூலைப் போன்றது.  இதற்கு மேலும் பாட்டுடைத் தலைவன் ஆய்வு தேவையா?  

         ஒரு தடகளப் போட்டியில் தனித்தனியாக பல பந்தயங்களும் விளையாட்டுகளும் நடைபெறும். ஒவ்வொரு நிகழ்விலும் ஒருவர் வெற்றி பெறுவார்.  அதிக நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர் தடகளப் போட்டியின் பெரும் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

          ஒரு தடகளப் போட்டியில் பெரும் வெற்றியாளர் என ஒருவருக்கு மணிமுடி சூட்டப்பட்டாலும் தனித் தனி நிகழ்வுகளில் சில வெற்றியாளர்கள்  இருக்கக் கூடும்.  அத்தகைய தனி நிகழ்வு வெற்றியாளர்களின் சாதனைகள் நம் நெஞ்சைத் தொடும்.

         அழகப்பர் புகழ்பாடும் சீரிய பணியில் மணிமுடி நூல் கொடைவிளக்கு தான் மணிமுடி புலவர் வ.சுப. மாணிக்கனார் தான், அதில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லை.  எனினும் தனித்தனியாக ஒரு எழுத்தாளரும் மற்றொரு கவிஞரும் நம் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

           "தொண்டால் பொழுது அளந்த தூயர்" 

           என்றொரு அஞ்சலி. ஆனால் வ.சுப. மாணிக்கனாரின் கொடைவிளக்கில் இடம் பெறவில்லை என்பது மட்டும் உறதியாகத் தெரியும்.

        இவ்வளவு சிறப்பாக வள்ளல் அழகப்பருக்கு யாரால் அஞ்சலி செலுத்த முடியும்?  வ.சுப. மாணிக்கனாரே வேறு நூலில் எழுதியிருப்பாரோ?

          "தொண்டால் பொழுது அளந்த தூயர்"   எனும். இச்சீரிய சொற்றொடரை யார் எழுதினார் எனப் பலரிடம் புதிர் போட்டேன். 

         ஒருவரைத் தவிர அத்தனை பேரும் வ.சுப,மா என்றார்கள்.  ஒரேயொருவர் அளித்த வேறொரு பதில் கவிஞர் கண்ணதாசன்.  

          உள்ளபடியே இந்த கவித்துவமிக்க சொற்றொடரை எழுதியவர் கவிஞர் அல்லர். மிகச் சிறந்த பேரரசிரியரும் எழுத்தாளருமான ச. குழந்தைநாதன் தான்.   இந்த சொற்றொடர்  அவர் எழுதிய கோடி கொடுத்த கொடைஞன் நூலில் 180 ஆம் பக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது.

            இது பேராசிரியர் குழந்தைநாதனின் சொற்றொடர் தான், ஆனால் அனைவரையும்  வ.சுப, மா. வின் வரி என மயக்கம் கொள்ள வைத்திருக்கிறதே! 

        வள்ளல் அழகப்பரை புலவர்களெல்லாம் கொடை, கல்வி எனும் இரண்டு தூரிகைகளால் வரைந்த போது தொண்டு எனும் அழகப்பரின் மற்றொரு சால்பைத் தூரிகையாக்கிய பேராசிரியரின் கவித்துவமான அஞ்சலியை சிறந்த அஞ்சலி என்றால், எவரையும் விட வ.சுப. மாணிக்கனாரின் நெஞ்சம் தான் அதிகமாக மகிழும்.

          வள்ளல் அழகப்பர் புகழுடம்பு எய்திய போது  மாணவர்கள், ஆசிரியர்கள்,  கல்வியாளர்கள்,  கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள்,
அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பினரும் செலுத்திய அஞ்சலிகள் ஒன்றை ஒன்று விஞ்சும், நெஞ்சை உருக்கும்.

            அந்த 1957 ஆம் ஆண்டுக்கு பின்னர் பல ஆண்டுகள் கடந்து, மாணவர்க்கான கையேடு ஒன்று வெளியிடப்பட்டது.  அந்த நூல், தம் கல்விக் கூடங்களில் பயிலும் அனைத்து மாணவர்களையும் தன் பிள்ளைகளாக வரித்துக் கொண்ட வள்ளல் அழகப்பருக்குக் காணிக்கையாக்கப்பட்டது.

          அந்த வள்ளலுக்கு பாடப்பட்ட அஞ்சலிகளெல்லாம் அவரின்  கொடை மனம் கொடைத் திறன் ஆற்றல் ஆளுமை சமூக அக்கறை இவற்றையெல்லாம் சுட்டி அந்த வள்ளலை இழந்து விட்டோமே என உலகம் அவரது இழப்பால் எப்படி வாடுகிறது என்ற கோணத்தில் அமைந்திருந்தன.

          ஆனால் அந்த மாணவர் கையேட்டு ஆசிரியரின் காணிக்கையுரையோ அழகப்பரின் இழப்பு உலக மாந்தருக்கு மட்டுமல்ல கல்வித் தெய்வத்திற்கே இழப்பு எனச் சுட்டி சிலிர்க்க வைக்கிறது.

         வள்ளல் அழகப்பரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டாடும் கவிதைகள், படைப்புகள் ஆயிரம் ஆயிரம், ஆயினும் இந்தக் கவிதையில் தான் வள்ளல் அழகப்பருக்கான சிம்மாசனம் மிகக் கச்சிதமாக செதுக்கப்பட்டிருப்பதாகக் கருதுகிறேன். 
Kavingar Maa. Kannappan

            பாரி கரம்பற்றிப் 
                 பறம்பு மலைகூறும்
            காரிகரம் பற்றிக்
                 கவிகூறும்! -  தேரின்
            அழகன் கரம்பற்றி 
                  யார் கூறும் - கூறும்
             கலைமகளின் மஞ்சள் கயிறு!

  
அந்த மாணவர் கையேட்டின் ஆசிரியர் ஒரு கல்லூரி பேராசிரியர், மாபெரும் கவிஞர், கண்ணதாசனை தன் கவிதைகளாலும் கவர்நத கவிஞர் அவர் தான் கவிஞர் மா. கண்ணப்பன்.

நலந்தா செம்புலிங்கம்
02.04.2019

"வள்ளல்" --- தவம் செய்த சொல்!

            தவம் செய்த சொல்!!

 நல்ல சொல் வேண்டுமென கவிஞர்கள் தான் தவிப்பார்கள், தவமிருப்பார்கள்.  
      
       ஒரு தமிழ்ச் சொல் தவமிருக்குமா? ஒரு நல்ல தமிழ்ச் சொல் தவமிருப்பதாக ஒரு கவிஞர் கற்பனை செய்கிறார். அந்த புரட்சிக் கவிஞர் வேறு யாருமல்ல நமது வ. சுப. மாணிக்கனார்  தான்.

        தவமிருப்பது   எந்தச் சொல் தெரிமா?



Dr. V.SP.M (addressing the gathering)  with Vallai Alagappar

                 வள்ளல் என்ற சொல் தவமிருக்கிறதாம், எதற்கா? அந்தச் சொல்லை ஏற்கத் தகுதியாவன் பிறக்க வேண்டுமாம்.   அந்த தவத்தின் பயனாகப் பிறந்தவர் தானாம் வள்ளல் அழகப்பர்.   

     ஆனால் வள்ளல் எனும் சொல் யாரை நினைந்து தவம் செய்கிறது என்பதை வ.சுப.மா. சொல்லவில்லை.  நான் சொல்லாமல் இருக்க முடியாது. வள்ளல் எனும் சொல் வ. சுப. மாணிக்கனாரை நினைந்து தான் தவமிருந்தது.  

       அந்தக் கொடை இமயத்தின் புகழ் கொடியை ஏந்திய தமிழ் இமயமல்லவா வ.சுப.மா.? அதனால் தான் நலந்தா   எடுக்கும்  வ.சுப.மா.  நூற்றாண்டு விழா காரைக்குடி கண்ட இரு இமயங்களையும் கொண்டாடும் இரட்டை விழாவாக பரிணமிக்கிறது.
      
       தமிழ் நெஞ்சினீரே வருக வருக

                       இனி,  வள்ளல் பால் வ.சுப.மா கொண்ட தீராக் காதலை சுட்டும் அந்த வெண்பா  (கொடை விளக்கு நூலில் 31 ஆம் வெண்பாவாக இடம் பெற்றுள்ளது)

                           வள்ளற்        றமிழ்சொல்      வணங்கித்                      தவஞ்செய்து
                          கொள்ளப்   பிறந்த                 கொடையழகன்           உள்ள
                          உடைமை   அனைத்தும்      ஒழித்தான்                     ஒழியார்
                          மடமை        தொலைக்கும்    மகன்