Thursday 4 April 2019

அழகப்பர் பதிவுப் படம் (STICKER)



அழகப்பர் பதிவுப் படம் (STICKER) 

       
          2015 ஆம் ஆண்டு கொடையின் கதை நூலின்  மூன்றாம் பதிப்பை வெளியிட்டோம். அந்த மூன்றாம் பதிப்பில் அழகப்பரைப் பற்றி அதுவரை வெளிவந்திருந்த  11 நூல்களின் பட்டியலை வெளியிட்டோம். அந்த 11 நூலைகளையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் முகிழ்ந்தது. நூல் வெளியீட்டு விழாவில் 11 நூல்களையும் அறிமுகம் செய்வதற்காக எல்லா நூல்களையும் ஒரு சேர எழுத்து எண்ணிப் படித்தேன்.

        பேராரிசிரியர் ச. குழந்தைநாதன் எழுதிய கோடி கொடுத்த கொடைஞனும் அவற்றுள் ஒன்று.  ஆனால், நான், அந்த நூல்  எத்தனையாவது முறையாகப் படிக்கிறேன் என்று கணக்கெல்லாம் வைத்துக் கொள்ளவில்லை.

         அந்த நூலில் இரண்டு பகுதிகள் என்னை பெரிதும் கவர்ந்த பகுதிகள் 

         அந்த நூலில் அழகப்பரின் பங்குச் சாதனைகள் ஓவியமாகவே தீட்டப்பட்டிருக்கும்.  ஒரு கட்டத்தில்  அவர் பால் பொறாமை கொண்டவர்கள் ஒன்று கூடி  திட்டமிட்டுப் பங்குச் சந்தையில் அவருக்குப் பேரிழப்பை ஏற்படுகிறார்கள். அது எனக்கே ஏற்பட்ட இழப்பை போல துடித்தேன், அது ஒரு புனைகதை போல என்னை சுண்டி இழுத்தது.
 அது தான் எழுத்தாளனின் வெற்றி.  

          172 ஆம் பக்கத்தில் அழகப்பர் கடைசி நாளில் கடைசி சில மணி நேரங்களில் தன் நினைவை இழந்தபோதும் கல்லூரி வளாகத்தினுள் இருப்பதாக நினைத்துக் கொண்டு பேசியதையும் எழுதியிருப்பார், கண்ணீர் சிந்தாமல் அந்த 172 ஆம் பக்கத்தைக் கடக்கவே முடியாது.

           . ஒரு நூலை, அதன் ஆசிரியர்/நாயகன்/கருத்து பால் ஏற்பட்ட தாகத்தினால் வாசிப்பதற்கும்  நூலறிமுகத்திற்காகவோ மதிப்பீட்டிற்காகவோ வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.  

            இம்முறை கோடி கொடுத்த கொடைஞனை நூலறிமுகத்திற்காக எழுத்தெண்ணி வாசித்த போது தான் 180 ஆம் பக்கத்திலிருக்கும் ஒரு சொற்றொடர் நெஞ்சில் தைத்தது.  அந்த சொற்றொடர் யார் எழுதிய சொற்றோடர்? எனப் பலரிடம் புதிர் போட்டேன்.  ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் வ.சுப. மாணிக்கனார் என அடித்துச் சொன்னார்கள். ஒரேயொருவர் சொன்ன மாற்று விடையோ கண்ணதாசன் என்பதாகும்.

               வ.சுப. மாணிக்கனாரே எழுதியதைப் போன்ற மயக்கத்தைத் தந்த  அந்த சொற்றொடர் என்ன உறங்கவிடவில்லை.

                வள்ளல் அழகப்பரை இவ்வளவு துல்லியமாகப் படம் பிடிக்கும் அச்சொற்றொடரை பிரபலமாக்க வேண்டுமென்ற அவாவில் ஒரு பதிவுப்படத்தை (STICKER) உருவாக்கி அழகப்பர் படத்தோடு அச்சொற்றொடரையும் பிரசுரம் செய்தோம். அந்தக் காவியச் சொற்றொடர்:

தொண்டால் பொழுதளந்த தூயர்!

அந்தப் பதிவுப் படம் (STICKER) தான் கொடைவிளக்கு புலனக் குழுவின் இலச்சினைப் படமாகத் திகழ்கிறது.

நலந்தா செம்புலிங்கம்
04.04.2019

குறிப்பு
 1. பதிவுப் படத்திற்கு விலை இல்லை. 
 
 2. விரும்புகிறவர்களுக்கு (ஒருவருக்கு 2 படங்கள்) பதிவுப் படம் அன்பளிப்பாக வழங்கப்படும். 
 
 3.  இந்தப் பதிவுப்படம் கிடைக்குமிடம் நலந்தா புத்தகக்    கடை  365/4 செக்காலை சாலை அண்ணா நாளங்காடி எதிரில் காரைக்குடி  அலைபேசி 9361410349 

Attachments area

No comments:

Post a Comment