Wednesday 3 April 2019

பாட்டுடைத் தலைவர் அழகப்பர்!



பாட்டுடைத் தலைவர் அழகப்பர்!!

      அழகப்பர் நம் மண்ணின் மைந்தர் என்ற புவி சாரந்த வரையரைகளுக்கு அப்பாற்பட்ட காலத்தின் மைந்தர். அவர் 1909 ஆம் ஆண்டில் பிறந்தார், 1957 ஆம் ஆண்டில் புகழுடம்பு எய்தினார்.  அவர் இன்றும்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  கல்வி என்ற சொல் உள்ளவரை வாழ்வார்.
    
      பிறக்கும் போதே செல்வச் சீமானாகப் பிறந்தோரை ஆங்கிலத்தில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தோர் என்பர்.  ஆனால் வள்ளல் அழகப்பரை தங்கக் கரண்டியுடன் பிறந்தவர் என்று தான் சொல்ல வேண்டும், அத்தகைய செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார்.  அந்தத் தங்கக் கரண்டியையும் பிளாட்டினம் கரண்டியாகப் பெருக்கினார்.

          ஒரே நாளில் எட்டு கார்களை வாங்கினார்,  ஒரு நாளில் எட்டு விமானங்களை வாங்கினார். ஐரோப்பியர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட ஆடம்பர ரிட்ஸ் விடுதியை நினைத்த பொழுதிலேயே வாங்கினார்.

          1947 ஆம் ஆண்டில் மருத்துவரும் கல்வியாளரும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் நெடுநாள் துணை வேந்தருமான டாக்டர் ஏ. எல். முதலியார் செல்வந்தர்கள் தான் உயர்கல்வி நிறுவனங்களை நிறுவி சுதந்திர இந்தியாவன் கல்விப் பணிக்கு தோள் கொடுக்க வேண்டும் என ஒரு கூட்டத்தில் அறைகூவல் விடுத்தார். வள்ளல் அழகப்பர் அந்தக் கூட்டத்திலேயே நான் எங்கள் மாவட்டத்தில் கல்லூரி தொடங்குவேன் என உறுதியளித்தார். உறுதியளித்த 45 நாட்களுக்குள் காரைக்குடியில் கலைக் கல்லூரியைத் தொடங்கினார்.  அந்தப் பொன்னான 1947 ஆம் ஆண்டிலிருந்து அவர் புகழுடம்பு எய்திய  1957 ஆண்டு வரை காரைக்குடியில் சங்கிலித் தொடராக கல்லூரிகளையும் பிற கல்வி நிறுவனங்களையும் தொடங்கிய வண்ணம் இருந்தார்.  பல மாநில அரசுகள் போட்டி போட்ட மைய அரசின் மின் வேதியல் ஆய்வகத்தை (சிக்ரி) தமிழகத்திற்கு காரைக்குடிக்கு வென்று தந்தார்.  அழகப்பரின் வாழ்க்கையை மூன்று நிலைகளாக தொகுத்து அழகப்பரின் வரலாற்றை Dr. RM. Alagappa Chettiar: Life and Legacies of a Visionary எனும் நூலாக எழுதிய டாக்டர் கே. வயிரவன்
, இந்த 1947 -- 1957 காலவெளியை அழகப்பரின் கொடைக் காலம் என்பார். எனினும் அதற்கும் முன்னரே  கேரளப் பல்கலைக் கழகங்கள், தில்லி கல்வி நிறுவனம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியில் துறையை நிறுவியது, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்லூரி நிறுவியது என கல்விக்குக் கொடையளித்த வண்ணமிருந்தார் அந்தப் பிறவிக் கொடைஞர்.



                   அந்த 1947 -- 1957 காலகட்டத்தில்  வள்ளல் அழகப்பரின் சிந்தனை காரைக்குடியை மையம் கொண்டது. சிக்ரியை காரைக்குடிக்கு கொண்டு வருவதற்காக அவர் அளித்த கொடைகளை போலவே அதற்காக அவர் போராடியதும் மாணப் பெரிது.  குடியிருந்த வீட்டையும் கொடுத்தார்.  பிறவிக் கொடைஞரும் சிறந்த கல்வியாளருமான வள்ளல் அழகப்பர் மக்கள் நெஞ்சங்களில்  ஒரு தலைவனாகவும் திகழ்ந்தார். புலவர்களுக்கும் பாட்டுடைத் தலைவரானார்.

             வள்ளல் அழகப்பரை அன்றும் இன்றும் பாடாதவர்கள் இல்லை.  ஆனால் பாட்டுடைத் தலைவன் என்று பேசத் தலைப்பட்டால், வள்ளல் அழகப்பரை மிகச் சிறப்பாக கொண்டாடும் ஒரு பாட்டையோ, கட்டுரையையோ, வாழ்க்கை வரலாற்றையோ நூலையோ, படைப்பையோ இனம் கண்டு சுட்டிக் காட்ட வேண்டும்.

அழகப்பரின் கல்வி நிறுவனங்களில், நிறுவனர் வாழ்த்தாக  பாடப்படும், வெண்பா, 

           கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த
           வீடும் கொடுத்த விழுத் தெய்வம் - தேடியும்
            அள்ளிக் கொடுத்த அழகன் அறிவூட்டும்
            வெள்ளி விளக்கே விளக்கு

வ,சுப, மாணிக்கனாரின் கொடைவிளக்கு நூல் இடம் பெற்ற புகழ் பெற்ற வெண்பாவாகும்.



Dr. V.Sp. M  (addressing the gathering) with Vallal Alagappar

           கொடைவிளக்கு, அழகப்பர் புகழ் பாடும் வ.சுப, மாணிக்கனாரின் முத்திரைக் காப்பியம்.  வ.சுப,மா வும் சங்கப் புலவரைப் போன்றவர் கொடை விளக்கும் சங்கத் தமிழ் நூலைப் போன்றது.  இதற்கு மேலும் பாட்டுடைத் தலைவன் ஆய்வு தேவையா?  

         ஒரு தடகளப் போட்டியில் தனித்தனியாக பல பந்தயங்களும் விளையாட்டுகளும் நடைபெறும். ஒவ்வொரு நிகழ்விலும் ஒருவர் வெற்றி பெறுவார்.  அதிக நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர் தடகளப் போட்டியின் பெரும் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

          ஒரு தடகளப் போட்டியில் பெரும் வெற்றியாளர் என ஒருவருக்கு மணிமுடி சூட்டப்பட்டாலும் தனித் தனி நிகழ்வுகளில் சில வெற்றியாளர்கள்  இருக்கக் கூடும்.  அத்தகைய தனி நிகழ்வு வெற்றியாளர்களின் சாதனைகள் நம் நெஞ்சைத் தொடும்.

         அழகப்பர் புகழ்பாடும் சீரிய பணியில் மணிமுடி நூல் கொடைவிளக்கு தான் மணிமுடி புலவர் வ.சுப. மாணிக்கனார் தான், அதில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லை.  எனினும் தனித்தனியாக ஒரு எழுத்தாளரும் மற்றொரு கவிஞரும் நம் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

           "தொண்டால் பொழுது அளந்த தூயர்" 

           என்றொரு அஞ்சலி. ஆனால் வ.சுப. மாணிக்கனாரின் கொடைவிளக்கில் இடம் பெறவில்லை என்பது மட்டும் உறதியாகத் தெரியும்.

        இவ்வளவு சிறப்பாக வள்ளல் அழகப்பருக்கு யாரால் அஞ்சலி செலுத்த முடியும்?  வ.சுப. மாணிக்கனாரே வேறு நூலில் எழுதியிருப்பாரோ?

          "தொண்டால் பொழுது அளந்த தூயர்"   எனும். இச்சீரிய சொற்றொடரை யார் எழுதினார் எனப் பலரிடம் புதிர் போட்டேன். 

         ஒருவரைத் தவிர அத்தனை பேரும் வ.சுப,மா என்றார்கள்.  ஒரேயொருவர் அளித்த வேறொரு பதில் கவிஞர் கண்ணதாசன்.  

          உள்ளபடியே இந்த கவித்துவமிக்க சொற்றொடரை எழுதியவர் கவிஞர் அல்லர். மிகச் சிறந்த பேரரசிரியரும் எழுத்தாளருமான ச. குழந்தைநாதன் தான்.   இந்த சொற்றொடர்  அவர் எழுதிய கோடி கொடுத்த கொடைஞன் நூலில் 180 ஆம் பக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது.

            இது பேராசிரியர் குழந்தைநாதனின் சொற்றொடர் தான், ஆனால் அனைவரையும்  வ.சுப, மா. வின் வரி என மயக்கம் கொள்ள வைத்திருக்கிறதே! 

        வள்ளல் அழகப்பரை புலவர்களெல்லாம் கொடை, கல்வி எனும் இரண்டு தூரிகைகளால் வரைந்த போது தொண்டு எனும் அழகப்பரின் மற்றொரு சால்பைத் தூரிகையாக்கிய பேராசிரியரின் கவித்துவமான அஞ்சலியை சிறந்த அஞ்சலி என்றால், எவரையும் விட வ.சுப. மாணிக்கனாரின் நெஞ்சம் தான் அதிகமாக மகிழும்.

          வள்ளல் அழகப்பர் புகழுடம்பு எய்திய போது  மாணவர்கள், ஆசிரியர்கள்,  கல்வியாளர்கள்,  கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள்,
அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பினரும் செலுத்திய அஞ்சலிகள் ஒன்றை ஒன்று விஞ்சும், நெஞ்சை உருக்கும்.

            அந்த 1957 ஆம் ஆண்டுக்கு பின்னர் பல ஆண்டுகள் கடந்து, மாணவர்க்கான கையேடு ஒன்று வெளியிடப்பட்டது.  அந்த நூல், தம் கல்விக் கூடங்களில் பயிலும் அனைத்து மாணவர்களையும் தன் பிள்ளைகளாக வரித்துக் கொண்ட வள்ளல் அழகப்பருக்குக் காணிக்கையாக்கப்பட்டது.

          அந்த வள்ளலுக்கு பாடப்பட்ட அஞ்சலிகளெல்லாம் அவரின்  கொடை மனம் கொடைத் திறன் ஆற்றல் ஆளுமை சமூக அக்கறை இவற்றையெல்லாம் சுட்டி அந்த வள்ளலை இழந்து விட்டோமே என உலகம் அவரது இழப்பால் எப்படி வாடுகிறது என்ற கோணத்தில் அமைந்திருந்தன.

          ஆனால் அந்த மாணவர் கையேட்டு ஆசிரியரின் காணிக்கையுரையோ அழகப்பரின் இழப்பு உலக மாந்தருக்கு மட்டுமல்ல கல்வித் தெய்வத்திற்கே இழப்பு எனச் சுட்டி சிலிர்க்க வைக்கிறது.

         வள்ளல் அழகப்பரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டாடும் கவிதைகள், படைப்புகள் ஆயிரம் ஆயிரம், ஆயினும் இந்தக் கவிதையில் தான் வள்ளல் அழகப்பருக்கான சிம்மாசனம் மிகக் கச்சிதமாக செதுக்கப்பட்டிருப்பதாகக் கருதுகிறேன். 
Kavingar Maa. Kannappan

            பாரி கரம்பற்றிப் 
                 பறம்பு மலைகூறும்
            காரிகரம் பற்றிக்
                 கவிகூறும்! -  தேரின்
            அழகன் கரம்பற்றி 
                  யார் கூறும் - கூறும்
             கலைமகளின் மஞ்சள் கயிறு!

  
அந்த மாணவர் கையேட்டின் ஆசிரியர் ஒரு கல்லூரி பேராசிரியர், மாபெரும் கவிஞர், கண்ணதாசனை தன் கவிதைகளாலும் கவர்நத கவிஞர் அவர் தான் கவிஞர் மா. கண்ணப்பன்.

நலந்தா செம்புலிங்கம்
02.04.2019

2 comments: