கொடைவிளக்கின் பேரொளிகள்!!
கொடை விளக்கு, இருபதாம் நூற்றாண்டில் எழுந்த சங்க நூல். சங்க காலத்தில் கபிலர் பாரியைப் பாடினார். இருபதாம் நூற்றாண்டில் வ.சுப. மாணிக்கனார்
வள்ளல் அழகப்பரைப் பாடினார். 171 வெண்பாக்களால் ஆனது கொடைவிளக்கு. ஒவ்வொன்றும் தித்திக்கும் தேன் தான்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல ஒரு நூலினை அறிமுகப்படுத்த, நூலைப் பரப்ப முழு நூலையும் வாசிக்க முடியாது, ஒரு சிறு பகுதியைத் தான் முன்னிலைப்படுத்த வேண்டும். அந்த வகையில் என்னைப் பெரிதும் கவர்ந்த பாட்டுடைத் தலைவனின் உள்ளத்தை மிக நேர்த்தியாகப் படம் பிடிக்கும் பத்து வெண்பாக்களை கொடை விளக்கில் பேராெளிகள் என தொகுத்துள்ளேன்
1.கம்பனொளி (ஒரு வெண்பா)
2. கண்ணைக் குளமாக்கும் சுடரொளிகள் (இரண்டு வெண்பாக்கள்)
3. கொடையொளிகள் (இரண்டு வெண்பாக்கள்)
4. புரட்சியொளி (ஒரு வெண்பா)
5. கடைமயுரைத்தல் (ஒரு வெண்பா)
6. வள்ளல் வாழ்த்து (இரண்டு வெண்பாக்கள்)
என ஒன்பது வெண்பாக்களை ஆறு தலைப்புகளில் தொகுத்துள்ளேன். பத்தாவது வெண்பா, வ.சுப. மாணிக்கனார் சூடிய தமிழ்த் தவம் என்ற தலைப்பையே சூடியுள்ளேன். தமிழ்த் தவம் தான் கொடைவிளக்கின் மணிமுடி எனக் கருதுகிறேன்.
கம்பனொளி
1. வெண்பா எண் 84
நம்ப முடியவில்லை நாற்பத்தெட் டாண்றிக்குள்
கம்பனும் காணக் கலைநகராய்த் - தம்பொருளால்
எல்லோரும் கல்வியெழிலைப் பெறவைத்தான்
பல்லாரும் வாழப் பகுத்து
கண்ணைக் குளமாக்கும் சுடரொளிகள்
2. வெண்பா எண் 113
சாய்ந்த படுக்கையன் சாரா உணவினன்
ஓய்ந்த உடலன் உளம்வலியன்: - வாய்ந்தவோர்
ஆயிர மாணவரை அங்கழைத்துப் பேசினான்
சேயர் பலருடையான் சீர்
3. வெண்பா எண் 121
அரித்துக் குடையும் அழிநோய் வருந்தச்
சிரிக்குக் குலுங்கும் திறத்தன்: - திரித்தும்
இறைபழியா அன்பன்: இருந்தும் கொடாஅர்க்
குறைபழியாச் சான்றோன் குணம்
கொடையொளிகள்
4. வெண்பா எண் 54
பாரும் உறங்கும் படுயாமம் தில்லியில்
நேருவைக் கண்டு நிதியளித்தாள் - யாரும்
மடித்துத் தொகுக்கின்ற மண்ணுலகில் ஏனோ
துடித்துக் கொடுத்தான் தொகை
5. வெண்பா எண் 55
எண்ணாத் தமிழிசைக்கு ஏற்ற உயிர்கொடுத்த
அண்ணா மலையான் அமைத்தபெருந்த – திண்ணார்
கலைப்பல் கழகம் கலைப்பொறி காண்பான்
நிலைப்பல் நிதியளித்தான் நேர்
புரட்சியொளி
6. வெண்பா எண் 146
மறப்பின்றிக் கல்வி வளர்த்தானை ஈண்டுப்
பிறப்பில்லை என்றமதம் பேசேல்; - சிறப்பின்றி
நாம்பிறத்தல் காறும் நலஞ்செய் அழகனைத்
தாம்பிறக்க வேண்டல் தகும்
கடமையுரைத்தல்
கொடைவிளக்கு நூலில் பாயிரத்தைத் தொடர்ந்து 10 அலகுகள் உள்ளன. இறுதி (10 ஆம்) அலகின் தலைப்பு: உலகக் கடன். இதில் மாணவர் நன்றி, மாணவர் ஒழுக்கம், மாணவர் குறிக்கோள், ஆசான்கள், வணிகர், இந்திய மக்கள், புள்ளினங்கள், இளம்பெண்கள் என ஓரோருர் வகையினர் எப்படி அழகப்பருக்கு நன்றி பாராட்ட வேண்டுமென வ.சுப.மா வகுத்துள்ளார். அதில் இளம்பெண்கள் என்ற தலைப்பில் வரும் வெண்பா:
7. வெண்பா எண் 156
ஊரார் குழந்தையை ஊட்டி வளர்த்தானைக்
கூரார் குவிமுலையீர் கூப்புமினோ – சீரார்
அழகனைக் போலவொரு அள்ளிக் கொடுக்கும்
குழகனைப் பெற்றுக் கொள
வள்ளல் வாழ்த்து
இலக்கியம் கற்றான்: இயல் சட்டம் கற்றான்:
கலக்கியல் வாணிகமும் கற்றான்: - இலக்கம்
அடுக்கப் பயின்ற அழகப்பன் எங்கோ
கொடுக்கப் பயின்றான் கொடை
9. வெண்பா எண் 95
படித்தான் பறந்தான் படைத்தான் நினைத்தான்
கொடுத்தான் சிறந்தான் குறித்தான் - துடித்தான்
எடுத்தான் முடித்தான் இனித்தான் அழகன்
படுத்தான் விடுத்தோம் பணிந்து.
தமிழ்த் தவம்
(இத்தலைப்பு வ.சுப.மா வின் தலைப்பு)
10. வெண்பா எண் 31
வள்ளற் றமிழ்ச்சொல் வணங்கித் தவஞ்செய்து
கொள்ளப் பிறந்த கொடையழகன் - உள்ள
உடைமை அனைத்தும் ஒழித்தான் ஒழியார்
மடமை தொலைக்கும் மகன்
நலந்தா செம்புலிங்கம்
05.04.2019
குறிப்பு: இந்த ஆக்கத்தினை அரசி. பழநியப்பன் ஒலி வடிவில் வழங்கவுள்ளார்கள்
பகிர்ந்துள்ள ஒரு பகுதியே முழுமையாக நூலை வாசிக்கும் ஆவலைத் தூண்டியது. நன்றி.
ReplyDelete