Monday, 21 May 2018

தருநாடகாவில் நடந்தது என்ன? (பகுதி 1 & 2)

      தருநாடகாவில் நடந்தது என்ன? 

(அணு அளவும் உண்மை இல்லாத கற்பனைத் தொடர்)

அறிமுகப் படலம்
~~~~       ~~~~~     ~~~~~

ஆசிரியரின் அறிவிப்புகள்
~~~~       ~~~~~     ~~~~~ 
இந்தத் தொடரில் வரும் எழுத்துப் பிழைகள் இலக்கணப் பிழைகள் யாவும் உண்மையே.

இந்தத் தொடரில் வரும் சம்பவங்கள் பெயர்கள் யாவும் கற்பனையே.

இந்தத் தொடர் யாருடைய மனதையும் சிரிக்க வைப்பதற்காக எழுதப்படவில்லை.

                                                                 ~~~~       ~~~~~     ~~~~~

இத்தொடரைப் படிக்க வாசகர்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய நிபந்தனைகள்

~~~~       ~~~~~     ~~~~~ 
இந்தத் தொடரினால் சில உண்மைகள் புரிந்தால் அதனை ரகசியமாக வைத்துக்கொள்வேன்.

இந்தத் தொடரினால் மகிழ்ச்சியடைந்தால் ஆசிரியருக்கு சன்மானம் வழங்க மாட்டேன்

இந்தத் தொடரினால் பாதிக்கப்பட்டால் ஆசிரியர் மீது வழக்கு தொடரவோ வேறு எவ்வித நடவடிக்கையோ எடுக்க மாட்டேன்.
~~~~       ~~~~~     ~~~~~
பகுதி  1

       முன்னொரு காலத்தில் காவிரி நதி என்றொரு நதி  இருந்ததது.  அது உற்பத்தியான மாநிலம் தருநாடகா என்றழைக்கப்பட்டது.

        அந்த நதி புதிய புதிய அணைகளால் முடக்கப்பட்டு பெரும்பாலும் தருநாடகா மாநிலத்திற்குள்ளேயே  ஓடியது.  பெரு மழையும் பெரு வெள்ளமும் ஏற்பட்ட காலங்களில் மட்டும் அண்டை மாநிலமான மீத்தேன் நாட்டில் தப்பித் தவறி விளைந்த பயிர் மீது பாய்வதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

          ஊழலும் லஞ்சமும் முறைகேடுகளும் தலைவிரித்தாடிய அந்த கலிகாலத்தில் அந்த மாநிலத்தில் நியாயமாக தொழில் செய்து உலகெங்கிலும் பல லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் அளித்து முறைப்படி சம்பாரித்து ஒழுங்காக வரிசெலுத்திய இன்போசிஸ் நாாராயணமூர்த்தி விப்ரோ அஜீஸ் பிரேம் ஜி போன்றோரும் வாழ்ந்தனர். 

 பகுதி  2


              தருநாடகா மாநிலத்தில் சட்டப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பிச்சை எடுக்கும் திருவிழா நடைபெற வேண்டும்.

                ஆனால் சில சட்டச் சிக்கல்கள் காரணமாக ஒரு திருவிழா முடிந்து ஐந்து ஆண்டு பிச்சைக் காலம்  நிறைவடையும் முன்னரே மீண்டும் ஒரு  திருவிழா நடத்தும் நிலை பல முறை ஏற்பட்டிருக்கிறது.  சில சமயம் ஒரு திருவிழா முடிந்து ஓராண்டுக்குள்ளே மீண்டும் ஒரு  திருவிழா நடத்தப்பட்டிருக்கிறது.

                  அந்தப் பிச்சை எடுக்கும் திருவிழா உலகமெங்கும் கூர்ந்து கவனிக்கப்பட்டது.  அதற்குக் காரணம் அந்த மாநில மக்கள் பிச்சை அளித்த மிக மிக அரிதான மாபெரும் சக்திமிக்க தங்கக் காசுகள் தான்.  

                      நாம் கடையில் வாங்கும் தங்க நகைகள்  22 காரட் தரம் உடையவை என உண்மையை மட்டும்  பேசும் விளம்பரத்  தூதுவர்களால் விளம்பரங்களில் மட்டும் உறுதியளிக்கப்படுகிறது.  ஆனால் நாம் வாங்கும் நகைகள் 18 காரட் தரம் பெற்றிருந்தாலே நாம் பெரிய அதிர்ஷ்டக்காரர்கள் என அண்டை அயலார்கள்  நம் மீது பொறாமைப்படுகிறார்கள்.   ஆனால் தருநாடகா மக்கள் பிச்சை எடுக்கும் திருவிழாவில் வாரி வழங்கிய தங்கக் காசுகளோ 1000 காரட் தரம் உடையவை ஆகும்.


             உலகப் புகழ் பெற்ற தருநாடகா பிச்சை எடுக்கும் திருவிழா என்பது அந்த மாநிலத்தில் உள்ள 224 ஊர்களிலும் ஒரே நேரத்தில் நடைபெறும் பிச்சை எடுக்கும் போட்டி தான். சில சட்டச் சிக்கல்கள் காரணமாக சில ஊர்களில் போட்டி நடத்த முடியாமல் போய்விடும். அந்த ஊர்களில் சில காலம் கழித்து தனியாக போட்டி நடைபெறும்.

             224 ஊர்களில் அதிக ஊர்களில் வெற்றி பெற்ற அணிக்கு நிதான் செளதா எனும் தங்க மாளிகை பரிசளிக்கப்படும்.

               அண்மையில் தருநாடகவில் பிச்சை எடுக்கும் திருவிழா நடைபெற்றது.  மாநிலத்தில் உள்ள  224 ஊர்களில் இரண்டு ஊர்களில்  பிச்சை எடுக்கும் போட்டி நடத்த முடியாமல் போயிற்று.  அதனால் 222 ஊர்களில் மட்டுமே பிச்சை எடுக்கும் போட்டி நடை பெற்றது.  

                 இந்தப் போட்டிகளில் மக்கள் ஆயிரம் காரட் தங்கக் காசுகளை வாரி வழங்குவார்கள் என்பதை முன்னரே பார்த்தோம்.  அதனால் பிச்சை எடுக்கும் போட்டி மிகக் கடுமையாக இருக்கும்.

                    அதனால் பெரும்பாலான போட்டியாளர்கள் அம்மா தாயே பிச்சை போடுங்க என்ற பழைய பாணியை கைவிட்டுவிட்டார்கள்.  ரிசர்வ் வங்கிப் பணத்தையே லஞ்சம் கொடுப்பது ஒரு உத்தி.  சாதி மதம் பெயர் சொல்லி பிச்சை கேட்பது ஒரு உத்தி.  மிக மிக முக்கியமான உத்தி அண்டை மாநிலமான மீத்தேன் நாட்டிற்கு எக்காரணம் கொண்டும் தண்ணீர் காட்ட மாட்டேன் என்று உறுதியளிப்பது தான்.


No comments:

Post a Comment