Thursday 19 April 2018

சிலம்பைத் தூக்கிப் பிடிக்கும் குன்றக்குடி அடிகளார் !!

சிலம்பைத் தூக்கிப் பிடிக்கும்
 குன்றக்குடி அடிகளார் !!    
                                              /// *** /// *** ////
தேவகோட்டை தமிழ் மையத்தை சித்திரை முதல் நாளில் (14.04.2018) தவத்திரு குன்றக்குடி அடிகளார் தொடங்கி வைத்தார். உள்ளபடியே அவர் தொடங்கி வைப்பதற்கு முன்னரே தமிழ் மையம் ஆசிரியர்களுக்கான கட்டுரை கவிதை பேச்சுப் போட்டிகளை நடத்தி அதன் பணியைத் தொடங்கிவிட்டது. தொடக்க விழா ஒரு பள்ளி ஆண்டுவிழா போல பரிசளிப்போடு நடைபெற்றது. இரண்டு பள்ளிகள் கலை நிகழ்ச்சிகள் வழங்கியதால் இரண்டு பள்ளிகளின் ஆண்டு விழா என்றே சொல்லலாம்.



நகரத்தார் தொடக்கப் பள்ளி மாணவர்கள் கோதை ஆண்டாள் வரலாற்றை 10 நிமிட நாடகத்தில் கண் முன் நிறுத்தினார்கள். இந்தப் பத்து நிமிடத்திற்குள் மழலைக் கோதை இளமங்கைக் கோதை என இரு பருவங்களையும் இரு வெவ்வேறு மாணவர்களை நடிக்க வைத்து வேறுபடுத்திக் காட்டினார்கள். கோதைத் தமிழில் சிறப்பு ழ கரம் மிகுந்திருக்கும் அதை மிகச் சரியாக உச்சரித்து அசத்தினார்கள்.
லோட்டஸ் பள்ளி மாணவர்கள் ஒரு 15 நிமிட நாடகத்திற்குள் சிலப்பதிகார நாடகத்தை அனல் பரக்கும் வசனங்களோடு படைத்தார்கள். கண்ணகி நடித்த மாணவிக்கு நெடிய நெடிய வசனங்கள் அவற்றை மெய்ப்பப்பாட்டோடு பேசி நடித்து முழு அரங்கத்தை தன்வயப்பப்படுத்தினார். தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் அதற்கு விதிவிலக்கல்ல. அது அவருடைய சிறப்புரையிலும் வெளிப்பட்டது.

தேவகோட்டை தமிழ் மையத் தொடக்க விழாவில் குன்றக்குடி அடிகளார் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்க உரை. அடிகளார் பல உரைகளைக் கேட்டவர்களுக்கும் இந்த உரை என்றென்றும் நினைவில் நிற்கும் வகையில் அமைந்தது. கருத்துச் செழுமையும் சீரிய நடையும் புதிய பரிணாமம் கண்டன. தமிழ் தான் வீடுபேறு அளிக்கும் ஒரே மொழி என்பது தான் அடிகளார் உரையின் மைக் கருத்து. ஆனால் கண்ணகி நாடகம் அடிகளாரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியதையும் அவர் மங்கையர்க்கரசி, திலகவதியார், காரைக்கால் அம்மையார் ஆகியோரின் தவ வாழ்க்கைகளையும் கண்ணகியின் வரலாற்றையும் ஒப்பிட்டுப் பேசியதில் தெளிவாக வெளிப்பட்டது.


அதனால் தான் நாடகக் குழுவினர் அடிகளாரோடு படம் எடுத்துக் கொண்ட போது " கண்ணகி" யோடு சிலம்பைத் தூக்கிப் பிடித்தார்.

பின் குறிப்பு: நாடகங்கள் மெய்சிலர்க்க வைத்தன, அடிகளாரோடு இந்த மாணவர்கள் படம் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு கூடுதல் பாராட்டாகவும் மறைக்க முடியாத நிகழ்வாகவும் அமையும் என அந்தக் கணத்தில் எனக்குத் தோன்றியது. அடிகளாரிடமும் வேண்டுகோளை வைத்தோம், அவரும் மகிழ்வோடு இசைந்தார்.
படம் எடுத்துக் கொண்ட பின்னர் தான் அடிகளார் பேருரை ஆற்றினார்கள். அடிகளார் உரையும் நெகிழ்ச்சியாக அமைந்தது. அப்போதே என் முகநூலில் சொல்லாலும் செயலாலும் நெகிழ்த்திய குன்றக்குடி அடிகளார் எனப் பதிவு செய்தேன்
நலந்தா செம்புலிங்கம்
18.04.2018

1 comment: