ஒத்தக்ககடையில் வெற்றிப் புன்னகை!!
புகைப்படக் கலைஞர்களின் சொற்களுக்கு அப்படியொரு மந்திர சக்தி இருக்கிறது. நீங்களும் அந்த மந்திர சக்திக்கு ஆட்பட்டிருப்பீர்கள், ஆனால் அதை உணர்ந்திருக்கமாட்டீர்கள்.
“ கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க”, "லெப்ட் சைடு திரும்புங்க", "என்னைப் பாருங்க” என அடுத்தடுத்து கட்டளை பிறப்பித்துக் கொண்டிருக்கும் புகைப்படக் கலைஞர் சொல்லச் சொல்ல புகைப்படம் எடுத்துக் கொள்ள நிற்பவரின் முகம் மெல்ல மெல்ல இருகும்.
இதற்குப் பிறகு தான் கிளைமாக்ஸ் வரும். “அப்படியே பாருங்க, என்னைப் பாருங்க ....ஸ்டடி....அப்படியே கேமராவைப் பாருங்க” என்று அவர் சொல்லும் கணத்திலேயே இவரின் முகம் காற்றைப் பரிகொடுத்த பலூனைப் போல வதங்கிப் போய்விடும்.
இந்தப் புகைப்படக் கலைஞர்களிடமிருந்து எப்படித் தப்புவது? ஒழுங்காக "போஸ்" கொடுக்கச் சொல்லிக் கொடுக்க ஆளே இல்லையா? என தருமி மன்றாடியதைப் போல நானும் அந்தச் சொக்கநாதரிடமே மன்றாடினேன். சொக்கநாதர் கருணை கொண்டு என் கனவில் வந்து காட்சியளித்தார். மதுரை ஒத்தக்கடை ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு செல்க எனக் கட்டளையிட்டார்.
பொழுது புலர்ந்ததும் மதுரை ஒத்தக்கடைக்கு விரைந்தேன். அங்கு கோடை விடுமுறைக் கால பயிற்சி வகுப்பு ஏதேனும் நடக்கும் போலும் அதனால் தான் சொக்கநாதர் நம்மை அனுப்பியிருக்கிறார் என நினைத்துக் கொண்டு பள்ளியினுள் நுழைந்தேன்.
அங்கு ஒரு பயிற்சி வகுப்பும் நடக்கவில்லை. ஐந்தாம் வகுப்பு முடித்து பள்ளியிலிருந்து விடைபெறும் மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா தான் நடந்து கொண்டிருந்தது. அடடா இதற்குத் தானா தனியார் பேருந்தில் உயிரைப் பிடித்துக் கொண்டு மதுரைக்கு விரைந்து வந்தோம் எனப் புலம்பினேன். அதுவும் சொக்கநாதர் காதில் விழுந்துவிட்டது, என் முன் தோன்றினார், கோபமாகவே இருந்தார். நல்லவேளை நெற்றிக்கண்ணைத் திறக்கவில்லை. இதுவரைக்கும் தருமி கதை போல ஒடிக்கொண்டிருந்தது. திடீரென தடம் மாறிவிட்டது. சொக்கநாதர் கேள்வி கேட்க நான் பதில் சொல்ல வேண்டியதாயிற்று.
சொக்கநாதர்: பிரிவு உபசார விழாவில் என்னவெல்லாம் நடக்கும்?
நான்: விருந்து கொடுப்பார்கள்
சொக்கநாதர்: சாப்பாட்டில் தான் கவனம் போலும் சரி, வேறென்ன நடக்கும்
நான்: பொன்னாடை போர்த்துவார்கள்
சொக்கநாதர்: அதற்குப் பிறகு ?
நான்: பரிசுகள் வழங்குவார்கள்
சொக்கநாதர், எதிர்பார்த்த பதிலைத் தவிர வேறு எதை எதையோ சொல்லிக் கொண்டிருந்தேன். பொறுமை இழந்த சொக்கநாதர்:
குழுப் புகைப்படம் எடுத்துக் கொள்ளவார்களா மாட்டார்களா? என அதட்டினார்
நான்: ஆம் நிச்சியமாக எடுத்துக் கொள்வார்கள்.
சொக்கநாதர்: குழுப் புகைப்படத்தை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
நான்: மாணவர்கள் இரண்டு மூன்று வரிசை நாற்காலியில் உட்கார்ந்திருப்பார்கள், அதற்கு பின் வரிசையில் மாணவர்கள் நிற்பார்கள் அல்லது முன் வரிசையில் உட்கார்ந்திருப்பார்கள்.
சொக்கநாதர்: ஆசிரியர் தலைமை ஆசிரியர் எங்கே இருப்பார்கள்?
நான்: முதல் வரிசை நடுவில் பெரிய நாற்காலியில் விரைப்பாக உட்கார்ந்திருப்பார்கள்
சொக்கநாதர்: முக்கியமான இரண்டு கேள்விகளுக்கு சரியான விடை கூறியதால் நீ விரும்பிய புகைப் படத்திற்கு "போஸ் கொடுக்கும்" கலையில் தேர்ச்சி பெற மிகச் சிறந்த குருநாதரைக் காட்டி வைக்கிறேன்.
சொக்கநாதர்: இந்தப் பள்ளி நடு முற்றத்தில் 16 மரங்கள் உள்ளன 6 வது மரத்தின் பின் நின்று கொள், அந்த வகுப்பறைக்குள் உன் குருநாதர் புகைப் படத்திற்கு "போஸ் கொடுக்கும்" கலையில் லயிப்பதைப் பார், ஏகலைவனைப் போலவே நீ தொலைவிலிருந்தே கற்றுக் கொள்வாய். உன் குருநாதர் துரோணாச்சாரியரைப் போல கட்டை விரல் காணிக்கையெல்லாம் கேட்கமாட்டார்.
நான்: அது சரி சொக்கநாத என் குருநாதர் யார்?
சொக்கநாதர்: மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய (ஒத்தக்கடை) தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னவன் தான் உன் குருநாதர்.
****/////****/////*****
குழுப் புகைப் படத்திற்கு மாணவர்கள் தலைமை ஆசிரியர் சில ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினர் எல்லோரும் தயராகிவிட்டனர்.
எல்லா மாணவர்கள் முகத்திலும் சாதனைப் புன்னகை ஏறத்தாழ எல்லோர் கையிலும் ஒரு ஓவிய அட்டை. தங்கள் முகத்தை விட அந்த ஓவிய அட்டை நன்றாகத் தெரியவேண்டுமென தலைக்குமேல் பிடித்துக் கொண்டார்கள்
நாற்காலிகளையே காணவில்லை நீள பெஞ்களையும் காணவில்லை. தலைமை ஆசிரியருக்கு மட்டுமல்ல சிறப்பு விருந்தினருக்குக் கூட நாற்காலி இல்லை.
. ஏதோ கூட்டாஞ்சோறு உண்பதற்கு உட்காருவதைப் போல கிட்டத்திட்ட அரை வட்டமாக அதுவும் பல் வரிசை போல சில இடங்களில் ஒற்றை வரிசையிலும் சில இடங்களில் இரட்டை வரிசையிலும் 10,11 மாணவர்கள் உட்கார்ந்தார்கள். அதற்குப் பின்னால் முட்டிக் கால் போட்டு ஒரு அரை வட்ட வரிசை. அதற்குப் பின்னர் நி்ன்று கொண்டு ஒரு வரிசை. ஒரு ஆசிரியர் அந்த நிற்கும் வரிசையிலும் இன்னொரு ஆசிரியர்
.
மதுரை ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி |
பொதுவாக இதைப் போன்ற படங்கள் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தான் கவனத்தை ஈர்க்கும் . பள்ளி மாணவர்களாகப் படத்தில் காட்சியளிப்பவர்கள் சமூகம் கொண்டாடும் மருத்துவராக உயரதிகாரியாக கலைஞராக பரிணமித்திருப்பார்கள். இவ்வளவு பெரிய ஆளுமைகள் சிறுவயதில் இப்படி இருந்தார்கள் எனச் சுட்டிக்காட்டப்படும் போது ஒரு புளகாங்கிதம் ஏற்படும்.
ஆனால் ஒத்தக்கடைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் பிரிவு உபசார விழாப் படம் எடுத்த நாளிலேயே மிளர்கிறது. அந்த மாணவர்கள் ஆசிரியர்கள் முகத்தில் பூத்திருப்பது இயல்பான புன்னகை! இருக்கம் இல்லாத புன்னகை! கற்றலில் இனிமையை பறைசாற்றும் வெற்றிப் புன்னகை!!
நலந்தா செம்புலிங்கம்
25.04.2018