கச்சா எண்ணெய் தலைகீழ் வணிகம்: விற்பவன் விலை கொடுத்தது உண்மையா?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
உண்மையின் கையைக் காலைக் கட்டிப் போட்டுவிட்டு, பொய்மை அதன் மேல் கொலை முயற்சி புகார் கொடுக்குமாம். ஊடகம் எனும் பஞ்சாயத்து தலைவரும் விசாரணையின்றி உண்மையைத் தண்டிப்பாராம்.
அப்படி வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு இப்போது அவலாகக் கிடைத்திருக்கிறது கச்சா எண்ணெய் விவகாரம்.
கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியத்திற்கும் குறைவாக வந்துள்ளது.
மோடி இன்னும் பெட்ரோலை 72 ரூபாய்க்கு விற்கிறார்
"இது, அராஜாகம், இது மக்களை வாட்டி வதைக்கும் கொடுமையான அரசு"
என சமூக வலைத் தளங்களில் அனல் பறக்கிறது.
உண்மை மீது கட்டிவிடப்பட்ட களங்களைக் களந்து உண்மையின் உண்மையைப் பார்ப்போம்.
1. கச்சா எண்ணெயின் மைனஸ் விலை, அது, சர்வதேச மார்க்கெட்டில் நடந்த உண்மை தான். அது பார்வர்டு டிரேடிங் சந்தையில் சூதாட்டத்தில் குதித்தவர்களால் ஏற்பட்ட பொருளாதார கொரோனா.
2. இது ஆன் லைன் வணிகத்தில் ஈடுபட்டுள்ள பலரை வேரோடு சாய்க்கும். அசல் சந்தையிலும் இதன் தாக்கம் லேசாக இருக்கும். கடைக்கோடி நுகர்வோருக்கு பலன் கிடைக்க வாய்ப்பில்லை.
3. சூதாட்ட வணிகர்கள் ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்யயை சேமிப்பதற்கு உரிய தூக்குச் சட்டி இல்லாமல் பல்லாயிரம் பேரல் கச்சா எண்ணெய்யயை ஆன் லைனில் வாங்குவார்கள்.
ஆன் லைனில் வாங்கிய சரக்கை ஒப்புக் கொள்ள வேண்டிய நாளில் கச்சா எண்ணெய்யயை உள்ளபடியே பயன்படுத்தும் (சுத்திகரிக்கும்) நிறுவனத்திற்கு விற்று விடுவார்கள். சில நேரங்களில் ஒப்பந்தத் தேதி விலையை விட சரக்கு ஒப்படைப்புத் தேதி விலை குறைவாக இருக்கலாம். அப்போது நஷ்டம் ஏற்படும். அந்த நஷ்டத்திற்கு அவர்கள் கைக் காசைக் கொடுப்பார்கள். இது தான் இதுவரை நடந்தது.
4. கொரோனா முடக்கத்தால் கச்சா எண்ணெய் பயன்பாடு சுருங்கிவிட்டது. அதனால் எவ்வளவு குறைந்த விலைக்கும் ஆன் லைனில் கச்சா எண்ணெய் வாங்கிய சூதாடிகளிடம் வாங்குவதற்கு ஆளில்லை.
5. ஆகவே ஆன் லைன் சூதாட்ட வணிகர்கள், சேமிப்பு கிடங்கு வசதியுள்ள அசல் சந்தை வணிகரிடமோ, சுத்திகரிப்பாளிரிடமோ அல்லது உற்பத்தியாளரிடமோ விற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிவிட்டார்கள்.
6. இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்ட ஆன் லைன்சூதாடிகளிடம் அசல் சந்தை வணிகர்கள் கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்ய ஒரு பைசா கூட விலை கொடுக்கவில்லை. கரும்பைத் தின்ன கூலியும் வாங்கிவிட்டார்கள்.
7. வரலாற்றில் முதல் முறையாக விற்பவன் வாங்குபவனுக்கு விலை கொடுக்கிறான். ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு தலை கீழ் விலை 3 முதல் 4 அமெரிக்க டாலர்.
8. மூன்றாவது பத்தியை மீண்டும் வாசித்தால் இது இயற்கை நீதி என்பதை ஏற்றுக் கொள்வீர்கள்.
9. இதனால் அசல் சந்தையில் பெரிய நன்மை ஏற்படாது. ஆனால் லைன் சந்தையில் மாட்டிக் கொண்டவர்களை மட்டுமல்ல ஆன்லைன் சந்தையையே புரட்டிப் போட்டுவிடும்.
10. பாரதம் போன்ற நாடு அன்றாடம் ஆன் லைன் விலை பார்த்து விலை வீழ்ச்சியடையும் நாள் வரை காத்திருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய முடியாது.
11. முறையாகத் திட்டமிட்டு பல மாதங்களுக்கு முன் கொள்முதல் ஒப்பந்தம் செய்யும் போது, கச்சா எண்ணெய் பல மாதங்களுக்கு முந்தைய விலையில் (ஒப்பந்த விலையில்) தான் வந்திறங்கும்.
நலந்தா செம்புலிங்கம்
22.04.2020