Wednesday, 21 November 2018

இலுப்பைக்குடியில் கணக்குப் புலிகள்


இலுப்பைக்குடியில் கணக்குப் புலிகள்
*********************************************



        கண்காட்சிகள் எனும் நிகழ்வுகள் காலப்போக்கில் அமைப்பிலும் பெயரிலும் மாற்றம் பெற்று பொருட்காட்சிகள் ஆகிவிட்டன.  சில பல நொறுக்குத் தீனி கடைகள்,  அழகு அலங்காரப் பொருட்கடைகள், எழுது பொருட்கடைகள்,  சமையலறை பொருட்கடைகள், ஒரு மைல் தள்ளியிருப்பவர்கள் கண்ணிலும்படும் அளவு உயரமான ராட்டினம், சில வேளைகளில் இவற்றோடு ஒரு சின்ன சர்க்கஸ் இது தான் பல ஊர்களில் நடக்கும் கண்காட்சிகள்.

        ஒரு துறை சார்ந்த கண்காட்சி என்றால் புத்தகக் கண்காட்சிகள் தான் தமிழகமெங்கும் பரவலாக நடைபெறுகிறது.  அது புத்தகத் திருவிழாவாக வளர்ந்திருக்கிறது.   அங்கு கடை அரங்கைவிட கலை அரங்கமே அதிக முக்கியத்துவம் பெறுகிறது.  அவையும் புத்தகங்களுக்காக நடத்தப்படுகின்றனவா? ஸ்பான்ஸர்களுக்கா நடத்தபபடுகின்றனவா என்ற பட்டிமண்டபமும் அவ்வப்போது எழுகிறது.

         செல்லப் பிராணிகளுக்கான கண்காட்சி பற்றிய செய்திகளையும் பார்க்கிறோம். அவற்றிற்குப் பின்புலமாக ஆர்வலர்களும் அவர்களை நம்பியிருக்கும் வணிக வட்டத்தினரும் அத்தகைய கண்காட்சிகளை தூக்கி நிறுத்துகிறார்கள்.

          இந்தச் சூழலில் தான் கணிதக் கண்காட்சி என்ற அறிவிப்பைக் கண்டேன்.  கல்வி அப்பட்டமான கடைச் சரக்கான பிறகு, அதுவும் ஒரு துறை சார்ந்த கண்காட்சியா? வியப்புக் குறிகளும் கேள்விக் குறிகளும் என் எண்ணப் போக்கில் மாறி மாறி ஓடின.

            அறிவிப்பை படிப்பதற்கு முன்னரே ஏதோ கல்லூரியில் நடக்கும் என அனிச்சையாக நினைத்தேன்.  அறிவிப்பில் அது இலுப்பைக்குடி எனும் சிற்றூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அன்று மட்டுமே அதுவும் மாலை 3.30 மணி வரை மட்டுமே நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.  அதுவே வியப்பாக இருந்தது.  அந்த அறிவிப்பும் புலனத்தில் வந்திருக்கிறது.



           உள்ளபடியே புலனச் செய்திகளில் அறுதிப் பெரும்பான்மையானவை  பொய்ச் செய்திகள் மோசடிச் செய்திகள்.  இந்தச் செய்தியை எப்படி எடுத்துக் கொள்வது?   நேரில் போய் பார்த்தால் அன்றி எதுவும் சொல்ல முடியாது.

       அந்த இலுப்பைக்குடி காரைக்குடியின் எல்லைக் கோட்டில் உள்ள சிற்றூர் தான், எங்கள் கடையிலிருந்து அந்தப் பள்ளி 3 கிலோ மீட்டர் தொலைவில் தான் இருக்கும்.

            நான் அந்தச் செய்தியைப் பார்த்தபோது மாலை 2.30 மணி, கண்காட்சி  இன்னும் ஒரு மணிநேரம் மட்டும் தான் நடைபெறும்.  ஒரு மணி நேரத்தில் 3 கி.மீ கடக்க முடியாதா? என வெளியூர்க்காரர்களும், இப்போதைய காரைக்குடியை அறியாதவர்களும் எதிர்கேள்வி கேட்பார்கள். பாதாளச் சாக்கடை என்றொரு திட்டம் வந்த பிறகு, அது  காரைக்குடியின் நலத்திட்டம் தானா? அல்லது பாக்கிஸ்தானின் சதி வேலையா? என நினைக்கும் அளவிற்கு சாலைகள் குதறி வைக்கப்பட்டுள்ளன.  இந்த நிலையில் காரைக்குடிக்குள் ஒரு இரு சக்கர வாகனத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க எவ்வளவு நேரம் என்பதையெல்லாம் கணித மேதை இராமனுஜத்தால் கூட கணிக்க முடியாது. 

               எப்படியோ 3.15 மணிக்கு அந்தப் பள்ளியை அடைந்தேன்.  பள்ளியின் வாசலில் இந்த விழாவிற்கு வந்த முக்கிய பிரமுகர்களை வரவேற்க வைக்கப்பட்ட கட்அவுட் ,  புலனத்தில் கண்ட செய்தி உண்மை தான் என்றும் அதை நம்பி வந்ததும் தவறில்லை என மனதிற்கு பெரிய ஆறுதலைத் தந்தது.  
                      
             பள்ளிக்குள்  நுழைந்ததும் இன்னொரு  ஒரு பெரிய கட் அவுட் அசத்தியது.  இந்தக் கண்காட்சி அழைப்பையே கணித சூத்திரங்களை வைத்து சித்தரித்தது அந்தக் கட் அவுட். வகுப்பறைகளுக்கு முன் அமைந்த மைதானத்தில் வரிசையாக ஏராளமான செங்குத்தான (அகலம் குறைந்த உயரமான) கட் அவுட்கள்.  ஒவ்வொன்றும் ஒரு கணித மேதையின் வாழ்க்கைக் குறிப்பையும்  அந்த மேதையின் கணிதத் துறை சாதனையையும் படத்தோடு சித்தரித்தது.  




          தலைமை ஆசிரியரிலிருந்து மாணவர்கள் வரை அனைவரும் ஒரு பேட்ச் அணிந்திருந்தார்கள்.  அந்த பேட்சின் நாயகர் எல்லா இந்திய நெஞ்சங்களையும் நிமிரச்  செய்யும்   கணித மேதை இராமானுஜம் தான்.

          இவையெல்லாம் நான் பள்ளி வளாகத்தினுள் அடியெடுத்து வைத்து யாரிடமும் எதையும் விசாரிக்காமல், ஓரிரு மணித்துளிகளில்  பார்த்து உணர்ந்து மெய்சிலர்த்த அனுபவங்கள். பிறகு ஆசிரியர்களிடம் கேட்டும் கண்காட்சி பொருட்களைப் பார்த்தும்   வியந்த அனுபவங்கள் அத்தோடு கொஞ்சம் தோற்ற அனுபவங்களும் (கணித விளையாட்டுகளில் மாணவர்களிடம்) தொடர்ந்தன.

          இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ப. சண்முகநாதன் ஒரு கணித ஆசிரியர் என்று சான்றிதழ்கள் சொல்கின்றன, ஆனால் அவர் கண்காட்சி ஆசிரியராகவும் திகழ்கிறார்.  இங்கு கணிதக் கண்காட்சி நடத்துவதற்கு முன்னரே விசாலையன் கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் அவர் பணியாற்றிய போது ஸ்போக்கன் இங்கிலீஷ் கண்காட்சி நடத்தியிருக்கிறாராம்.
        
           கணிதம் ஏனோ அது மனப்பாடப் பாடமாகவும் கரடுமுரடான பாதையாகவும் மாறிவிட்டது.   உள்ளபடியே  கணிதம் தேடல் எனும் வேட்கையிலும் கண்டுபிடித்தல் எனும் வெற்றியிலும் பிறந்த கலை.   தேடலும் கண்டுபிடிப்பும் தொடர்வினையானால் அது ஒரு விளையாட்டாகிவிடும். விளையாட்டுக்கள் மாணவர்களைக் கவரும். இது தான் இந்தக் கணிதக் கண்காட்சியின் அடிநாதம்

          ஒரு கணித சூத்திரத்தை வைத்து ஒரு புதிரை உருவாக்குகிறார்கள், அது தான் கதை வசனம்.  அதனைக் காட்சியாக்கும் ஒரு  எளிமையான பட விளக்கமோ (CHART) கணித வடிவமோ தான் கதாபாத்திரம். இப்படித் தான் ஒரு (EXHIBIT) காட்சிப் பொருள் உருவாகிறது. இதைப் போல் 100க்கும் மேற்பட்ட காட்சிப் பொருட்கள். ஒவ்வொரு காட்சிப் பொருளையும் விளக்க பெரும்பாலும் இரண்டு மாணவர்கள்.

        அரிய கணித தத்துவங்களை எளிமையாக விளக்கும் காட்சிப் பொருட்களை எளிமையாகக் கிடைக்கக் கூடிய தெர்மாகோல் வண்ண அட்டைகள், ரிப்பன், போன்றவைகளை வைத்தும், ஒரு சிறிய கத்தி மற்றும் பெவிக்கால் பசையின் உதவியோடும் உருவாக்கியிருக்கிறார் சமூக அறிவியில் ஆசிரியர் முனீஸ்வரன்.  கணித ஆசரியைகள் திருமதி பத்மாவதி மற்றும் திருமதி சம்பூர்ண சாந்தி  மாணவர்களுக்கு பயிற்சியளித்திருக்கிறார்



        மாணவர்கள் கதை கேட்கவே ஆவலாக இருப்பார்கள்.  இந்தக் கணிதக்காட்சி அவர்களைக் கதை சொல்லிகளாக உயர்த்தியது. அந்தப் பூரிப்பை அவர்கள் முகம் பிரதிபலித்தது.

      இலுப்பைக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்தக் கணிதக் கண்காட்சியை 30, 35 கிலோ தொலைவிலுள்ள அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி மாணவர்களையெல்லாம் அந்தந்தப் பள்ளியினரே அழைத்து வந்திருக்கிறார்கள்.  50க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தக் கண்காட்சியைப் பார்த்திருக்கிறார்கள்.
                                 
          
                இந்தக் கணிதக் கண்காட்சிக்காகவே வகுப்பறைகளில் இருந்த கரும்பலகைகளுக்கு பதிலாக உயர் ரக பச்சைப் பலகைகள் மாற்றப்பட்டிருக்கின்றன., கூடுதல் மின்விசிறிகள், குழல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன, வரவேற்புத் தோரணங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.   கண்காட்சியைப் பார்வையிட வந்த எல்லாப் பள்ளி மாணவர்களுக்கும் பலூன்கள், சிற்றுண்டிகள் வழங்கியிருக்கிறார்கள்.  இது ஒரு குடும்பத் திருவிழாவாகவே நடத்தியிருக்கிறார்கள்.  குடும்ப விழா என்றால் அசல் குடும்ப விழா தான் அந்த கிராமத்தையே பத்திரிக்கை வைத்து  (அச்சிட்ட அறிவிப்பு)  அழைத்திருக்கிறார்கள்,  கிராம வழக்கப்படி அருகிலுள்ள கோவிலிலும் பத்திரிக்கை வைத்து அழைத்திருக்கிறார்கள்.

          திரு சண்முக நாதன் இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று ஐந்து மாதங்கள் தான் ஆகிறது.  இந்த  ஐந்து மாதத்திற்குள் தான்  இவ்வளவு தயாரிப்புகளும் முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு இந்தக் கணிதக் கண்காட்சி 13.11.2018  அன்று சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு கே ஆர் இராமசாமி அவர்கள் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார்கள்.  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு அ. பாலு முத்து, திருப்பத்தூர், தேவகோட்டை மற்றும் சிவகங்கைக் கல்வி மாவட்ட அலுவலர்கள் திருவாளர்கள் கு. பரமதயாளன், சாமி சத்தியமூர்த்தி மற்றும் கே.எஸ். ராஜேந்திரன் அவர்களும் சாக்கோட்டை ஒன்றியத்தின் மேனாள் பெருந்தலைவர் திரு சுப. முத்துராமலிங்கம் அவர்களும் இலுப்பைக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மேனாள் தலைவர் திரு மு. அன்பரசன் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்..
                  
         திரு. ப.  சண்முகநாதனுள் உள்ள கணித ஆசிரியரும் தலைமை ஆசிரியருக்குரிய நிர்வாகத் திறனும் வழிநடத்தும் பாங்கும்,  கிராம மக்களின் ஒத்துழைப்பும் ஆசிரியர்களின் ஈடுபாடும் தான் இந்த பிரம்மாண்டமான புது மாதிரியான கண்காட்சியை ஒரு கிராமத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் அதுவும் வெறும் ஐந்து மாதங்களில் சாத்தியமாக்கியிருக்கிறது.  இதன் நீட்சியாக இன்னும் பல அதிசயங்கள் சாத்தியமாகும்.  இந்தப் பள்ளி பல கணித மேதைகளைக்கான விதையை விதைத்ததுவிட்டது.  இன்னும் பத்தே ஆண்டுகளில் பல கணித மேதைகள் உருவாகலாம்.  அந்தக் கணித மேதைகளால் இந்த இலுப்பைக்குடிப் பள்ளியின் கொடி உலகெங்கும் பட்டொளி வீசும்!

நலந்தா செம்புலிங்கம்
21.11.2018

11 comments:

  1. Ungal Pani sirakka valthukkal.

    ReplyDelete
  2. கணிதக் கண்காட்சி நடத்திய இலுப்பைக்குடி பள்ளிக்கும்,
    நேரடிப் பார்வை மூலம் விளக்கம் அளித்த
    தங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  3. பெரிய கல்லூரிகளிலோ, பல்கலைக்கழகங்களிலோகூட இந்த அளவிற்குச் செய்திருப்பார்களோ என்பது ஐயமே. நிர்வாகத்தினருக்கும், உடன் செயல்பட்டோருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. உங்களைப் போன்றவர்களால் இந்த மாதிரி நிகழ்வுகள் மேலும் சிறப்பும், உயர்வும் பெறுகின்றன.

    ReplyDelete
  5. Best wishes to Iluppaikudi village head master MrShunmuganathan Sir and students

    ReplyDelete
  6. Muthu Shanmugam22 Nov 2018, 21:33:00

    Great effort and achievement.Really amazing stuff and hard work by the entire team. This type effort will create lot of mathematical genuius.
    Congratulations to all.

    ReplyDelete
  7. அருமையான பதிவு
    மிகவும் நெகிழ்வான நேரடியாக பார்த்தது போன்ற உணர்வு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. கல்விக்கூடங்கள் வியாபாரமாகவில்லை என்று நமக்கு நிம்மதி அளிக்கிறார்கள் இலுப்பைக்குடி தலைமை ஆசிரியர் திரு சண்முகநாதன்... இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்வினை சுவைபட அனைவருக்கும் கொண்டு சென்று இதன்மூலம் இதுபோன்ற கல்வித்தொண்டுகள் பெருக வழிவகுத்துள்ள நம் நலந்தாவை நாமெல்லாம் பாராட்டுவோம்... வாழ்த்துவோம்

    ReplyDelete
  9. முனீஸ்வரன் அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. Well. Credit goes to HM Mr.Shanmuganathan and other staff of the school.
    Such like these effective performances reaches because of you thank you

    ReplyDelete