Tuesday 30 October 2018

பாடப் புத்தகங்களுக்கு அப்பாலும் வந்துவிட்டார்கள்!!


 
பாடப் புத்தகங்களுக்கு அப்பாலும் வந்துவிட்டார்கள்!!
^^^^^^   /////////    ^^^^^^   /////////    ^^^^^^   /////////

    சுடு ஒரு சுவை என்பார்கள்.  ஒரு உணவுத் திருவிழாவைப் பற்றிய செய்திகளை இரண்டு வாரங்களுக்குப் பிறகு பதிவு செய்யலாமாஆறிய கஞ்சி பழங்கஞ்சி ஆகிவிடாதா?

         கஞ்சியிலும் சுவை, சத்தெல்லாம் இருக்கிறதல்லவா? இப்போது சில மேட்டுக்குடி சூப்பர் மார்க்கெட்டுகளில் அழகான பாக்கிங்கிற்குள் (PACKING) பழைய கஞ்சியே மூன்று இலக்க விலையில் விற்கப்படுகிறது.

        காரைக்குடி இராமநாதன் செட்டியார் பள்ளியின் உணவுத் திருவிழா பற்றிய தகவல் முதலில் தொலைபேசியில் வந்தது.  அது என்ன கேட்டரிங் கல்லூரியா என்ன? உயர்நிலைப் பள்ளி தானே? எதற்கு உணவுத் திருவிழா நடத்துகிறார்கள்? என்று எண்ணங்கள் அலை அலையாய் எழுந்தன.  சற்று நேரத்தில் அழைப்பிதழே வந்தது.  அழைப்பிதழ் ஒரு விரிவுரைக்குத் தூண்டியது.  
 
        இந்த உணவுத் திருவிழா அழகப்பா பல்கலைக் கழகம் (சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மைத் துறை) இராமநாதன் செட்டியார் பள்ளி மற்றும் காரைக்குடி பேக்கரி சங்கம் இணைந்து அழைப்பதாக இருந்தது. 

            அழகப்பா பல்கலைக் கழகமும் பேக்கரிகள் சங்கமும் நேற்றைக்கோ இன்றைக்கோ ஒரு ஒரு-நாள் நிகழ்ச்சிக்காக மட்டும் கைகோர்த்ததாக நான் நினைக்கவில்லை.  அதன் உறவின் வேர் நவீன காரைக்குடியின் ஆதிவேர், பழைய வரலாறு.

           வள்ளல் அழகப்பர் தம் கல்லூரி மாணவர்களுக்கு தரமான பேக்கரி உணவுகள் வழங்க விழைந்ததன் விளைவாகவே காரைக்குடியில் அந்தக் காலத்திலேயே, வள்ளல் அழகப்பர் காலத்திலேயே பேக்கரிகள் காலூன்றின.  கல்வி நிலையங்களுக்கு வெளியில்  வள்ளல் அழகப்பர் படத்தை வைக்கும் பழக்கத்தையும் பேக்கரிகள் தான் தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.

            காரைக்குடியின் கல்வி வரலாற்றில் மறுமலர்ச்சிக்கு வித்திடும் இராமநாதன் செட்டியார் பள்ளியுடன் இவர்கள் கைகோர்ப்பது தான் இன்றைய தலைப்புச்செய்தி. 

           இராமநாதன் செட்டியார் பள்ளிக் கட்டிடத்தின் முன்பகுதியில் இரண்டாவது மாடியில் கூட்டங்கள் நடைபெறும்.  சுமார் 100 அடி நீளமும் 18 அடி அகலமும் கொண்ட அந்த அரங்கில் முதல் 10அடிக்கு மேடை ஆகவும் எஞ்சிய 90 அடி பார்வையாளர் பகுதியாகவும் அமைக்கப்படும் .  இந்த உணவுத் திருவிழாவில் அந்த பார்வையாளர்கள் பகுதியில் நான்கு நீள வரிசைகளில் நீள மேசைகளில் மாணவர்கள் தத்தம் உணவுத் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தி நின்று கொண்டிருந்தார்கள்.  எப்படியும் 150 மாணவர்கள் 150 வகை உணவுகளை காட்சிப்படுத்தியிருப்பார்கள்.  இவை போக மேடைப் பகுதியை ஒட்டி ஒரு அகல மேசையில் காய்கறி பழங்களாலான அலங்கரிப்புகள்.  மேலும் அரங்கில் எதிர் மூலையில் ஒரு குடிசையில் கிராமிய உணவு தயாரிக்கப்படும் காட்சியும் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.  அந்த அரங்கைப் பார்த்து வியந்து ஒரு ஆசிரியையிடம் பாராட்டைத் தெரிவித்தேன்.  அவர் பெருமிதத்தோடு இது மட்டுமில்லை சார், 16 வகுப்பறைகளிலும் உணவுக் கண்காட்சி நடக்கிறது, 400 மாணவர்கள் பங்கேற்றுள்ளார்கள் என்றார். அப்போது  தான் இந்த உணவுத் திருவிழாவின் பிரம்மாண்டம் எனக்கு மெல்ல புரிய ஆரம்பித்தது. சற்று முன்னர் காதில் விழுந்த ஒரு  முன்னுரையும் நினைவுக்கு வந்தது.

      இந்த கண்காட்சியை பல்கலைக் கழகப் பதிவாளர் திறந்து வைப்பதற்கு முன்னர், இந்தக் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரும் பேக்கரி சங்க கெளரவச் செயலருமான  திரு காளீஸ்வரன் முக்கிய பிரமுகர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அழகப்பா பல்கலைக் கழகத்தின் இத்துறையின் சோதனைக் கூடத்தில் மாணவர்களே பல புதிய உணவுகளைத் தயாரித்தது பற்றிக் கூறிக் கொண்டிருந்தார்.  எத்தனையோ வகை சிறுதானியங்களில் ஒவ்வொரு சிறுதானியத்திற்குப் பல வகை உணவுகள் தயாரிக்கப்பட்டாக  புள்ளி விவரங்களை  சொல்லிக் கொண்டிருந்தார். 

           இன்னும் 15 வகுப்பறைகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் மலைப்பும் தோன்றியது.  அரை குறை மனத்தோடு அந்த  இரண்டாவது மாடி அரங்கை விட்டு வெளியேறினேன்.  ஐந்து வகுப்பறை மட்டுமே பார்க்க நேரம் இடம் கொடுத்தது.  

          இது ஒரு மிகப் பெரிய கூட்டுமுயற்சி, மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள், பள்ளி, பல்கலைக் கழகம் பேக்கரி சங்கம் இணைந்து உருவாக்கியது என்றாலும் இத்தனை வகையான உணவுகளை ஒரு ஐந்து நட்சத்திர உணவு விடுதியின் பஃபே (buffet) விருந்தில் கூடப் பார்க்க முடியுமா? என வியக்கிறேன்.

        நான் பார்த்தவரையில் மூலிகைகள் சார்ந்த உணவுகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன.  பேக்கரி உணவுகளுக்குள்ளும் சிறுதானியங்கள் அதிக அளவில் இடம் பெற்றன.  இந்த வகை உணவுகள் கடைகளில் பார்க்காதவை. செட்டிநாட்டு உணவுகளும்  ஓரளவு இடம் பெற்றிருந்தன.  ஒரு மாணவர் மீதமாகிய சோற்றில் அல்வா தயாரித்திருந்தார். ஒரு மாணவர் யூ டியூப் பார்த்து வெஜிடபுள் கார்விங் (VEGETABLE CARVING) கற்றுக் கொண்டதாகச் சொன்னார்

          இந்த உணவு எண்ணிக்கையும் வகைப்பாடுகளும் ஒரு பக்கம் வியக்க வைத்தது. மற்றொருபுறம்   உணவின் மூலப் பொருட்கள், அவற்றின் சத்து, அவற்றின் பலன், எந்த வயதினருக்கு ஏற்றது, எந்த நோய் அல்லது குறைபாட்டிற்கு இவை மருந்தாகும் என ஒவ்வொரு உணவைப் பற்றிய விவரங்கள் அந்தந்த உணவைக் காட்சிப்படுத்திய மாணவர்கள் பட்டியலிட்டு திகைக்க வைத்தார்கள்.  
           
          இந்த வகை வகையான உணவுகளையெல்லாம் தயாரிக்க எல்லா மாணவர்கள் வீடுகளிலும் அம்மாக்கள் தான் உதவியிருக்கிறார்கள், ஒரு மாணவி மட்டும் நான் எங்க அம்மாவிற்கு உதவினேன் என்றாள், அந்த அறிவாளியின் பெயரை மறந்துவிட்டேன். ஒரு வீட்டில் கூட அப்பா உதவி செய்யவில்லை
என்பது என் ஆய்வு முடிவு.  ஆண்கள் சமைப்பதாகச் சொல்லி அதை வைத்து எள்ளி நகையாடும் மேடைப் பேச்சாளர்கள் குறிப்பாக பட்டி மன்றப் பேச்சாளர்கள் பார்வைக்கு என் ஆய்வு முடிவை சமர்பிக்கிறேன்.

           இராமநாதன் செட்டியார் பள்ளிக்கு எத்தனையோ முறை சென்றிருக்கிறேன்.  சாதாரண முறையில் சென்றிருக்கிறேன், விழாக்களில் கலந்து கொள்ளச் சென்றிருக்கிறேன், பேசுவதற்காகச் சென்றிருக்கிறேன், ஒரு முறை அப்பள்ளியின் மின் நூலகத்தைப் பார்ப்பதற்காகவே போய் ஒரு மணிநேரம் மின் நூல்கைளப் படித்தேன்.  ஆனால் ஒரு முறை கூட மாணவர்களோடு நேரடியாக கலந்துரையாடவில்லை.  இந்த உணவுத் திருவிழாவில் தான் மாணவர்களோடு நேரடியாக கலந்துரையாடினேன்.

                நான் பார்த்த நீண்ட அரங்கு மற்றும் ஐந்து வகுப்பறைகளில் நாற்பது மாணவர்ளிடமாவது அவர்களுடைய விளக்கவுரைக்கு இடையே குறுக்குக் கேள்விகள் துணைக் கேள்விகள் எல்லாம் கேட்டேன்.  சொல்லி வைத்தார்போல எல்லா மாணவர்களும் என் கேள்விகளுக்கு சரியோ தவறோ உடனுக்குடன் பதிலளித்தார்கள் (தவறான பதில்கள் நான்கு அல்லது ஐந்து தான்) இவைகளை என் கேள்விகளுக்கான பதில்கள் மட்டுமல்ல, அவர்களுடைய ஆர்வமுமாகவும்
ஆற்றலாகவும் கருதுகிறேன்.  பாடப் புத்தகங்களுக்கு அப்பாலும் அவர்கள் வந்துவிட்டார்கள் என்பதிற்கு இது சின்னஞ்சிறிய முன்னோட்டடம்.   

                       காரைக்குடி இராமநாதன் செட்டியார் பள்ளியின் உணவுத் திருவிழாவில்உணவுகள் மட்டும் தயாரிக்கப்படவில்லை, விழிப்புணர்வு விளக்கையும் ஏற்றப்பட்டிருக்கிறது.

நலந்தா செம்புலிங்கம்
30.10.2018


6 comments:

  1. எங்கள் பள்ளியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தாங்கள் பங்கு கொண்டு எங்கள் மாணவர்களையும், எங்களையும் ஊக்குவித்து வருகிறீர்கள். மேலும் அதோடு நின்றுவிடாமல் அவ்விழாவின் சிறப்புகளை உங்கள் விமர்சனங்களின் மூலம் பொது மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறீர்கள். உங்களது பணி மகத்தான பணி. உங்களுக்கு எங்களது பள்ளியின் சார்பாகவும் எங்களது ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  2. உணவுத் திருவிழாவின் மணமும்,கல்வித்திருவிழாவின் நயமும்,காரைக்குடியின் சிறப்புக்களில் ஒன்றான ரொட்டிகளின் வாசனையும் நேரில் கண்டதுபோல உணரவைத்த நலந்தாவுக்கு நன்றி... முதலில் புத்தகத்திருவிழா...அடுத்தது உணவுத்திருவிழா...காரைக்குடியின் பாரம்பரியங்களையும்....நன்னெறிகளையும் இளையசமுதாயத்தினருக்கு எடுத்துச்செல்பவர்கள் முயற்சி வாழ்க!வெல்க!

    ReplyDelete
  3. Enthusing good deeds is like doing good things. Really taking children beyond class rooms is showing the real world to them. That will make them communicate better with Nature. Hats off to Peterraja team and Nalantha Jumbulingam.

    ReplyDelete
  4. எங்கள் பள்ளி நிகழ்வுகளை உடனுக்குடன் வெளியிட்டு எங்களை உற்சாகப்படுத்தி அடுத்து செய்யதூண்டும் அய்யாவிற்கு நன்றி சரவணன் அறிவியல் ஆசிரியர் RMHS குடும்பம்

    ReplyDelete
  5. மாணவர்களோடு கலந்துரையாடியது அறிந்து மகிழ்ச்சி. விழா நிகழ்வுப் பகிர்வு அருமை.

    ReplyDelete