தேவகோட்டை புத்தகத் திருவிழாவில் (5) .....
^^^^^^^^^^^^^^^^^ //////////////// ^^^^^^^^^^^^^^^^^^^^
^^^^^^^^^^^^^^^^^ //////////////// ^^^^^^^^^^^^^^^^^^^^
சுந்தர் பிச்சை, 2015 ஆம் ஆண்டு அவர் கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆனார். அத்தோடு நமது பெருமித அடையாளமும் ஆகிவிட்டார். அவருடைய படிப்பு, சாதனைகள், பதவிகளைவிட அவர் நம் ஊர்க்காரர் என்ற அடையாளத்தைத் தான் நாம் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொள்வோம். அதன் மூலம் அவருடைய பெருமைகளில் எல்லாம் நமக்கும் ஒரு பங்கு உரிமையாகிவிடுகிறது. (அவருடைய சின்ன ஊதியத்திலும் ஒரு துளி பங்காவது கிடைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.)
தெற்கு பிகார் மின் பகிர்மான நிறுவனத்தின் தலைவரான I A S அதிகாரி திரு ஆர். லெட்சுமணனின் சொந்த ஊர் தேவகோட்டை தான். அவர் சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியை நிறுவிய வள்ளல் அண்ணாமலை செட்டியாரின் நெருங்கிய உறவினர். தேவகோட்டையின் இரண்டாவது I A S அதிகாரியான திரு ஆர். லெட்சுமணன், சுந்தர் பிச்சையைப் போலவே தாய் மண்ணான தேவகோட்டைக்குள் ஒரு சிலர்ப்பை ஏற்படுத்துகிறார்.
அவர் தேவகோட்டை புத்தகத் திருவிழாவில் ஒரு நாள் (01.10.2018) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு ஒரு உயர்நிலைப் பிரமுகரைப் பார்க்கும் மனநிலையில் தான் சென்றேன். பல ஆண்டுகள் பீகாரிலேயே பணியாற்றிதால் தமிழில் பேச சிரமப்படுவார். ஆனால் சொந்த மண்ணைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் கொஞ்சம் நெகிழ்வாக பேசுவார் என்று மட்டும் தான் எதிர்பார்த்தேன்.
அவரிடம் அவருடைய பதவியை வெளிப்படுத்தும் எந்தப் புற அடையாளமும் இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் எளிய தோற்றத்தை தேடிப் பிடித்து தம் மீது வலிந்து ஏற்றிக் கொண்டிருந்தார். நடு வயதினரான அவர் கல்லூரி மாணவரைப் போலத் தான் இருந்தார். பீகாரிலேயே பல ஆண்டுகள் இருப்பதால் என் உரையாடலில் என்னையும் இந்திச் சொற்கள் வந்துவிடுகிறது என்ற அந்த இளம் I A S அதிகாரி வேட்டி உடுத்திவந்தார்.
நான் எதிர்பார்த்ததைப் போலவே தமிழில் பேச சிரமப்பட்டார், ஆனால் அது ஆரம்ப நிமிடங்களில் மட்டும் தான். கொஞ்சம் குடும்பம் சார்ந்த நெகிழ்வுரை அதுவும் நான் எதிர்பார்த்ததைப் போல அமைந்தது. இதுவரை என் கணிப்பு பலித்தது. சரி இனிமேல் வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுவார் என நான் நினைத்துக் கொண்டிருந்த போது தான் கருத்தாழமிக்க பேச்சை சலனமில்லாமல் தொடங்கினார். விபத்துப் போலத் தான் தனக்கு வாசிப்பு பழக்கம் ஏற்பட்டது என்ற செய்தியோடு அவருடைய உரை வேர் பிடித்தது. தமது வாசிப்புத் திறனும் நூல் தேர்வுகளும் எப்படி வளர்ந்தன என தொடர்ந்து விவரித்தார்.
புனை கதைகளைப் படிக்கும் போது நம் மனதில் ஒரு காட்சி விரியும். இது எல்லோருக்கும் ஏற்படுகின்ற அனுபவம் தான். அதற்கு ஒரு படி மேல் அவர் ஒரு படி சென்றார். அது தான் அவருடைய (கருத்தை) எடுத்துரைக்கும் திறனை வெளிப்படுத்தியது. அவர் வாசித்த THE DA VINCI CODE எனும் புனை கதை திரைப்படமாகியிருக்கிறது. ஆனால் அந்தத் திரைப்படம் இவர் மனத்திரையில் விரிந்த காட்சி போல சிறப்பாக அமையவில்லை என்றார். இதன் மூலம் புனைகதை வாசிப்பு வாசகரின் கற்பனைத் திறனை வளர்க்கும் என்பதை மிக உறுதியாக நிலைநாட்டினார். அதுவரை அவருடைய உரையை பதிவு செய்ய வேண்டுமெனத் தோன்றவில்லை. இந்தத் தருணத்திலிருந்து தான் அவரை உரையை எனது அலைபேசியில் பதிவு செய்தேன். கருத்தாழமிக்க அந்த உரை உணவுப் பழக்கம், சுற்றுப் புறச் சுழல் எனப் பல திசைகளில் உரை உலாவந்தது.
இவருடைய ஐயா (தந்தையாரின் தந்தையார்) லெ. கண்ணப்பச் செட்டியாரின் மேதைமையும் இவரிடம் வெளிப்பட்டது. இவரது தந்தையாரின் தாய்வழிப் பாட்டனார் சேவு. லெ. சேவுகன் செட்டியாரின் ஆசியும் இவருக்கு மேடையிலேயே கிடைத்தது.
அந்தப் பாட்டனார் சேவு. லெ. சேவுகன் செட்டியாரின் ஆசி இந்தக் கொள்ளுப் பேரனுக்கு எப்படி கிடைத்ததென்றால், கோவிலூர் ஆதினம் சீர் வளர் சீர் மெய்யப்ப ஞானசுவாமிகள் வடிவத்தில் கிடைத்தது.
அந்தப் பாட்டனார் சேவு. லெ. சேவுகன் செட்டியார் இலுப்பக்குடி வயிரவரை அனுதினமும் உச்சாடானம் செய்பவர். வயிரவரின் அருளால் விஷகடிக்கு உள்ளனவர்கள் குறிப்பாக நாய்கடிக்கு உள்ளானவர்கள் குணம் பெறச் செய்வார். அவர்கள் வீட்டு முகப்பில் தெற்குத் திண்ணையிலிருக்கும் முதல் தூணருகிலிருந்து பூசை செய்வார்கள். அந்தத் தூணில் வயிரவரின் மந்திர சக்தி உருயேறியது. அந்தப் பாட்டனார் ஊரில் இல்லாத நிலையில் நாய்கடிக்கு உள்ளனவர்கள் அந்தத் தூணை வலம் வந்து வணங்கிச் சென்று குணமடைந்திருக்கிறார்கள். இந்த வரலாற்றை கவிஞர் அரசி இவ்வாறு பதிவு செய்கிறார்
தூணில் மந்திரம் துலங்கும் இல்லம்
நாயின் வாயால் நலிவுற்றோர்கள்
கோயில் சேர்ந்தால் குணம் பெற்றுய்வர்
நாயின் வாயால் நலிவுற்றோர்கள்
கோயில் சேர்ந்தால் குணம் பெற்றுய்வர்
புத்தகத் திருவிழா நிகழ்ச்சி நிரலின் படி, இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை சிறப்பு விருந்தினர் உரை அதற்குப் பிறகு சுழலும் சொல்லரங்கமும் நன்றியுரை மட்டுமே திட்டமிடப் பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சுமார் ஒரு மணிநேரம் முன்னர் புத்தகத் திருவிழாவில் கோவிலூர் ஆதினப் பதிப்புத் துறை அமைத்திருந்த ஸ்டாலை கோவிலூர் சுவாமிகள் பார்க்க வந்தார்கள். புத்தகத் திருவிழா அமைப்பாளர்களும் நகரத்தார் பள்ளிகளின் நிர்வாகிகளும் வேண்டிக் கேட்டு்க் கொண்டதற்கிணங்க கோவிலூர் சுவாமிகள் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று லெட்சுமணைனயும் புத்தகத் திருவிழாவிற்கு வந்த அனைவரையும் ஆசிர்வதித்தார்கள்.
எத்தனையோ பேர்களின் நலிவை நீக்கிய அந்தப் பாட்டனார் சேவு. லெ. சேவுகன் செட்டியாரின் புண்ணியத்தால் தான் சமூக அக்கறை மிக்க ஞானத் துறவியான கோவிலூர் சுவாமிகள் நிகழ்ச்சி நிரலில் திட்டமிடப்படாத நிலையிலும் தேவேகாட்டைக்கு வந்து லெட்சுமணனை ஆசீர்வதித்திருக்கிறார்.
லெட்சுமணனுக்கும் நன்றி அவரது கொள்ளுப் பாட்டனார் சேவு. லெ. சேவுகன் செட்டியாருக்கும் நன்றி
விழாவில் கலந்துகொண்ட உணர்வினை ஏற்படுத்திய பதிவு. நன்றி.
ReplyDelete