^^^^^^^^^^------------^^^^^^^^^^
ஒரு தொடக்கப் பள்ளியின் நாடகத்தில் 10 காட்சிகள், அவற்றுள்ளும் ஒரு போர்க் காட்சி, "சந்திர லேகா" பாணியில் நடனக் காட்சியெல்லாம் சாத்தியமாகுமா?
இது என்ன கின்னஸ் சாதனை முயற்சியா என்ன? தேவகோட்டைக்காரர்களைத் தவிர மற்றவர்கள் எதிர் கேள்வி கேட்பார்கள்.
ஏனென்றால் தேவகோட்டைக்காரர்களுக்கு அது நகரத்தார் தொடக்கப் பள்ளியின் பாணி என்பது நன்றாகத் தெரியும்.
தேவகோட்டை புத்தகத் திருவிழா முதல் நாள் (27.09.2018) நிகழ்ச்சியில் நகரத்தார் தொடக்கப் பள்ளியின் சிவகங்கைப் பேரரசி வேலு நாச்சியார் நாடகம் அப்பள்ளியின் தனி அடையாளமான திருத்தமான ழகர உச்சரிப்புடன் மிளர்ந்தது. வேலு நாச்சியார் ஏழு மொழிகளை அறிவார் என்பது பன்மொழி வசனங்களால் மெய்ப்பித்த உத்தி அருமை. 3, 4 மொழியில் வசனம் பேசிய "வேலு நாச்சியார்" உச்சகட்ட நடனக் காட்சியில் வாள் ஏந்தி நின்ற கோலம் என்றென்றும் மனதில் நிற்கும் வீரக்கோலம். முதல் பரிசை ஒருவருக்குத் தான் கொடுக்க வேண்டுமா என்ன? "வேலு நாச்சியார்" "குயிலி" "உடையாள்". இரண்டாம் பரிசு மற்ற அனைவருக்கும் (3+27 ஆக இருக்கலாம்) கொடுக்கலாம், கொடுக்க வேண்டும்!! . நலந்தாவும் கொடுத்து மகிழும்
தேவகோட்டை புத்தகத் திருவிழாவில் (2).........
^^^^^^^^^^------------^^^^^^^^^^
பாக்யராஜ் ஒரு பத்திரிக்கையில் வாசகர் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது கோயமுத்தூர்கார்கள் கெட்டிக்காரர்கள் என்றார். இதனை லேனா தமிழ்வாணனிடம் ஒரு வாசகர் (அனேகமாக கோயமுத்தூர்கார்) பாக்கியராஜ் கோயமுத்தூர்கள் கெட்டிக்காரர்கள் என்று கூறியுள்ளாரே என ஒரு மடக்குக் கேள்வியாகக் கேட்டார்.
ஆம் என்றால் மற்ற எல்லா ஊர்க்காரர்களையும் குறைத்து மதித்த பொல்லாப்பு வரும். இல்லை என்றாலோ கோயமுத்தூர்காரர்கள் வெகுண்டெழுவார்கள்.
லேனா தமிழ்வாணன் அந்த வாசகரின் கேள்விக்கு ஆம் என்றும் சொல்லவில்லை இல்லை என்றும் சொல்லவில்லை, தேவகோட்டைக்காரர்கள் கெட்டிக்காரர்கள் என்று பதிலளித்தார்.
அது லேனா தமிழ்வாணனின் கூர்த்தமதிக்கு நல்ல சான்று எனினும் மிகவும் தற்செயலாக நிகழ்ந்த (எழுத்து வடிவிலான) சமயோசித உரையாடல் தான். லேனா தமிழ்வாணனின் அந்த வாக்கிற்கு ஒருவர் மிக ஆழமான விரிவுரையை நல்கியுள்ளார். ஆனால் அந்த விரிவுரையை நல்கியவர், தேவகோட்டைக்காரர் அல்லர், புதுவயல்காரர்.
அவர் தான் திருவாடானைக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் முனைவர் மு. பழநியப்பன்.
தேவகோட்டை புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நிகழ்ச்சியில் (28.09.2018) அவருடைய சிறப்புரையின் தலைப்பு என்னவோ உள்ளூர் இலக்கியம் தான், ஆனால் அது பல கிளைக் கதைகள் நிறைந்த மகாபாரதம் போல் எங்கெங்கோ சென்றது, எல்லாம் புள்ளி விவரங்கள். அலங்காரப் பேச்சு அரைகுறைத் தகவல் என்றெதுவுமில்லை. 19 ஆம் நூற்றாண்டைச் சேர்நத சிந்நய செட்டியாரில் தொடங்கி இருபத்தியோராம் நூற்றாண்டு முகநூல் எழுத்தாளர் முத்துமணி வரையிலான நெடிய பட்டியலை எடுத்துரைத்து தேவகோட்டையின் இலக்கியச் செழுமையை நிலைநிறுத்தினார்.
புத்தகத் திருவிழாப் பேருரை என்பதாலோ என்னவோ பேராசிரியர் மு. பழநியப்பன், தனது தகவல் மழையில் பெரிய பகுதியை பதிப்புத் துறைக்கே ஒதுக்கினார். சின்ன அண்ணாமலையே கதாநாயகராக வலம் வந்தார். முத்தாய்ப்பாக சின்ன அண்ணாமலை வெளியிட்ட 300 நூல்களும் மீண்டும் வெளிவர வேண்டும் என்ற தனது தமிழாசையை பதிப்பாளர்கள் முன் வைத்தார்
தேவகோட்டை புத்தகத் திருவிழாவில் (3) .......
^^^^^^^^^ ///////////// ^^^^^^^^^^^^ //////////// ^^^^^^^^^^^
பதிப்புத் துறையில் வெற்றி பெற பெரிதும் தேவைப்படுவது உழைப்பா? அதிர்ஷ்டமா? என ஒரு பட்டி மண்டபம் நடுத்தி அதில் என்னை நடுவராக நியமித்தால் நான் தலைப்பை விட்டு விலகி பதிப்புத் துறையில் ஈடுபடுவதற்கே ஒரு கொடுப்பினை வேண்டும் எனத் தீர்ப்பளிப்பேன்.
புத்தக விற்பனையாளனாகி நான் பதிப்பாளர்களைப் பற்றி இப்படி பெருமையாகப் பேசுவதிற்கு உள்நோக்கம் தான் காரணம் என்று நினைப்பீர்கள். என் கருத்தை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் உரிமை தான். ஆனால் சில நிமிடங்கள் ஒதுக்கி இப்பதிவுப் படித்துவிட்டு என் தீர்ப்புக்கு தீர்ப்பு நல்க வேண்டுகிறேன்.
தமிழகமெங்கும் பல ஊர்களில் புத்தகத் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. சில பதிப்பகங்கள், சில விற்பைனயாளர்கள் தனியாக புத்தகத் திருவிழாக்களை நடத்துகிறார்கள். தன்னார்வ அமைப்பினர் சில ஊர்களில் நடத்துகிறார்கள். இலக்கிய அமைப்புகள் சில ஊர்களில் நடத்துகிறார்கள். அரசுத் துறையின் பெருமித நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமே நெய்வேலியில் புத்தகத் திருவிழாவை நடத்துகிறது.
சென்னை, மதுரை மற்றும் கோவையில் பதிப்பாளர்களின் அமைப்புகளே பல ஆண்டுகளாக புத்தகத் திருவிழாவை நடத்திவருகிறார்கள்
தமிழ்ப் பதிப்புத் துறைக்கு பல முன்னோடிகளை வழங்கிய ஊர் தேவகோட்டை.. தமிழ் பதிப்புத் துறையின்
முன்னணிப் பதிப்பாளர்களுள் பலர் தேவகோட்டைக்காரர்கள். அவர்கள் தம் பிறந்த மண்ணைப் போற்றும் வகையில் தேவகோட்டை பதிப்பாளர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி அவ்வமைப்பின் மூலம் தேவகோட்டையில் புத்தகத் திருவிழாவை நடத்துகிறார்கள்.
ஒரே துறையில் ஈடுபட்டிருப்போரிடையே தொழில் போட்டி ஏற்படுவது தான் இயல்பு. ஒரு பொது பிரச்சனையை எதிர் கொள்ளத் தான் கூடுவார்கள். பதிப்பாளர்களோ தம்முள் மூத்தவர்களைப் பாரட்டுவதற்கும் கூடுகிறார்கள். பதிப்பாளர் அமைப்புகள் நடத்தும் புத்தகத் திருவிழாக்களில் மூத்த பதிப்பாளர்களைப் பாரட்டுவது இயல்பாகி மரபாகிவிட்டது.
அவ்வண்ணம் தற்போது தேவகோட்டையில் நடைபெற்று வரும் (27.09.2018 முதல் 07.10.2018 வரை) புத்தகத் திருவிழாவில் கோவை விஜயா பதிப்பகம் அருணோதயம் திரு அருணன், விஜயா பதிப்பகம் திரு வேலாயுதம் முத்துப் பதிப்பகம் திரு லெட்சுமணன், பொன்முடி பதிப்பகம் பொற்கிழிக் கவிஞர் அருசோ மற்றும் காரைக்குடி செல்வி பதிப்பகம் திரு சிவராமன் ஆகிய ஐந்து பதிப்பாளர்கள் நீதியரசர் அரு. லெட்சுமணன் அவர்கள் தலைமையில் 30.09.2018 அன்று பாராட்டப் பெற்றார்கள்.
இவர்களுள் அருணோதயம் அருணன் தான் மிகவும் மூத்தவர். அவர் தமது ஏற்புரையில் தமது வெற்றிக்கு கடின உழைப்பும் கறாரான அணுகு முறையும் தான் காரணம் என கணீர் குரலில் சூளுரைத்தார். அகவை 94 ஐ கடந்த அந்த மாமனிதரின் சூளுரை ஒரு கறாரான தந்தை மகனுக்கு ஆணையிடுவதைப் போல இருந்தது. உள்ளபடியே தேவகோட்டை பதிப்பாளர் சங்கத்தினைச் சேர்ந்தவரும் சென்னைப் புத்தகத் திருவிழாவை நடத்தும் பாபாசி அமைப்பின் செயலராகவும் பணியாற்றும் திரு அரு. வெங்கடாசலம், திரு அருணன் அவர்களின் மகன் தான். திரு அருணன் எல்லா பதிப்பாளர்களிடமும் கறாரான தந்தைப் போலவே பேசினார். அவர்களும் அவரைத் தந்தையைப் போலவே போற்றினர். இது ஒரு கூட்டுக்குடும்ப வாழ்க்கையை நினைவூட்டவில்லையா? பதிப்பாளர்களுக்கு நூல்களை வெளியிடுவது தொழில் தான் என்ற போதும் அவர்கள் வெளியிடும் நல்ல நூல்களால் சமூகம் மேன்மையுறும் போது தொழிலே தொண்டாடுகிறது. மேலும் அவர்களுக்குக்குள் ஒரு கூட்டுக் குடும்பம் போன்ற உறவுகள் மலர்கிறதென்றால் அது பெரும் பேறுதானே?
தேவகோட்டைப் புத்தகத் திருவிழாவில் (4) ......
^^^^^^^^~~~~~~^^^^^^^
தேவகோட்டைப் புத்தகத் திருவிழா மூன்றாம் நாளில் (29.09.2018) முனைவர் யாழ் சு. சந்திரா: அவர் பேசியது சங்கத் தமிழ்! பார்வையோ புதிய கோணம் ,ஆய்வோ காலத்தோடு ஒட்டிய பகுப்பாய்வு. பாய்ந்து புது வெள்ளம். நிச்சயமாக வாசகர்கள் யாழ் சந்திராவின் புதிய இலக்கிய வெள்ளத்தை அணை கட்டி வளம் பெறுவார்கள்
^^^^^^^^~~~~~~^^^^^^^
தேவகோட்டைப் புத்தகத் திருவிழா மூன்றாம் நாளில் (29.09.2018) முனைவர் யாழ் சு. சந்திரா: அவர் பேசியது சங்கத் தமிழ்! பார்வையோ புதிய கோணம் ,ஆய்வோ காலத்தோடு ஒட்டிய பகுப்பாய்வு. பாய்ந்து புது வெள்ளம். நிச்சயமாக வாசகர்கள் யாழ் சந்திராவின் புதிய இலக்கிய வெள்ளத்தை அணை கட்டி வளம் பெறுவார்கள்
No comments:
Post a Comment