2018 ஜனவரி 19ஆம் தேதி தமிழகத்தில் பேருந்துக் கட்டணங்கள் மலையளவு உயர்த்தப்பட்டன. அதற்கு எதிர்ப்பு வலிமை பெற்றபோது, ஜனவரி 28 ஆம் தேதி கட்டண உயர்வைக் குறைப்பதாகப் பாசங்கு செய்ய கடுகளவு குறைத்துள்ளார்கள்..
கட்டணங்கள் உயர்த்தப்படும் போது சதவிகிதக் கணக்கில் அதாவது 55 முதல் 63 சதவிகிதம் வரை உயர்த்தினார்கள்.. குறைக்கப்படும் போது காசுக் கணக்கில் தான் குறைத்தார்கள்.
பேருந்துக் கட்டணம் 2011 இல் நான்கு வகைகளில் கிலோ மீட்டருக்கு முறையே 42 காசு 56 காசு 60 காசு 70 காசு என நிர்ணயிக்கப்பட்டன. 2018 இல் வகைப்பாடுகளிலும் மாற்றம் செய்துள்ளார்கள்.. இப்போது ஐந்து வகைகளில் கட்டணங்கள் முறையே கிலோ மீட்டருக்கு 60 காசு 80 காசு 90 காசு 110 காசு 140 காசு 170 காசு என நிர்ணயித்துள்ளார்கள்.
இந்தக் கட்டண உயர்வு ஒரு புறமிருக்க கட்டண விதிக்கப்படும் முறையிலும் இரு ஊர்களுக்கிடையேயான தொலைவுகளைக் கணக்கிடுவதிலும் அரசு தான் வகுத்த வரன் முறைகளையும் கூட அரசே வெளிப்படையாக மீறிவருகிறது.
2011 ஆம் ஆண்டிலேயே முதல் வகைப் பேருந்துக்கு மூன்றாம் நிலைக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மதுரைக்கும் தேவகோட்டைக்குமான தொலைவு 100 கி.மீ. எனக் கணக்கிட்டு (ஆனால் தொலைவு 95 கி.மீ தான்) கட்டணம் ரூபாய் 60 வசூலிக்கப்பட்டது. இது ஒரு கி.மீ-க்கு 60 காசு கட்டணமிட நிர்ணயிக்கப்பட்ட மூன்றாம் நிலைக் கட்டண விகிதம். பேருந்தோ ஒரு கி.மீ-க்கு 42 காசு கட்டணம் விதிக்கப்பட வேண்டிய முதல் நிலைப் பேருந்து தான். மேலும் மருந்துக் கூட குறைந்த கட்டணப் பேருந்துகள் விடப்படவில்லை.
2018 ஆம் ஆண்டு கட்டண உயர்வில் மதுரை தேவகோட்டை கட்டணம் முதலில் 88 ரூபாய் என வசூலிக்கப்பட்டது. இப்போது 82 ரூபாயாக ஆக்கப்பட்டுள்ளது.
இப்போதும் 2018 கட்டண உயர்வில் புறநகர் (மோபசல்) குறைந்த பட்சக் கட்டணத்தை 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக உயர்த்தியுளளதாக அறிவிக்கிறார்கள். ஆனால் 2011 யிருந்தே 7 ரூபாய் தான் வசூலிக்கிறார்கள். 2018 கட்டண உயர்வுக்குப் பிறகு குறைந்த பட்சக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கிறார்கள். நகர் பேருந்துகளிலும் அறிவிப்பைவிடக் கூடுதலாவே வசூலிக்கிறார்கள்.
பேருந்து வகைகளில் கட்டண விகதங்களை மீறுவதைப் போல தொலைவு கணக்கிடுவதிலும் மீறல்கள் உள்ளன. இவையெல்லாம் அரசியல்வாதிகள் அதிகாரிகள் செய்யும் ஊழல் லஞ்ச வேட்டை கமிஷன் வெட்டல் போன்றவற்றை எல்லாம் மிஞ்சும் அரசே அரசு முத்திரையோடு செய்யும் சுரண்டல்.
பேருந்துக் கட்டணங்கள் மற்ற மாநிலங்களைவிடக் குறைவு என்ற அட்டவணைகள் போடுகிறார்கள்.
அந்தந்த வகைப் பேருந்துக்கு அந்தந்த வகைக் கட்டணம் நிர்ணயித்து, தொலை கணக்கீடும் சரியாக இருந்தால் :
தேவகோட்டையிலிருந்து மதுரைக்கு 95 கிலோ மீட்டருக்கு சாதாரணப் பேருந்தில் 60 காசு விகிதம் 57 ரூபாய் தான் கட்டணமாகும். 2011 கட்டணத்தின் பேரிலேயே இத்தனை ஆண்டுகளாக 60 ரூபாய் கட்டணம் கொடுத்துக் கொண்டிருந்தோம் (தனியார் பேருந்தில் 45 ரூபாய் தான்)
ஆகவே புதிய கட்டண உயர்வை திரும்பப் பெறச் சொல்லியோ குறைக்க்ச் சொல்லியோ போராட வேண்டாம்.
புதிய பேருந்துக் கட்டணங்களை உள்ளது உள்ளபடி அமல்படுத்தினாலேயே நாம் பயனடைவோம், ஆகவே முதலில் புதிய பேருந்துக் கட்டணங்களை முறையாக அமல்படுத்தப் போராடுவோம்.
மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் செயலர் திரு பொன் ராஜ் போக்குவரத்துத் துறையில் 2011 ஆம் ஆண்டு கட்டணப் படியே லாபம் இருக்கிறது என்கிறார். அவர் கணக்கு படி போக்குவரத்துத் துறையை 2018 ஆம் ஆண்டுக் கட்டணத்தில் நடத்தினால் தமிழ்நாடு அரசு உலக மகா பணக்கார அரசாகி டாஸ்மேக்கை கூட ,மூடலாம் போலிருக்கிறதே.
-- நலந்தா செம்புலிங்கம்
30.01.2018