Monday 1 January 2018

தென்னவன்: கற்பித்தலில் கண்ணதாசன்




       



            நீங்கள் கவிதைகளை விரும்பிப் படித்திருப்பீர்கள்   லயித்து    எழுதியிருப்பீர்கள்.  கவிதைகளை ரசிப்பவர்களைப் பார்த்திருப்பீர்கள்.  கவிதை எழுதுபவர்களையும் பார்த்திருப்பீர்கள்.


       
  ஒரு பள்ளியையே கவிதையாக நடத்துபவரைப் பார்த்திருக்கிறீர்களா?  மதுரையின் வாசலாக இருக்கும் யானை மலையின் அடிவாரத்தில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற ஊராட்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னவனைப் பாருங்கள். 

       தென்னவனைப் உங்களுக்கு எப்படிக் காட்டுவது?  அவருடைய சொற்களிலேயே காட்டுகிறேன். இதோ அவருடைய புத்தாண்டுச் செய்தி (அவருடைய முக நுால் பதிவு)


'பயணங்கள் முடிவதில்லை'


                 வாழ்க்கையிலும் வகுப்பறையிலும் பல மாற்றங்கள் முன்னேற்றங்களுக்கு காரணமாக எம் குழந்தைகளே இருக்கின்றனர். சின்ன சின்ன முயற்சிகள் பலமான மாற்றங்களுக்கு காரணமாக இருக்கின்றன. குழந்தைகளின் தன்னலமில்லாத கேள்விகள் நம்மை மடைமாற்றம் செய்கின்றன. காலுக்கடியில் குட்டிப்பூனை போலிருந்த மகாலட்சுமி, ஒத்தக்கடை பள்ளியே தனக்குத்தான் சொந்தம் என எண்ணிய கனிஷா, தன் கணவர் இறந்த நிலையிலும் சொந்த பந்தங்கள் இல்லாத நிலையிலும் ஒத்தக்கடை ஆசிரியர்களுக்காக ஒத்தக்கடையில் தங்கி இருந்து படிக்க வைக்கும் மாசானம் என்ற மாணவனின் தாயார், பத்து லட்சம் மதிப்பிலான தகவல் தொழில் நுட்ப வகுப்பறை உருவாக காரணமான தமிழ்ஜெகன் என்னும் மாணவன், நடனம் ஆட கால் சுடுது மேடை வேணும் னு கேட்ட ரூபினா, சுகாதாரமான கழிப்பறைக்கு காரணமான பாத்திமா ரோஜா, தினம் தினம் என் பாதையை செப்பனிட்டு கொண்டிருக்கும் 500 குழந்தைகள் அனைவரையும் எண்ணிப் பார்க்கிறேன். ஓராண்டு ஓடியது. பயணிக்கிறேன் குழந்தைகளோடு, பயணங்கள் முடிவதில்லை. குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவும் பாதுகாப்பான நம்பிக்கையான எதிர்காலத்தினை ஏற்படுத்த என்னோடு பயணிக்கும் சக பயணிகளான ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் நினைத்து பார்க்கிறேன். முதல் வகுப்பில் சேர்ந்துள்ள சுபத்ரா முதல் இந்த ஆண்டு பள்ளியை விட்டு மாறப்போகும் ஹரீஷ் வரை அனைவரின் அன்பையும் பெற முயற்சிக்கிறேன். அன்பை மட்டும் அன்பைத் தவிர வேறு எது கொடுத்தும் வாங்க முடியாது என்பதால் அதனையே அடிப்படையாகக் கொண்டு கொடுக்க முயற்சிக்கிறேன். பல நேரங்களில் என்னுடைய மேதாவித்தனம் மேலோங்கும் போதெல்லாம் 'உனக்கு ஒன்னும் தெரியாது' என எனக்கு புரிய வைக்கும் எம் குழந்தைகளை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். 2018 ஆம் ஆண்டிலாவது குழந்தைகளின் மூளையை நோக்கி பயணிக்காமல் இதயத்தை நோக்கி பயணிக்க விரும்புகிறேன்.


அப்புறம்
உங்களுக்கும்
"எனது பேரன்பும் ப்ரியங்களும்"
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.






                

1 comment:

  1. அருமை. வாழ்த்துக்கள் அவருக்கும் பகிர்ந்த உங்களுக்கும்

    ReplyDelete