Tuesday, 6 July 2021

ஆயிரம் காலத்துப் பயிர்: செட்டிநாட்டு நாற்று!ஆஸ்திரேலியாவில் நடவு!!



திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்.

          நகரத்தார்களிடையே தம் பெயருக்கு முன்  ஏழு தலைமுறை முன்னோர் பெயர்களின் முதல் எழுத்தையோ முதல் இரண்டு எழுத்துக்களையோ வரிசையாக எழுதும் வழக்கம் உண்டு.  இன்று அந்த ஏழு தலைமுறை முன்னேழுத்துக்களை எழுதும் பழக்கம் சற்று குறைந்திருந்தாலும் நல்ல வேளையாக நம்மில் பலர்  நம் ஏழு தலைமுறை முன்னோர்களின் பெயர்கள் அறிந்திருக்கிறோம்.

          இன்று ஒரு இளைஞனும் இளைஞியும் திருமணப் பந்ததத்தில் இணையும் போது அந்த மணமக்களின் இரு தரப்பு ஏழு தலைமுறை முன்னோர்களுக்கும் உறவு ஏற்படுகிறது.  அந்த மணமக்களுக்கு பிறகும்  அவர்களின் ஏழுழெழு தலைமுறை வழித்தோன்றல்களுக்கும் உறவு தொடர்கிறது. அதனால் தான் திருமணம் ஆயிரம் காலத்து பயிர் எனப்படுகிறது.

         இந்த ஆயிரங்காலத்துப் பயிர் தாத்பரியத்தை நன்கு உணர்ந்த சமூகம் நகரத்தார் சமூகம். அதன் வெளிப்பாடு தான் ஏழு தலைமுறை முன்னெழுத்து (Seven Generation Initial) எழுதும் பழக்கம்.

        அத்தகைய செட்டிநாட்டு ஆயிரம் காலத்துப் பயிர் ஒன்று அண்மையில் பிலவ வருடம்  ஆனி மாதம் 2ந் தேதி (16.06.2021) புதன்கிழமை  அன்று ஆஸ்திரேலியாவில் மலர்ந்துள்ளது.

               தேவகோட்டையில் இலுப்பைக்குடி கோவிலைச் சேர்ந்த கா.ப.வெ.லெ.அழ.லெ நாகப்பச் செட்டியாரின் பேரனும் சரவணன் செட்டியாரின் மகனுமான அஷ்வின் விக்னேஷ் என்ற சொர்ண லெட்சுமணன் தனது பட்ட மேற்படிப்பை ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தில் 2019 இல் படிப்பை முடித்து விட்டு  Citrus Ad பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

         அரிமளத்தில் நேமம்  கோவிலைச் சேர்ந்த ப.ராம.ப.ராம. சுப்பிரமணியன் செட்டியார் பேத்தியும் சுப.ராமசாமி செட்டியார் மகளுமான உமையாள் 2019ம் ஆண்டு Ph.D  ஆய்வுப் படிப்பிற்காக ஆஸ்திரேலியாவில்  Sunshine Coast பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். .

            உமையாளின் பெற்றோரும் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்கள்.  அஷ்வினின் பெற்றோர் இந்தியாவில் உள்ளனர், அஷ்வினின் தாய் மாமன் சரவணன் பழனியப்பன்  தன் மனைவி மக்களோடு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்.

       திருமண ஏற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் மாப்பிள்ளை வீட்டிற்கு பெண் காட்டவும் முகூர்த்த புடவை எடுக்கவும் உமையாளும் பெற்றோரும் இந்தியா வர மார்ச் 2020 ல் ஏற்பாடுகள் மேற்கொண்ட நிலையில் கொரோனா லாக்டௌன் மற்றும் உமையாள் படிப்பை கருத்தில் கொண்டு உமையாளை நிறுத்திவிட்டு பெற்றோர் மட்டும் இந்தியா வந்து சேர்ந்தனர்..



          இதற்கிடையில் கொரனோ பேரிடர் உலகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நடக்கும் ஒவ்வொரு அசைவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது.

        போக்கு வரத்து கட்டுப்பாடுகள் மேலும் அதிகமாயின உரிய தேதியில் மணமக்கள் இந்தியா வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டது.

       உமையாள் அஷ்வின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.  மீண்டும் மீண்டும் போக்குவரத்துக் கட்டுபாடுகள் அதிகரிக்க அதிகரிக்க திருமணம் மீண்டும் ஒத்தி  வைக்கப்படாமல் இருக்க வேண்டுமெனில்  திருமணத்தை ஆஸ்திரேலியாவிலேயே நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.  

         நகரத்தார் திருமணங்களை செட்டிநாட்டில் நடத்துவது தான் மரபு என்றாலும்   சிங்கப்பூர் மலேஷியா மற்றும் சில நாடுகளில் வாழும் சில நகரத்தார் குடும்பங்களின் திருமணங்கள் அந்தந்த நாடுகளில் நடந்து கொண்டு தான் இருக்ககிறது.  அந்தந்த மணமக்களுக்கெல்லாம் அவர்களின் பெற்றோர்கள்  அந்த நாடுகளில் இருந்திருப்பார்கள்.  தாய் மாமன், அத்தை போன்ற நெருங்கிய உறவினர்கள் வேறு நாட்டிலோ தாய் நாட்டிலோ இருந்தாலும் திருமணச் சடங்குகளைச் செய்ய அந்த நாட்டிற்கு வந்துவிடுவார்கள்.

          உமையாள் அஷ்வின் திருமணத்திலோ ஒரு புதிய சூழல் ஏற்பட்டிருந்தது.

        அஷ்வினின் பெற்றோர் பாண்டிச்சேரியில் உள்ளனர் ஆயாள் ஐயா  சென்னையில் உள்ளனர்.  அப்பத்தா வீட்டு ஐயா  சென்னை பாண்டிச்சேரி என பிள்ளைகள் வீட்டில் உள்ளார்கள்.

         உமையாளின் பெற்றோர் ஆஸ்திரேலியாவிலேயே குடியிருந்தாலும் திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக இந்தியா திரும்பிவிட்டார்கள்.  உமையாளின் தாய் மாமன்  பெங்களூரில்  உள்ளார்

        போக்குவரத்து கட்டுபாடுகளால் இவர்கள் யாரும் ஆஸ்திரேலியா செல்ல முடியாத நிலை. மணமக்களுக்கு  சடங்கு செய்ய வேண்டிய நெருங்கிய உறவுகளில் மணமகன் அஷ்வினின் தாய்மாமன் சரவணன் மற்றும் பங்காளி செல்வமுத்துக்குமார் குடும்பத்தினர் மட்டும் தான் ஆஸ்திரேலியாவில் இருந்தனர் மற்ற உறவினர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்தனர்.


        பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் முகூர்த்த புடவை மாப்பிள்ளை டிரஸ் மஞ்சள் கயிறு கோயில் பிரசாதம் ஆகியவை இந்தியாவிலிருந்தும் தாலிச்சங்கிலி, மெட்டி ஆகியவற்றை உமையாள் உறவினர் சிங்கப்பூரிலிருந்தும் அனுப்பினார்கள்.

         நகரத்தார்களின் சிறப்பு அம்சம் பழைமையை போற்றுவதோடு புதுமைகளையும் தங்கள் மரபுகளுக்கு ஒத்த வகையில் ஏற்றுக் கொள்வது தான் என்பார்கள் சமூக மானிடவியல் அறிஞர்கள்.  அதனால் தான் நமது பழக்க வழக்கங்களைக் கடை பிடித்தவாறே கடல் கடந்து பல நாடுகளில் வணிகம் செய்ய முடிந்தது, சர்வ தேச வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கித் தொழிலிற்கும் முன்னோடியாகத் திகழ முடிந்தது.  அந்த அடிச்சுவட்டில் ஆஸ்திரேலியா வாழ் நகரத்தார்கள் அஷ்வின் உமையாள் திருமணத்தை செட்டிநாட்டு மரபுப்படி ஆஸ்திரேலியாவில் செய்ய தன்னெழுச்சியாக மகிழ்ச்சியாக முடிவு செய்தனர்.

            அஷ்வின் உமையாள் திருமணம் பிரிஸ்பேன்  நகரில் உள்ள  அருள்மிகு செல்வ விநாயகர்  கோவிலில் 16.06.2021ம் நாளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.  உறவினர்கள் கடல்  கடந்து இருந்தாலும். எந்தந்த சடங்கை எவர் செய்ய வேண்டுமோ அந்தந்த சடங்கை அவருடைய கோவிலைச் சார்ந்த ஒருவர் செய்தார்.

                   வெளியூரிலிருக்கும் சகோதரிகளுக்கு பொங்கல் பானைப் பணத்தை மணியாடர் மூலமோ வங்கி மூலமோ அனுப்பும் பழக்கம் வருவதற்கு  முன்பு அந்த ஊரிலிருக்கம் பங்காளியைத் தான் கொடுக்கச் சொல்வார்கள்.  திருமணங்களில் மிக முக்கிய நிகழ்வான தேங்காய் சட்டியைக் கொண்டு போகும் பொறுப்பு அந்த வீட்டுப் பெரியவரிடம் கொடுக்கப்படும்.

             அந்த நெறியில் மணப்பெண்ணின் ஆயாள் வீடு வயிரவன்  கோவில்.   அக்கோவிலைச் சேர்ந்தவர் இடுப்பில் பட்டுக் கட்டி மாமச் சடங்கு செய்தார்.  மணமகன் இலுப்பைக்குடி கோவில்.  இலுப்பைக்குடி கோவிலைச் சேர்ந்த பெண்மணி மாமியார் சடங்கு செய்தார்.  இலுப்பைக்குடியில் பிறந்த பெண்மணி நாத்தினார் சடங்கு செய்தார்.  

             இவற்றோடு செட்டிநாட்டிலேயே திருமணம் நடந்ததைப் போலவே சீர் கொடுத்தல், வேவு இறக்குதல், காய்ச்சி ஊற்றுதல் எல்லாவற்றையும் தன்னெழுச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் ஆஸ்ரேலிய நகரத்தார் அஷ்வின் உமையாள் இணையருக்கு செய்து கொடுத்திருக்கிறார்கள்.

         மரபு வழியில் நடந்த இந்தத் திருமணத்திற்கு நவீன தொழில் நுட்பத்தில் YOU TUBE நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.  உலகெங்கிருந்தும் நகரத்தார்கள் வாழ்த்தினார்கள்.  



            இந்த மங்கல நிகழ்ச்சி ஆஸ்திரேலிய அரசின் கண்ணிலும் பட்டிருக்கிறது.  ஆஸ்திரேலிய அரசு தங்கள் மண்ணில் இத்தகைய மரபு சார் திருமணத்தை நடத்தப் பெற்றதை பெருமிதமாகக் கருதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

             இந்தத் திருமணம் நகரத்தார் இளைஞர் சமூகத்தினரிடையே ஒரு நல்விதையை விதைத்துள்ளது.  நம் மரபுகளின் மேன்மையையும் அவசியத்தையும் ஏட்டுச் சுரக்காய் ஆக அல்லாமல் கூட்டுக்காயாக பரிமாறப்பட்டுள்ளது.

               வாழ்க அஷ்வின் உமையாள் இணையர்!

               வாழிய ஆஸ்திரேலிய நகரத்தார்!!

 

-- நலந்தா செம்புலிங்கம்

06.07.2021

Saturday, 19 December 2020

பிள்ளையார் நோன்பு கார்த்திகைச் செல்வர்கள்

பிள்ளையார் நோன்பு கார்த்திகைச் செல்வர்கள் 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 

            பிள்ளையார் நோன்பு நகரத்தார்களின் தொல்மரபு!


             நகரவிடுதிகளில் நகரத்தார் சங்கங்களில் இழை எடுத்துக் கொள்வது புது மரபு!! 




               பிள்ளையார் நோன்பு இழையை வீட்டில் எடுத்துக் கொள்வது தான் அதன் நோக்கத்திற்குப் பொருத்தமாக இருக்கும்.  ஆனால் காலத்தின் கட்டாயத்தால் நாம் சங்கங்களில் இழை எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது.  மேலும் சங்கங்களில் இழை எடுத்துக் கொள்வது சங்கங்களுக்குப் புத்துயிரும் அளித்தது.  ஒரு புது மரபு வழக்கில் இருக்கிற தொல்மரபை கொஞ்சம் நீர்த்துவிடும்,  உண்மை தான் ஆனால் தவிர்க்க முடியாது.   இது தொல் மரபை நீர்க்கச் செய்தாலும் அதிலும் ஒரு  நன்மை விளைகிறது.  அதனால் தான் நகரவிடுதிகளில் நகரத்தார் சங்கங்களில் இழை எடுத்துக் கொள்வதற்கும் அதற்கு ஏற்பாடு செய்வதற்கும் வரவேற்பு பெருகிவருகிறது. 


                  புது மரபோடு தொல்மரபையும் மாபெரும் பண்பாட்டுப் பணியை சென்னையில் ஆரவராமின்றி ஆறு நல்லுள்ளங்கள் ஆறு ஆண்டுகளாக செய்து வருகிறார்கள்.  


                  சென்னையில் உள்ள நகரத்தார்கள் அனைவரும் தத்தம் வீடுகளில் பிள்ளையார் நோன்பு இழை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் லட்சியம்.    





                  ஆனால் இயந்திர கதியான சென்னை வாழ்க்கையில் பல வீடுகளில் கணவன் மனைவி இருவரும்  பணிக்குச் செல்லும் சூழலில் பிள்ளையார் நோன்பிற்கு வீட்டில் இழை எடுத்துக் கொள்ள விரும்புகிறவர்களையும் நகரவிடுதிகள் நகரத்தார் சங்கங்களில் இழை எடுத்துக் கொள்ள வைப்பது நடைமுறை சிக்கல்கள் தான்.  இழை மாவு சேர்த்தல் எளிதல்ல, இழை நூலும் பொரிகளும் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை.  


              இந்த நடைமுறைச் சிக்கலுக்கு தேவகோட்டையைச் சேர்ந்தவரும் சென்னை மகாலிங்கபுரத்தில் லெட்சுமி மெடிக்கல்ஸ் நடத்திவருபவருமான திரு  R.V. தண்ணீர்மலை செட்டியார் தீர்வு காண விழைந்தார். 

              
               அந்த நடைமுறைச் சிக்கலுக்கு, பிள்ளையார் நோன்பிற்கு இன்றியமையாதவையாகிய இழை நூல், இழைமாவு, பொரி வகைகள் மற்றும் கோலக் கூடு ஆகிய பிள்ளையார் நோன்புப் பொருட்களைப்  பாக்கெட் போட்டு இலவசமாகக் கொடுப்பது  தான் ஒரே தீர்வு என்றும் தெளிந்தார். 


             பிள்ளையார் நோன்பிற்கு இன்றியமையாத இப்பொருட்களை சென்னையில் நகரத்தார்களுக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்ற தீர்விற்கு செயல் வடிவம் கொடுக்கும் பணியில் திரு தண்ணீர்மலை செட்டியாருக்கு                  

              .SP. முத்துக்குமார் (Zonal Manager, Channel & Retail Finance, Mahindra & Mahindra ---  S.S.S  வீடு, தேவகாேட்டை)                   

              V. உடையப்பன் (Muthu Lakshmi Strores, Chennai ---  உதயாச்சியார் வீடு, தேவகோட்டை)                   

                K. சீதாராமன்    (Swathi Agencies & Skandha Guru Chit funds  ---  உதயாச்சியார் வீடு, தேவகோட்டை)                     

                கதி. கார்த்திக் (Valli Entrerprises, Chennai -- கிழவன் செட்டியார் வீடு, தேவகோட்டை)                   

                  ராதா நாகப்பன் (Nagappa Pharmacy. Chennai -- கூலிக்கார வீடு, தேவகோட்டை)                  


ஆகியோர் துணை நிற்கிறார்கள்.  இக்குழுவினர்  2015 முதல் சென்னை வாழ் நகரத்தார்களுக்கு  பிள்ளையார் நோன்புப் பொருட்கள் வழங்கிவருகிறார்கள். 2017 ஆம் ஆண்டில் இருமுறை வழங்கியதால், இந்த 2020 ஆண்டில் கோவிட் கட்டுபாடுகளுக்கிடையில் ஆறாம் முறையாக இப்பணியை மேற்கொள்கிறார்கள்.              

        
           இந்த ஆண்டு இன்று வரை பதிவு செய்துள்ள 1100 (ஆயிரத்து நூறு)க்கும் அதிமான குடும்பத்தினருக்கும்  பிள்ளையார் நோன்பு பொருள்களை இலவசமாக குறித்த இடங்களில்  குறித்த இடங்களில் வழங்கவுள்ளனர்.            


             ஒரு விளக்கு ஆயிரம் விளக்குகளை ஏற்றும்.  பிள்ளையார் நோன்பு எனும் தொல்மரபிற்குப் புத்துயிரூட்டும்  இந்த அறுவர் குழுவின் பணி அத்தகைய திருவிளக்கேற்றும் பணி ஆயிரம்  விளக்குளை ஏற்றும் திருப்பணி தான்.            




           நம் குலம் காக்கும் திருமுருகனைப் பேணி வளர்த்த ஆறு கார்த்திகைப் பெண்களைப் போல நம் குலம் பெருக பிள்ளையார் நோன்பை வீடுகளில் கொண்டாடும் தொல்மரபிற்குப் புத்துயிரூட்டும் ஆறு கார்த்திகைச் செல்வர்கள் வாழிய! வாழிய!! 


 வாசகர்கள் இப்பதிவோடு தொடர்பு என்னுடைய சென்ற ஆண்டு பதிவையும் வாசிக்க வேண்டுகிறேன். https://nalanthaa.blogspot.com/2019/12/blog-post_25.html  

 நலந்தா செம்புலிங்கம் 
 18.12.2020

Tuesday, 15 September 2020

கரிசல் காட்டின் பேச்சையும் மூச்சையும் இலக்கியமாக்கிய கி.ரா

             

 

 கரிசல் காட்டின் பேச்சையும் மூச்சையும் இலக்கியமாக்கிய கி.ரா!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இது பாரதியின் நினைவு நூற்றாண்டு.  நாம் எவ்வளவு தான் பாரதியைக் கொண்டாடினாலும்  அவன் வாழ்ந்த காலத்தில் தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் இருக்கிறது.  பாரதியின் இறுதி சடங்கில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பதும் மாறாத வடுவாக உள்ளது.   



           அது கடந்த காலம். நாம் சும்மா இருந்தாலும் பழைய பிழைகளுக்காக வருந்திக் கொண்டிருந்தாலும்  காலம் கடந்து தான் போகும்..  

           சாதனைகளாலும் சாதனையாளர்களை வாழும் காலத்திலேயே கொண்டாடுவதாலும் காலம் அதுவாகக் கடந்து போகாமல் நாம் எழுச்சி நடை பீடு நடை போடலாம்.

        அத்தகைய நன்னடை ஒன்று நாளை 16.09.2020 அரங்கேறுகிறது.

          ஆம் கரிசலைத் தன் எழுத்தின் வழியே ஆவணப்படுத்திய உன்னதக் கதை சொல்லி கி. ராஜநாராயணன் அவருடைய 98 ஆம் பிறந்த நாளான 16.09.2020 மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கிறார்.  

                 கிராமிய மணம் கமழும் இலக்கியத்திற்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றத் தருபவர் கி.ரா  அவருடைய எழுத்துக்களும் சாதனைகளும் குறிப்பாக கரிசல்வட்டார வழக்கு அகராதி வட்டார மொழி இலக்கியத்திற்கே புதிய வலிமையையும் பொலிவை வழங்குகின்றன.  இது அனுமன் சீரஞ்சீவி மலையைப் பெயர்த்துக் கொணர்ந்த தீரத்தினைப் போன்றது. 

               சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது[2] உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகளால் கி.ரா அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், அவை எல்லாவற்றையும் விஞ்சிய பேராளுமையாவர்.

               அவரை இனிக் கொண்டாடவதற்கான வழி அவர் பெயரால் ஒரு விருதை ஏற்படுத்துவது தான்.


தமிழ் இலக்கியக்கியத்திற்கும் தமிழ் வாசகர்களுக்கும் தொடர்ந்து களப்பணியாற்றி வருகிற நிறுவனம் கோவை விஜயா பதிப்பகம்.  எந்தப் பதிப்பகத்தின் நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றிருந்தாலும் அந்த எழுத்தாளருக்கு முதல் பாராட்டு விழா எடுக்கத் துடிப்பது விஜயா பதிப்பகம். ஆண்டுதோறும் ஜெயகாந்தன் விருது,  கவிஞர் மீ.ரா விருது, புதுமைப்பித்தன் விருது, சக்தி வை கோவிந்தன் விருது, வானதி திருநாவுக்கரசு விருது  எனப் பல விருதுகளை விஜயா வாசகர் வட்டம் வழங்கிவருகிறது.


            அந்த வரிசையில் ஒரு மிகப் பெரிய மடைமாற்றத்தோடு விஜயா வாசகர் வட்டம் இந்த ஆண்டிலிருந்து வாழும் படைப்பாளர்  கி.ரர பெயரில் விருது வழங்கவுள்ளது. முதல் ஆண்டின் விருது மிகத் தகுதி வாய்ந்த கிராமியப் பாடகர் கண்மணி குணசேகரனுக்கு  வழங்கப்படயிருக்கிறது.


 
                இந்த விருதிற்கு மணிமகுடமாகத் திகழும் சிறப்பு இந்த விருதுக்கான நிதியை வழங்குவது வணிகத்திலும் மனிதநேயத்தை நிலைநாட்டுகிற புகழ்பெற்ற சக்தி மசாலா நிறுவனம்.  சக்தி மசாலா நிறுவனம் தரத்திலும் உள்ளூர் வணிகத்திலும் ஏற்றுமதிகளிலும் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி வகிக்கும் நிறுவனம்.  பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு எனப் பல சமூகப் பார்வையிலும் முன்னுதாரணமாக சக்தி மசாலா திகழ்கிறது.




          விருது நாயகர் விருது பெறுபவர் விருதை ஊக்குவிப்பவர் என முப்பரிமாணங்களிலும் இவ்விருது முன்னோடியாகத் திகழ்கிறது.  வாசகர் திருவிழா நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப் படுத்திய கோவை விஜயா பதிப்பகம் இந்த முப்பரிமாணங்களையும் ஒருங்கிணைத்துள்ளது.

                 இதுவே இலக்கிய உலகிற்கு விஜயா பதிப்பகம் காலத்தினால் செய்யும் ஞாலத்தில் பெரிய பணி