கரிசல் காட்டின் பேச்சையும் மூச்சையும் இலக்கியமாக்கிய கி.ரா!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இது பாரதியின் நினைவு நூற்றாண்டு. நாம் எவ்வளவு தான் பாரதியைக் கொண்டாடினாலும் அவன் வாழ்ந்த காலத்தில் தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் இருக்கிறது. பாரதியின் இறுதி சடங்கில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பதும் மாறாத வடுவாக உள்ளது.
அது கடந்த காலம். நாம் சும்மா இருந்தாலும் பழைய பிழைகளுக்காக வருந்திக் கொண்டிருந்தாலும் காலம் கடந்து தான் போகும்..
சாதனைகளாலும் சாதனையாளர்களை வாழும் காலத்திலேயே கொண்டாடுவதாலும் காலம் அதுவாகக் கடந்து போகாமல் நாம் எழுச்சி நடை பீடு நடை போடலாம்.
அத்தகைய நன்னடை ஒன்று நாளை 16.09.2020 அரங்கேறுகிறது.
ஆம் கரிசலைத் தன் எழுத்தின் வழியே ஆவணப்படுத்திய உன்னதக் கதை சொல்லி கி. ராஜநாராயணன் அவருடைய 98 ஆம் பிறந்த நாளான 16.09.2020 மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கிறார்.
கிராமிய மணம் கமழும் இலக்கியத்திற்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றத் தருபவர் கி.ரா அவருடைய எழுத்துக்களும் சாதனைகளும் குறிப்பாக கரிசல்வட்டார வழக்கு அகராதி வட்டார மொழி இலக்கியத்திற்கே புதிய வலிமையையும் பொலிவை வழங்குகின்றன. இது அனுமன் சீரஞ்சீவி மலையைப் பெயர்த்துக் கொணர்ந்த தீரத்தினைப் போன்றது.
சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது[2] உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகளால் கி.ரா அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், அவை எல்லாவற்றையும் விஞ்சிய பேராளுமையாவர்.
தமிழ் இலக்கியக்கியத்திற்கும் தமிழ் வாசகர்களுக்கும் தொடர்ந்து களப்பணியாற்றி வருகிற நிறுவனம் கோவை விஜயா பதிப்பகம். எந்தப் பதிப்பகத்தின் நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றிருந்தாலும் அந்த எழுத்தாளருக்கு முதல் பாராட்டு விழா எடுக்கத் துடிப்பது விஜயா பதிப்பகம். ஆண்டுதோறும் ஜெயகாந்தன் விருது, கவிஞர் மீ.ரா விருது, புதுமைப்பித்தன் விருது, சக்தி வை கோவிந்தன் விருது, வானதி திருநாவுக்கரசு விருது எனப் பல விருதுகளை விஜயா வாசகர் வட்டம் வழங்கிவருகிறது.
அந்த வரிசையில் ஒரு மிகப் பெரிய மடைமாற்றத்தோடு விஜயா வாசகர் வட்டம் இந்த ஆண்டிலிருந்து வாழும் படைப்பாளர் கி.ரர பெயரில் விருது வழங்கவுள்ளது. முதல் ஆண்டின் விருது மிகத் தகுதி வாய்ந்த கிராமியப் பாடகர் கண்மணி குணசேகரனுக்கு வழங்கப்படயிருக்கிறது.
இந்த விருதிற்கு மணிமகுடமாகத் திகழும் சிறப்பு இந்த விருதுக்கான நிதியை வழங்குவது வணிகத்திலும் மனிதநேயத்தை நிலைநாட்டுகிற புகழ்பெற்ற சக்தி மசாலா நிறுவனம். சக்தி மசாலா நிறுவனம் தரத்திலும் உள்ளூர் வணிகத்திலும் ஏற்றுமதிகளிலும் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி வகிக்கும் நிறுவனம். பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு எனப் பல சமூகப் பார்வையிலும் முன்னுதாரணமாக சக்தி மசாலா திகழ்கிறது.
விருது நாயகர் விருது பெறுபவர் விருதை ஊக்குவிப்பவர் என முப்பரிமாணங்களிலும் இவ்விருது முன்னோடியாகத் திகழ்கிறது. வாசகர் திருவிழா நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப் படுத்திய கோவை விஜயா பதிப்பகம் இந்த முப்பரிமாணங்களையும் ஒருங்கிணைத்துள்ளது.
இதுவே இலக்கிய உலகிற்கு விஜயா பதிப்பகம் காலத்தினால் செய்யும் ஞாலத்தில் பெரிய பணி
No comments:
Post a Comment