காசி தர்மத்திற்கு வித்திட்ட கல்கத்தா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கல்கத்தாவில் நம் முன்னோர்கள் ஆற்றிய பக்தித் தொண்டும் சாதித்த வணிக வெற்றிகளும் நகரத்தார் வரலாற்றில் மிக முக்கியமான அங்கமாகும்.
நகரத்தார்களின் ஆன்மீகப் பணிக்கும் நிர்வாகத் திறனுக்கும் மிகப் பெரிய சான்றாகத் திகழ்வதும் இரண்டு நூற்றாண்டுகளாக தொடரும் வரலாற்றைப் பெற்றதும் காசிச் சத்திரமாகும். காசிச் சத்திர அமைப்பின் கீழ் மாநிலங்களில் ஊர்களில் பல ஆன்மீகப் பணிகளும் விடுதிகளும் இயங்கிவருகின்றன. அண்மையில் புதிதாக பழநியில் ஒரு புதிய விடுதி தோற்றுவிக்கப் பெற்றிருக்கிறது.
இத்தகைய காசிச் சத்திரத்திற்கு வித்திட்டது கல்கத்தா தான். ஆனால் இந்தத் தலைமையிடத்து சொத்துக்களின் முழுப் பலன்கள் முழுமையாகக் கிடைக்கதாத நிலை பல ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்டுவிட்டது. அவற்றை மீட்கும் பணி பல ஆண்டுகளாக தொடர்ந்து எடுக்கப் பெற்று வந்த போதிலும், மீட்புப் பணி 2016 ஆம் ஆண்டில் வேகம் கொண்டது. இந்த மீட்புப் பணிகளை சட்டரீதியாக அணுகுவதோடு பக்தி மார்க்த்திலும் முயற்சி மேற்கொள்ளும் திருப்புமுனை 2017 ஆம் ஆண்டில் முகிழ்ந்தது. இவற்றில் காசிச் சத்திரத்தின் துணைத் தலைவர் பழ. இராமசாமி தனிக்கவனம் செலுத்திவருகிறார். 2017 ஆம் ஆண்டிலிருந்து கல்கத்தா வாழ் நகரத்தார்கள் சிங்கார முருகேசர் ஆலயத்தில் மாதந்தோறும் திருப்புகழ் வழிபாடு நடத்திவருகிறார்கள். 2018 ஆம் ஆண்டிலிருந்து பங்குனி உத்திரப் பெருவிழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப் பெறுகிறது. செட்டிநாட்டிலிருந்தும் வெளியூர் வெளி நாடுகளிலிருந்தும் நகரத்தார்கள் பெருந்திரளாக கூடி சிங்கார முருகேசருக்கு காவடி, பால்குடம் எடுப்பது இவ்விழாவின் தனிச் சிறப்பாகும். 2018 ஆம் ஆண்டில் சுமார் 500 பக்தர்கள் கூடினார்கள் என்றும் 41 காவடிகள் 82 பால்குடங்கள் எடுக்கப் பெற்றன. 2019 ஆம் ஆண்டில் இவையெல்லாம் இரட்டிபாகலாம் அதற்கு மேலும் கூடலாம். அவற்றோடு 2019 ஆம் ஆண்டில் சங்காபிசேகமும் விளக்கு பூசையும் நடைபெறுகின்றன. 151 ஆச்சிமார்கள் பங்கேற்கும் விளக்கு பூசைக்கு தலைவர் உலகம்பட்டி திரு லெ. காசிநாதன் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
காரைக்குடி திருமிகு சோம. முருகப்ப அண்ணன். பக்திப் பணிகளிலும் சமூகப் பணிகளிலும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர், கார்த்திகை வழிப்பாட்டுக் குழு பழனிப் பாதயாத்திரைக் குழு காரைக்குடி நகரச்சிவன் நிர்வாகக் குழு நகரத்தார் திருமணக் குழு என ஒரே நேரத்தில் பல இயக்கங்களில் பணியாற்றிக் கொண்டிருப்பவர். தலைமைப் பண்பு மிக்கவர், களப்பணிக்கு சளைக்காதவர். அவர் தான் பங்குனி உத்திரப் பேரியக்கத்திற்கு கல்கத்தா வருகை தரும் அனைவரோடும், வெளியூர் வெளிநாடுகளிலிருந்து இருந்தவாறே பணியாற்றும் அனைவரோடும் தொடர்பு கொள்ளவும் அவ்வப்போதும் உடனுக்குடன் தொடர்பு கொள்ளவும் ஒரு புலனக் குழு (Whatsapp group) தொடங்க வேண்டும் என வழிகாட்டினார்.
2018 பங்குனி உத்திரத் திருவிழா குறித்து நான் களைகட்டுகிறது கல்கத்தா என ஒரு வலைப் பதிவு (Blog) எழுதினேன். அத்தலைப்பின் அடிப்படையில் களைகட்டும் கல்கத்தா என புலனக்குழுவிற்குப் பெயர் சூட்டி. நகரத்தார் கலைக்களஞ்சிய இணை ஆசிரியர் முனைவர் கரு. முத்தையா அவர்களும், காரைக்குடி திரு சோம. முருகப்பன் அவர்களும் நானும் இக்குழுவை நிறுவினோம்.
கல்கத்தாவில் இரண்டாம் ஆண்டாக நடைபெறுகின்ற இந்தப் பங்குனி உத்திர பக்தி சமுதாயப் பேரியக்கத்தைப் பதிவு செய்யும் பொருட்டு களைகட்டும் கல்கத்தா திருவிழா மலர் 2019 எனும் சிற்றேடு மலர்கிறது.
களைகட்டும் கல்கத்தா புலனக்குழு, உறுப்பினர்களிடைய தகவல் பாலமாக அமைகிறது.
கவிஞர் சிவல்புரி சிங்காரம், கவிஞர் அரசி. பழநியப்பன், கவிஞர் வேந்தன்பட்டி சீனிவாசன், கவிதாயினி அலமேலு சீனிவாசன் ஆகியோரை சிங்கார முருகேசர் மீது புதியபாக்களைப் புனைந்து தரக் கேட்டுகொண்டு அவர்கள் இயற்றிய செந்தமிழ் பாமாலைகளையும் பரவலாக்கினோம். முனைவர் கரு. முத்தையா அவர்களும் முனைவர் நா.வள்ளி அவர்களும் நகரத்தார் இயல் குறித்த கருத்துரைகளை ஒலிக் கீற்றுகளாக நல்கினார்கள்.
சிங்கார முருகேசர் மீதான புதியபாக்களையும் நகரத்தார் இயல்கள் குறித்த வரலாற்றுப் பதிவுகளையும் ஏந்தி மலர்கிறது இச்சிற்றேடு.
புலனக்குழுவிற்கும் சிற்றேட்டிற்கும் கவியுரை கருத்துரை நல்கிய பெருமக்களுக்கும், இச்சிற்றேட்டை மின்னல் வேகத்தில் மிகக் குறுகிய காலத்தில் அச்சிட்ட தம்பி தேவகோட்டை கணேஷ் பிரிண்டர்ஸ் சண்முகத்திற்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
நகரத்தார் கலைக் களஞ்சியம் நல்கிய பதிப்புச்செம்மல் நினைவில் வாழும் ச. மெய்யப்பனாருக்கு இச்சிற்றேட்டை காணிக்கையாக்குகிறேன்.
நலந்தா செம்புலிங்கம்
பதிப்பாசிரியர்
No comments:
Post a Comment