Wednesday 2 September 2020

குறளுக்கு உரையாகும் காரைக்குடிப் பள்ளி!

 

குறளுக்கு உரையாகும் காரைக்குடிப் பள்ளி!






          குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

           மடிதற்றுத் தான்முந் துறும். (1023)

 

        இந்தத் திருக்குறளிற்கு எத்தனையோ உரைகளைப் படித்திருப்பீர்கள். பரிமேலழகர் உரையோ பழைய உரையோ அவை யாவும் ஏட்டில் துலங்கும் இயல் தமிழ் தான்.

 


          இன்று இக்குறளிற்கு ஒரு உரை நம் கண் முன் செயல் வடிவம் பெறுகிறது. எங்கே? காரைக்குடியில், காமராசர், 1963 இல் திறந்த வைத்த பள்ளியில்!

       

       ஏராளமான அரசுப் பள்ளியில் மாணவர் பற்றாக்குறையில் உழன்று கொண்டிருக்கும் நிலையில் காரைக்குடியில் ஒரு வியத்தகு அதிசயம் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.

 

        2013-2014 கல்வியாண்டில் இராமநாதன் செட்டியார் நகராட்சி நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதுஅப்போது மாணவர் எண்ணிக்கை 218.  கடந்த 2019 -2020 கல்வியாண்டில் அப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 1325.  ஆறு ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கைஆறு மடங்கு  உயர்ந்திருக்கிறது.  

 

இப்பள்ளி மாணவர்கள் நடையிலும் உடையிலும் மிடுக்காகத் திகழ்வதோடு  வகுப்பறை கல்விக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள், விளையாட்டுப் போட்டிகள் இலக்கிய போட்டிகளில்  என பல்துறைகளில் சாதித்தும்   பொதுத் தேர்விலும்   வெற்றிக் கொடியும் நாட்டிவருகிறார்கள்இதனால் தான் காரைக்குடியினர் மட்டுமல்லாது வெளியூரில் உள்ளவர்களும் இப்பள்ளியில் தம் பிள்ளைச் சேர்க்க விரும்புகிறார்கள்அதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பங்களும் அதிகரித்து வருகின்றது.

     


       ஜுன் மாதம் தொடங்கும் கல்வி ஆண்டில் தம் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் பிப்ரவரி மாதமே பள்ளியை அணுகுவர். 2018 - 2019 ஆண்டில் 95 மாணவர்களை மட்டுமே புதியதாகச் சேர்க்கக் கூடிய நிலையில் 300க்கு மேற்பட்டோர் இப்பள்ளியில் சேர முயன்றனர்மாணவர் சேர்க்கை முடிந்தது இனிமேல் விண்ணப்பப் படிவங்கள் கொடுக்கப்படமாட்டது என்று பிளக்ஸ் பேனர் வைக்கும் நிலை ஏற்பட்டதுபிறகு ஷிப்ட் முறையில் 6 ஆம் 7 ஆம் வகுப்புகளை நடத்த முடிவு செய்து அதன் பேரில் கூடுதலாக 200 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.

 

        2019 - 2020 கல்வியாண்டின் தொடக்கத்தில் இப்பள்ளி வளாகத்திற்குள் இருந்த தொடக்கப் பள்ளி புதிதாகக் கட்டப்பெற்ற மற்றொரு வளாகத்திற்கு மாற்றப்பட்டதால் இந்த உயர் நிலைப் பள்ளிக்குக் கூடுதல் வகுப்புறைகள் கிடைத்ததுஅதனால் ஷிபிட் முறையிலிருந்து இயல்பு முறைக்குத் திரும்பியோடு கூடுதலாக மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள முடிந்தது.

 

       இந்த 2020 -2021 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 17.08.2020 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டபோது, 200 மாணவர்களை மட்டும் சேர்த்துக் கொள்ளக் கூடிய நிலையில் 700 மாணவர்கள் விண்ணப்பித்தனர்வேறு வழியில்லாமல் 500 மாணவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

 


       இத்தனை முன்னேற்றங்களுக்கு இடையில் இப்பள்ளியில் இட நெருக்கடியும், சுகாதார வசதி போதாமையும் ஒட்டிப் பிறந்த உடன்பிறப்புகளாகத் தொடர்ந்தனபெற்றோர் ஆசிரியர் கழகம் சளைக்காமல் கோரிக்கை மனுக்களைச் சமர்பித்த வண்ணம் இருந்ததால் படிப்படியாக தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

 

       இப்பொழுது 500 மாணவர்கள் திருப்பிவிடப்பட நிலை எல்லா ஊடகங்களிலும் எடுத்துரைக்கப்பட்டதோடு சமூக வலைத் தளங்களில் இந்த அதிசியப் பள்ளியின் புகழ் காட்டுத்தீயாகப் பரவியதுதமிழக அரசு இப்பள்ளியின் கூடுதல் வகுப்பறை தேவைகளை தானே உணர்ந்து, கொரோனா முடக்கத்திற்கு இடையிலும் site survey building plan approval, fund allocation என
 
மின்னல் வேகத்தில் களமிறங்கியுள்ளதுடிசம்பர் மாதத்திற்குள் ஐந்து வகுப்பறைகள் கிடைக்கும் என பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கூறுகின்றனர்.

                  

            முன்னுதாரணமான தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா, அர்ப்பணிப்பு உணர்வுமிக்க ஆசிரியர்கள், அடித்தளமாகவும் அரணாக நிற்கும் பெற்றோர் ஆசிரியர் கழகம் இந்த வெற்றி வரலாற்றின் முப்பரிணமானங்களாவர். இவர்களின் திருவினையும் தமிழக அரசின் செயல் வேகமும்  

 

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும் 

 

எனும் குறளை நினைவூட்டுகிறதுபரிமேலழகர், தன் குடியை உயரச் செய்வேன் என்று முயல்பவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக் கொண்டு முந்துறும் என்பார்உள்ளபடி இப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரின் நன்முயற்சிக்கு தமிழக அரசு தனது அதிகாரத்தை இறுகப் பற்றிக் கொண்டு முன் நிற்கிறது.

 

தமிழக அரசே முன் நிற்பதால், புதிய கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப் பணி முடுக்கிவிட்ட நாளிலேயே கூடுதலாக மாணவர்களைச் சேர்க்கவும் அனுமதித்துள்ளதுஅதற்கேற்ப இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கையை 01.09. 2020  தொடங்கி முதல் நாளிலேயே  நூற்றிற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

 

        கல்வி வணிகமயமாவதை எதிர் கொள்ள இதைப் போன்ற பள்ளிகளே சரியான தீர்வாகும். ஊருக்கு ஒரு இராமநாதன் செட்டியார் பள்ளி உருவாகட்டும்!

 

3 comments:

  1. ஒரு முன்னுதாரணப் பள்ளியைப் பற்றிய அருமையான பகிர்வு

    ReplyDelete
  2. நல்லதை நல்லது என்று சொல்ல ஆள் இல்லை.. எனவே, உங்கள் பணி மகத்தானது.. நண்பர் பீட்டர் இராஜா பின்னால் இறையருள் பரிபூரணமாக உண்டு..


    *குடிசெயல்வகை*

    நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
    இல்லாண்மை ஆக்கிக் கொளல்.   (குறள் - 1026) 

    ‘ஒருவனுடைய நல்லாண்மை’ என்பது, தான் பிறந்த குடியினை ஆளும் தன்மையை ( உயர்த்தும் தன்மையை ) , அவன், தன்னிடம் உளதாக ஆக்கிக் கொள்ளுதலே ஆகும்.

    ReplyDelete
  3. Arumai. Thangal pani thodara vazhthukkal.

    ReplyDelete