குழந்தைகள் கற்க! பள்ளிகள் சிறக்க!!
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் என்றான் பாரதி. அந்தக் கோவில்களின் தலைமைப் பூசாரிகள் தலைமைப் பண்பு மிக்கவர்களாகத் திகழ்ந்தால் தான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மேன்மையுறுவார்கள்.
ஒவ்வொரு குழந்தையும் கற்க வேண்டும் ஒவ்வொரு பள்ளியும் சிறக்க வேண்டும் (EVERY CHILD LEARN, EVERY SCHOOL EXCELS) என்பதே இந்த NCSL அமைப்பின் குறிக்கோளாகும்.
மைய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு 2012 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பெற்றது. பள்ளிகளை மாற்றத்திற்கான வாயிலாகக் கருதும் இவ்வமைப்பு, அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதையே தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளது. பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்பை மேம்படுத்துவதன் மூலம் தான் மாணவர்களை நாளைய சவால்களை எதிர்கொள்ளத் தகுதி வாய்ந்தவர்களாக உருவாக்க முடியும் என்பதை NCSL அமைப்பு செயல் திட்டமாக வரித்துக் கொண்டுள்ளது. அந்த இலக்கை நோக்கி பல பணிகள் ஆற்றி வருகிறது.
அந்த வகையில் இந்த NCSL அமைப்பு, பள்ளித் தலைமை - பண்பைக் கொண்டாடுவோம் (CELEBRATING SCHOOL LEADERSHIP) என்றொரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு முன்மாதரியான மாநாட்டினை, முதல் முறையாக புது தில்லியில் 2019, ஜனவரி 22 -24 தேதிகளில் நடத்தவுள்ளது.
வரையறுக்கப்பட்ட கடமைகளுக்கு அப்பாற்பட்டு அர்ப்பணிப்புணர்வோடு கடுமையாகவும் தொடர்ந்து உழைக்கும் தலைமை ஆசிரியர்களின் பள்ளிகள் தான் முன்னுதாரணமான பள்ளிகளாகத் திகழும். அத்தகைய தலைமை ஆசிரியர்களின் செயல்பாடுகளை எழுத்திலும் மின்னூடகங்களிலும் ஆவணப்படுத்துவதற்காகவே இந்த மாநாடு கூட்டப்படுகிறது. இந்த அகில இந்திய மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து இரண்டு தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
காரைக்குடிக்கார்களின் எதிர்பார்ப்பு சரி தான்.
பல அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை, காலடி கடற்கரை மணலாக அரித்துக் கொண்டு போகும் காலத்தில், ஆறே ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கையை ஆறுமடங்கு உயர்த்திய காரைக்குடி இராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா இல்லாமலா முன்னுதாரணப் பள்ளி மாநாடு?
மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இன்னொருவர் கும்பகோணம் வட்டம் முத்துப் பிள்ளை மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசரியர் திருமதி சாந்தி. இப்பள்ளி, பாடத்திட்டத்திற்கு அப்பாலும் பொது அறிவு நிலையிலும் கணித்திலும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வெற்றி கண்டுவருகிறது. எட்டடாம் வகுப்பு மாணவர்கள் எட்டு இலக்க வகுத்தல் பெருக்கல் கணக்குகளுக்கு எளிதாக விடை காண்பர். உலக நாடு வரைபடங்கள், 180 நாடுகளின் பெயர்கள், வரைபட குறிப்புகள் போன்றவற்றில் தேர்ச்சி மிக்க மூன்று மாணவர்கள் அவற்றில் உலக சாதன படைத்துள்ளனர். இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளியின் கட்டடிட நிலைகளால் இப்பள்ளிக்கு மக்கள் வேடிக்கையாக ஒட்டைப் பள்ளி எனப் பெயர் வைத்துவிட்டனர். சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றியத்தினர் பெற்றோர்கள் மற்றும் சக ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு ஒட்டைப் பள்ளி ஒப்பற்ற பள்ளி ஆகிவிட்டது என்கிறார் தலைமை ஆசிரியர் திருமதி சாந்தி.
இந்த முன்னுதாரணப் பள்ளி மாநாட்டிற்கு ஒரு மாநிலத்திற்கு எத்தனை பிரதிநிதிகள் என்பது குறித்து வரையறை உள்ளதா என்பதை NCSL இணைதளத்தில் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வேளை இரண்டு பிரதிநிதிகள் என வரையறை இருந்தாலும் மதுரை ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைக் கருத்தில் கொண்டு விதிவிலக்காக தமிழகத்திலிருந்து மூன்று பிரதிநிதிகளை அழைத்திருக்கலாம்.
இந்த அகில இந்திய முன்னுதார பள்ளித் தலைமை ஆசிரியர் மாநாடு ஒரு பள்ளியை எப்படி சிறப்பாக நடத்த வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுக்கக் கூடுகிறது.
ஆனால் ஒரு பள்ளியை எப்படி சிறப்பாக நடத்த வேண்டுமென்பதற்கு இலக்கியமாகத் திகழ்பவரும் அனைத்து ஊடகங்களாலும் பாராட்டப்பட்டவருமான மதுரை ஒத்தக் கடை ஊராட்சி ஒன்றியப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னவன் ஏனோ தில்லியின் கண்ணில்படவில்லை. இழப்பு மதுரைக்கு அல்ல, தில்லிக்குத் தான்!
தென்னவன்:விருதுகளை விஞ்சிய வேந்தன்! https://nalanthaa.blogspot.com/2018/09/blog-post_4.html |
நலந்தா செம்புலிங்கம்
20.01.2019
No comments:
Post a Comment