பாவம் ஒரு பங்கு!
பழி ஆறு மடங்கு!!
ஆசிரியரின் முக்கியத்துவதையும் பொறுப்பையும் சுட்டிக் காட்டுவதற்காக மாணவன் தவறு செய்தால் ஆசிரியருக்கு தண்டனை வழங்கு என வேடிக்கையாகச் சொல்வார்கள்.
கடந்த ஞாயிறு(10.12.2018) ஏறத்தாழ அந்த சூழ்நிலை தேவகோட்டையின் பெருமிதப் பள்ளியான N.S.M.V.P.S மேல்நிலைப் பள்ளிக்கு ஏற்பட்டது.
முதலில் அரையாண்டு வினாத் தாள்கள் திருடப்பட்டதாக புலனத்தில் கட்செவியில் (வாட்ஸ் ஆப்) வேகமாகப் பரவியது. தொலைக்காட்சிகளும் விளாசித் தள்ளின. வினாத்தாள்கள் திருடப்படவில்லை ஆனால் திருடுவதற்கு முயற்சி நடந்திருக்கிறது என்றொரு செய்தி வந்தது. கடைசியாக சுவரெறிக் குதித்தது கதவை உடைத்து வினாத்தாள்களை செல்போனில் படம் பிடிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது. இது தொழில் நுட்ப வசதியால் எளிமையாக்கப்பட்ட திருட்டு அவ்வளவு தான். இது தொடர்பாக 16 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்கள். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருதியும் திருந்துவதற்கு வாய்ப்பளிப்பதற்காகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.
இதனை ஒரு ஆசிரியர் கீழ்க்கண்டவாறு வரவேற்றிருக்கிறார்.
இந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகமும், காவல்துறையும் வெகு சிறப்பாக செயல்பட்டு அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மதிப்புமிகு சாமி சத்தியமூர்த்தி அவர்கள் ஒரு சிறந்த கல்வியாளராகச் செயல்பட்டு மாணவர்கள் திருந்தவும் வாய்ப்பளித்து தாயுள்ளத்துடன் அணுகிய விதமும்,பேட்டியளித்த பாங்கும் வணக்கத்திற்குரியதாகும். சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள், குடும்ப உறவுகளின் மனதில் நீங்காத நன்றிக்குரியவராகிறார். நானும் ஆசிரியராக அவரை வணங்கிப் போற்றுகிறேன்.
இந்தச் சம்பவத்திற்கு மென்மையான தீர்வு காணப்படுவதற்கு முன்னரே, துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனில் இந்த சம்பவம் மர்மமாக இருந்த போதே ஒரு புகழ் பெற்ற பள்ளியின் பெயர் அனைத்துத் தொலைகாட்சி அலைவரிசைகளிலும் துளைத்தெடுக்கப்டடிருக்கிறது.
அந்த ஊடகங்களைக் குறை சொல்லவும் முடியாது. ஒரு மாணவன் தன் சொந்த முயற்சியில் அரபிக் கடலை நீந்திக் கடந்தாலும் அவன் படிக்கும் பள்ளியும் பெருமையடைகிறது. ஆகவே ஒரு மாணவன் தவறு செய்யும் போது அந்தப் பள்ளி அந்த அனல் வீச்சையும் எதிர்கொள்ளத் தான் வேண்டும்.
இந்த தேவகோட்டை சம்பவத்தில் தொடர்புடைய 16 மாணவர்களும் N.S.M.V.P.S மேல்நிலைப் பள்ளி மாணவர்களல்லர், வேறொரு அரசு உதவி பெறும் பள்ளியின் மாணவர்களும் மற்றொரு சுயநிதிப் பள்ளியின் மாணவர்களும் இந்த 16 பேரில் அடங்குவர், இந்த 16 பேரும் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் ஆனால் ஒரே இடத்தில் டியூஷன் படிப்பவர்கள்.
இந்த மாணவர்களின் குற்றச் செயலுக்கு N.S.M.V.P.S மேல்நிலைப் பள்ளி மட்டும் தான் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டுமா? மற்ற இரண்டு பள்ளிகளுக்கும் டியூஷன் சென்டருக்கும் பொறுப்பே இல்லையா?
ஒரு உத்தேசக் கணக்குப் பார்த்தால் கூட இந்த மாணவர்களின் குற்றத்தில் டியூஷன் சென்டருக்கு அரைப் பங்கும் பள்ளிகளுக்கு அரைப் பங்கும் பொறுப்புண்டு. N.S.M.V.P.S மேல்நிலைப் பள்ளிக்கு அரைப் பங்கில் மூன்றில் ஒரு பங்கு ஆக மொத்தத்தில் ஆறில் ஒரு பங்கு பொறுப்பேற்க வேண்டிய அந்தப் பள்ளியின் பெயர் தான் ஊடகங்களில் கண்ணில் தைத்திருக்கிறது.
பாவம் ஒரு பங்கு பழி ஆறு மடங்கு என்பது தான் N.S.M.V.P.S மேல்நிலைப் பள்ளியின் பழைய மாணவர்களின் ஆதங்கமாக இருக்கிறது.
|
old Student Ramsiva Thillairaja |
அதே நேரம் தலைமை ஆசிரியர் மென்போக்கைத் தவிர்த்து கண்டிப்பாகவும் கூடுதலாக கவனம் செலுத்தியிருந்தாலும் இச்சம்பவம் நடந்தேயிருக்காது என்கிறனர்.
இந்த பாவம் பழி கணக்குக்கு அப்பாற்பட்டு குறைந்தபட்சம் நான்கு கோணங்களில் பார்த்தால் இந்த அவலத்தின் ஆணி வேர் புலப்படும்.
1. அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டுமென்ற உந்துதல் மாணவர்களை டியூஷனுக்குத் தள்ளும். டியூஷன் பெற்ற பிறகும் எதிர்பார்த்த மதிப்பெண் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டால் வேறு குறுக்குவழிகளுக்கு மாணவர்கள் தள்ளப்படலாம்.
2. டியூஷன் தேவையா? தேவை தான், ஆனால் ஒரு பகுதியினருக்குத் தான் தேவை. அரசே மெல்லக் கற்கும் மாணவர்களை இனங்கண்டு கூடுதல் பயிற்சி அளிக்கச் சொல்கிறது. ஆனால் மெல்லக் கற்போர் மட்டும் தான் டியூஷனை நாடுகிறார்களா? உள்ளபடி நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள் தான் அதிகமாக டியூஷனை நாடுகிறார்கள்.எல்லாப் பாடங்களிலும் நூற்றிற்று நூறு அல்லது தொண்ணணூற்றி ஒன்பது எடுத்தால் தான் குறிப்பிட்டு படிப்பு குறிப்பிட கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நிலை தான் இதற்குக் காரணம்
3. சில படிப்புகளை மட்டுமே சில கல்லூரிகளை மட்டுமே சமூகம் துரத்திக் கொண்டிருக்கிறது. பல படிப்புகள் வேலை வாய்ப்பிற்கு உள்ளன. பிள்ளைகளை மதிப்பெண் இயந்திரங்களாக்காமல் பெற்றோர்கள் மற்ற படிப்புகளில் கவனத்தைத் திருப்பலாம்.
4 பள்ளிகளைப் பொறுத்தவரை ஆசிரியர் மாணவர் விகிதக் கணக்கு ஆசிரியருக்கான பணி நேரத்திற்கும் கணக்கு உண்டு. புகழ் பெற்ற டியூஷன் ஆசரியர் வீட்டிலோ இவையெல்லாம் ஒரு அணு அளவும் கருதிப் பார்க்கப்படுவதில்லை. 100, 200 மாணவர்கள் பயிற்சிக்கு வருவார்கள். காலை 5 மணிக்கே வகுப்புகள் தொடங்கும். டியூஷன் ஆசிரியர் அரசுப் பள்ளி ஆசரியராக இருந்தால் அவர் பணிக்கும் செல்ல வேண்டும். இது மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் வகுப்பறை
அழுத்தத்தை விட கூடுதலான அழுத்தம். இந்த அழுத்தம்.
டியூஷன் தவிர்க்க முடியாதது என்ற நிலையில் டியூஷனில் ஏற்படும் அழுத்தத்தையாவது குறைக்க வேண்டும். இதனை அரசு சட்டம் போட்டுச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. எப்போது ஒரு சட்டம் உருவானாலும் அதனுடன் சட்டத்தின் ஓட்டை என்றொரு உடன்பிறப்பும் ஒட்டிப் பிறக்கும் ஆகவே சமூகம் சுயகட்டுப்பாட்டினால் டியூஷன் சூழல்களை நெறிப்படுத்தலாம்.
1. டியூஷன் ஆசிரியருக்கும் மாணவர் ஆசிரியர் விகிதசார வரம்புகள் ஏற்படுத்தலாம். 2. பணியில் இருக்கும் ஆசிரியர்கள் வேலை தேடும் பட்டதாரிகளுக்கு விட்டுக் கொடுக்கலாம்.
நலந்தா செம்புலிங்கம்
17.12.2018