ஒரு மந்திரத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பது உச்சடானம், ஒரு மூர்த்தத்தின் மீது அல்லது விக்ரகத்தின் மீதோ அல்லது விக்ரகத்தை வைத்து செய்யப்படும் உச்சாடனம் அந்த மூர்த்தத்திற்கு அல்லது விக்ரகத்திற்கு உரு ஏற்றும் அல்லது சக்தியை மேலும் அதிகப்படுத்தும் என்பது ஐதீகம். இந்த ஐதீகங்களுக்கு நாமே நம் வாழ்வில் சான்றாக இருந்திருப்போம்.
தேவகோட்டையில் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த வயிரவர் உச்சாடனர் அமரர் சேவு.லெ. சேவுகன் செட்டியார். அவர் தினமும் அவர் வீட்டு முகப்பில் உள்ள தெற்குத் திண்ணையின் முதல் தூண் அருகில் இருந்து உச்சாடனம் செய்வார். வயிரவர் அருள் பெற்ற அவரிடம், நாய் கடியால் அவதியுற்றவர்கள் வந்து மந்திரத்துக் கொண்டு (அவர் ஒரு மந்திரத்தை மெல்ல உச்சரித்தபடி பாதிக்கப்பட்டவர் மீது தனது தோள் துண்டை வைத்து இறக்கிவிடுவார்) சுகம் பெறுவர். அவர் என் தாயாரின் பெரிய தகப்பனார், எனக்குப் பெரிய ஐயா. அவர்களுக்கும் எங்கள் ஐயாவிற்கும் மற்ற ஐயாக்களுக்குமான பொது வீட்டில் தான் நான் பிறந்து வளர்ந்தேன். எங்கள் பெரிய ஐயா மந்திரப்பதை எத்தனையோ முறை நேரில் பார்த்திருக்கிறேன். அவர் ஊரில் இல்லாத சமயத்தில் வருபவர்கள் ஐயா உச்சாடானம் செய்யும் தூணைச் சுற்றிச் சென்றும் சுகம் பெற்றிருக்கிறார்கள்.