இடி நம்மை கேட்டுத்
தலையில் விழுவதில்லை!!
மக்கள் குடியரசுத் தலைவர், மாணவர்களின் நாயகர், நம்பிக்கை தூதர் எனப் பன்முகம் கொண்டவர் அப்துல் கலாம்.
அவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுப்படுதற்கு முன்னரே ஊடகங்களால் கொண்டாடப்பட்டவர்.
அது அவருடைய அவருடைய சுயசரிதையான அக்னிச் சிறகுகள் நூலின் வெற்றியை தொடர்நத விளைவு எனக் கருதுகிறேன்
ஊடகங்கள் கொண்டாடுவதற்கு முன்னரேயே அப்துல் கலாம் அவர்களின் மாண்பையும் திருக்குறள் பற்றையும் உணர்ந்து கொண்டாடியவர் நம் நெஞ்சில் நிற்கும் அழகப்ப இராம் மோகன் ஐயா.
ஏன் நினைவு சரியாக இருக்குமேயானால் 1999 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அக்னிசிறகுகள் வெளியிடப்பட்டது. 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை புத்தகத் திருவிழாவில் அக்னிசிறகுகள் பரபரப்பாக விற்பனையானது. அக்னிசிறகுகள் நூல் கல்லூரிகளுக்குள் காட்டாற்றாற்று வெள்ளமாகப் பாய்ந்தது. ஒரு லட்சம் புத்தகங்கள் விற்பனை என்ற தமிழ் பதிப்புலகம் நினைத்துப் பார்த்திராத இலக்கை வென்றது. அப்துல் கலாம் இளைஞர்களின் நாயகரானார் அதன் விளைவாக ஊடகங்களாலும் கொண்டாடப்பட்டார்.
சென்னை புத்தகத் திருவிழாக்கு பிறகு வாசகர்களுக்கு அப்துல் கலாம் அவர்கள் நூலில் கையெழுத்திட்டுத் தரும் நிகழ்ச்சி சென்னையின் புகழ் அடையாளங்களுள் ஒன்றான ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது. அது காலை நிகழ்ச்சி. அங்கு தமிழ் நாட்டின் புத்தக உலகமே கூடியிருந்தது.
அன்று மதியம் 2.00 மணியளவில் அந்த ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடைக்கு ஓரிரு கிலோ மீட்டர் தொலைவில் காமராசர் அரங்கில் ஒரு பெரிய திருக்குறள் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுவும் அப்துல் கலாம் கலந்து கொள்ளும் விழா தான். ஆனால் ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையில் கண்ட புத்தகத் துறையே கூடியிருந்தது. மதியம் காமராசர் நடைபெற்ற திருக்குறள் விழாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய புத்தகத் துறையினர் தான் வந்திருந்தோம். அந்தத் தேதியில் அக்னிச் சிறகுகள் நூல் தான் பிரபலம்.
மதியம் 2.00 மணிக்கு இலக்கிய விழாவா? ஒரு இலக்கிய விழாவை கொளுத்தும் வெயில் நேரத்தில் நடத்தினால் யார் வருவார்கள்? எனப் பலரும் புருவங்களை உயர்த்தினார்கள்.
யார் வந்தாலும் வராவிட்டாலும், அந்த விழாவிற்கு போக வேண்டிய கடப்பாடு எனக்கு இருந்தது. தினமணி நாளிதழும் எங்கள் புத்தகக் கடையின் திருக்குறள்.ஆர்வமிக்க மூன்று வாசகர்களும் தான் அந்தக் கடப்பாட்டிற்கு காரணமானவர்கள்.
இந்தத் திருக்குறள் விழாவைப் பற்றி அதற்கு முந்தைய மூன்று நாட்கள் தினமணி மிகச் சிறப்பான அறிமுகத்தையும் முன்னோட்டத்தையும் தொடர்ந்து வழங்கியது. அந்த விழாவிற்குள் பல நிகழ்ச்சிகள் அவற்றுள் முக்கியமானது தமிழ்
மறை திருக்குறள் Thirukural: The Holy Scripture எனும் நூல் வெளியீட்டு விழா என்பதையும் அந்த நூலின் சிறப்புகளையும் மிக மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்ட அந்த விழா பற்றிய முன்னோட்டத்தையும் மிகத் தெளிவாக வெளியிட்டது. அவை மூன்று நாட்கள் தொடராக வெளியிடப்பட்டதால் மிகப் பெரிய எதிர்பபார்ப்பையும் ஏற்படுத்தியது. தினமணியின் கட்டுரைகள் என்னை சுண்டி இழுத்தது. அந்த நூலைப் பற்றியும் விழாவைப் பற்றியும் பல வாசகர்களிடம் எடுத்துச் சொன்னேன். நூலின் விலை
600/- ஆனால் அந்த நூலின் தாள் அச்சமைப்பு போன்றவற்றிற்கே அதற்கு மேலும் கொடுக்கலாம். உள்ளடக்கம் மதிப்பிடவே முடியாதது. எனினும் அன்றைக்கு 600/- ரூபாய் என்பது சற்று அதிகமாகத் தெரிந்தது. அதனால் மூன்றே மூன்று வாசகர்கள் தான் என்னிடம் முன்பணம் தந்தார்கள்.
ஈடு இணையில்லாத அந்த தமிழ் மறை திருக்குறள்
Thirukural: The Holy Scripture எனும் இருமொழி நூலை பைபிள் தாளி்ல் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட அற்புதமான நூலை பதிப்பித்தவரும் அந்த விழா நடத்தியவரும் மிக அண்மையில்
(12.12.2019) நம்மை விட்டுப் பிரிந்த திருக்குறள் நெறியில் வாழந்த அழகப்பா ராம் மோகன் ஐயா தான்.
அந்த நூலைப் பற்றிய தகவல்கள் இந்த நூலில் வேறு சிலரால் பதிவு செய்யப்பட்டிருப்பதால், நானும் அதை எடுத்துரைப்பது கூறின கூறலாகிவிடும். அந்த நூல் வெளியீட்டு விழாவை ஏறத்தாழ இருபதாண்டுகளுக்குப் பிறகும் ன்னால் மறக்க முடியவில்லை.
மீண்டும் நினைவூட்டுகிறேன். அது மதியம் 2.00 மணியளவில் தொடங்கும் விழா. தினமணியில் விழா முன்னோட்டத்தை படித்திருந்ததாலும் நான்கு புத்தகங்களுக்கு பதிவு செய்திருந்ததால், விழா நிர்வாகி ஒருவருடன் தொலைபேசியில் பேசியிருந்ததாலும் மற்ற விழாக்களைப் போல கூட்டம் சேர்ந்த பிறகு கூட்டத்தை ஆரம்பிப் போம் என்ற எண்ணத்திற்கு இடமளிக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால் 1.50 மணியளவில் அரங்கிற்கு வந்து சேர்ந்தேன். இருந்தாலும் கூட்டமெல்லாம் கூடும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் விழா தொடங்குவதற்கு முன்னரே அரங்கம் ஏறத்தாழ முழுமையாக நிரம்பிவிட்டது. அதற்குக் காரணம் இந்த விழா அமைப்பாளர்கள் தமிழகமெங்கும் சுற்றி வந்து எல்லா திருக்குறள் அமைப்பினரை இனங்கண்டு அந்த விழா குறித்தும் நூல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்த திருக்குறள் தொண்டர்களை அழைத்து தான். அது சாதாரணக் கூட்டம் அல்ல, ஆழ்கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களைப் போன்றோரின் கூட்டம். அத்தகைய கூட்டம் மதியம் 2.00 மணியல்ல நடுநிசி 2.00 மணிக்கும் திருக்குறளிற்காகக் கூடும்.
அந்தக் கூட்டத்தில் வழக்கமான வரவேற்புரை தலைமையுரை நூல் வெளியீடு போன்றவற்றோடு நிறைவு பெற்றிடவில்லை. கூட்டு வழிபாடு தியானம் எல்லாம் நடந்தது. ஒவ்வொன்றும் நிகழ்ச்சி நிரலில் குறித்தபடி கடிகார இயக்கம் போல நிமிடக் கணக்கு பிசிறாமல் சீராக நிகழ்ந்தது.
அந்தக் கூட்டம் சில படிப்பினைகளைத் தந்தது. ஒரு விழாவிற்கு பெருங் கூட்டம் கூட வேண்டுமெனில் மிகப் புகழ்பெற்ற பிரமுகர், உணர்ச்சிகரமாக அவை ஆளும் பேச்சாளர் போன்றரை வைத்து விழாவை நடத்த வேண்டுமென பொதுவாக நினைக்கிறோம். அதுவும் ஓரளவு சரியானது தான். ஆனால் ஒரு விழாவிற்கு நல்ல நோக்கம் இருக்க வேண்டும் அல்லது நல்ல நோக்கத்திற்காகத் தான் விழா எடுக்கப்பட வேண்டும் என்பது தான் இராம் மோகன் ஐயா அளித்த முதல் படிப்பினை. நோக்கம் எவ்வளவு சிறந்ததாயினும் அதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது இரண்டாவது பிடிப்பினை. இவற்றையெல்லாம் விட ஆகச் சிறந்த பிடிப்பினை விழாவிற்கு தகுதியானவர்களைத் தேடி அழைக்க வேண்டும் என்பதாகும்.
இராம் மோகன் ஐயா அவர்கள், உலகெங்குமுள்ள திருக்குறள் ஆர்வலர்களைப் படையாகத் திரட்டி பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து, தமிழ்
மறை திருக்குறள் Thirukural: The Holy Scripture எனும் மிகச் சிறந்த தொகுப்பை
உருவாக்கினார்கள். அந்த நூலின் வீச்சினால் ஐயா ஒரு மாபெரும் திருக்குறள் ஆர்வலர் என்ற குணநலத்திற்கும் அவர்களின் மற்ற பல குணநலங்களை நம் உணராமல் இருந்துவிடுகிறோம்.
திருக்குறளுக்கு அப்பாலும் தமிழ் மொழி, தமிழ் இனம், இனத்தின் முன்னேற்றம் என ஐயாவின் ஈடுபாடு கோபுரமாக உயர்கிறது. மாணவர் நலமும் முன்னேற்றமும் இவற்றுள் உட்கிளையாக உள்ளது. தமிழால் வளம் கூட்டுக என்பது உலக தமிழ் மொழி அறக்கட்டளையின் தாரக மந்திரம்.
தமிழ் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இழந்த மேன்மையை மீட்கவும் அதனினும் மேலாக உயர்ந்த ஓங்க வேண்டும் என்பது ஐயாவின் பெருங்கனவு. அக்கனவு மெய்ப்பட தமிழ் வட்டம் எனும் உலகளாவிய அமைப்பைத் தோற்றிவித்தார்கள்
அந்தத் தமிழ் வட்டம் உலகெங்கும் பிரிட்டிஷ் கவுன்சில், லயன்ஸ், ரோட்டரி அமைப்புகள் போல உலகெங்கும் கிளை விரித்து பரவ பல செயல் திட்டங்களும் வகுத்துள்ளார்கள். அறிவை வளர்க்கும் நூலகம் படிக்கம் கணனி அறை எனப் பல உள்கட்டமைப்புகளைக் கொண்ட வள்ளுவர் அறிவகம் எனும் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பது ஐயாவின் பெருங்கனவாகும்.
அதற்கு முன்னுதாரணமாக தமது சொந்த ஊரான கானாடுகாத்தான் (சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு) எனும் சிற்றூரில் ஒரு வள்ளுவர் அறிவகத்தை எழுப்ப விழைந்தார்கள்.
எந்தப் பணியையும் சீராகவும் செம்மையாகவும் திட்டமிட்டு நிறைவேற்றும் ஆற்றல் மிக்க ஐயா அவர்கள் கானாடுகாத்தானில் வள்ளுவர் அறிவகம் எழுப்ப கடந்த சில ஆண்டுகளாக அரும்பாடுபட்டு வந்தார்கள். முதலில் தமக்குச் சொந்தமான மனையை இப்பணிக்கு அர்ப்பணித்தார்கள். அந்த வள்ளுவர் அறிவகத்திற்கு கோடிக் கணக்காக ரூபாய் திட்டத்தில் ஒரு கட்டிடம் ஒன்றைக் கட்டிட விழைந்தார்கள். அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்த வரும் வேளையில் தான் அவர்கள் கொடிய நோய்க்கு ஆளானார்கள். மருத்துவ சிகிச்சைகளுக்கும் வலிகளுக்கிடையிலும் வள்ளுவர் அறிவகப் பணியிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார்கள். முன்னேற்பாடுகள் பெரும்பாலும் நிறைவேறிய நிலையில் வள்ளுவர் அறிவக அடிக்கல் நாட்டுவிழாவிற்கு ஒரு நாளை உத்சேதமாகக் குறித்தார்கள். நோயும் சிகிச்சையும் அத்திட்டத்தை ஊடுருவின. அடிக்கல் நாட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது. நோய் தீவிரமானது, ஐயாவும் வள்ளுவர் அறிவக அடிக்கல் நாட்டுவிழாப் பணியில் தீவிரமானார்கள். நோயின் கொடுமை ஐயா அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளியது. ஐயா அவர்கள் தான் தனது மண்ணைத் தொட முடியாத நிலை என்றாலும் அமெரிக்காவில் இருந்தவாறே நடத்தப்பட வேண்டும் என தீர்மானித்தார்கள்.
இராம் மோகன் ஐயாவுடன் திருக்குறள் போல ஒன்றிய அவர் தம் துணைவியார் மீனாட்சி ஆச்சி அவர்கள் கானாடுகாத்தான் வந்து வள்ளுவர் அறிவக அடிக்கல் நாட்டு விழாவை
26.12.2019 நடத்த எல்லா ஏற்பாடுகளை செய்தார்கள். ஐயா அவர்கள் காணோலி வாயிலாக அமெரிக்காவிலிருந்து கானாகாத்தான் விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது.
ஐயகோ, விழாவிற்கு பதிநான்கு நாட்களுக்கு முன்னர்
12.12.2019 ஐயாவை இழந்தோம். திருக்குறளை கற்று உணர்ந்து அந்நெறியில் வாழ்ந்த இராம் மோகன் ஐயாவுடன் நாமும் பழகியிருக்கிறோம் அவர்களின் அப்பழுக்கில்லா அன்பிற்குப் பாத்திரமாகியுள்ளோம் என்பது நம் வாழ்க்கை பேறாகும்.
அவர்களை நாம் இழக்கப் போகிறோம் என்பதை அறிந்திருந்தோம் எத்தனை ஆறுதல் சொல்லிக் கொண்டாலும் இழப்பு இழப்பு தான். விழா கைக்கு எட்டும் தொலைவில் இருந்த வேளையில் நாம் ஐயா இழந்திருப்பது பேரிடி தான்.
என்ன செய்ய? இடி நம்மை கேட்டுத் தலையில் விழுவதில்லை.
நலந்தா செம்புலிங்கம்
20.12.2019