பள்ளியின் புறச் சூழல் அகச் சூழலை மேம்படுத்தும்!!
வணிகமயமான கல்வி கோலோச்சும் இந்நாளில் காமராசரின் மக்கள் கல்வியை மீட்டெடுக்க மிகச் சிறந்த வழி அரசுப் பள்ளிகளை ஊக்கப்படுத்தி மேம்படுத்துவதுதான்.
அந்த நற்சிந்தனைக்கு செயல்வடிவமாகத் திகழ்கிறது உலகப் புகழ்பெற்ற கோவை மருத்துவர் டாக்டர் பாலவெங்கட் , தன் தந்தையார் பெயரில் வழங்கும் சிறந்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கான தலைமை ஆசிரியர் ஜெகன்னாதன் விருது.
தனியார் பள்ளிகளுக்குச் சாத்தியப்படாத பல சாதனகளை சாதித்து வரும் கோவை மசக்காளிப் பாளைய மாநகராட்சிப் பள்ளியின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் பெரிதும் காரணமான அப்பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி மைதிலி கண்ணன், இந்த ஆண்டிற்கான தலைமை ஆசிரியர் ஜெகன்னாதன் விருதினை பெறுகிறார். இவ்விழா கோவையில் 19.09.2019 வியாழனன்று நடைபெறுகிறது.
|
Tmt Mythili Kannan, HM |
திருமதி மைதிலி கண்ணன் பள்ளியின் புறச் சுழல் மாணவனிடமும் அவர்களது பெற்றோர்களிடமும் ஊர் மக்களிடமும் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தவர். அவர் 1995 ஆம் ஆண்டில் ஆசிரியப் பணியில் வலது காலை எடுத்து வைத்த
நாட்களிலேயே அவர் பணியாற்றிய பிச்சனூர் பள்ளியை தூய்மையாக வைத்திருப்பதிலும் வகுப்பறையை அழகூட்டுவதிலும் அக்கறை செலுத்தியிருக்கிறார். 2017இல் மசக்காளிப்பாளையத்தில் உள்ள கோவை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பதவி உயர்வில் தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றதும் அப்பள்ளியை பொலிவூட்டுவதில் பெரும் கவனம் செலுத்தினார்.
இவர் பொறுப்பேற்பதற்கு முன்னர் இப்பள்ளியை சிறப்பாக வழிநடத்திய கணித ஆசிரியர் திருமதி சுகுணா அவர்களும் சக ஆசிரியர்களும், தொடர்ந்து அப்பகுதி கவுன்சிலரும் கைகொடுத்துள்ளனர்.பள்ளி பொலிவுற்றதும் அப்பகுதி மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. பாடத்திற்கு அப்பாலும் மாணவர்களின் ஆற்றலை வளர்ப்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார். அதன் விளைவாக யோகா பயிற்சிக்கு உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று ஏற்பாடு செய்திருக்கிறார் தலைமை ஆசிரியை திருமதி மைதிலி கண்ணன். யோகாவுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிள்ளையாக காரேத்த பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. வணிகமான கல்வியின் மையப் புள்ளியும் தனியார் சிறப்புப் பயிற்சி தொழிலில் முக்கியமானதும் விளம்புநிலை வருவாய் ஈட்டும் குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கு எட்டாக் கனியான அபாகஸ் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளார் தலைமையாசிரியர் திருமதி மைதிலி கண்ணன்.அவருக்கே நேரடி ஈடுபாடுள்ள ரோபோடிக்ஸ் (ROBOTICS) வகுப்புகளுக்கும் muscial band குழு அமைத்து மாணவர்களுக்கு இசைக் கருவி பயிற்சிகளும் வழங்குகிறார்கள்.
இப்பள்ளியின் உற்சாகச் செயல்பாடுகளை
முகநூலில் பதிவு செய்து பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்புணர்வையும் பள்ளியின் முன்னேற்றங்களையும் உலகளாவச் செய்திருக்கிறார்கள் ஆசிரியர்கள் சக்திவேலும் திவ்யா பீட்டரும். இந்த வீச்சு முன்னணி மென்பொருள் நிறுவனமான CTS Software யும் ஈர்த்திருக்கிறது. அந்நிறுவனத்தின் CTS Out Reach தொண்டு அமைப்பும் பள்ளியின் முன்னேற்றத்திற்கு ப்ள்ளியின் ஆசிரியர்களோடும் பெற்றோர்களோடும்
|
Dr J Bala Venkat |
அப்பகுதி மக்களோடும் இணைந்து பள்ளியை முன்னெடுத்துச் செல்கிறது.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு வழங்கப்படும் விருது, இப்பள்ளியின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் ஊக்கமளிக்கும். இது இன்னும் பல அரசுப் பள்ளிகளை இந்த வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லும். இவற்றினால் காமராசரின் நோக்கம் மென் மேலும் வெற்றியடையும் என்ற பொதுநலனோடு இவ்விருதை வழங்கும் உலகப் புகழ் பெற்ற கோவை மருத்துவர் பால வெங்கட்டிற்கு ஒரு சுயநலமும் கைகூடும்.
அந்த சுயநலம் வேறொன்றுமில்லை இன்னும் பல"தலைமை ஆசிரியர் ஜெகன்னாதன்"கள் உருவாகுவார்கள்.
நலந்தா செம்புலிங்கம்
18.09.2019